எசேக்கியேல் 20:1-49
எசேக்கியேல் 20:1-49 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட ஏழாம் வருடத்தின் ஐந்தாம் மாதம், பத்தாம் தேதியிலே இஸ்ரயேலின் முதியோர் சிலர் யெகோவாவினிடத்தில் விசாரித்து அறியும்படி என்னிடம் வந்து, என் முன்னால் உட்கார்ந்தார்கள். அப்பொழுது, யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, இஸ்ரயேலின் முதியோரிடம் நீ பேசி அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே, நீங்கள் என்னிடம் ஆலோசனை கேட்க வந்தீர்களோ? நான் வாழ்வது நிச்சயம்போலவே, நீங்கள் என்னிடம் ஆலோசனை கேட்க நான் இடமளிக்கமாட்டேன் என்பதும் நிச்சயம்’ என்று ஆண்டவராகிய யெகோவா கூறுகிறார். “நீ அவர்களை நியாயந்தீர்பாயோ? மனுபுத்திரனே! நீ அவர்களை நியாயந்தீர்பாயோ? அப்படியானால் நீ அவர்கள் தந்தையருடைய அருவருப்பான பழக்கங்களை அவர்களுக்கு எடுத்துக்காட்டி அவர்களிடம் சொல்லவேண்டியதாவது; ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே; நான் இஸ்ரயேலைத் தெரிந்தெடுத்த நாளிலே, நான் என் உயர்த்திய கையுடன் யாக்கோபின் சந்ததிகளுக்கு ஆணையிட்டு, எகிப்திலே என்னை அவர்களுக்கு வெளிப்படுத்தினேன். நான் என் உயர்த்திய கையுடன், “நானே உங்கள் இறைவனாகிய யெகோவா” என்று சொன்னேன். அந்த நாளிலே நான் அவர்களை, எகிப்திலிருந்து அவர்களுக்கென நான் தெரிந்துகொண்ட நாட்டிற்கு கொண்டுவருவேன் என்று ஆணையிட்டேன். அது நாடுகளிலெல்லாம் அழகானதும், பாலும் தேனும் வழிந்தோடுகிறதுமான நாடு. அவர்களிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைக் கவர்ந்த இழிவான உருவச்சிலைகளை விலக்கிவிடுங்கள். எகிப்தின் விக்கிரகங்களால் உங்களை கறைப்படுத்தாதிருங்கள். உங்கள் ஆண்டவராகிய யெகோவா நானே” என்றும் கூறினேன். “ ‘ஆனால், அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி,’ எனக்குச் செவிகொடுக்க மறுத்தார்கள். தங்களைக் கவர்ந்த இழிவான உருவச்சிலைகளை விலக்கவுமில்லை. எகிப்தின் விக்கிரகங்களை கைவிடவுமில்லை. ஆதலால் நான் என் கோபத்தை அவர்கள்மேல் ஊற்றி, அவர்கள்மீது எனக்குள்ள கோபத்தை எகிப்தில் தீர்த்துக்கொள்வேன் என்று சொன்னேன். ஆனாலும் இஸ்ரயேல் சேர்ந்து வாழ்ந்த பிறநாடுகள், அவர்களுடைய இறைவனால் தாம் வாக்குக் கொடுத்தபடி தமது மக்களை மீட்டுக்கொள்ள முடியவில்லையே என்று நினைப்பார்கள். அப்படி அவர்கள் பார்வையில் என் பெயர் தூய்மைக்கேடாகாதபடியே நான் என் கரத்தை அவர்கள்மேல் நீட்டாமல் இருக்கிறேன். ஆகவே நான் அவர்களை எகிப்திலிருந்து வழிநடத்தி அங்கிருந்து பாலைவனத்திற்குக் கொண்டுவந்தேன். நான் என் விதிமுறைகளை அவர்களுக்குக் கொடுத்து, என் சட்டங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன். ஏனெனில் அவைகளுக்குக் கீழப்படிகிறவன் அவைகளால் வாழ்வான். மேலும் எங்களுக்கு இடையில் ஒரு அடையாளமாக இருப்பதற்கு எனது ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கொடுத்தேன். இவ்விதம் தங்களைப் பரிசுத்தமாக்கிய யெகோவா நானே என்பதையும் அவர்கள் அறிந்துகொள்வார்கள் என்று எண்ணினேன். “ ‘ஆனாலும் இஸ்ரயேலர் பாலைவனத்திலே எனக்கு விரோதமாகக் கலகம் பண்ணினார்கள். எனது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிகிற மனிதன் அவைகளால் வாழ்வான் என்றிருந்தபோதிலும், அவர்கள் அவைகளைப் பின்பற்றாமல், என் சட்டங்களை புறக்கணித்தார்கள். அத்துடன் அவர்கள் என் ஓய்வுநாட்களின் தூய்மையை முழுவதும் கெடுத்தார்கள். எனவே நான் என் கோபத்தை அவர்கள்மேல் ஊற்றி, பாலைவனத்தில் அவர்களை தண்டிப்பேன் என்றேன். ஆனாலும் இஸ்ரயேல் சேர்ந்து வாழ்ந்த நாடுகள், அவர்களுடைய இறைவனால் தாம் வாக்குக் கொடுத்தபடி, தமது மக்களை மீட்டுக்கொள்ள முடியவில்லையே என்று நினைப்பார்கள். அப்படி அவர்கள் பார்வையில் என் பெயர் தூய்மைக்கேடாகாதபடியே நான் என் கரத்தை அவர்கள்மேல் நீட்டாமல் இருக்கிறேன். அத்துடன் அவர்களுக்கு நான் கொடுத்திருந்த பாலும் தேனும் வழிந்தோடுகிறதும், எல்லா நாடுகளிலும் மிக அழகு வாய்ந்ததுமான அந்த நாட்டிற்கு அவர்களைக் கொண்டுவரமாட்டேன் என பாலைவனத்தில் என் உயர்த்திய கையினால் ஆணையிட்டேன். ஏனெனில் அவர்கள் என் சட்டங்களை புறக்கணித்தார்கள். அவர்கள் என் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. என் ஓய்வுநாட்களைத் தூய்மைக்கேடாக்கினார்கள். அவர்களின் இருதயங்களோ விக்கிரகங்களையே சார்ந்திருந்தன. அப்படியிருந்தும் நான் அவர்களை தயவுடன் கண்ணோக்கினேன். நான் அவர்களை அழிக்கவுமில்லை, பாலைவனத்திலே அவர்களுக்கு முடிவுண்டாக்கவுமில்லை. பாலைவனத்தில் நான் அவர்களின் பிள்ளைகளிடம், நீங்கள் உங்கள் முற்பிதாக்களின் விதிமுறைகளைப் பின்பற்றவோ, அவர்களுடைய சட்டங்களைக் கடைப்பிடிக்கவோ, “அவர்களுடைய விக்கிரகங்களால் உங்களைக் கறைப்படுத்திக்கொள்ளவோ வேண்டாம். உங்கள் இறைவனாகிய யெகோவா நானே; என் விதிமுறைகளைப் பின்பற்றி என் சட்டங்களைக் கைக்கொள்ளக் கவனமாயிருங்கள். எனது ஓய்வுநாட்கள் எனக்கும் உங்களுக்கும் நடுவே ஒரு அடையாளமாயிருக்கும்படி, அவைகளைப் பரிசுத்தமாய்க் கடைப்பிடியுங்கள். அப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவா நானே என்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” என்றேன். “ ‘ஆயினும் அவர்களுடைய பிள்ளைகளும் எனக்கு விரோதமாய்க் கலகம் செய்தார்கள், “அவைகளுக்குக் கீழ்ப்படிகிற மனிதன் அவைகளால் வாழ்வான்; என்றிருந்தபோதிலும் அவர்கள் என் நியமங்களைக் கைக்கொள்ளவுமில்லை, எனது சட்டங்களைக் கைக்கொள்ள கவனம் எடுக்கவுமில்லை. அத்துடன் அவர்கள் என்னுடைய ஓய்வுநாட்களைத் தூய்மைக்கேடாக்கினார்கள். ஆகையால் நான் என் கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றி, பாலைவனத்தில் எனது