எசேக்கியேல் 37:4-14

எசேக்கியேல் 37:4-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பின்பு அவர் என்னிடம், “நீ இந்த எலும்புகளுக்கு இறைவாக்குரைத்து, அவைகளுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘உலர்ந்த எலும்புகளே, யெகோவாவினுடைய வார்த்தையைக் கேளுங்கள்! ஆண்டவராகிய யெகோவா இந்த எலும்புகளுக்கு கூறுவது இதுவே: நான் உங்களுக்குள் சுவாசத்தை நுழையச்செய்வேன், அப்பொழுது, நீங்கள் உயிரடைவீர்கள். நான் உங்களுக்கு தசை நார்களை இணைத்து, உங்கள்மீது சதையை வரப்பண்ணி, தோலினால் மூடுவேன். உங்களுக்குள் சுவாசம் வரச்செய்வேன். நீங்கள் உயிரடைவீர்கள். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என்று சொல்லும்படி சொன்னார்.’ ” எனக்குக் கட்டளையிட்டபடியே நான் இறைவாக்குரைத்தேன். நான் இறைவாக்குரைத்துக் கொண்டிருக்கையில் சத்தமொன்று உண்டாயிற்று, அது ஏதோ உரசும் சத்தம். அங்கிருந்த எலும்புகளுடன் எலும்புகள் இணைந்து ஒன்றாயின. நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவைகளில் தசை நார்களும் சதைகளும் தோன்றின. தோல் அவற்றை மூடிற்று. ஆனாலும் அவைகளில் சுவாசம் இல்லாதிருந்தது. பின்பு அவர் என்னிடம் சொன்னதாவது, “நீ சுவாசத்தை நோக்கி இறைவாக்கு உரை. மனுபுத்திரனே, நீ இறைவாக்குரைத்து அதற்குச் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: சுவாசமே, நீ நான்கு திசைகளிலுமிருந்து வந்து, கொல்லப்பட்ட இவர்கள் உயிரடையும்படியாக, இவர்களுக்குள் போ என்று சொல் என்றார்.’ ” அவ்வாறு அவர் கட்டளையிட்டபடியே நான் சொன்னேன். சுவாசம் அவைகளுக்குள் புகுந்தது. அவை உயிரடைந்து தங்கள் கால்களை ஊன்றி, ஒரு பெரும்படையாக நின்றார்கள். பின்பு அவர் என்னிடம் சொன்னதாவது, “மனுபுத்திரனே, இந்த எலும்புகளே முழு இஸ்ரயேல் குடும்பம் ஆகும். அவர்களோ, ‘எங்கள் எலும்புகள் உலர்ந்து எங்கள் எதிர்பார்ப்பு அற்றுப்போயிற்று; நாங்களும் இல்லாமல் போனோம்’ என சொல்கிறார்கள். ஆகவே, நீ இறைவாக்குரைத்து அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: என் மக்களே, நான் பிரேதக்குழிகளைத் திறந்து, அங்கிருந்து உங்களை வெளியே கொண்டுவரப் போகிறேன். மறுபடியும் நான் உங்களை இஸ்ரயேல் நாட்டுக்குக் கொண்டுவருவேன். நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, அவற்றிலிருந்து உங்களை வெளியே கொண்டுவரும்போது, என் மக்களாகிய நீங்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வீர்கள். நான் என் ஆவியானவரை உங்களுக்குள் அனுப்புவேன். நீங்கள் உயிரடைவீர்கள். நான் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியிருக்கப்பண்ணுவேன். அப்பொழுது யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன்; நானே இதைச் செய்தேன் என நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என்று யெகோவா அறிவிக்கிறார்.’ ”

எசேக்கியேல் 37:4-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக்குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்லி, அவைகளைப் பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள். யெகோவாகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் உயிரை நுழையச்செய்வேன், அப்பொழுது உயிரடைவீர்கள். நான் உங்கள்மேல் நரம்புகளைச் சேர்த்து, உங்கள்மேல் சதையை உண்டாக்கி, உங்களைத் தோலினால் மூடி, உங்களில் ஆவியைக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நீங்கள் உயிரடைந்து, நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்களென்று சொல்லுகிறார் என்று சொல் என்றார். எனக்குக் கட்டளையிட்டபடியே நான் தீர்க்கதரிசனம் சொன்னேன்; நான் தீர்க்கதரிசனம் சொல்லும்போது ஒரு இரைச்சல் உண்டானது; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்புடன் சேர்ந்துகொண்டது. நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, அவைகள்மேல் நரம்புகளும் சதையும் உண்டானது, மேற்புறமெங்கும் தோலினால் மூடப்பட்டது; ஆனாலும் அவைகளில் உயிர் இல்லாமலிருந்தது. அப்பொழுது அவர் என்னைப் பார்த்து: நீ உயிரை நோக்கித் தீர்க்கதரிசனம் சொல்; மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, உயிரைநோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உயிரே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலை செய்யப்பட்ட இவர்கள் உயிரடையும்படி இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார். எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் சொன்னேன்; அப்பொழுது உயிர் அவர்களுக்குள் நுழைய, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய படையாக நின்றார்கள். அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் மக்கள் அனைவருமே; இதோ, அவர்கள் எங்களுடைய எலும்புகள் உலர்ந்துபோனது; எங்களுடைய நம்பிக்கை அற்றுப்போனது; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள். ஆகையால் நீ தீர்க்கதரிசனம் சொல்லி, அவர்களுடன் சொல்லவேண்டியது என்னவென்றால்: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், இதோ, என்னுடைய மக்களே, நான் உங்களுடைய பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்களுடைய பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்திற்கு வரவும் செய்வேன். என்னுடைய மக்களே, நான் உங்களுடைய பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்களுடைய பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படச்செய்யும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள். என்னுடைய ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்களுடைய தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

