கலாத்தியர் 1:6-10
கலாத்தியர் 1:6-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் கிறிஸ்துவினுடைய கிருபையினாலே உங்களை அழைத்தவரைக் கைவிட்டு, வேறு ஒரு நற்செய்தியின் பக்கமாகத் திரும்புகிறீர்களே. இதைக்குறித்து நான் வியப்படைகிறேன். உண்மையிலேயே அது எவ்விதத்திலும் நற்செய்தி அல்ல. சிலர் உங்களைக் குழப்பமடையச்செய்து, கிறிஸ்துவினுடைய நற்செய்தியை மாற்ற முயற்சிக்கிறார்கள். நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியைவிட, வேறு ஒரு நற்செய்தியை வானத்திலிருந்து வந்த ஒரு தூதனோ, நாங்களோ அறிவித்தாலும், அவன் நித்தியமாகவே குற்றவாளியாகத் தீர்க்கப்பட வேண்டும். நாங்கள் ஏற்கெனவே இதைச் சொல்லியிருக்கிறது போலவே, இப்பொழுதும் நான் மீண்டும் சொல்லுகிறேன்: நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்தியைவிட, வேறொரு நற்செய்தியை யாராவது உங்களுக்கு அறிவித்தால், அவன்மேல் இறைவனுடைய சாபம் சுமரட்டும். நான் இப்பொழுது மனிதருடைய அங்கீகாரத்தையோ அல்லது இறைவனுடைய அங்கீகாரத்தையோ பெற முயல்கிறேனா? அல்லது மனிதரைப் பிரியப்படுத்த முயல்கிறேனா? நான் மனிதரைப் பிரியப்படுத்த முயல்கிறவனாய் இருந்தால், நான் கிறிஸ்துவினுடைய ஊழியனாய் இருக்கமுடியாதே.
கலாத்தியர் 1:6-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாகவிட்டு, வேறொரு வித்தியாசமான நற்செய்திக்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; வேறொரு நற்செய்தி இல்லையே; சிலர் உங்களைக் கலங்கப்படுத்தி, கிறிஸ்துவினுடைய நற்செய்தியை மாற்ற விரும்புகிறார்கள். நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியைத்தவிர, நாங்களோ அல்லது வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனோ, வேறொரு நற்செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாக இருப்பான். முன்பே சொன்னதுபோல மீண்டும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்தியைத்தவிர வேறொரு நற்செய்தியை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாக இருப்பான். இப்பொழுது மனிதனுடையதா, தேவனுடையதா? யாருடைய அங்கீகாரத்தைத் தேடுகிறேன்? மனிதனைப் பிரியப்படுத்தப் பார்க்கிறேனா? நான் இன்னும் மனிதனைப் பிரியப்படுத்துகிறவனாக இருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன் இல்லையே.
கலாத்தியர் 1:6-10 பரிசுத்த பைபிள் (TAERV)
கொஞ்சக் காலத்துக்கு முன்பு தேவன் தன்னைப் பின்பற்றும்படி உங்களை அழைத்தார். அவர் உங்களைத் தன் கிருபையால் கிறிஸ்துவின் மூலமாக அழைத்தார். ஆனால் இப்பொழுது உங்களைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். ஏற்கெனவே நீங்கள் அவர் வழியில் இருந்து மாறிவிட்டீர்கள். உண்மையில் வேறு ஒரு நற்செய்தி என்பது இல்லை. ஆனால் சிலர் உங்களைக் குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் நற்செய்தியை மாற்றிவிட விரும்புகிறார்கள். நாங்கள் உங்களுக்கு உண்மையான நற்செய்தியைக் கூறினோம். எனவே நாங்களோ அல்லது வானத்திலிருந்து வந்த ஒரு தேவதூதனோ வேறொரு நற்செய்தியை உங்களுக்குக் கூறினால் அவன் கடிந்துகொள்ளப்பட வேண்டும். நான் ஏற்கெனவே இதனைச் சொன்னேன். அதனை இப்போது மறுபடியும் கூறுகின்றேன். நீங்கள் ஏற்கெனவே உண்மையான நற்செய்தியை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு வேறு வழியை எவரேனும் உங்களுக்குக் கூறினால் அவன் கடிந்துகொள்ளப்பட வேண்டும். என்னை ஏற்றுக்கொள்ளும்படி செய்ய நான் மக்களிடம் முயற்சி செய்கிறேன் என்று நினைக்கிறீர்களா? இல்லை. நான் தேவனுக்கு வேண்டியவனாக இருக்க மட்டுமே முயற்சி செய்கிறேன். நான் மனிதர்களை திருப்திப்படுத்தவா முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்? அவ்வாறு நான் மனிதர்களை திருப்திப்படுத்திக்கொண்டிருந்தால் இயேசு கிறிஸ்துவின் ஊழியனாக நான் இருக்க முடியாது.
கலாத்தியர் 1:6-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.