கோபத்தை அவர்கள்மேல் தீர்த்துக்கொள்ளுவேன்” என்றேன். ஆனாலும் இஸ்ரயேல் சேர்ந்து வாழ்ந்த பிறநாடுகள், அவர்களுடைய இறைவனால் தாம் வாக்குக் கொடுத்தபடி தமது மக்களை மீட்டுக்கொள்ள முடியவில்லையே என்று நினைப்பார்கள். அப்படி அவர்கள் பார்வையில் என் பெயர் தூய்மைக்கேடாகாதபடியே நான் என் கரத்தை அவர்கள்மேல் நீட்டாமல் இருக்கிறேன். மேலும் நான் அவர்களைப் பல நாடுகளுக்குள் சிதறடித்து, தேசங்களுக்குள்ளே பரவவிடுவேன் என்று, என் உயர்த்திய கையுடன் பாலைவனத்தில் நானே அவர்களுக்கு ஆணையிட்டேன். ஏனெனில் அவர்கள் என் சட்டங்களுக்குக் கீழ்ப்படியாமல், என் விதிமுறைகளைப் புறக்கணித்து, என் ஓய்வுநாட்களைத் தூய்மைக்கேடாக்கினார்கள். அவர்களுடைய கண்கள் அவர்களுடைய தந்தையர் வழிபட்ட உருவச்சிலைகளை இச்சித்தன. மேலும் நான் அவர்களைப் பலவித நல்லதல்லாத விதிமுறைகளுக்கும், வாழ்க்கையில் கைக்கொள்ள முடியாத சட்டங்களுக்கும் ஒப்புக்கொடுத்தேன். தங்கள் முதற்பேறுகள் ஒவ்வொருவரையும் பலியாகக் கொடுப்பதன் மூலம், தாங்கள் தங்களையே கறைப்படுத்த நான் இடமளித்தேன். இவ்விதம் நான் அவர்களைப் பயங்கரத்தால் நிரப்பினேன். இவ்வாறு நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும்படி செய்தேன்.’ “ஆகையால், மனுபுத்திரனே, இஸ்ரயேல் மக்களிடம் நீ சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே; உங்கள் தந்தையர் தொடர்ந்து என்னைக் கைவிட்டு என்னை நிந்தித்தார்கள். அவர்களுக்குக் கொடுப்பதாக நான் ஆணையிட்ட இந்த நாட்டுக்கு நான் அவர்களைக் கொண்டுவந்தபோது, அவர்கள் எங்கேயாவது உயர்ந்த மலையையோ, செழுமையான மரத்தையோ கண்டவுடன், அங்கே தங்கள் பலிகளைச் செலுத்தினார்கள். தங்கள் காணிக்கைகளைப் படைத்து எனக்குக் கோபமூட்டினார்கள். நறுமண தூபங்களையும் பானபலிகளையும் அங்கே செலுத்தினார்கள். அப்பொழுது நான் அவர்களிடம் நீங்கள் போகும் அந்த வழிபாட்டு மேடு என்ன?’ ” என்று கேட்டேன். அது இந்நாள்வரைக்கும் பாமா எனப்படுகிறது. “ஆகையால், நீ இஸ்ரயேல் குடும்பத்தாரிடம் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நீங்களும் உங்கள் முற்பிதாக்கள் செய்ததுபோலவே,’ உங்களைக் கறைப்படுத்துவீர்களோ? அவர்களுடைய இழிவான உருவச் சிலைகளில் ஆசைகொண்டு வணங்குவீர்களோ? நீங்கள் உங்கள் மகன்களை நெருப்பில் பலியிட்டு, உங்கள் காணிக்கைகளைச் செலுத்துவதனால், நீங்களே தொடர்ந்து உங்களைக் கறைப்படுத்தி வருகிறீர்கள். அப்படியிருக்க இஸ்ரயேல் குடும்பத்தாரே! நீங்கள் என்னிடம் விசாரித்துக் கேட்பதற்கு நான் இடமளிக்க வேண்டுமோ? உதவிசெய்ய வேண்டுமோ? நான் வாழ்வது நிச்சயம்போலவே, நீங்கள் என்னிடம் விசாரிக்க நான் இடமளிக்கமாட்டேன் என்பதும் நிச்சயம் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். “ ‘ “மரத்திற்கும், கல்லுக்கும் பணிசெய்யும் நாடுகளைப்போலவும், உலகத்தின் மக்கள் கூட்டங்களைப்போலவும் நாங்களும் இருக்க விரும்புகிறோம்” என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் உங்கள் மனதிலுள்ளவைகள் ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை. நான் வாழ்வது நிச்சயம்போலவே, வல்லமையுள்ள கரத்தினாலும், நீட்டிய புயத்தினாலும், ஊற்றப்படும் கடுங்கோபத்தினாலும், நான் உங்களை ஆளுகை செய்வேன் என்பதும் நிச்சயம் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். நாடுகளின் மத்தியிலிருந்தும், நீங்கள் சிதறடிக்கப்பட்ட நாடுகளிலிருந்தும் நான் உங்களைக் கூட்டிச்சேர்ப்பேன். வல்லமையுள்ள கரத்தினாலும், நீட்டிய புயத்தினாலும், ஊற்றப்படும் கடுங்கோபத்தினாலும், நான் இதைச் செய்வேன். நான் உங்களை நாடுகளின் பாலைவனத்திற்குக் கொண்டுவந்து, அங்கே முகமுகமாய் நியாயந்தீர்பேன். எகிப்திய பாலைவனத்தில் உங்கள் முற்பிதாக்களை நான் நியாயம் தீர்த்ததுபோலவே, உங்களையும் நியாயந்தீர்பேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். ஒரு மேய்ப்பனைப்போல என் கோலின்கீழ் நீங்கள் நடப்பதை நான் கவனித்து, உங்களை உடன்படிக்கையின் கட்டுக்குள் கொண்டுவருவேன். எனக்கு விரோதமாய் கலகம் செய்வோரையும் துரோகம் செய்வோரையும் உங்களைவிட்டு விலக்குவேன். அவர்கள் வாழும் நாட்டைவிட்டு அவர்களை நான் வெளியே கொண்டுவந்தாலும், அவர்கள் இஸ்ரயேல் நாட்டுக்குள் போகமாட்டார்கள். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். “ ‘இஸ்ரயேல் குடும்பத்தாரே, உங்களுக்கோ ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே; நீங்கள் எனக்குச் செவிகொடாவிட்டால் போங்கள், நீங்கள் ஒவ்வொருவரும்போய் உங்கள் விக்கிரகங்களுக்குப் பணிசெய்யுங்கள். ஆனாலும், அதன்பின்பு உங்கள் கொடைகளினாலும், விக்கிரகங்களினாலும் இனியொருபோதும் என் பரிசுத்த பெயரைத் தூய்மைக்கேடாக்க வேண்டாம். ஆனால் நிச்சயமாக நீங்கள் ஒரு நாள் எனக்குச் செவிகொடுப்பீர்கள். இஸ்ரயேலின் உயர்ந்த மலையாகிய என் பரிசுத்த மலையிலே, இஸ்ரயேல் குடும்பத்தார் அனைவருமே தங்கள் நாட்டில் எனக்குப் பணிசெய்வார்கள். அங்கே நான் அவர்களை ஏற்றுக்கொள்வேன். அங்கே நான் உங்கள் பரிசுத்த பலிகளோடு உங்கள் காணிக்கைகளையும், உங்கள் நன்கொடைகளையும் எதிர்பார்த்திருப்பேன் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். நாடுகளிலிருந்து நான் உங்களைக் கொண்டுவந்து, நீங்கள் சிதறடிக்கப்பட்டிருந்த நாடுகளிலிருந்து உங்களை ஒன்றுசேர்க்கும்போது, நான் உங்களை நறுமண தூபமாக ஏற்றுக்கொள்வேன். நாடுகளின் முன்னிலையில் உங்கள் மத்தியிலே என்னைப் பரிசுத்தராகக் காண்பிப்பேன். உங்கள் முற்பிதாக்களுக்குத் தருவதாக என் உயர்த்திய கரத்தினால் நான் ஆணையிட்ட