எசேக்கியேல் 31:4-9
எசேக்கியேல் 31:4-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
தண்ணீர்கள் அதை செழிக்கச் செய்தன, ஆழமான நீரூற்றுக்கள் அதை உயரமாக வளரச் செய்தன; அதன் அடிமரங்களைச் சுற்றி நீரோடைகள் பாய்ந்தன; தண்ணீர்கள் தம் வாய்க்கால்களை வெளிமரங்கள் யாவற்றிற்கும் பரவவிட்டன. அதனால் அது, வெளியின் மரங்கள் எல்லாவற்றையும்விட, உயர்ந்து நின்றது: தண்ணீர் நிறைவாக இருந்தபடியால், அதன் கொப்புகள் அதிகரித்தன: அதன் கிளைகள் நீண்டு, படர்ந்து, வளர்ந்தன. ஆகாயத்துப் பறவைகள் அனைத்தும் அதின் கிளைகளில் கூடுகட்டின; வெளியின் மிருகங்களெல்லாம் அதன் கிளைகளின்கீழ் குட்டிகளை ஈன்றன. பெரிதான பல நாடுகளும் அதன் நிழலில் குடியிருந்தன. படர்ந்திருந்த அதன் கொப்புகளினால் அது அழகில் மாட்சிமையடைந்திருந்தது. ஏனெனில், அதன் வேர்கள் கீழிறங்கி நிறைவான தண்ணீருக்குள் சென்றிருந்தன. இறைவனின் தோட்டத்தின் கேதுருக்கள்கூட அதற்கு இணையாய் இருக்கமுடியவில்லை. தேவதாரு மரங்களும் அதின் கிளைகளுக்குச் சமானமாயிருக்க முடியவில்லை. அர்மோன் மரங்களையும் அதன் கொப்புகளுக்கு இணைகூற இயலாது. இறைவனின் தோட்டத்து எந்த மரமும் அழகில் அதற்கு நிகராகாது. இறைவனின் தோட்டமான ஏதேனிலுள்ள எல்லா மரங்களும் அதன்மேல் பொறாமை கொள்ளத்தக்கதாக நிறைவான கொப்புகளால் அதை நான் அழகு செய்தேன்.
எசேக்கியேல் 31:4-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தண்ணீர்கள் அதைப் பெரிதும், ஆழம் அதை உயரச்செய்தது; அதின் ஆறுகள் அதின் அடிமரத்தைச் சுற்றிலும் ஓடின; தன்னுடைய நீர்க்கால்களை வெளியின் மரங்களுக்கெல்லாம் பாயவிட்டது. ஆகையால் வெளியின் எல்லா மரங்களிலும் அது மிகவும் உயர்ந்தது; அது துளிர்விடும்போது திரளான தண்ணீரினால் அதின் கிளைகள் பெருகி, அதின் கிளைகள் நீளமானது. அதின் கிளைகளில் ஆகாயத்தின் பறவைகளெல்லாம் கூடுகட்டின; அதின் கிளைகளின்கீழ் வெளியின் மிருகங்களெல்லாம் குட்டிகளைப்போட்டது; பெரிதான எல்லா தேசகளும் அதின் நிழலிலே குடியிருந்தார்கள். அப்படியே அதின் வேர் திரளான தண்ணீர்களருகே இருந்ததினால் அது தன்னுடைய செழிப்பினாலும் தன்னுடைய கிளைகளின் நீளத்தினாலும் அலங்காரமாக இருந்தது. தேவனுடைய வனத்திலுள்ள கேதுருக்கள் அதை மறைக்கமுடியாமல் இருந்தது; தேவதாரு மரங்கள் அதின் கொப்புகளுக்குச் சமானமல்ல; அர்மோன் மரங்கள் அதின் கிளைகளுக்கு நிகரல்ல; தேவனுடைய வனத்திலுள்ள ஒரு மரமும் அலங்காரத்திலே அதற்கு ஒப்பல்ல. அதின் அடர்ந்த கிளைகளினால் அதை அலங்கரித்தேன்; தேவனுடைய வனமாகிய ஏதேனின் மரங்களெல்லாம் அதின்மேல் பொறாமைகொண்டன.
