எசேக்கியேல் 21:1-31

எசேக்கியேல் 21:1-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, நீ உன் முகத்தை எருசலேமிற்கு எதிராகத் திருப்பி, பரிசுத்த இடத்திற்கு விரோதமாய்ப் பிரசங்கி. இஸ்ரயேல் நாட்டிற்கு விரோதமாய் இறைவாக்கு சொல்லுங்கள். நீ அவளுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே, நான் உனக்கு விரோதமாய் இருக்கிறேன். நான் என் வாளை உறையிலிருந்து உருவி நேர்மையானவன் கொடியவன் ஆகிய இருவரையுமே உன்னிலிருந்து அகற்றுவேன். நீதியானவனையும் கொடியவனையும் நான் அகற்றப்போவதால், தெற்கிலிருந்து வடக்கு வரையுள்ள ஒவ்வொருவனுக்கும் விரோதமாய் என் வாள் அதன் உறையிலிருந்து வெளியே உருவப்படும். அப்பொழுது எனது வாளை அதன் உறையிலிருந்து உருவியவர் யெகோவாவாகிய நானே என்பதையும், அது மீண்டும் உறைக்குத் திரும்பமாட்டாது என்பதையும் மக்களெல்லோரும் அறிந்துகொள்வார்கள்.’ “ஆகையால் மனுபுத்திரனே, துக்கித்து அழு. உடைந்த உள்ளத்தோடும் கசப்பான துயரத்தோடும் அவர்களுக்கு முன்பாக அழு. ‘ஏன் அழுகிறாய்?’ என அவர்கள் உன்னைக் கேட்கும்போது, ‘வரப்போகும் செய்திக்காகவே அழுகிறேன். ஒவ்வொரு இருதயமும் உருகும். ஒவ்வொரு கையும் சோர்ந்துபோகும். ஒவ்வொரு ஆவியும் மயங்கும். ஒவ்வொரு முழங்காலும் தண்ணீரைப்போல் ஆகும்.’ அது வருகிறது, நிச்சயமாகவே அது நடக்கும் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார் என்று சொல்.” யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, நீ இறைவாக்கு உரைத்துச் சொல்லவேண்டியதாவது, ‘யெகோவா கூறுவது இதுவே: “ ‘ஒரு வாள், அது கூர்மையானதும், துலக்கப்பட்டதுமான ஒரு வாள். அது படுகொலைக்காக கூர்மையாக்கப்பட்டது. மின்னல் ஒளிவீச துலக்கப்பட்டது. “ ‘என் மகன் யூதாவின் செங்கோலைக் குறித்து, நாம் மகிழ்வோமோ? அத்தகைய கோல் ஒவ்வொன்றையும் அவ்வாள் அலட்சியம்செய்கிறதே. “ ‘துலக்கப்படுவதற்கும் கையால் பிடிப்பதற்கும் அந்த வாள் நியமிக்கப்பட்டிருக்கிறது. அது கூர்மையாக்கப்பட்டும், துலக்கப்பட்டும் படுகொலைசெய்பவனின் கைக்குத் தயாராக இருக்கிறது. மனுபுத்திரனே, அந்த வாள் என் மக்களுக்கு விரோதமாக இருப்பதனால் அழுது புலம்பு; அது இஸ்ரயேலின் தலைவர்கள் எல்லோருக்கும் விரோதமாக இருக்கின்றது. அவர்கள் என் மக்களோடுகூட, வாளுக்கு இரையாக்கப்படுவார்கள். ஆதலால், உன் மார்பில் அடித்து அழு. “ ‘நிச்சயமாகவே சோதனை வரும். வாளால் இகழப்பட்ட யூதாவின் செங்கோல் தொடராவிட்டால், என்ன நடக்கும் என்று ஆண்டவராகிய யெகோவா கேட்கிறார்.’ “ஆகையால், மனுபுத்திரனே நீ, இறைவாக்குரைத்து, கைகளைத் தட்டு. இரண்டுதரமோ மூன்றுதரமோ வாள் வீசப்படட்டும். அது எல்லாப் பக்கமும் அவர்கள்மேல் வரும் படுகொலையின் வாள், அது பெரும் படுகொலைக்கான வாள், இருதயங்கள் உருகி அநேகர் விழும்படியாக, அவர்கள் வாசல்களிலெல்லாம் படுகொலைக்காக நான் வாளை நிலைப்படுத்தியுள்ளேன். அது துலக்கப்பட்டு மின்னல் கீற்றுப்போல் பாய்வதற்காகத் தீட்டப்பட்டு, படுகொலைக்கு ஆயத்தமாகக் கையில் பிடிக்கப்பட்டுள்ளது. வாளே! உன் வெட்டும் பகுதி எங்கு திரும்புகிறதோ, அங்கு வலப்புறமாகவும், பின் இடப்புறமாகவும் வீசி வெட்டு. நானும் என் கரத்தைத் தட்டுவேன். என் கடுங்கோபம் தணியும். யெகோவாவாகிய நானே