எஸ்றா 4:1-5

எஸ்றா 4:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சிறையிருப்பிலிருந்து வந்த ஜனங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறார்கள் என்று யூதாவுக்கும் பென்யமீனுக்கும் இருந்த சத்துருக்கள் கேள்விப்பட்டபோது, அவர்கள் செருபாபேலிடத்துக்கும் தலைவரான பிதாக்களிடத்துக்கும் வந்து: உங்களோடேகூட நாங்களும் கட்டுவோம்; உங்களைப்போல நாங்களும் உங்கள் தேவனை நாடுவோம்; இவ்விடத்துக்கு எங்களை வரப்பண்ணின அசீரியாவின் ராஜாவாகிய எசரத்தோன் நாட்கள் முதற்கொண்டு அவருக்கு நாங்களும் பலியிட்டுவருகிறோம் என்று அவர்களோடே சொன்னார்கள். அதற்குச் செருபாபேலும், யெசுவாவும், இஸ்ரவேலில் மற்றுமுள்ள தலைவரான பிதாக்களும் அவர்களை நோக்கி: எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக்கட்டுகிறதற்கு உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை; பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் ராஜா எங்களுக்குக் கட்டளையிட்டபடி, நாங்களே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அதைக் கட்டுவோம் என்றார்கள். அதினால் அந்த தேசத்து ஜனங்கள் யூதா ஜனத்தின் கைகளைத் தளரப்பண்ணி, கட்டாதபடிக்கு அவர்களைச் சங்கடப்படுத்தி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் காலமுழுதும், தரியு என்னும் பெர்சியா ராஜா அரசாண்ட காலமட்டும், அவர்கள் யோசனையை அவத்தமாக்கும்படி அவர்களுக்கு விரோதமாய் ஆலோசனைக்காரருக்கு கைக்கூலி கட்டினார்கள்.

எஸ்றா 4:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சிறையிருப்பிலிருந்து திரும்பியவர்கள் இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவாவுக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுகிறார்கள் என யூதா பென்யமீன் மக்களின் பகைவர்கள் கேள்விப்பட்டார்கள். அப்பொழுது அவர்கள் செருபாபேலிடமும், அவர்களின் குடும்பத் தலைவர்களிடமும் வந்து, “நாங்களும் கட்டிடத்தைக் கட்ட உதவிசெய்வோம். ஏனெனில் உங்களைப் போல நாங்களும் உங்கள் இறைவனைத் தேடி; அசீரியாவின் அரசன் எசரத்தோன் எங்களை இங்கு கொண்டுவந்த நாள் முதல், நாங்கள் அவருக்கு பலிசெலுத்தி வருகிறோம்” என்றார்கள். ஆனால் செருபாபேலும், யெசுவாவும், இஸ்ரயேலின் மற்ற குடும்பத்தலைவர்களும் அவர்களிடம், “எங்கள் இறைவனுக்கு ஆலயம் கட்டுவதில் எங்களுடன் உங்களுக்குப் பங்கில்லை. பெர்சியாவின் அரசன் கோரேஸ் எங்களுக்கு கட்டளையிட்டபடி இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு நாங்கள் தனியாக நின்றே அதைக் கட்டுவோம்” என்றார்கள். அப்பொழுது அவர்களைச் சுற்றி இருந்த மக்கள் யூதா மக்களை சோர்வடையப்பண்ணி, தொடர்ந்து கட்டாதபடி பயமுறுத்த எண்ணங்கொண்டார்கள். யூதா மக்களுக்கு எதிராகச் செயல்படவும், அவர்களுடைய திட்டத்தை முறியடிக்கவும் ஆலோசகர்களைக் கூலிக்கு அமர்த்தினார்கள். இப்படியே பெர்சியாவின் அரசன் கோரேஸின் ஆட்சிக்காலம் முழுவதும், பெர்சியாவின் அரசன் தரியுவின் ஆட்சிக் காலம்வரை எதிர்த்துச் செயல்பட்டார்கள்.