எசேக்கியேல் 37:4-14 பரிசுத்த பைபிள் (TAERV)

எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னிடம் சொன்னார்: “அவ்வெலும்புகளிடம் எனக்காகப் பேசு. அவ்வெலும்புகளிடம் சொல், ‘காய்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கவனியுங்கள்! எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றை உங்களுக்குக் கூறுகிறார். உங்களுக்குள் உயிர்மூச்சு வரும்படிச் செய்வேன். நீங்கள் உயிர் பெறுவீர்கள்! நான் உங்களில் தசைநார்களையும், தசைகளையும் வைப்பேன். நான் உங்களை தோலால் மூடுவேன். பின்னர், நான் உங்களுக்குள் மூச்சுக் காற்றை வைப்பேன். நீங்கள் திரும்ப உயிர் பெறுவீர்கள்! பிறகு, நானே கர்த்தராகிய ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.’” எனவே, நான் கர்த்தருக்காக எலும்புகளிடம் அவர் சொன்னது போல் பேசினேன். நான் இன்னும் பேசிக்கொண்டிருந்தபோது, உரத்த சத்தம் கேட்டது, எலும்புகள் அசைந்து ஒன்றோடு ஒன்று சேர்ந்துக்கொண்டன. அங்கே என் கண் முன்னால் எலும்புகளின் மேல் தசைநார்களும், தசைகளும் சேர்ந்தன. அவற்றைத் தோல் மூடிக்கொண்டது. ஆனால் உடல்கள் அசையவில்லை. அவற்றில் மூச்சுக் காற்று இல்லை. பிறகு எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னிடம் கூறினார்: “எனக்காகக் காற்றிடம் பேசு. மனுபுத்திரனே, எனக்காகக் காற்றிடம் பேசு. கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று காற்றிடம் சொல்: ‘காற்றே, எல்லா திசைகளிலுமிருந்து வா, மரித்த உடல்களுக்குள் மூச்சுக் காற்றை ஊது! அவர்கள் மீண்டும் உயிர்பெறட்டும்!’” எனவே நான் கர்த்தருக்காகக் காற்றிடம் அவர் சொன்னதுபோன்று பேசினேன். மரித்த உடல்களுக்குள் ஆவி புகுந்தது. அவர்கள் உயிர்பெற்று எழுந்து நின்றார்கள். அவர்கள் எண்ணிக்கையில் மிகமிக அதிகமான பெருஞ்சேனையைப்போன்று நின்றார்கள்! பிறகு, எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னிடம் கூறினார்: “மனுபுத்திரனே, இவ்வெலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே, இஸ்ரவேல் ஜனங்கள் சொல்கிறார்கள்: ‘எங்கள் எலும்புகள் காய்ந்துவிட்டன. எங்கள் நம்பிக்கை போய்விட்டது. நாங்கள் முழுமையாக அழிக்கப்பட்டிருக்கிறோம்!’ எனவே, எனக்காக அவர்களிடம் பேசு, கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று சொல்: ‘என் ஜனங்களே, நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை வெளியே கொண்டுவருவேன்! பின்னர் உங்களை நான் இஸ்ரவேல் நிலத்திற்குக் கொண்டு வருவேன். என் ஜனங்களே, நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை வெளியே கொண்டு வருவேன். பிறகு, நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் உங்களில் எனது ஆவியை வைப்பேன். நீங்கள் மீண்டும் உயிர் பெறுவீர்கள். பின்னர் நான் உங்களை உங்களது சொந்த நாட்டிற்கு வழிநடத்திச்செல்வேன். பிறகு, நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். நான் இவற்றைச் சொன்னேன் என்பதையும் இவை நடக்கும்படிச் செய்வேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.’” கர்த்தர் அவற்றைச் சொன்னார்.

எசேக்கியேல் 37:4-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக்குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, அவைகளைப் பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன், அப்பொழுது உயிரடைவீர்கள். நான் உங்கள்மேல் நரம்புகளைச் சேர்த்து, உங்கள்மேல் மாம்சத்தை உண்டாக்கி, உங்களைத் தோலினால் மூடி, உங்களில் ஆவியைக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நீங்கள் உயிரடைந்து, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்களென்று உரைக்கிறார் என்று சொல் என்றார். எனக்குக் கட்டளையிட்டபடியே நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; நான் தீர்க்கதரிசனம் உரைக்கையில் ஒரு இரைச்சல் உண்டாயிற்று; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்போடே சேர்ந்துகொண்டது. நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, அவைகள்மேல் நரம்புகளும் மாம்சமும் உண்டாயிற்று, மேற்புறமெங்கும் தோலினால் மூடப்பட்டது; ஆனாலும் அவைகளில் ஆவி இல்லாதிருந்தது. அப்பொழுது அவர் என்னைப்பார்த்து: நீ ஆவியை நோக்கித் தீர்க்கதரிசனம் உரை; மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, ஆவியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஆவியே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார். எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள். அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே; இதோ, அவர்கள் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள். ஆகையால் நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்துக்கு வரவும் பண்ணுவேன். என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படப்பண்ணும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள். என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்