இதைப் பேசினேன்.” யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. அவர் என்னிடம் “மனுபுத்திரனே, வரைபடம் ஒன்றை வரைந்து அதில் பாபிலோன் அரசனுடைய வாள் செல்ல இரண்டு வழிகளைக் குறித்துக்கொள். இரண்டும் ஒரே தேசத்திலிருந்து வரட்டும். பட்டணத்தை நோக்கிப் பாதைகள் பிரியும் இடத்தில் கைகாட்டிக் கம்பம் ஒன்றை நிறுத்து. அம்மோனியரின் பட்டணமான ரப்பாவுக்கு எதிராக வாள் வரும்படி வழியொன்றைக் குறி. அரண்செய்யப்பட்ட எருசலேமுக்கும், யூதாவுக்கும் விரோதமாக வாள் வரும்படி வேறொரு வழியையும் குறி. வழி பிரியும் இடத்திலே, இருவழிச்சந்தியில் சகுனம் பார்ப்பதற்காக பாபிலோன் அரசன் நிற்பான். அவன் அம்புகளினால் சீட்டுப்போட்டு, தன் விக்கிரகங்களிடம், விசாரிப்பான். அவன் ஈரலிலே சகுனம் பார்ப்பான். எருசலேமுக்குரிய சீட்டு அவனுடைய வலதுகையில் வரும். அப்பொழுது அவன் இடிக்கும் இயந்திரங்களை நிலைப்படுத்தி, கொலை செய்யும்படி கட்டளை கொடுத்து, போர் முழக்கம் எழுப்பி, கருவிகளை வாசலுக்கெதிரே வைத்து, கொத்தளங்களைக் கட்டி முற்றுகைக்குரிய வேலைகளைச் செய்வான். உடன்படிக்கையில் உண்மையாய் இருப்போம் என அவனுக்கு ஆணையிட்டவர்களுக்கு அது போலியான சகுனமாய்க் காணப்படும். ஆனால் அவர்களுடைய குற்றத்தை அவன் அவர்களுக்கு நினைவுப்படுத்தி, அவர்களைக் கைதிகளாக்கிக் கொண்டுபோவான். “ஆகையால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. ‘நீங்கள் செய்த அனைத்திலும், உங்கள் பாவங்களை வெளிப்படுத்தினீர்கள். வெளிப்படையாய் கலகம்செய்து, உங்கள் குற்றங்களை நினைவுபடுத்தினீர்கள். இதைச் செய்தபடியினால், நீங்கள் கைதிகளாகக் கொண்டுபோகப்படுவீர்கள். “ ‘இஸ்ரயேலின் சீர்கெட்ட கொடிய இளவரசனே, உன் நாள் வந்துவிட்டது. உன் தண்டனையின் வேளை உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டது. ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே, உன் தலைப்பாகையை எடுத்துவிடு. உன் மகுடத்தை அகற்றிவிடு. அது முன்னர் இருந்ததுபோல் இனி இருக்கமாட்டாது. தாழ்ந்தவன் உயர்த்தப்படுவான், உயர்ந்தவன் தாழ்த்தப்படுவான். அழிவோ அழிவு! அதைப் பாழாக்குவேன். அதற்கு உரிமையானவர் வருமட்டும் அது திரும்பவும் நிலைநாட்டப்படுவதில்லை. அவருக்கே நான் அதைக் கொடுப்பேன்.’ “மனுபுத்திரனே, இறைவாக்கு உரைத்துச் சொல்லவேண்டியதாவது, ‘அம்மோனியரையும் அவர்களுடைய நிந்தைகளையும் குறித்து ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: “ ‘ஒரு வாள், ஒரு வாள், வெட்டுவதற்காக உருவப்பட்டிருக்கிறது. அழிப்பதற்காக மின்னல் கீற்றுப்போல் பாயும்படி அது துலக்கப்பட்டது. உன்னைக்குறித்துப் பொய்யான தரிசனங்களும், பொய்யான குறிகளும் கூறப்பட்டபோதிலும், கொலைசெய்யப்பட வேண்டிய கொடியவர்களின் கழுத்திலே அந்த வாள் வைக்கப்படும். அவர்களின் நாள் வந்துவிட்டது! அவர்கள் தண்டனையின் வேளை உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டது. “ ‘வாளைத் திரும்பவும் அதன் உறையில் போடு. நீ உருவாக்கப்பட்ட இடத்தில், உன் மூதாதையரின் நாட்டில் நான் உன்னை நியாயம் விசாரிப்பேன். நான் எனது கோபத்தை உன்மேல் ஊற்றுவேன். உனக்கு விரோதமாய் என் சுட்டெரிக்கும் கோபத்தை ஊதுவேன். முரட்டு மனிதரிடமும் அழிப்பதில் வல்லவரான மனிதரிடமும் நான் உன்னைக் கையளிப்பேன்.