எஸ்றா 4:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சிறையிருப்பிலிருந்து வந்த மக்கள் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு ஆலயத்தைக் கட்டுகிறார்கள் என்று யூதாவுக்கும் பென்யமீனுக்கும் இருந்த விரோதிகள் கேள்விப்பட்டபோது, அவர்கள் செருபாபேலிடத்திற்கும் தலைவர்களான பிதாக்களிடத்திற்கும் வந்து: உங்களுடன் நாங்களும் கட்டுவோம்; உங்களைப்போல நாங்களும் உங்கள் தேவனை நாடுவோம்; இந்த இடத்திற்கு எங்களை வரச் செய்த அசீரியாவின் ராஜாவாகிய எசரத்தோன் நாட்கள் முதற்கொண்டு அவருக்கு நாங்களும் பலியிட்டுவருகிறோம் என்று அவர்களிடம் சொன்னார்கள். அதற்கு செருபாபேலும், யெசுவாவும், இஸ்ரவேலில் உள்ள மற்ற தலைவர்களான பிதாக்களும் அவர்களை நோக்கி: எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை; பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் ராஜா எங்களுக்குக் கட்டளையிட்டபடி. நாங்களே இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு அதைக் கட்டுவோம் என்றார்கள். அதனால் அந்த தேசத்து மக்கள் யூதா மக்களின் கைகளைத் தளரச்செய்து, கட்டாமலிருக்க அவர்களை வருத்தப்படுத்தி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் காலமுழுவதும், தரியு என்னும் பெர்சியா ராஜா அரசாண்ட காலம்வரை, அவர்கள் யோசனையைப் பொய்யாக்க அவர்களுக்கு விரோதமாக ஆலோசனைக்காரர்களுக்கு லஞ்சம் கொடுத்தார்கள்.

எஸ்றா 4:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)

அப்பகுதியில் வாழ்ந்த பலரும், யூதா மற்றும் பென்யமீன் ஜனங்களுக்கு எதிராக இருந்தனர். அந்த விரோதிகள் அடிமைத்தனத்திலிருந்து திரும்ப வந்தவர்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயம் கட்டுவதைக் கேள்விப்பட்டார்கள். எனவே அவர்கள் செருபாபேலிடமும், குடும்பத் தலைவர்களிடமும் வந்து, “நாங்கள் உங்களுக்கு ஆலயம் கட்ட உதவட்டுமா? நாங்களும் உங்களைப் போன்றவர்களே, உங்கள் தேவனிடம் உதவி வேண்டுகிறோம். அசீரியாவின் ராஜாவாகிய எசரத்தோன் எங்களை இங்கு அழைத்து வந்த நாள் முதலாக நாங்கள் உங்கள் தேவனுக்குப் பலிகொடுத்து வருகிறோம்” என்றனர். ஆனால், செருபாபேல், யெசுவா, மற்றும் மற்ற குடும்பத் தலைவர்கள், “இல்லை, எங்கள் தேவனுக்கு ஆலயம் கட்ட உங்களால் உதவ முடியாது. நாங்கள் மட்டுமே கர்த்தருக்கு ஆலயம் கட்ட முடியும். அவர் இஸ்ரவேலின் தேவன். இதனையே, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசு எங்களுக்கு கட்டளையிட்டது” என்றனர். இது அவர்களுக்குக் கோபத்தை வரவழைத்தது. எனவே அவர்கள் யூதர்களுக்குத் தொல்லைக் கொடுக்க ஆரம்பித்தனர். அவர்களை உற்சாகமிழக்கச் செய்து, ஆலயத்தைக் கட்டவிடாமல் தடுக்க முயன்றனர். அந்த விரோதிகள் அரசு அதிகாரிகளை விலைக்கு வாங்கி யூதர்களுக்கு எதிராக வேலை செய்யவைத்தனர். யூதர்களின் ஆலயம் கட்டும் திட்டத்தைத் தடுப்பதற்கான செயல்களைத் தொடர்ந்து செய்தார்கள். இது பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் காலம் முழுவதும் தொடர்ந்தது. பெர்சியாவின் ராஜாவாக தரியு ஆகும்வரைக்கும் இது தொடர்ந்து இருந்தது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்