நாடான, இஸ்ரயேல் நாட்டிற்கு நான் உங்களைக் கொண்டுவரும்போது, நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுவீர்கள். அங்கே உங்கள் நடத்தையையும், உங்களை நீங்களே கறைப்படுத்திக்கொண்ட உங்கள் செயல்கள் எல்லாவற்றையும் நினைத்து, நீங்கள் செய்த எல்லாத் தீமைகளுக்காகவும் உங்களை நீங்களே அருவருத்துக்கொள்வீர்கள். இஸ்ரயேல் குடும்பத்தாரே! நான் உங்கள் தீயவழிகளுக்கும், இழிவான நடத்தைகளுக்கும் ஏற்றபடியல்ல; என் பெயருக்கேற்பவே உங்களோடு நடந்துகொள்வேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்’ ” என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, உன் முகத்தை தெற்கு நோக்கித் திருப்பு. தெற்குப்பகுதிக்கு விரோதமாய்ப் பிரசங்கித்து தென்தேசக் காட்டுக்கு விரோதமாய் இறைவாக்கு உரை. தென்திசை காட்டிற்கு நீ சொல்லவேண்டியதாவது, ‘யெகோவாவினுடைய வார்த்தையைக் கேளுங்கள். ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே; நான் உங்களுக்கு நெருப்பு மூட்டப்போகிறேன். அது காய்ந்ததும் பச்சையுமான உங்கள் எல்லா மரங்களையும் எரிக்கும். அந்த எரியும் ஜூவாலை அணைக்கப்படமாட்டாது. அதனால், தெற்கிலிருந்து வடக்கு வரையுள்ள எல்லா முகங்களும் கருகிப்போகும். யெகோவாவாகிய நானே அதைக் கொளுத்தினேன் என்பதை ஒவ்வொருவரும் காண்பார்கள். அது அணைக்கப்படமாட்டாது என யெகோவா அறிவிக்கிறார் என்று சொல்’ ” என்றார். அப்பொழுது நான், “ஆண்டவராகிய யெகோவாவே, ‘எப்பொழுதும் இவன் பழமொழிகளையல்லவா சொல்கிறான்’ என இவர்கள் என்னைக்குறித்து சொல்கிறார்களே என்றேன்.”
எசேக்கியேல் 20:1-49 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பாபிலோனின் சிறையிருப்பின் ஏழாம் வருடத்து ஐந்தாம் மாதம் பத்தாம் தேதியிலே இஸ்ரவேலின் மூப்பர்களில் சிலர் யெகோவாவிடம் விசாரிக்கும்படி வந்து, எனக்கு முன்பாக உட்கார்ந்தார்கள். அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனிதகுமாரனே, நீ இஸ்ரவேல் மூப்பர்களுடன் பேசி, அவர்களை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் என்னிடம் விசாரிக்கவந்தீர்களோ? நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடுக்கமாட்டேன் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல். மனிதகுமாரனே, நீ அவர்களுக்காக வழக்காடுவாயோ? வழக்காட மனதிருந்தால், நீ அவர்கள் தகப்பன்மார்களுடைய அருவருப்புகளை அவர்களுக்கு காட்டி, அவர்களை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேலைத் தெரிந்துகொண்ட நாளிலே யாக்கோபு வம்சத்து மக்களுக்கு நான் வாக்கு கொடுத்து, எகிப்துதேசத்தில் என்னை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, நான் உங்களுடைய தேவனாகிய யெகோவா என்று வாக்களித்தேன். நான் அவர்களை எகிப்துதேசத்திலிருந்து அழைப்பேன் என்றும், அவர்களுக்காக நான் பார்த்துவைத்ததும், பாலும் தேனும் ஓடுகிறதும் எல்லா தேசங்களின் சிங்காரமுமான தேசத்திலே அவர்களைக் கொண்டுவந்துவிடுவேன் என்றும் அந்த நாளிலே வாக்களித்து, உங்களில் அவரவர் தங்களுடைய கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிவிட்டு, எகிப்தின் அசுத்தமான சிலைகளால் உங்களைத் தீட்டுப்படுத்தாமல் இருப்பீர்களாக; உங்களுடைய தேவனாகிய யெகோவா நான் என்று அவர்களுடன் சொன்னேன். அவர்களோ, என்னுடைய சொல்லைக் கேட்கமனதில்லாமல் எனக்கு விரோதமாக துரோகம்செய்தார்கள்; அவரவர் தங்களுடைய கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிப்போடாமலும், எகிப்தின் அசுத்தமான சிலைகளை விடாமலும் இருந்தார்கள்; ஆதலால் எகிப்துதேசத்தின் நடுவிலே என்னுடைய கோபத்தை அவர்களிலே தீர்த்துக்கொள்ளும்படி என்னுடைய கோபத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன். ஆகிலும் நான் என்னை இவர்களுக்கு வெளிப்படுத்தி, இவர்களுக்கு முன்பாக என்னுடைய பெயர் பரிசுத்தக்குலைச்சலாகாதபடி, இவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்து, என்னுடைய பெயருக்காக கிருபைசெய்தேன். ஆகையால் நான் அவர்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்து, அவர்களை வனாந்திரத்தில் அழைத்துவந்து, என்னுடைய கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்து, என்னுடைய நியாயங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; அவைகளின்படி செய்கிற மனிதன் அவைகளால் பிழைப்பான். நான் தங்களைப் பரிசுத்தம்செய்கிற யெகோவா என்று அவர்கள் அறியும்படி, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாக இருப்பதற்கான என்னுடைய ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன். ஆனாலும் இஸ்ரவேல் மக்கள் வனாந்திரத்தில் எனக்கு விரோதமாக துரோகம் செய்தார்கள்; என்னுடைய கட்டளைகளின்படியே மனிதன் செய்தால் அவைகளால் பிழைப்பான்; அவர்களோ அவைகளில் நடக்காமல், என்னுடைய நியாயங்களை வெறுத்து, என்னுடைய ஓய்வுநாட்களின் பரிசுத்தத்தை மிகவும் குலைத்துப்போட்டார்கள்; ஆதலால் அவர்களை அழிப்பதற்காக வனாந்திரத்திலே என்னுடைய கோபத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன். ஆகிலும் நான் இவர்களைப் புறப்படச்செய்ததைக் கண்ட அந்நியமக்களுடைய கண்களுக்கு முன்பாக என்னுடைய பெயர் பரிசுத்தக்குலைச்சலாகாதபடி, என்னுடைய பெயருக்காக கிருபைசெய்தேன். ஆனாலும் அவர்களுடைய இருதயம் அவர்களுடைய அசுத்தமான சிலைகளைப் பின்பற்றி அவர்கள் என்னுடைய நியாயங்களை வெறுத்து, என்னுடைய கட்டளைகளில் நடக்காமற்போய், என்னுடைய ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினபடியால், நான் வாக்குத்தத்தம்செய்ததும், பாலும் தேனும் ஓடுகிறதும், எல்லா தேசங்களின் அழகாக