எசேக்கியேல் 21:1-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனிதகுமாரனே, நீ உன்னுடைய முகத்தை எருசலேமுக்கு நேராகத் திருப்பி, பரிசுத்த ஸ்தலங்களுக்கு விரோதமாக உன்னுடைய வசனத்தைப் பொழிந்து, இஸ்ரவேல் தேசத்திற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி. இஸ்ரவேல் தேசத்தை நோக்கி, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, என்னுடைய வாளை அதின் உறையிலிருந்து உருவி, உன்னில் நீதிமானையும் துன்மார்க்கனையும் அழிப்பேன். நான் உன்னில் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அழிக்கப்போகிறதினால் தெற்கு துவக்கி வடக்குவரையும் உள்ள எல்லா மாம்சத்திற்கும் எதிராக என்னுடைய வாள் அதின் உறையிலிருந்து புறப்படும். அப்பொழுது யெகோவாகிய நான் என்னுடைய வாளை அதின் உறையிலிருந்து உருவினேன் என்பதை எல்லா மாம்சமும் அறியும்; அது இனி உறைக்குள் திரும்புவதில்லை. ஆதலால் மனிதகுமாரனே, உன்னுடைய இடுப்பு நொறுங்கும்படி பெருமூச்சுவிடு; அவர்களுடைய கண்களுக்கு முன்பாக மனங்கசந்து பெருமூச்சுவிடு. நீ எதற்காக பெருமூச்சுவிடுகிறாய் என்று அவர்கள் உன்னிடத்தில் கேட்டால், நீ அவர்களை நோக்கி: துர்ச்செய்தி வருகிறதற்காகவே; அதினால், இருதயங்களெல்லாம் உருகி, கைகளெல்லாம் தளர்ந்து, மனமெல்லாம் தியங்கி, முழங்கால்களெல்லாம் தண்ணீரைப்போல தள்ளாடும்; இதோ, அது வந்து சம்பவிக்கும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, சொல்லவேண்டியது என்னவென்றால்: வாள் கூர்மையாக்கப்பட்டது, வாள் கூர்மையாக்கப்பட்டது; அது தீட்டப்பட்டும் இருக்கிறது. பெரிய அழிவுண்டாக்குவதற்கு அது கூர்மையாக்கப்பட்டிருக்கிறது; மின்னத்தக்கதாக அது தீட்டப்பட்டிருக்கிறது; சந்தோஷப்படுவோமோ? அது என்னுடைய மகனுடைய கோல், அது எல்லா மரங்களையும் அலட்சியம்செய்யும். அதைக் கையாடும்படி அதைத் துலக்கக் கொடுத்தார்; கொல்லுகிறவன் கையிலே கொடுக்கும்படி அந்தப் வாள் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது; அது தீட்டப்பட்டதுமாக இருக்கிறது என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல். மனிதகுமாரனே, நீ சத்தமிட்டு கதறு; வாள் என்னுடைய மக்களின்மேல் வரும்; அது இஸ்ரவேல் பிரபுக்கள் எல்லார்மேலும் வரும்; அதற்காக என்னுடைய மக்களுக்குள்ளே திகில் உண்டாயிருக்கும்; ஆகையால் உன்னுடைய விலாவிலே அடித்துக்கொள். யாவையும் கண்டிக்கிற கோல் வந்தால் தவிர இனிச் சோதனையினால் தீருகிறது என்னவென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். ஆகையால் மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, கையோடே கைதட்டு; வாள் மூன்றுமுறை இரட்டித்துவரும்; அது கொலை செய்யப்பட்டவர்களின் வாள்; அது கொலைசெய்யப்படப்போகிற பெரியவர்களின் உள் அறைகளில் நுழைகிற வாள். அவர்களுடைய இருதயம் கரைந்து, அவர்களுடைய இடையூறுகள் அதிகமாகும்படி, பட்டயத்தின் கூர்மையை அவர்களுடைய எல்லா வாசல்களுக்கும் சம்பவிக்கக் கட்டளையிடுவேன்; ஆ, அது மின்னும்படியாகப் பதமிடப்பட்டது, வெட்டும்படியாகத் தீட்டிவைக்கப்பட்டது. ஒரே பலமாக வலதுபுறமாக வெட்டு, திரும்பி இடதுபுறமாகவும் வெட்டு; உன்னுடைய முகம் திரும்புகிற திசையெல்லாம் வெட்டு. நானும் கையுடன் கைதட்டி, என்னுடைய