ஆதியாகமம் 18:1-15 - Compare All Versions

ஆதியாகமம் 18:1-15 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

வெப்பமான பகற்பொழுதிலே, ஆபிரகாம் தன்னுடைய கூடாரவாசலில் உட்கார்ந்திருக்கையில், மம்ரேயின் மரச்சோலையருகே, யெகோவா இன்னும் ஒருமுறை அவனுக்குத் தரிசனமானார். ஆபிரகாம் நிமிர்ந்து பார்த்தபோது, சிறிது தொலைவில் மூன்று மனிதர் நிற்கிறதைக் கண்டான். அவன் அவர்களைக் கண்டபோது, அவர்களைச் சந்திக்கும்படியாக, தன் கூடாரவாசலில் இருந்து விரைந்து சென்று தரைமட்டும் தலைகுனிந்து வணங்கினான். அவன், “என் ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்திருந்தால், உமது அடியானிடம் வராமல் போய்விடாதேயும். என் வேலைக்காரர் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், நீங்கள் யாவரும் உங்கள் கால்களைக் கழுவி இம்மரத்தின் கீழ் இளைப்பாறலாம். இப்பொழுது நீங்கள் அடியேனிடம் வந்திருக்கிறபடியால், சாப்பிடுவதற்கு ஏதாவது கொண்டுவருகிறேன்; பின்பு நீங்கள் இளைப்பாறி, உங்கள் வழியே போகலாம்” என்றான். அதற்கு அவர்கள், “நல்லது, நீ சொன்னபடியே செய்” என்றார்கள். உடனே ஆபிரகாம் கூடாரத்துக்குள் சாராளிடம் விரைந்து சென்று, “சீக்கிரமாய் மூன்றுபடி அளவு சிறந்த மாவை எடுத்துப் பிசைந்து கொஞ்சம் அப்பங்கள் சுடு” என்றான். ஆபிரகாம் தன் மாட்டு மந்தைக்கு விரைந்து சென்று, ஒரு நல்ல இளங்கன்றைத் தெரிந்தெடுத்து, அதை ஒரு வேலைக்காரனிடம் கொடுத்தான்; அவன் அதைச் சமைப்பதற்கு விரைந்தான். பின்பு ஆபிரகாம், வெண்ணெயையும் பாலையும், சமைத்த இளங்கன்றின் இறைச்சியையும் கொண்டுவந்து அந்த மனிதர்கள் முன்பாக வைத்தான். அவர்கள் சாப்பிடும்போது, அவன் அவர்களுக்கு அருகே மரத்தின்கீழ் நின்றுகொண்டிருந்தான். அவர்கள் ஆபிரகாமிடம், “உன் மனைவி சாராள் எங்கே?” என்று கேட்டார்கள். “அவள் கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான். அப்பொழுது அம்மூவரில் ஒருவர், “அடுத்த வருடம் ஏறக்குறைய இதே காலத்தில் நான் நிச்சயமாகத் திரும்பவும் உன்னிடம் வருவேன், அப்பொழுது உன் மனைவி சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்றார். சாராள், அவர்களுக்குப் பின்னால் இருந்த கூடாரத்தின் வாசலிலே நின்று அதைக்கேட்டுக் கொண்டிருந்தாள். ஆபிரகாமும் சாராளும் வயது முதிர்ந்தவர்களாய் இருந்தார்கள், சாராளும் பிள்ளைபெறும் வயதைத் தாண்டினவளாக இருந்தாள். எனவே சாராள், “என் உடல் தளர்ந்துவிட்டது, என் கணவரும் வயது சென்றவராகிவிட்டார், இப்பொழுது இந்த இன்பம் எனக்கு இருக்குமோ?” என நினைத்துத் தனக்குள்ளே சிரித்தாள். அப்பொழுது யெகோவா ஆபிரகாமிடம், “ ‘நான் வயது முதிர்ந்தவளாய் இருக்கையில் உண்மையாய்ப் பிள்ளை பெறுவேனோ என சாராள் கூறிச் சிரித்தது ஏன்?’ யெகோவாவுக்கு செய்யமுடியாத கடினமானது ஏதேனும் உண்டோ? நான் அடுத்த வருடம் நியமிக்கப்பட்ட காலத்தில் திரும்பவும் உன்னிடம் வருவேன், அப்பொழுது சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்றார். சாராள் பயந்ததினால், “நான் சிரிக்கவில்லை” என்று பொய் சொன்னாள். அதற்கு அவர், “ஆம், நீ உண்மையாய்ச் சிரித்தாய்” என்றார்.