இருக்கிறதுமான தேசத்திலே அவர்களைக் கொண்டுவந்து விடுவதில்லை என்று வனாந்திரத்தில் வாக்களித்தேன். ஆகிலும் அவர்களை அழிக்காதபடி, என்னுடைய கண் அவர்களைத் தப்பவிட்டது; நான் அவர்களை வனாந்திரத்தில் அழிக்கவில்லை. வனாந்திரத்தில் அவர்களுடைய பிள்ளைகளை நோக்கி: நீங்கள் உங்களுடைய பெற்றோர்களின் முறைமைகளில் நடக்காமலும் அவர்களுடைய நியாயங்களைக் கைக்கொள்ளாமலும், அவர்களுடைய அசுத்தமான சிலைகளால் உங்களைத் தீட்டுப்படுத்தாமலும் இருங்கள். உங்களுடைய தேவனாகிய யெகோவா நானே; நீங்கள் என்னுடைய கட்டளைகளில் நடந்து, என்னுடைய நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படியே செய்து, என்னுடைய ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்களுடைய தேவனாகிய யெகோவா என்று நீங்கள் அறியும்படி அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாக இருக்கும் என்றேன். ஆனாலும் பிள்ளைகளும் எனக்கு விரோதமாக எழும்பினார்கள்; என்னுடைய கட்டளைகளின்படியே மனிதன் செய்தால் அவைகளால் பிழைப்பானே; அவர்களோ அவைகளில் நடவாமலும், என்னுடைய நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி செய்யாமலும், என்னுடைய ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கிப் போட்டார்கள்; ஆகையால் வனாந்திரத்திலே என்னுடைய கோபத்தை அவர்களில் தீர்த்துக்கொள்ளும்படி என்னுடைய கோபத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன். ஆகிலும் நான் என்னுடைய கையைத்திருப்பி, நான் இவர்களை புறப்படச்செய்ததைக் கண்ட அந்நியமக்களுடைய கண்களுக்கு முன்பாக என் பெயர் பரிசுத்தக்குலைச்சலாகாதபடி, என்னுடைய பெயருக்காக கிருபைசெய்தேன். ஆனாலும் அவர்கள் என்னுடைய நியாயங்களின்படி செய்யாமல், என்னுடைய கட்டளைகளை வெறுத்து, என்னுடைய ஓய்வு நாட்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்கினபடியாலும், அவர்களுடைய கண்கள் அவர்கள் தகப்பன்மார்களின் அசுத்தமான சிலைகளின்மேல் நோக்கமாக இருந்தபடியாலும், நான் அவர்களைப் அந்நியமக்களுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களிலே தூற்றிப்போடுகிறதற்கு வனாந்திரத்திலே வாக்கு கொடுத்தேன். ஆகையால் நன்மைக்கு ஏதுவல்லாத கட்டளைகளையும் ஜீவனுக்கு ஏதுவல்லாத நியாயங்களையும் நான் அவர்களுக்குக் கொடுத்தேன். நான் யெகோவா என்று அவர்கள் அறியத்தக்கதாக. நான் அவர்களைப் பாழாக்கும்படி, அவர்களுக்கு முதலில் பிறக்கிறதையெல்லாம் தீயில் பலியிடச்செய்து, இந்த விதமாக அவர்களுடைய பலிகளினாலே அவர்களைத் தீட்டுப்படச்செய்தேன். ஆகையால் மனிதகுமாரனே, நீ இஸ்ரவேல் மக்களுடன் பேசி, அவர்களை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உங்களுடைய தகப்பன்மார்கள் இன்னும் எனக்கு விரோதமாகத் துரோகம்செய்து, என்னைத் சபித்தார்கள். அவர்களுக்குக் கொடுப்பேன் என்று வாக்குகொடுத்த தேசத்திலே நான் அவர்களை நுழையச்செய்த பின்பு, அவர்கள் உயர்ந்த ஒரு மேட்டையும் தழைத்த ஒரு மரங்களையும் எங்கெங்கே கண்டார்களோ, அங்கங்கே தங்களுடைய பலிகளைச் செலுத்தி, அந்த இடங்களிலெல்லாம் எனக்கு எரிச்சல் உண்டாக்குகிற தங்களுடைய காணிக்கைகளைப் படைத்து, சுகந்த வாசனையான தங்களுடைய தூபங்களைக் காட்டி, தங்களுடைய பானபலிகளை ஊற்றினார்கள். அப்பொழுது நான் அவர்களை நோக்கி: நீங்கள் போகிற அந்த மேடு என்னவென்று கேட்டேன்; அதினால் இந்த நாள்வரைக்கும் அதற்குப் பாமா என்று பெயர். ஆகையால் நீ இஸ்ரவேல் வீட்டாரை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உங்களுடைய தகப்பன்மார்களுடைய மார்க்கத்தின்படியே நீங்களும் தீட்டுப்பட்டவர்கள் அல்லவோ? அவர்களுடைய அருவருப்புகளை நீங்களும் பின்பற்றிச் சோரம்போகிறீர்கள் அல்லவோ? நீங்கள் உங்களுடைய பிள்ளைகளைத் தீ மிதிக்கச்செய்து, உங்களுடைய பலிகளைச் செலுத்துகிறபோது, இந்த நாள் வரைக்கும் அவர்களுடைய எல்லா அசுத்தமான சிலைகளாலும் நீங்கள் தீட்டுப்படுவீர்களே; நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடுப்பேனோ? இஸ்ரவேல் மக்களே, நீங்கள் என்னிடத்தில் விசாரிக்கும்படி இடங்கொடுப்பதில்லை என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். மரத்திற்கும் கல்லுக்கும் ஆராதனை செய்து, அஞ்ஞானிகளைப்போலவும் தேசத்தின் மக்களின் தேசங்களைப்போலவும் இருப்போம் என்று சொல்லுகிறீர்களே; உங்களுடைய மனதில் எழும்புகிற இந்த நினைவின்படி ஆவதே இல்லை. பலத்த கையினாலும், புயத்தினாலும், ஊற்றப்பட்ட கடுங்கோபத்தினாலும், உங்களை ஆள்வேன் என்பதை என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். நீங்கள் மக்களுக்குள் இல்லாதபடி நான் உங்களைப் புறப்படச்செய்து, நீங்கள் சிதறியிருக்கிற தேசங்களில் இல்லாதபடிக்கு நான் உங்களைப் பலத்தகையினாலும், ஓங்கிய புயத்தினாலும், ஊற்றப்பட்ட கடுங்கோபத்தினாலும் கூடிவரச்செய்து, உங்களைப் புறதேசத்தாரின் வனாந்திரத்திலே கொண்டுபோய், அங்கே உங்களுடன் முகமுகமாக வழக்காடுவேன். நான் எகிப்துதேசத்தின் வனாந்திரத்தில் உங்களுடைய தகப்பன்மார்களுடன் வழக்காடினதுபோல உங்களோடும் வழக்காடுவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். நான் உங்களைக் கோலின்கீழ் செல்லும்படி செய்து, உங்களை உடன்படிக்கையின் கட்டுக்குட்படுத்தி, கலகக்காரர்களையும், துரோகிகளையும் உங்களைவிட்டுப் பிரித்துப்போடுவேன்; அவர்களைத் தாங்கள் தங்கும் தேசத்திலிருந்து புறப்படச்செய்வேன்; ஆனாலும் அவர்கள் இஸ்ரவேல் தேசத்தில் நுழைவதில்லை; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள். இப்போதும் இஸ்ரவேல் மக்களே, நீங்கள் என்னுடைய சொல்லைக்கேட்க மனதில்லாமல் இருந்தால், நீங்கள் போய், அவனவன் தன் தன் அசுத்தமான சிலைகளை