கடுங்கோபத்தை ஆறச்செய்வேன் என்று யெகோவாகிய நான் சொன்னேன் என்றார். பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனிதகுமாரனே, பாபிலோன் ராஜாவின் வாள் வரக்கூடிய இரண்டு வழிகளைக் குறித்துக்கொள்; இரண்டும் ஒரே தேசத்திலிருந்து வரவேண்டும்; நீ ஒரு இடத்தைத் தெரிந்துகொள், நகரத்திற்குப் போகிற வழியின் முனையில் அந்த இடத்தைத் தெரிந்துகொள். வாள் அம்மோனியர்களின் பட்டணமாகிய ரப்பாவுக்கு விரோதமாக வரக்கூடிய ஒரு வழியையும், யூதாவில் இருக்கிற பாதுகாப்பான எருசலேமுக்கு விரோதமாக வரக்கூடிய ஒரு வழியையும் குறித்துக்கொள். பாபிலோன் ராஜா இரண்டு வழிகளின் முனையாகிய வழிப்பிரிவிலே குறிபார்க்கிறதற்காக நிற்பான்; அம்புகளைத் தீட்டி, சிலைகளை ஆட்டி, ஈரலால் குறிபார்ப்பான். தலைவரை நியமிக்கிறதற்கும், அழிக்கும்படி ஆர்ப்பரிக்கிறதற்கும், கெம்பீரமாகச் சத்தமிடுகிறதற்கும், வாசல்களை முட்டும் இயந்திரங்களை வைக்கிறதற்கும், மண்மேடு போடுகிறதற்கும், முற்றுகைச் சுவர்களைக் கட்டுகிறதற்கும், எருசலேமைக்குறித்து குறிபார்க்குதல் அவனுடைய வலதுபுறத்திலே உண்டாயிருக்கும். இந்த குறியானது வாக்கு கொடுத்தவர்களுக்கு முன்பாகப் பொய்யாகத் தோன்றும்; ஆயினும் அவர்கள் பிடிக்கப்படும்படி அவன் அவர்களுடைய துரோகத்தை நினைப்பான். ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உங்கள் துரோகங்கள் வெளியரங்கமாகிறதினாலும், உங்களுடைய செய்கைகளிலெல்லாம் உங்களுடைய பாவங்கள் தெரியவருகிறதினாலும், நீங்கள் உங்களுடைய அக்கிரமத்தை நினைக்கச்செய்கிறீர்களே; நீங்கள் இப்படிப்பட்டவர்களென்று நினைக்கப்படுகிறீர்களே; ஆதலால் கைப்பிடியாக பிடிக்கப்படுவீர்கள். இஸ்ரவேலை ஆளுகிற அவபக்தியுள்ள துன்மார்க்க அதிபதியே, அக்கிரமத்திற்கு முடிவு வருங்காலத்தில் உன்னுடைய நாள் வந்தது. தலைப்பாகையைக் கழற்று, கிரீடத்தை எடுத்துப்போடு; அது இனி முன்பு போல இருக்காது; தாழ்ந்தவனை உயர்த்தி, உயர்ந்தவனைத் தாழ்த்துவேன். அதைக் கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன்; உரிமைக்காரனானவர் வரும்வரை அது இல்லாமல் இருக்கும்; அவருக்கே அதைக் கொடுப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். பின்னும் மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: அம்மோனியர்களையும் அவர்கள் சொல்லும் நிந்தனைகளையும் குறித்துக் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், அக்கிரமத்திற்கு முடிவு வருங்காலத்தில் வந்த தங்களுடைய நாளுக்கு ஏதுவாகி, கொலைசெய்யப்பட்டு போனவர்களுடைய பிடரிகளோடேகூட உன்னைத் துன்மார்க்கரின் கையினால் விழச்செய்யும்படி, உனக்கு பொய்யானது பார்க்கப்படுகிறபோதும், உனக்குப் பொய்குறி பார்க்கப்படுகிறபோதும் வாள் உருவப்பட்டது, வாளே உருவப்பட்டது; வெட்டவும், அழிக்கவும் அது மின்னக்கூடியதாகத் தீட்டப்பட்டிருக்கிறது. உன்னுடைய வாளை நீ திரும்ப அதின் உறையிலே போடு; நீ உண்டாக்கப்பட்ட இடமாகிய உன்னுடைய பிறந்த நாட்டிலே நான் உன்னை நியாயந்தீர்த்து, என்னுடைய கோபத்தை உன்மேல் ஊற்றுவேன்; நான் என்னுடைய கடுங்கோபத்தின் நெருப்பை உன்மேல் ஊதி, மிருககுணமுள்ளவர்களும், அழிக்கிறதற்குத் திறமையுள்ளவர்களுமாகிய மனிதர்களின் கையில் உன்னை ஒப்புக்கொடுப்பேன்.