ஆதியாகமம் 18:1-15 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

பின்பு யெகோவா மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குக் காட்சியளித்தார். அவன் பகலின் வெயில் நேரத்தில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து, தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று மனிதர்கள் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைவரைக்கும் குனிந்து: “ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்தால், நீர் உமது அடியேனைவிட்டுப் போகவேண்டாம். கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறேன், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் ஓய்வெடுத்துக்கொண்டிருங்கள். நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; பிறகு நீங்கள் உங்கள் வழியிலே போகலாம்; இதற்காகவே அடியேனுடைய இடம்வரைக்கும் வந்தீர்கள்” என்றான். அதற்கு அவர்கள்: “நீ சொன்னபடி செய்” என்றார்கள். அப்பொழுது ஆபிரகாம் விரைவாகக் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: “நீ சீக்கிரமாக மூன்றுபடி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு” என்றான். ஆபிரகாம் மாட்டுமந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரனுடைய கையில் கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான். ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைக்கப்பட்ட கன்றையும் எடுத்து வந்து, அவர்களுக்கு முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்; அவர்கள் சாப்பிட்டார்கள். அவர்கள் அவனை நோக்கி: “உன் மனைவி சாராள் எங்கே” என்றார்கள். அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான். அப்பொழுது அவர்: “ஒரு கர்ப்பகாலத்திட்டத்தில் நிச்சயமாக உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாகக் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். ஆபிரகாமும் சாராளும் வயது முதிர்ந்தவர்களாக இருந்தார்கள்; பெண்களுக்குரிய மாதவழிபாடு சாராளுக்கு நின்றுபோனது. ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே சிரித்து: “நான் கிழவியும், என்னுடைய கணவன் முதிர்ந்த வயதுள்ளவருமாக இருக்கும்போது, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ” என்றாள். அப்பொழுது யெகோவா ஆபிரகாமை நோக்கி: “சாராள், நான் கிழவியாக இருக்கும்போது குழந்தைபெற்றெடுப்பது சாத்தியமோ என்று சொல்வதென்ன? யெகோவாவால் ஆகாத காரியம் உண்டோ? கர்ப்பகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்றார். சாராள் பயந்து, நான் சிரிக்கவில்லை” என்று மறுத்தாள். அதற்கு அவர்: “இல்லை, நீ சிரித்தாய்” என்றார்.

ஆதியாகமம் 18:1-15 TAERV (பரிசுத்த பைபிள்)