இன்னும் சேவியுங்கள்; ஆனாலும் என்னுடைய பரிசுத்த பெயரை உங்களுடைய காணிக்கைகளாலும் உங்களுடைய அசுத்தமான சிலைகளாலும் இனிப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருங்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். இஸ்ரவேலின் உயரமான மலையாகிய என்னுடைய பரிசுத்த மலையிலே இஸ்ரவேலுடைய எல்லா வம்சத்தாருமாகிய தேசத்திலுள்ள அனைவரும் என்னைச் சேவிப்பார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அங்கே அவர்கள்மேல் பிரியம் வைப்பேன்; அங்கே நீங்கள் பரிசுத்தம்செய்கிற எல்லாவற்றிலும் உங்களுடைய காணிக்கைகளையும் உங்களுடைய முதற்பலன்களையும் செலுத்தும்படி கேட்பேன். நான் உங்களை மக்களிலிருந்து புறப்படச்செய்து, நீங்கள் சிதறுண்டிருக்கிற தேசங்களிலிருந்து உங்களைச் சேர்த்துக்கொள்ளும்போது, சுகந்த வாசனையினால் நான் உங்கள்மேல் பிரியமாக இருப்பேன்; அப்பொழுது அந்நியஜாதிகளின் கண்களுக்கு முன்பாக உங்களால் பரிசுத்தம் செய்யப்படுவேன். உங்களுடைய தகப்பன்மார்களுக்கு கொடுப்பேன் என்று வாக்கு கொடுத்த தேசமாகிய இஸ்ரவேல் தேசத்திலே நான் உங்களைத் திரும்பிவரச்செய்யும்போது, நான் யெகோவா என்று நீங்கள் அறிந்துகொண்டு, அங்கே உங்களுடைய எல்லா வழிகளையும் உங்களைத் தீட்டுப்படுத்தின உங்களுடைய எல்லாச் செயல்களையும் நினைத்து, நீங்கள் செய்திருந்த உங்களுடைய எல்லாப் பொல்லாப்புகளுக்காக உங்களை நீங்களே அருவருப்பீர்கள். இஸ்ரவேல் மக்களே, உங்கள் பொல்லாத வழிகளுக்குத்தக்கதாகவும், உங்களுடைய கெட்ட செயல்களுக்குத்தக்கதாகவும் நான் உங்களுக்குச் செய்யாமல், என்னுடைய பெயரினால் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள் என்கிறதைக் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனிதகுமாரனே, நீ உன்னுடைய முகத்தைத் தென்திசைக்கு நேரே திருப்பி, தெற்குக்கு விரோதமாக உன்னுடைய வசனத்தைப் பொழிந்து, தெற்குபுறமான வயல்வெளியின் காட்டுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, தெற்குதிசைக்காட்டை நோக்கி: யெகோவாவுடைய வார்த்தையைக் கேள், யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன்னில் நெருப்பை கொளுத்துவேன்; அது உன்னில் பச்சையான எல்லா மரங்களையும் பட்டுப்போன எல்லா மரங்களையும் எரிக்கும்; ஜூவாலிக்கிற ஜூவாலை அவிக்கப்படமாட்டாது; தெற்கு துவக்கி வடக்குவரையுள்ள தேசமெங்கும் அதினால் வெந்துபோகும். யெகோவாகிய நான் அதைக் கொளுத்தினேன் என்பதை எல்லா மக்களும் காணும்; அது அவிக்கப்படுவதில்லை என்று சொல் என்றார். அப்பொழுது நான்: ஆ, யெகோவாகிய ஆண்டவரே, இவன் உவமைகளையல்லவோ சொல்லுகிறான் என்று அவர்கள் என்னைக்குறித்துச் சொல்லுகிறார்கள் என்றேன்.
எசேக்கியேல் 20:1-49 பரிசுத்த பைபிள் (TAERV)
ஒரு நாள், சில மூப்பர்கள் (தலைவர்கள்) இஸ்ரவேலில் இருந்து, கர்த்தரிடம் ஆலோசனை கேட்க என்னிடம் வந்தனர். இது கைதியான ஏழாம் ஆண்டு ஐந்தாம் மாதம் பத்தாம் நாள். அம்மூப்பர்கள் (தலைவர்கள்) எனக்கு முன்னால் உட்கார்ந்தார்கள். பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, இஸ்ரவேலின் மூப்பர்களிடம் (தலைவர்கள்) கூறு. அவர்களிடம், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்: என்னிடம் ஆலோசனை கேட்க வந்திருக்கிறீர்களா? அது அவ்வாறானால் நான் அதனைத் தரமாட்டேன். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.’ அவர்களை நியாயம்தீர்க்க வேண்டுமா? மனுபுத்திரனே, நீ அவர்களை நியாயம்தீர்க்கிறாயா? அவர்கள் பிதாக்கள் செய்த அருவருப்பான பாவங்களைப்பற்றி நீ சொல்ல வேண்டும். நீ அவர்களிடம் சொல்ல வேண்டும்: ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: நான் இஸ்ரவேலைத் தேர்ந்தெடுத்த நாளில், நான் யாக்கோபின் குடும்பத்தின்மேல் என் கையை உயர்த்தி, நான் அவர்களுக்கு முன்னால், எகிப்தில், என்னை வெளிப்படுத்தினேன். என் கையை உயர்த்தி நான் சொன்னேன்: “நானே உமது தேவனாகிய கர்த்தர்.” அந்நாளில் உன்னை எகிப்தைவிட்டு வெளியே எடுத்துச்செல்வேன் என்று வாக்களித்தேன்: நான் உங்களுக்குக் கொடுத்த நாட்டிற்கு அழைத்துச் செல்வேன். இது பல நன்மைகள் நிறைந்த நல்ல நாடு. இது எல்லா நாடுகளையும்விட அழகான நாடு! “‘நான் இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் அவர்களது அருவருப்பான விக்கிரகங்களை எறிந்து விடும்படிச் சொன்னேன். எகிப்தில் உள்ள அசுத்தமான சிலைகளோடு சேர்ந்து தீட்டுப்படுத்திக்கொள்ளாதீர்கள் என்று சொன்னேன். “நானே உங்களது தேவனாகிய கர்த்தர்.” ஆனால் அவர்கள் எனக்கு எதிராகத் திரும்பி என் சொல்லைக் கேட்க மறுத்துவிட்டார்கள். அவர்கள் தம் அருவருப்பான விக்கிரகங்களை எறியவில்லை. ஆனால் அவர்கள் எகிப்தியரின் அந்த ஆபாசமான சிலைகளை விடவில்லை. எனவே நான் (தேவன்) எகிப்தில் அவர்களையும் அழித்திட முடிவு செய்தேன். எனது கோபத்தின் முழு சக்தியையும் அவர்கள் உணருமாறுச் செய்தேன். ஆனால் நான் அவர்களை அழிக்கவில்லை. அவர்களை எகிப்தைவிட்டு வெளியே கொண்டுவருவேன் என்று அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்த நாட்டில் ஏற்கெனவே நான் சொல்லியிருந்தேன். நான் எனது நல்ல பெயரை அழிக்கவில்லை. எனவே, மற்ற ஜனங்களின் முன்பு இஸ்ரவேலை நான் அழிக்கவில்லை. நான் இஸ்ரவேல் குடும்பத்தாரை எகிப்திற்கு வெளியே கொண்டுவந்தேன். நான் அவர்களை வனாந்தரத்தில் வழிநடத்தினேன். பிறகு நான் எனது சட்டங்களைக் கொடுத்தேன். எனது விதிகளை எல்லாம் அவர்களிடம் சொன்னேன். ஒருவன் அந்த விதிகளுக்குக் கீழ்ப்படிந்தால் அவன் வாழ்வான். நான் அவர்களுக்கு ஓய்வுக்குரிய சிறப்பான நாட்களைப்பற்றியும் சொன்னேன். அவ்விடுமுறை