ஆதியாகமம் 1:1-10

ஆதியாகமம் 1:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆரம்பத்தில் இறைவன் வானங்களையும் பூமியையும் படைத்தார். பூமி உருவமற்று வெறுமையாய் இருந்தது. ஆழத்தின் மேற்பரப்பில் இருள் பரவியிருந்தது. இறைவனின் ஆவியானவர் தண்ணீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். அதன்பின் இறைவன், “ஒளி உண்டாகட்டும்” என்று சொன்னார்; ஒளி உண்டாயிற்று. ஒளி நல்லது என்று இறைவன் கண்டார், அவர் இருளிலிருந்து ஒளியைப் பிரித்தார். இறைவன் ஒளிக்குப் “பகல்” என்றும் இருளுக்கு “இரவு” என்றும் பெயரிட்டார். மாலையும் காலையுமாகி முதலாம் நாள் ஆயிற்று. அதன்பின் இறைவன், “தண்ணீர்திரளுக்கு இடையில் ஒரு வானவெளி உண்டாகட்டும்; அந்த வானவெளி கீழே இருக்கிற தண்ணீரிலிருந்து வானவெளிக்கு மேலே இருக்கிற தண்ணீரைப் பிரிக்கட்டும்” என்று சொன்னார். இவ்வாறு இறைவன் இந்த வானவெளியை உண்டாக்கி, கீழேயுள்ள தண்ணீரை, மேலேயுள்ள தண்ணீரிலிருந்து பிரித்தார். அது அப்படியே ஆயிற்று. இறைவன் வானவெளிக்கு “ஆகாயம்” என்று பெயரிட்டார். அப்பொழுது மாலையும் காலையுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று. அதன்பின் இறைவன், “ஆகாயத்தின் கீழுள்ள தண்ணீர் ஓரிடத்தில் சேர்ந்து, உலர்ந்த தரை தோன்றட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆயிற்று. இறைவன் உலர்ந்த தரைக்கு “நிலம்” என்றும், சேர்ந்த தண்ணீருக்கு “கடல்” என்றும் பெயரிட்டார். அது நல்லது என்று இறைவன் கண்டார்.

ஆதியாகமம் 1:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார். பூமியானது. ஒழுங்கற்றதாகவும் வெறுமையாகவும் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் தண்ணீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். தேவன் “வெளிச்சம் உண்டாகட்டும்,” என்றார், வெளிச்சம் உண்டானது. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். தேவன் வெளிச்சத்திற்குப் பகல் என்றும், இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் முடிந்தது. பின்பு தேவன்; “தண்ணீர்களின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகட்டும்,” என்றும், “அது தண்ணீரிலிருந்து தண்ணீரைப் பிரிக்கட்டும்” என்றும் சொன்னார். தேவன் ஆகாயவிரிவை உருவாக்கி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற தண்ணீருக்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற தண்ணீருக்கும் பிரிவை உண்டாக்கினார்; அது அப்படியே ஆனது. தேவன் ஆகாயவிரிவுக்கு “வானம் என்று பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி, இரண்டாம் நாள் முடிந்தது. பின்பு தேவன்: “வானத்தின் கீழே இருக்கிற தண்ணீர் ஓரிடத்தில் சேர்ந்து, வெட்டாந்தரை காணப்படுவதாக,” என்றார்; அது அப்படியே ஆனது. தேவன் வெட்டாந்தரைக்கு “பூமி” என்றும், சேர்ந்த தண்ணீருக்கு “சமுத்திரம்” என்றும் பெயரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

ஆதியாகமம் 1:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

துவக்கத்தில் தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார். பூமியானது வெறுமையாக இருந்தது; தண்ணீரின்மேல் இருள் சூழ்ந்திருந்தது. தேவ ஆவியானவர் அந்தத் தண்ணீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். அப்பொழுது தேவன், “வெளிச்சம் உண்டாகட்டும்” என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. தேவன் வெளிச்சத்தைப் பார்த்தார். அது நல்லதென்று அறிந்துகொண்டார். பிறகு தேவன் வெளிச்சத்தையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார். தேவன் வெளிச்சத்துக்குப் “பகல்” என்று பெயரிட்டார். அவர் இருளுக்கு “இரவு” என்று பெயரிட்டார். மாலையும் காலையும் ஏற்பட்டது. இதுவே முதல் நாளாயிற்று. பிறகு தேவன், “இரண்டு பாகமாக தண்ணீர்ப் பகுதி பிரிந்து ஆகாய விரிவு உண்டாகக்கடவது!” என்றார். தேவன் காற்றின் விரிவை உருவாக்கி, தண்ணீரைத் தனியாகப் பிரித்தார். தண்ணீரில் ஒரு பகுதி காற்றிற்கு மேலேயும், மறுபகுதி காற்றிற்குக் கீழேயும் ஆனது. தேவன் காற்றின் விரிவுக்கு “வானம்” என்று பெயரிட்டார். மாலையும் காலையும் ஏற்பட்டது. இது இரண்டாம் நாள் ஆகும். பிறகு தேவன், “வானத்தின் கீழே உள்ள தண்ணீரெல்லாம் ஓரிடத்தில் சேர்வதாக, அதனால் காய்ந்த நிலம் உண்டாகட்டும்” என்று சொன்னார். அது அவ்வாறே ஆயிற்று. தேவன் அந்த காய்ந்த நிலத்துக்கு “பூமி” என்று பெயரிட்டார். ஒன்று சேர்ந்த தண்ணீருக்கு தேவன் “கடல்” என்று பெயரிட்டார். தேவன் இது நல்லது என்று கண்டார்.

ஆதியாகமம் 1:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று. பின்பு தேவன்; ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார். தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி, இரண்டாம் நாள் ஆயிற்று. பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

ஆதியாகமம் 1:1-10

ஆதியாகமம் 1:1-10 TAOVBSI

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்