எசேக்கியேல் 31:4-9 பரிசுத்த பைபிள் (TAERV)
தண்ணீர் மரத்தை வளரச் செய்கிறது. ஆழமான நதி மரத்தை உயரமாக்கியது. நதிகள் நடப்பட்ட மரத்தை சுற்றி ஓடுகின்றன. ஒரு மரத்திலிருந்து மற்ற மரங்களுக்கு சிறு ஓடைகள் மட்டுமே பாய்கின்றன. எனவே காட்டிலுள்ள மற்ற மரங்களைவிட அம்மரம் உயரமாக இருக்கின்றது. இதில் பல கிளைகள் வளர்ந்துள்ளன. அங்கே தண்ணீர் மிகுதியாக உள்ளது. எனவே கிளைகள் பரந்து வளர்ந்துள்ளன. அம்மரத்தின் கிளைகளில் வானத்துப் பறவைகள் எல்லாம் தம் கூடுகளைக் கட்டிக்கொண்டன. காட்டிலுள்ள விலங்குகள் எல்லாம் அம்மரத்துக் கிளைகளின் அடியிலேயே குட்டிபோட்டன. அம்மரத்தின் அடியிலேயே எல்லா பெருநாடுகளும் வாழ்ந்தன. அந்த மரம் அழகாக இருந்தது. அது பெரிதாக இருந்தது, அதற்கு அவ்வளவு பெரிய கிளைகள் இருந்தன. அதன் வேர்களுக்கு மிகுதியான நீர் இருந்தது! தேவனுடைய தோட்டத்தில் உள்ள கேதுரு மரங்கள் கூட இம்மரத்தைப்போன்று இவ்வளவு பெரிதாக இல்லை. தேவதாரு மரங்களுக்கு இவ்வளவு கிளைகள் இல்லை. அர்மோன் மரங்களுக்கு அதைப்போன்று கிளைகள் இல்லை. இந்த மரத்தைப்போன்று தேவனுடைய தோட்டத்தில் உள்ள எந்த மரமும் அழகானதாக இல்லை. நான் இதற்குப் பல கிளைகளைக் கொடுத்தேன், அதனை அழகுடையதாக ஆக்கினேன். தேவன் தோட்டமான ஏதேனிலுள்ள அனைத்து மரங்களும் பொறாமைப்பட்டன!’”
எசேக்கியேல் 31:4-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தண்ணீர்கள் அதைப் பெரிதும், ஆழம் அதை உயர்த்தியும் ஆக்கின; அதின் ஆறுகள் அதின் அடிமரத்தைச் சுற்றிலும் ஓடின; தன் நீர்க்கால்களை வெளியின் விருட்சங்களுக்கெல்லாம் பாயவிட்டது. ஆகையால் வெளியின் சகலவிருட்சங்களிலும் அது மிகவும் உயர்ந்தது; அது துளிர்விடுகையில் திரளான தண்ணீரினால் அதின் கிளைகள் பெருகி, அதின் கொப்புகள் நீளமாயின. அதின் கொப்புகளில் ஆகாயத்தின் பறவைகளெல்லாம் கூடுகட்டின; அதின் கொப்புகளின்கீழ் வெளியின் மிருகங்களெல்லாம் குட்டிகளைப்போட்டன; பெரிதான சகலஜாதிகளும் அதின் நிழலிலே குடியிருந்தார்கள். அப்படியே அதின் வேர் திரளான தண்ணீர்களருகே இருந்ததினால் அது தன் செழிப்பினாலும் தன் கொப்புகளின் நீளத்தினாலும் அலங்காரமாயிருந்தது. தேவனுடைய வனத்திலுள்ள கேதுருக்கள் அதை மறைக்கக்கூடாதிருந்தது; தேவதாரு விருட்சங்கள் அதின் கொப்புகளுக்குச் சமானமல்ல; அர்மோன் மரங்கள் அதின் கிளைகளுக்கு நிகரல்ல; தேவனுடைய வனத்திலுள்ள ஒரு விருட்சமும் அலங்காரத்திலே அதற்கு ஒப்பல்ல. அதின் கிளைகளின் திரளினால் அதை அலங்கரித்தேன்; தேவனுடைய வனமாகிய ஏதேனின் விருட்சங்களெல்லாம் அதின்பேரில் பொறாமைகொண்டன.