எசேக்கியேல் 45:17-20

எசேக்கியேல் 45:17-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பண்டிகைகளும், அமாவாசைகளும், ஓய்வுநாட்களுமான இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு நியமிக்கப்பட்டுள்ள எல்லா விசேஷ தினங்களிலும் தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் கொடுக்கவேண்டியது, அரசனுடைய கடமையாகும். இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு பாவநிவிர்த்தி செய்வதற்காக அவன் பாவநிவாரண காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும், தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் கொடுப்பான். “ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. முதலாம் மாதம் முதலாம் நாள் நீங்கள் பழுதற்ற காளையொன்றைக் கொண்டுவந்து பரிசுத்த ஆலயத்தைச் சுத்திகரிக்கவேண்டும். ஆசாரியன் பாவநிவாரண காணிக்கையின் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து, அதை ஆலயத்தின் கதவு நிலைகளிலும், பலிபீட மேல்விளிம்பின் நான்கு மூலைகளிலும், உள்முற்றத்திலுள்ள வாசல் நிலைகளிலும் பூசவேண்டும். தவறுதலாகவோ, அறியாமையாலோ பாவம் செய்யும் ஒருவனுக்காகவும் மாதத்தின் ஏழாம்நாள் நீங்கள் அவ்வாறே செய்யவேண்டும். அவ்விதமாய் நீங்கள் ஆலயத்திற்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.

எசேக்கியேல் 45:17-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இஸ்ரவேல் மக்கள் கூடிவர குறிக்கப்பட்ட எல்லா பண்டிகைகளிலும் மாதப்பிறப்புகளிலும் ஓய்வு நாட்களிலும் தகனபலிகளையும் உணவுபலிகளையும் பானபலிகளையும் செலுத்துவது அதிபதியின்மேல் சுமந்த கடனாக இருக்கும்; அவன் இஸ்ரவேல் மக்களுக்காகப் பாவநிவாரணம் செய்வதற்கு பாவநிவாரணபலியையும் உணவுபலியையும் தகனபலியையும் சமாதானபலியையும் படைப்பானாக. யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: முதலாம் மாதம் முதலாம் நாளிலே நீ பழுதற்ற ஒரு காளையைக் கொண்டு வந்து, பரிசுத்த ஸ்தலத்திற்குப் பாவநிவர்த்தி செய்வாயாக. பாவநிவாரணபலியின் இரத்தத்திலே கொஞ்சம் ஆசாரியன் எடுத்து, ஆலயத்தின் வாசல் நிலைகளிலும், பலிபீடத்துச் சட்டத்தின் நான்கு மூலைகளிலும், உள்முற்றத்தின் வாசல் நிலைகளிலும் பூசுவானாக. பிழைசெய்தவனுக்காகவும், அறியாமல் தப்பிதம் செய்தவனுக்காகவும் அந்தப்பிரகாரமாக ஏழாம் நாளிலும் செய்வாயாக; இந்த விதமாக ஆலயத்திற்குப் பாவநிவர்த்தி செய்வாயாக.

எசேக்கியேல் 45:17-20 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆனால் அதிபதி சிறப்பான பரிசுத்த விடுமுறைகளுக்குத் தேவையான பொருட்களைக் கொடுக்கவேண்டும். அதிபதி தகனபலிகள், தானியக் காணிக்கைகள், பானங்களின் காணிக்கைகள் ஆகியவற்றைக் கொடுக்கவேண்டும். இவற்றைப் பண்டிகை நாட்களிலும் அமாவாசை (மாதப் பிறப்பு) நாட்களிலும், ஓய்வு நாட்களிலும், இஸ்ரவேல் குடும்பத்தாரின் மற்ற எல்லாச் சிறப்புப் பண்டிகை நாட்களிலும் கொடுக்கவேண்டும். அதிபதி பாவப்பரிகாரக் பலிகளையும், தானியக் காணிக்கைகளையும், தகன பலிகளையும், சமாதான பலிகளையும் இஸ்ரவேல் வம்சத்தாரை பரிசுத்தப்படுத்துவதற்காகக் கொடுக்கவேண்டும்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “முதல் மாதத்தின், முதல் நாளில், பழுதற்ற ஒரு இளங்காளையை எடுக்கவேண்டும். நீங்கள் அதனை ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்துவதற்காகப் பயன்படுத்தவேண்டும். ஆசாரியன் பாவப் பரிகார இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து ஆலயத்தின் வாசல் தூண்களிலும் பலிபீடத்தின் சட்டத்து நான்கு மூலைகளிலும் உட்பிரகாரத்தின் வாசல் நிலைகளிலும் பூசவேண்டும். நீங்கள் இதேபோன்று மாதத்தின் ஏழாவது நாளிலும் தவறுதலாகவோ அல்லது தெரியாமலோ பாவம் செய்த ஒருவனுக்காகச் செய்யலாம். இவ்வாறு நீங்கள் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்தலாம்.

எசேக்கியேல் 45:17-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இஸ்ரவேல் வம்சத்தார் கூடிவரக்குறிக்கப்பட்ட சகல பண்டிகைகளிலும் மாதப்பிறப்புகளிலும் ஓய்வு நாட்களிலும் தகனபலிகளையும் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துவது அதிபதியின்மேல் சுமந்த கடனாயிருக்கும்; அவன் இஸ்ரவேல் வம்சத்தாருக்காகப் பாவநிவாரணம்பண்ணும்படிக்குப் பாவநிவாரணபலியையும் போஜனபலியையும் தகனபலியையும் சமாதானபலியையும் படைப்பானாக. கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: முதலாம் மாதம் முதலாந்தேதியிலே நீ பழுதற்ற ஒரு காளையைக் கொண்டு வந்து, பரிசுத்த ஸ்தலத்துக்குப் பாவநிவர்த்தி செய்வாயாக. பாவநிவாரணபலியின் இரத்தத்திலே கொஞ்சம் ஆசாரியன் எடுத்து, ஆலயத்தின் வாசல் நிலைகளிலும், பலிபீடத்துச் சட்டத்தின் நாலு கோடிகளிலும், உட்பிராகாரத்தின் வாசல் நிலைகளிலும் பூசக்கடவன். பிழைசெய்தவனுக்காகவும், அறியாமல் தப்பிதம் செய்தவனுக்காகவும் அந்தப்பிரகாரமாக ஏழாந்தேதியிலும் செய்வாயாக; இவ்விதமாய் ஆலயத்துக்குப் பாவநிவர்த்தி செய்வாயாக.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்