எசேக்கியேல் 21:1-31 பரிசுத்த பைபிள் (TAERV)

எனவே கர்த்தருடைய வார்த்தை மீண்டும் என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, எருசலேமை நோக்கிப் பார். அதன் பரிசுத்தமான இடங்களுக்கு எதிராகப் பேசு. எனக்காக இஸ்ரவேல் நாட்டிற்கு எதிராகப் பேசு. இஸ்ரவேல் நாட்டிடம் கூறு, ‘கர்த்தர் இவற்றைச் சொன்னார்; நான் உனக்கு எதிரானவன்! நான் எனது வாளை அதன் உறையிலிருந்து எடுப்பேன்! நல்லவர்கள் தீயவர்கள் ஆகிய எல்லா ஜனங்களையும் உன்னிடமிருந்து விலக்குவேன். நான் நல்ல ஜனங்களையும், தீய ஜனங்களையும் உன்னிடமிருந்து துண்டிப்பேன்! நான் எனது வாளை அதன் உறையிலிருந்து உருவி தெற்கிலிருந்து வடக்கு வரையுள்ள அனைத்து ஜனங்களுக்கும் எதிராகப் பயன்படுத்துவேன். பிறகு நானே கர்த்தர் என்பதை எல்லா ஜனங்களும் அறிந்துகொள்வார்கள். நானே எனது வாளை உறையிலிருந்து உருவியிருக்கிறேன் என்பதையும் அறிந்துகொள்வார்கள். எனது வாள் தன் வேலையை முடிக்கும்வரை தன் உறைக்குள் திரும்பப் போகாது.’” தேவன் என்னிடம் சொன்னார், “மனுபுத்திரனே, துக்கமான மனிதனைப்போன்று உடைந்த உள்ளத்துடன் துக்க ஒலிகளை எழுப்பு. இத்துயர ஒலிகளை ஜனங்களுக்கு முன்னால் எழுப்பு. பிறகு அவர்கள் உன்னை ‘ஏன் இத்தகைய துக்க ஒலிகளை எழுப்புகிறாய்’ எனக் கேட்பார்கள். பிறகு நீ, ‘துக்கச்செய்தி வரப்போகிறது, ஒவ்வொரு இதயமும் பயத்தால் உருகப்போகிறது, எல்லா கைகளும் பலவீனமடையப் போகிறது. எல்லா ஆவியும் சோர்ந்துபோகும். எல்லா முழங்கால்களும் தண்ணீரைப்போன்று ஆகும்’ என்று சொல்லவேண்டும். பார், கெட்ட செய்தி வந்துகொண்டிருக்கிறது. இவை எல்லாம் நிகழும்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார். கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, எனக்காக ஜனங்களிடம் பேசு. இவற்றைக் கூறு, ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “‘பார், ஒரு வாள், கூர்மையான வாள், அந்த வாள் தீட்டப்பட்டிருக்கிறது. வாள் கொல்வதற்காகக் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது. இது மின்னலைப்போன்று பளிச்சிட கூர்மையாக்கப்பட்டிருக்கிறது. என் மகனே, நான் உன்னைத் தண்டிக்க வரும் பிரம்பிடமிருந்து ஓடிவிட்டாய். அம்மரத்தடியால் தண்டிக்கப்படுவதற்கு நீ மறுக்கிறாய். எனவே, வாள் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது. இப்போது இதனைப் பயன்படுத்த முடியும். வாள் கூர்மையாகவும் பளபளப்பாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. இப்போது இது கொலையாளியின் கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. “‘கதறியழு, கத்து, மனுபுத்திரனே! ஏனென்றால், இந்த வாள் எனது ஜனங்களுக்கும் இஸ்ரவேலை ஆள்வோர்களுக்கும் எதிராகப் பயன்படுத்தப்படும்! அந்த ஆள்வோர்கள் போரை விரும்பினார்கள். எனவே, வாள் வரும்போது அவர்கள் எனது ஜனங்களோடு இருப்பார்கள்! எனவே உனது தொடையிலே அடித்துக்கொண்டு, உன் துக்கத்தைக் காட்ட ஒலி எழுப்பு! எனென்றால், இது ஒரு சோதனை அன்று! மரத்தடியால் தண்டிக்கப்பட நீ மறுத்தாய் எனவே, நான் உன்னை வேறு எதனால் தண்டிக்க முடியும்? ஆம் வாளால்தான்’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார். தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, உன் கைகளைத் தட்டு. எனக்காக ஜனங்களிடம் பேசு. இந்த வாள் கீழே இரண்டு முறை வரட்டும்! மூன்று முறை வரட்டும். இந்த வாள் ஜனங்களைக் கொல்வதற்குரியது! இந்த வாள் பெருங் கொலைக்குரியது. இந்த வாள் ஜனங்களுக்குள் ஊடுருவுமாறு செருகப்பட்டிருக்கிறது. அவர்களின் இதயங்கள் அச்சத்தால் உருகும். மிகுதியான ஜனங்கள் கீழே விழுவார்கள். நகர வாசல்களில் இந்த வாள் பலரைக் கொல்லும். ஆம் இந்த வாள் மின்னலைப்போன்று பளிச்சிடும். இது ஜனங்களைக் கொல்லத் தீட்டப்பட்டிருக்கிறது! வாளே, கூர்மையாக இரு! வலது பக்கத்தை வெட்டு. நேராக மேலே வெட்டு. இடது பக்கத்தை வெட்டு. உனது முனை தேர்ந்தெடுத்த இடங்களில் எல்லாம் போ! “பிறகு நானும் எனது