நாட்கள் எனக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள அடையாளங்கள் ஆகும். நானே கர்த்தர். நான் அவர்களை எனக்குப் பரிசுத்தமாக்கிக் கொண்டிருந்தேன் என அவை காட்டும். எனக்குரிய சிறப்பாக அவற்றைச் செய்தேன். “‘ஆனால் இஸ்ரவேல் குடும்பத்தார் வனாந்தரத்தில் எனக்கு எதிராகத் திரும்பினார்கள். அவர்கள் எனது சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் எனது விதிகளுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அவை நல்ல விதிகள். ஒருவன் அவ்விதிகளுக்குக் கீழ்ப்படிந்தால் அவன் வாழ்வான். அவர்கள் ஓய்வுக்குரிய சிறப்பான நாட்களை எல்லாம் முக்கியமற்றதாகக் கருதினார்கள். அவர்கள் அந்நாட்களில் பலமுறை வேலை செய்தனர். நான் அவர்களை வனாந்தரத்திலேயே அழிக்கவேண்டுமென முடிவெடுத்தேன். என் கோபத்தின் முழு சக்தியையும் அவர்கள் உணர்ந்துக்கொள்ள வேண்டுமென நினைத்தேன். ஆனால் அவர்களை நான் அழிக்கவில்லை. நான் இஸ்ரவேலரை எகிப்தை விட்டு வெளியே கொண்டு வந்ததை மற்ற நாடுகள் பார்த்தன. நான் எனது நல்ல பெயரை அழிக்க விரும்பவில்லை எனவே மற்றவர்கள் முன்பு நான் இஸ்ரவேலரை அழிக்கவில்லை. வனாந்தரத்தில் அந்த ஜனங்களுக்கு இன்னொரு வாக்கு கொடுத்தேன். நான் கொடுத்திருந்த நாட்டிற்கு அவர்களை அழைத்து வரமாட்டேன் என்று சொன்னேன். அது நன்மைகள் நிறைந்த நல்ல நாடு. எல்லா நாடுகளையும் விட அது அழகான நாடு! “‘இஸ்ரவேல் ஜனங்கள் எனது விதிகளுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். என் சட்டங்களை அவர்கள் பின்பற்றவில்லை. அவர்கள் எனது ஓய்வுக்குரிய சிறப்பான நாட்களை முக்கியமற்றதாகக் கருதினார்கள். அவர்கள் இவற்றையெல்லாம் செய்தனர். ஏனென்றால், அவர்கள் இருதயங்கள் அந்த அசுத்த விக்கிரங்களுக்குச் சொந்தமாயிருந்தன. ஆனால் நான் அவர்களுக்காக வருத்தப்பட்டேன். நான் அவர்களை அழிக்கவில்லை. நான் வனாந்தரத்தில் அவர்களை முழுமையாக அழிக்கவில்லை. வனாந்திரத்தில் நான் அவர்களது பிள்ளைகளோடு பேசினேன்: “உங்கள் பெற்றோர்களைப்போன்று இருக்க வேண்டாம். நீங்கள் அசுத்த சிலைகளோடு சேர்ந்து அசுத்தமாகவேண்டாம். அவர்களின் சட்டங்களைப் பின்பற்றவேண்டாம். அவர்களது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவேண்டாம். நானே கர்த்தர். நானே உங்கள் தேவன். எனது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். எனது கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள். நான் சொன்னபடி செய்யுங்கள். எனது ஓய்வுக்குரிய நாட்கள் எல்லாம் முக்கியமானவை என்று காட்டுங்கள். எனக்கும் உங்களுக்கும் இடையே அவை சிறப்பான அடையாளங்களாக இருப்பதை நினைவுகொள்ளுங்கள். நானே கர்த்தர். அவ்விடுமுறைகள் நானே உங்கள் தேவன் என்பதைக் காட்டும்.” “‘ஆனால் அப்பிள்ளைகள் எனக்கு எதிராகத் திரும்பினார்கள். அவர்கள் எனது சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் எனது கட்டளைகளைக் கைக்கொள்ளவில்லை. நான் சொன்னபடி அவர்கள் செய்யவில்லை. அவை நல்ல சட்டங்கள். ஒருவன் அவற்றுக்குக் கீழ்ப்படிந்தால் அவன் வாழ்வான். அவர்கள் எனது சிறப்பிற்குரிய ஓய்வு நாட்களை முக்கியமற்றவையாகக் கருதினர். எனவே அவர்களை வனாந்திரத்தில் நான் முழுமையாக அழிக்க விரும்பினேன். ஆனால் நான் என்னைக் கட்டுப்படுத்தினேன். நான் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்ததை மற்ற நாட்டினர் பார்த்தனர். நான் எனது நல்ல பெயரை அழிக்க விரும்பவில்லை. எனவே மற்ற நாடுகளின் முன்னால் நான் இஸ்ரவேலரை அழிக்கவில்லை. எனவே வனாந்திரத்தில் அந்த ஜனங்களுக்கு வேறொரு வாக்கு தந்தேன். அவர்களைப் பல்வேறு நாடுகளில் சிதறடிப்பேன் என்று வாக்குறுதி செய்தேன். “‘இஸ்ரவேல் ஜனங்கள் எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அவர்கள் எனது சிறப்புக்குரிய ஓய்வு நாட்களை முக்கியமற்றதாகக் கருதினார்கள். அவர்கள் தம் தந்தையர்களுடைய அசுத்த விக்கிரகங்களை தொழுதுகொண்டனர். எனவே நான் அவர்களுக்கு நன்மையற்ற சட்டங்களைக் கொடுத்தேன். வாழ்வு தராத கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்தேன். நான் அவர்கள் தமது அன்பளிப்புகளால் (அவர்கள் விக்கிரகங்களுக்கு படைத்தவை) தங்களையே தீட்டுப்படுத்திக்கொள்ள இடங்கொடுத்தேன். அவர்கள் தம் முதல் குழந்தைகளைக் கூட பலியிடத் தொடங்கினார்கள். இவ்வழியில், அந்த ஜனங்களை அழிப்பேன். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.’ எனவே இப்பொழுது, மனுபுத்திரனே இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் பேசு. அவர்களிடம், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: இஸ்ரவேல் ஜனங்கள் என்னைப்பற்றி கெட்டவற்றைச் சொன்னார்கள். எனக்கு எதிராகத் தீயத்திட்டங்களைப் போட்டனர். ஆனால் நான் வாக்களித்த நாட்டிற்கு அவர்களை அழைத்து வந்தேன். அவர்கள் அனைத்து குன்றுகளையும் பச்சை மரங்களையும் பார்த்தனர். அவர்கள் அந்த இடங்களுக்கு தொழுகைச் செய்யச் சென்றனர். அவர்கள் தம் பலிகளையும் எனக்குக் கோப பலியையும் கொண்டு சென்றனர். அவர்கள் பலிகளைக் கொடுத்தனர். அது இனிய மணத்தைக் கொடுத்தது. அந்த இடங்களில் எல்லாம் அவர்கள் பானங்களின் காணிக்கையைக் கொடுத்தனர். நான் அந்த ஜனங்களிடம் அந்த மேடான இடங்களுக்கு ஏன் போகிறீர்கள் என்று கேட்டேன். இன்றும் அம்மேடான இடங்கள் அங்கு இருக்கின்றன’” என்று சொல். தேவன் சொன்னார்: “இஸ்ரவேல் ஜனங்கள் அனைத்துப் பாவங்களையும் செய்தனர். எனவே இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் பேசு. ‘என் கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: உங்கள் முற் பிதாக்களைப்போன்று தீமைகளைச் செய்து நீங்கள் உங்களை