ஆதியாகமம் 1:9-13

ஆதியாகமம் 1:9-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதன்பின் இறைவன், “ஆகாயத்தின் கீழுள்ள தண்ணீர் ஓரிடத்தில் சேர்ந்து, உலர்ந்த தரை தோன்றட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று. இறைவன் உலர்ந்த தரைக்கு “நிலம்” என்றும், சேர்ந்த தண்ணீருக்கு “கடல்” என்றும் பெயரிட்டார். அது நல்லது என்று இறைவன் கண்டார். அதன்பின் இறைவன், “நிலம் தாவர வகைகளை முளைப்பிக்கட்டும்: விதை தரும் பயிர்களையும், விதையுள்ள பழங்களைக் கொடுக்கும் மரங்களையும் தன்தன் வகைகளின்படியே முளைப்பிக்கட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று. நிலம் தாவரங்களை முளைப்பித்தது: விதையை பிறப்பிக்கும் பயிர்களை அவற்றின் வகைகளின்படியும், விதையுள்ள பழங்களைக் கொடுக்கும் மரங்களை அவற்றின் வகைகளின்படியும் முளைப்பித்தது. அது நல்லது என்று இறைவன் கண்டார். அப்பொழுது மாலையும் காலையுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.

ஆதியாகமம் 1:9-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு தேவன்: “வானத்தின் கீழே இருக்கிற தண்ணீர் ஓரிடத்தில் சேர்ந்து, வெட்டாந்தரை காணப்படுவதாக,” என்றார்; அது அப்படியே ஆனது. தேவன் வெட்டாந்தரைக்கு “பூமி” என்றும், சேர்ந்த தண்ணீருக்கு “சமுத்திரம்” என்றும் பெயரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது தேவன்: “பூமியானது புல்லையும், விதையைக் கொடுக்கும் தாவரங்களையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய பழங்களைத் தங்கள் தங்கள் வகையின்படியே கொடுக்கும் பழமரங்களையும் முளைப்பிக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது. பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் வகையின்படியே விதையைக் கொடுக்கும் தாவரங்களையும், தங்கள் தங்கள் வகைகளின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய பழங்களைக் கொடுக்கும் மரங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் முடிந்தது.

ஆதியாகமம் 1:9-13 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு தேவன், “வானத்தின் கீழே உள்ள தண்ணீரெல்லாம் ஓரிடத்தில் சேர்வதாக, அதனால் காய்ந்த நிலம் உண்டாகட்டும்” என்று சொன்னார். அது அவ்வாறே ஆயிற்று. தேவன் அந்த காய்ந்த நிலத்துக்கு “பூமி” என்று பெயரிட்டார். ஒன்று சேர்ந்த தண்ணீருக்கு தேவன் “கடல்” என்று பெயரிட்டார். தேவன் இது நல்லது என்று கண்டார். பிறகு தேவன், “பூமியில் புல்லும் விதைகளைத் தரும் செடிகளும் கனிதருகிற மரங்களும் உருவாகட்டும். கனிமரங்கள் விதைகளை உடைய கனிகளை உருவாக்கட்டும். ஒவ்வொரு செடிகொடிகளும் தங்கள் இனத்தை உண்டாக்கக்கடவது. இவை பூமியிலே வளரட்டும்” என்று சொன்னார். அவ்வாறே ஆயிற்று. பூமி புல்லையும் தானியங்களைக் கொடுக்கும் செடிகளையும் முளைப்பித்தது. பூமி விதைகளைக்கொண்ட பழங்களைக் கொடுக்கும் மரங்களை முளைப்பித்தது. ஒவ்வொரு செடியும் தனக்கேயுரிய இனத்தை உருவாக்கியது. தேவன் இது நல்லதென்று கண்டார். மாலையும் காலையும் ஏற்பட்டது. இது மூன்றாம் நாளாயிற்று.

ஆதியாகமம் 1:9-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்