கைகளைத் தட்டுவேன். என் கோபத்தைக் காட்டுவதை நிறுத்துவேன். கர்த்தராகிய நான் பேசினேன்!” கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, பாபிலோனிய ராஜாவின் வாள் இஸ்ரவேலுக்கு வரத்தக்கதாக இரண்டு பாதைகளை வரைந்துக்கொள். இரண்டு சாலைகளும் ஒரே தேசத்திலிருந்து (பாபிலோன்) வர வேண்டும். சாலையின் ஆரம்பத்தில் ஒரு குறிப்பை எழுது. அடையாளத்தைப் பயன்படுத்தி எந்த வழியில் வாள் வருமென்று காட்டு. ஒருவழி அம்மோனியரின் நகரமாகிய ரப்பாவுக்குக் கொண்டுபோகும். இன்னொரு வழி யூதாவில் இருக்கிற பாதுகாக்கப்பட்ட நகரம் எருசலேமிற்கு கொண்டுபோகும்! பாபிலோனிய ராஜா தாக்குவதற்காகத் தான் போக விரும்பும் வழியைத் திட்டமிட்டிருக்கிறான் என்பதை இது காட்டும். பாபிலோன் ராஜா இரு வழிகளும் பிரிகிற இடத்திற்கு வந்திருக்கிறான். பாபிலோன் ராஜா எதிர்காலத்தை அறிய மந்திர அடையாளங்களைப் பயன்படுத்தியிருக்கிறான். அவன் சில அம்புகளை ஆட்டினான். அவன் குடும்ப விக்கிரகங்களிடம் கேள்விகள் கேட்டான். அவன் தான் கொன்ற விலங்கின் ஈரலைப் பார்த்தான். “அடையாளமானது வலது பக்கமாக எருசலேமிற்குப் போகும் வழியில் போகச் சொல்லும்! அவன் வாசலை இடிக்கும் எந்திரங்களைக் கொண்டுவர திட்டமிடுகிறான். அவன் கட்டளை இடுவான். அவனது வீரர்கள் கொல்லத் தொடங்குவார்கள். அவர்கள் போர் ஆரவாரத்தைச் செய்வார்கள். பிறகு அவர்கள் நகரத்தைச் சுற்றி சுவரைக் கட்டுவார்கள், மணசாலைகளை அமைப்பார்கள். நகரத்தைத் தாக்க அவர்கள் மரக்கோபுரங்களைக் கட்டுவார்கள். அச்செயல்களை வெறும் பயனற்ற மந்திர வித்தைகளாக இஸ்ரவேல் ஜனங்கள் கருதினார்கள். அவர்கள் தங்களுக்குள் விசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். ஆனால் கர்த்தர் அவர்களது பாவங்களை நினைப்பார்! பிறகு இஸ்ரவேலர்கள் சிறை பிடிக்கப்படுவார்கள்.” எனது கர்த்தராகிய ஆண்டவர், இதனைக் கூறுகிறார்: “நீ பல பாவங்களைச் செய்திருக்கிறாய். உன் பாவங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. நீ குற்றவாளி என்பதை அவை எனக்கு நினைப்பூட்டுகின்றன. எனவே எதிரி தன் கையில் உன்னைப் பிடித்துக்கொள்வான். இஸ்ரவேலின் தீய தலைவனான நீ கொல்லப்படுவாய். உன் தண்டனைக் காலம் வந்திருக்கிறது. இங்கே முடிவு இருக்கிறது!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “உன் தலைப்பாகையை எடு! உன் கிரீடத்தை எடுத்துவிடு. காலம் மாறி இருக்கிறது. முக்கியமான தலைவர்கள் தாழ்த்தப்படுவார்கள். முக்கியமற்றவர்கள் தலைவர்கள் ஆவார்கள். நான் அந்த நகரத்தை முழுமையாக அழிப்பேன்! ஆனால் சரியான மனிதன் புதிய ராஜா ஆகும்வரை இது நிகழாது. பிறகு நான் அவனை (பாபிலோன் ராஜாவை) இந்நகரத்தை வைத்துக் கொள்ளவிடுவேன்.” தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, எனக்காக ஜனங்களிடம் கூறு, இவற்றைச் சொல், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் அம்மோன் ஜனங்களிடமும் அவர்களின் அவமானத்திற்குரிய பொய்த் தேவனிடமும் இவற்றைச் சொல்கிறார்: “‘பார், ஒரு வாள்! வாள் உறையிலிருந்து வெளியே உள்ளது. வாள் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது! வாள் கொலை செய்யத் தயாராக இருக்கிறது. இது மின்னலைப்போன்று ஒளிவிட கூர்மையாக்கப்பட்டுள்ளது! “‘உங்கள் தரிசனங்கள் பயனற்றவை, உங்கள் மந்திரம் உங்களுக்கு உதவாது. இது பொய்களின் கொத்து மட்டுமே. இவ்வாள் இப்பொழுது தீய மனிதர்களின் தொண்டையில் உள்ளது. அவர்கள் மரித்த உடல்களாக விரைவில் ஆவார்கள். அவர்களின் நேரம் வந்திருக்கிறது. அவர்களின் தீமை முடிவடையும் நேரம் வந்திருக்கிறது. “‘உனது வாளை (பாபிலோன்) உறையிலே போடு, பாபிலோனே, நீ எந்த இடத்தில் உருவாக்கப்பட்டாயோ, எந்த இடத்தில் பிறந்தாயோ அங்கே நான் உன்னை நியாயந்தீர்ப்பேன். எனது கோபத்தை நான் உனக்கு எதிராகக் கொட்டுவேன். எனது கோபம் உன்னை ஒரு சூடான காற்றைப்போன்று அழிக்கும். நான் உன்னைத் தீய மனிதர்களிடம் ஒப்படைப்பேன். அவர்கள் ஜனங்களைக் கொல்வதில் திறமை உடையவர்கள்.