அசுத்தமாக்கிக்கொண்டீர்கள். நீங்கள் வேசியைப்போன்று நடந்துகொண்டீர்கள். நீங்கள் உங்கள் முன்னோர்கள் வழிபட்ட அருவருப்பான தெய்வங்களை வணங்க என்னைவிட்டு விலகினீர்கள். நீங்கள் அதேபோன்று அன்பளிப்புகளைக் கொடுக்கிறீர்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பொய்த் தெய்வங்களுக்குப் பலியாக நெருப்பில் போடுகிறீர்கள். இன்றுவரை நீங்கள் அசுத்த விக்கிரகங்களோடு சேர்ந்து உங்களை தீட்டாக்கிக்கொண்டீர்கள்! நான் உங்களை என்னிடம் ஆலோசனை கேட்க வரவிடவேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே நினைக்கிறீர்களா? நானே ஆண்டவரும் கர்த்தருமாயிருக்கிறேன். என் உயிரின் மூலம் நான் வாக்களிக்கிறேன், நான் உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லமாட்டேன். உங்களுக்கு ஆலோசனை தரமாட்டேன்! நீங்கள் வேறு நாட்டினரைப்போன்று இருப்போம் என்று சொல்கிறீர்கள். நீங்கள் பிற நாட்டினரைப்போன்று வாழ்கிறீர்கள். நீங்கள் மரத்துண்டுகளையும் கல்லையும் (சிலைகள்) சேவிக்கிறீர்கள்.’” எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “என் உயிரைக்கொண்டு நான் வாக்களிக்கிறேன், நான் உங்களை ராஜாவைப்போன்று ஆள்வேன். ஆனால் நான் என் வல்லமை வாய்ந்த கையை உயர்த்தி உங்களைத் தண்டிப்பேன். நான் உங்களுக்கு எதிரான எனது கோபத்தைக் காட்டுவேன்! உங்களை நான் சிதறடித்த நாடுகளிலிருந்து வெளியே கொண்டு வருவேன். நான் உங்களை ஒன்று சேர்ப்பேன். இந்நாடுகளிலிருந்து உங்களை மீண்டும் கொண்டு வருவேன். ஆனால், நான் எனது வல்லமை வாய்ந்த கரத்தை உங்களுக்கு எதிராக உயர்த்தி உங்களைத் தண்டிப்பேன். உங்களுக்கு எதிரான எனது கோபத்தைக் காட்டுவேன்! நான் உங்களை முன்புபோல் வனாந்திரத்தில் வழிநடத்துவேன். ஆனால் இது மற்ற நாட்டினர் வாழும் இடம். நாம் நேருக்கு நேராக நிற்போம். நான் உங்களை நியாயந்தீர்ப்பேன். நான் எகிப்தின் அருகில் உள்ள வனாந்திரத்தில் உங்கள் முன்னோர்களை நியாயந்தீர்த்தது போன்று உங்களை நியாயந்தீர்ப்பேன்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார். “நான் உடன்படிக்கையின் உங்கள் குற்றங்களை நியாயம் தீர்த்து தண்டிப்பேன். நான் எனக்கு எதிராகத் திரும்பி பாவம் செய்தவர்களை விலக்குவேன். நான் அவர்களை உங்கள் தாய்நாட்டிலிருந்து விலக்குவேன். அவர்கள் மீண்டும் இஸ்ரவேல் நாட்டிற்கு வரமாட்டார்கள். பிறகு, நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.” இப்பொழுது, இஸ்ரவேல் குடும்பத்தினரே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “எவராவது தம் அசுத்த விக்கிரகங்களை தொழுதுகொள்ளவேண்டுமானால், அவன் போய் தொழுதுகொள்ளட்டும். ஆனால் பிறகு, என்னிடமிருந்து ஆலோசனை கிடைக்கும் என்று எண்ண வேண்டாம்! இனிமேலும் எனது நாமத்தை உங்கள் அன்பளிப்புகளாலும், உங்கள் விக்கிரகங்களாலும் நீங்கள் தீட்டுப்படுத்த முடியாது.” எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “ஜனங்கள் எனது பரிசுத்தமான மலைகளுக்கு இஸ்ரவேலிலுள்ள உயரமான மலையில் எனக்குச் சேவை செய்ய வரவேண்டும்! இஸ்ரவேலின் எல்லா வம்சத்தாருமாகிய அனைவரும் உங்கள் நிலத்தில் (தேசத்தில்) இருப்பீர்கள். என்னிடம் வந்து ஆலோசனை கேட்கக்கூடிய இடம் அதுதான். நீங்கள் அந்த இடத்திற்கு உங்கள் காணிக்கைகளை எடுத்துக்கொண்டு வரவேண்டும். உங்கள் விளைச்சலின் முதல் பகுதியை அந்த இடத்திற்கு நீங்கள் கொண்டு வரவேண்டும். உங்கள் பரிசுத்த அன்பளிப்புகள் அனைத்தையும் அந்த இடத்திற்கு நீங்கள் கொண்டு வரவேண்டும். பிறகு நான் உங்கள் பலிகளின் இனிய மணத்தால் பிரியமாய் இருப்பேன். நான் உங்களைத் திரும்ப அழைத்து வரும்போது அது நிகழும். நான் உங்களைப் பல தேசங்களில் சிதற அடித்திருந்தேன். ஆனால் நான் உங்களைக் கூட்டிச் சேர்ப்பேன். நான் உங்களை எனது சிறப்புக்குரிய ஜனங்களாக மீண்டும் செய்வேன். அந்நாடுகள் எல்லாம் இதனைப் பார்க்கும். பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் உங்களை மீண்டும் இஸ்ரவேல் நாட்டிற்குக் கொண்டுவரும்போது இதனை அறிவீர்கள். உங்கள் முற்பிதாக்களிடம் அந்த நாட்டையே உங்களுக்குத் தருவதாக வாக்களித்திருந்தேன். அந்நாட்டில் உங்களை அசுத்தமாக்கிய நீங்கள் செய்த பாவங்களை நினைப்பீர்கள். நீங்கள் உங்கள் தீய வழிகளினிமித்தம் வெட்கப்பட்டுப்போவீர்கள். இஸ்ரவேல் குடும்பத்தாரே, நீங்கள் பல கெட்டக் காரியங்களைச் செய்தீர்கள். அத்தீயக்காரியங்களால் நீங்கள் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எனது நற்பெயரைக் காப்பாற்றிக்கொள்ள உங்களுக்கேற்ற அத்தண்டனைகளை நான் தரவில்லை. பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.” பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, யூதாவின் தென் பகுதியிலுள்ள நெகேவைப் பார். நெகேவ் காட்டிற்கு எதிராகப் பேசு. நெகேவ்காட்டிடம் சொல், ‘கர்த்தருடைய வார்த்தையைக் கேள். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: பார், உன் காட்டில் நெருப்பிட நான் தயாராக இருக்கிறேன். நெருப்பானது எல்லா பச்சை மரங்களையும் எல்லா காய்ந்த மரங்களையும் அழிக்கும். எரியும் ஜூவாலையை அணைக்கமுடியாது. தெற்கிலிருந்து வடக்கு வரையுள்ள அனைத்து நிலமும் எரியும். பிறகு எல்லா ஜனங்களும் கர்த்தராகிய நானே நெருப்பு வைத்தேன் என அறிவார்கள். அந்நெருப்பு அணைக்கப்படாது!’” பிறகு நான் (எசேக்கியேல்) சொன்னேன், “ஓ, எனது கர்த்தராகிய ஆண்டவரே! நான் இவற்றைச் சொன்னால், பிறகு ஜனங்கள் நான் கதைகளை மட்டும் சொல்வதாக நினைப்பார்கள். இது உண்மையில் நிகழும் என்று அவர்கள் நினைக்கமாட்டார்கள்!”