பிறகு, கர்த்தர் மீண்டும் ஆபிரகாமுக்குக் காட்சியளித்தார். ஆபிரகாம் மம்ரேயிலுள்ள ஓக் மரங்களுக்கு அருகில் வாழ்ந்தான். ஒரு நாள், வெப்பம் அதிகமான நேரத்தில் ஆபிரகாம் தனது கூடாரத்தின் வாசலுக்கருகில் இருந்தான். ஆபிரகாம் மேலே ஏறிட்டுப் பார்த்தபோது முன்றுபேர் அவனுக்கு முன்னால் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். ஆபிரகாம் அவர்களைப் பார்த்ததும் குனிந்து வணங்கினான். ஆபிரகாம், “ஐயா, உங்கள் பணியாளாகிய என்னோடு தயவுசெய்து தங்கியிருங்கள். உங்கள் பாதங்களைக் கழுவ தண்ணீர் கொண்டு வருகிறேன். நீங்கள் மரங்களுக்கடியில் ஓய்வுகொள்ளுங்கள். நான் உங்களுக்கு உணவைக் கொண்டுவருவேன். நீங்கள் விரும்புகிற அளவிற்குச் சாப்பிடலாம். பிறகு உங்களது பயணத்தைத் தொடரலாம்” என்றான். அந்த மூன்று மனிதர்களும், “அது நல்லது. நீ சொன்னபடி நாங்கள் செய்கிறோம்” என்றனர். ஆபிரகாம் கூடாரத்திற்கு விரைந்து போனான். அவன் சாராளிடம், “சீக்கிரம் மூன்றுபடி கோதுமை மாவை எடுத்து ரொட்டிகள் தயார் செய்” என்றான். பிறகு ஆபிரகாம் தனது தொழுவத்துக்கு ஓடி இளமையான கன்றுக் குட்டியைத் தேர்ந்தெடுத்து, அதனை வேலைக்காரனிடம் கொடுத்தான். அதனை விரைவில் கொன்று உணவு தயாரிக்கும்படி கூறினான். ஆபிரகாம் இறைச்சியும், கொஞ்சம் பாலும், வெண்ணெயும் கொண்டு வந்து மூன்று பார்வையாளர்கள் முன்பு வைத்து அவர்கள் அருகில் பரிமாறுவதற்குத் தயாராக நின்றான். அவர்கள் மரத்தடியில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தனர். பிறகு அவர்கள் ஆபிரகாமிடம், “உனது மனைவி சாராள் எங்கே?” என்று கேட்டனர். அதற்கு ஆபிரகாம், “அவள் அங்கே கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான். பிறகு கர்த்தர், “நான் மீண்டும் அடுத்த ஆண்டு இதே நேரத்தில் திரும்பி வருவேன். அப்போது உன் மனைவி சாராள் ஒரு மகனோடு இருப்பாள்” என்றார். சாராள் கூடாரத்திலிருந்து இவற்றைக் கேட்டுக்கொண்டிருந்தாள். ஆபிரகாமும் சாராளும் மிகவும் முதியவர்களாக இருந்தனர். சாதாரணமாக பெண்கள் குழந்தை பெறுவதற்கான வயதை சாராள் கடந்திருந்தாள். எனவே, சாராள் அவர்கள் சொன்னதை நம்பவில்லை. அவள் தனக்குள், “நானும் முதியவள். என் கணவனும் முதியவர். நான் குழந்தை பெறமுடியாதபடி முதியவளாகிவிட்டேன்” என்றாள். கர்த்தர் ஆபிரகாமிடம், “சாராள், குழந்தை பெறமுடியாத அளவுக்கு முதியவளானதாகக் கூறிச் சிரிக்கிறாள். கர்த்தருக்கு கடினமான காரியம் ஏதாவது இருக்கிறதா? இல்லை. நான் வசந்த காலத்தில் மீண்டும் வருவேன். அப்போது நான் சொன்னது நடக்கும். உனது மனைவி சாராள் மகனோடு இருப்பாள்” என்றார். ஆனால் சாராளோ, “நான் சிரிக்கவில்லையே” என்றாள். (அவள் அச்சத்தால் இவ்வாறு சொன்னாள்) ஆனால் கர்த்தரோ, “இல்லை. நீ சொல்வது உண்மையன்று என எனக்குத் தெரியும், நீ சிரித்தாய்” என்றார்.

ஆதியாகமம் 18:1-15 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

பின்பு கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத் தரிசனமானார். அவன் பகலின் உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து, தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைமட்டும் குனிந்து, ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோகவேண்டாம். கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள். நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன் இடம்வரைக்கும் வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: நீ சொன்னபடி செய் என்றார்கள். அப்பொழுது ஆபிரகாம் தீவிரமாய்க் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: நீ சீக்கிரமாய் மூன்றுபடி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு என்றான். ஆபிரகாம் மாட்டுமந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரன் கையிலே கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான். ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள். அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான். அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். ஆபிரகாமும் சாராளும் வயது சென்று முதிர்ந்தவர்களா யிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று. ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள். அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்? கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் பயந்து, நான் நகைக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு அவர்: இல்லை, நீ நகைத்தாய் என்றார்.