எசேக்கியேல் 21:1-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, நீ உன் முகத்தை எருசலேமுக்கு நேராகத் திருப்பி, பரிசுத்த ஸ்தலங்களுக்கு விரோதமாக உன் வசனத்தைப் பொழிந்து, இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, இஸ்ரவேல் தேசத்தை நோக்கி, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, என் பட்டயத்தை அதின் உறையிலிருந்து உருவி, உன்னில் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் சங்காரம்பண்ணுவேன். நான் உன்னில் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் சங்காரம்பண்ணப்போகிறபடியினால் தெற்கு துவக்கி வடக்குமட்டுமுள்ள எல்லா மாம்சத்துக்கும் விரோதமாய் என் பட்டயம் அதின் உறையிலிருந்து புறப்படும். அப்பொழுது கர்த்தராகிய நான் என் பட்டயத்தை அதின் உறையிலிருந்து உருவினேன் என்பதை எல்லா மாம்சமும் அறியும்; அது இனி உறைக்குள் திரும்புவதில்லை. ஆதலால் மனுபுத்திரனே, உன் இடுப்பு நொறுங்கும்படி பெருமூச்சுவிடு; அவர்கள் கண்களுக்கு முன்பாக மனங்கசந்து பெருமூச்சுவிடு. நீ எதினிமித்தம் பெருமூச்சுவிடுகிறாய் என்று அவர்கள் உன்னிடத்தில் கேட்டால், நீ அவர்களை நோக்கி: துர்ச்செய்தி வருகிறதினிமித்தமே; அதினால், இருதயங்களெல்லாம் உருகி, கைகளெல்லாம் தளர்ந்து, மனமெல்லாம் தியங்கி, முழங்கால்களெல்லாம் தண்ணீரைப்போல அலைவுண்ணும்; இதோ, அது வந்து சம்பவிக்கும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார். கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்: பட்டயம் கூர்மையாக்கப்பட்டது, பட்டயம் கூர்மையாக்கப்பட்டது; அது துலக்கப்பட்டுமிருக்கிறது. மகா சங்காரஞ்செய்வதற்கு அது கூர்மையாக்கப்பட்டிருக்கிறது; மின்னத்தக்கதாய் அது துலக்கப்பட்டிருக்கிறது; சந்தோஷப்படுவோமோ? அது என் குமாரனுடைய கோல், அது சகல விருட்சங்களையும் அலட்சியம்பண்ணும். அதைக் கையாடும்படி அதைத் துலக்கக் கொடுத்தார்; கொல்லுகிறவன் கையிலே கொடுக்கும்படி அந்தப் பட்டயம் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது; அது துலக்கப்பட்டதுமாயிருக்கிறது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல். மனுபுத்திரனே, நீ ஓலமிட்டு அலறு; பட்டயம் என் ஜனத்தின்மேல் வரும்; அது இஸ்ரவேல் பிரபுக்கள் எல்லார்மேலும் வரும்; அதினிமித்தம் என் ஜனத்துக்குள்ளே திகில் உண்டாயிருக்கும்; ஆகையால் உன் விலாவிலே அடித்துக்கொள். யாவையும் கண்டிக்கிற கோல் வந்தாலொழிய இனிச் சோதனையினால் தீருகிறதென்னவென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். ஆகையால் மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, கையோடே கைகொட்டு; பட்டயம் மூன்றுதரம் இரட்டித்துவரும்; அது கொலையுண்டவர்களின் பட்டயம்; அது கொலையுண்ணப்போகிற பெரியவர்களின் உள்ளறைகளில் பிரவேசிக்கிற பட்டயம். அவர்களுடைய இருதயம் கரைந்து, அவர்களுடைய இடையூறுகள் திரளாகும்படி, பட்டயத்தின் கூர்மையை அவர்களுடைய எல்லா வாசல்களுக்கும் நேரிடக்கட்டளையிடுவேன்; ஆ, அது மின்னும்படியாகப் பதமிடப்பட்டது, வெட்டும்படியாகத் தீட்டிவைக்கப்பட்டது. ஏகபலமாய் வலதுபுறமாக வெட்டு, திரும்பி இடதுபுறமாகவும் வெட்டு; உன் முகம் திரும்புகிற திக்கெல்லாம் வெட்டு. நானும் கையோடே கைகொட்டி, என் உக்கிரத்தை ஆறப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய நான் சொன்னேன் என்றார். பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, பாபிலோன் ராஜாவின் பட்டயம் வரத்தக்கதாக இரண்டு வழிகளைக் குறித்துக்கொள்; இரண்டும் ஒரே தேசத்திலிருந்து வரவேண்டும்; நீ ஒரு இடத்தைத் தெரிந்துகொள், நகரத்துக்குப் போகிற வழியின் முனையில் அந்த இடத்தைத் தெரிந்துகொள். பட்டயம் அம்மோன் புத்திரரின் பட்டணமாகிய ரப்பாவுக்கு விரோதமாக வரத்தக்க ஒரு வழியையும், யூதாவில் இருக்கிற அரணான எருசலேமுக்கு விரோதமாக வரத்தக்க ஒரு வழியையும் குறித்துக்கொள். பாபிலோன் ராஜா இரண்டு வழிகளின் முனையாகியவழிப்பிரிவிலே நிமித்தம்பார்க்கிறதற்காக நிற்பான்; அம்புகளைத் தீட்டி, விக்கிரகங்களை உசாவி, ஈரலால் குறிபார்ப்பான். தலைவரை நியமிக்கிறதற்கும், சங்காரஞ்செய்யும்படி ஆர்ப்பரிக்கிறதற்கும், கெம்பீரமாய்ச் சத்தமிடுகிறதற்கும், வாசல்களை முட்டும் இயந்திரங்களை வைக்கிறதற்கும், மண்மேடு போடுகிறதற்கும், கொத்தளங்களைக் கட்டுகிறதற்கும், எருசலேமைக்குறித்து நிமித்தம்பார்க்குதல் அவனுடைய வலதுபுறத்திலே உண்டாயிருக்கும். இந்த நிமித்தமானது ஆணையிட்டவர்களுக்கு முன்பாகப் பொய்யாகத் தோன்றும்; ஆயினும் அவர்கள் பிடிக்கப்படும்படி அவன் அவர்கள் துரோகத்தை நினைப்பான். ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உங்கள் துரோகங்கள் வெளியரங்கமாகிறதினாலும், உங்கள் செய்கைகளிலெல்லாம் உங்கள் பாவங்கள் தெரியவருகிறதினாலும், நீங்கள் உங்கள் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணுகிறீர்களே; நீங்கள் இப்படிப்பட்டவர்களென்று நினைக்கப்படுகிறீர்களே; ஆதலால் கைப்பிடியாய் பிடிக்கப்படுவீர்கள். இஸ்ரவேலை ஆளுகிற அவபக்தியுள்ள துன்மார்க்க அதிபதியே, அக்கிரமத்துக்கு முடிவு வருங்காலத்தில் உன் நாள் வந்தது. பாகையைக் கழற்று, கிரீடத்தை எடுத்துப்போடு; அது இனி முன்போலிராது; தாழ்ந்தவனை உயர்த்தி, உயர்ந்தவனைத் தாழ்த்துவேன். அதைக் கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன்; உரிமைக்காரனானவர் வருமட்டும் அது இல்லாதிருக்கும்; அவருக்கே அதைக் கொடுப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். பின்னும் மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: அம்மோன் புத்திரரையும் அவர்கள் சொல்லும் நிந்தனைகளையும் குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், அக்கிரமத்துக்கு முடிவு வருங்காலத்தில் வந்த தங்களுடைய நாளுக்கு ஏதுவாகி, கொலையுண்டுபோனவர்களுடைய பிடரிகளோடேகூட உன்னைத் துன்மார்க்கரின் கையினால் விழப்பண்ணும்படிக்கு, உனக்கு அபத்தமானது தரிசிக்கப்படுகிறபோதும், உனக்குப் பொய்நிமித்தம் பார்க்கப்படுகிறபோதும் பட்டயம் உருவப்பட்டது, பட்டயமே உருவப்பட்டது; வெட்டவும் சங்கரிக்கவும் அது மின்னத்தக்கதாய்த் துலக்கப்பட்டிருக்கிறது. உன் பட்டயத்தை நீ திரும்ப அதின் உறையிலே போடு; நீ சிருஷ்டிக்கப்பட்ட ஸ்தானமாகிய உன் ஜென்மதேசத்திலே நான் உன்னை நியாயந்தீர்த்து, என் சினத்தை உன்மேல் ஊற்றுவேன்; நான் என் மூர்க்கத்தின் அக்கினியை உன்மேல் ஊதி, மிருககுணமுள்ளவர்களும், அழிக்கிறதற்குத் திறமையுள்ளவர்களுமாகிய மனுஷரின் கையில் உன்னை ஒப்புக்கொடுப்பேன்.