எசேக்கியேல் 20:1-49 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஏழாம் வருஷத்து ஐந்தாம் மாதம் பத்தாந்தேதியிலே இஸ்ரவேலின் மூப்பரில் சிலர் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி வந்து, எனக்கு முன்பாக உட்கார்ந்தார்கள். அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் மூப்பரோடே பேசி, அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், நீங்கள் என்னிடத்தில் விசாரிக்கவந்தீர்களோ? நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல். மனுபுத்திரனே, நீ அவர்களுக்காக வழக்காடுவாயோ? வழக்காட மனதானால், நீ அவர்கள் பிதாக்களின் அருவருப்புகளை அவர்களுக்குத் தெரியக்காட்டி, அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், நான் இஸ்ரவேலைத் தெரிந்துகொண்ட நாளிலே யாக்கோபு வம்சத்து ஜனங்களுக்கு நான் ஆணையிட்டு, எகிப்துதேசத்தில் என்னை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று ஆணையிட்டேன். நான் அவர்களை எகிப்துதேசத்திலிருந்து அழைப்பேன் என்றும், அவர்களுக்காக நான் பார்த்துவைத்ததும், பாலும் தேனும் ஓடுகிறதும் எல்லா தேசங்களின் சிங்காரமுமான தேசத்திலே அவர்களைக் கொண்டுவந்துவிடுவேன் என்றும் அந்நாளிலே ஆணையிட்டு, உங்களில் அவரவர் தங்கள் கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிவிட்டு, எகிப்தின் நரகலான விக்கிரகங்களால் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அவர்களோடே சொன்னேன். அவர்களோ, என் சொல்லைக் கேட்கமனதில்லாமல் எனக்கு விரோதமாய் இரண்டகம்பண்ணினார்கள்; அவரவர் தங்கள் கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிப்போடாமலும், எகிப்தின் நரகலான விக்கிரகங்களை விடாமலும் இருந்தார்கள்; ஆதலால் எகிப்துதேசத்தின் நடுவிலே என் கோபத்தை அவர்களிலே தீர்த்துக்கொள்ளும்படிக்கு என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன். ஆகிலும் நான் என்னை இவர்களுக்கு வெளிப்படுத்தி, இவர்களுக்கு முன்பாக என் நாமம் பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு, இவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, என் நாமத்தினிமித்தம் கிருபைசெய்தேன். ஆகையால் நான் அவர்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, அவர்களை வனாந்தரத்தில் அழைத்துவந்து, என் கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்து, என் நியாயங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; அவைகளின்படி செய்கிற மனுஷன் அவைகளால் பிழைப்பான். நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன். ஆனாலும் இஸ்ரவேல் வம்சத்தார் வனாந்தரத்தில் எனக்கு விரோதமாய் இரண்டகம்பண்ணினார்கள்; என் கட்டளைகளின்படியே மனுஷன் செய்தால் அவைகளால் பிழைப்பான்; அவர்களோ அவைகளில் நடவாமல், என் நியாயங்களை வெறுத்து, என் ஓய்வுநாட்களின் பரிசுத்தத்தை மிகவும் குலைத்துப்போட்டார்கள்; ஆதலால் அவர்களை நிர்மூலமாக்கும்படி வனாந்தரத்திலே என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன். ஆகிலும் நான் இவர்களைப் புறப்படப்பண்ணினதைக் கண்ட புறஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக என் நாமம் பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு, என் நாமத்தினிமித்தம் கிருபைசெய்தேன். ஆனாலும் அவர்களுடைய இருதயம் அவர்களுடைய நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி அவர்கள் என் நியாயங்களை வெறுத்து, என் கட்டளைகளில் நடவாமற்போய், என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினபடியால், நான் வாக்குத்தத்தம்பண்ணினதும், பாலும் தேனும் ஓடுகிறதும், எல்லா தேசங்களின் சிங்காரமாயிருக்கிறதுமான தேசத்திலே அவர்களைக் கொண்டுவந்து விடுவதில்லை என்று வனாந்தரத்தில் ஆணையிட்டேன். ஆகிலும் அவர்களை அழிக்காதபடிக்கு, என் கண் அவர்களைத் தப்பவிட்டது; நான் அவர்களை வனாந்தரத்தில் நிர்மூலமாக்கவில்லை. வனாந்தரத்தில் அவர்களுடைய பிள்ளைகளை நோக்கி: நீங்கள் உங்கள் பிதாக்களின் முறைமைகளில் நடவாமலும் அவர்களுடைய நியாயங்களைக் கைக்கொள்ளாமலும், அவர்களுடைய நரகலான விக்கிரகங்களால் உங்களைத் தீட்டுப்படுத்தாமலும் இருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே; நீங்கள் என் கட்டளைகளில் நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படியே செய்து, என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றேன். ஆனாலும் பிள்ளைகளும் எனக்கு விரோதமாய் எழும்பினார்கள்; என் கட்டளைகளின்படியே மனுஷன் செய்தால் அவைகளால் பிழைப்பானே; அவர்களோ அவைகளில் நடவாமலும், என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி செய்யாமலும், என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கிப்போட்டார்கள்; ஆகையால் வனாந்தரத்திலே என் கோபத்தை அவர்களில் தீர்த்துக்கொள்ளும்படி என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன். ஆகிலும் நான் என் கையைத்திருப்பி, நான் இவர்களை புறப்படப்பண்ணினதைக் கண்ட புறஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக என் நாமம் பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு, என் நாமத்தினிமித்தம் கிருபைசெய்தேன். ஆனாலும் அவர்கள் என் நியாயங்களின்படி செய்யாமல், என் கட்டளைகளை வெறுத்து, என் ஓய்வு நாட்களை பரிசுத்தக் குலைச்சலாக்கினபடியாலும், அவர்களுடைய கண்கள் அவர்கள் பிதாக்களின் நரகலான விக்கிரகங்களின்மேல் நோக்கமாயிருந்தபடியாலும், நான் அவர்களைப் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களிலே தூற்றிப்போடுகிறதற்கு வனாந்தரத்திலே ஆணையிட்டேன். ஆகையால் நன்மைக்கேதுவல்லாத கட்டளைகளையும் ஜீவனுக்கேதுவல்லாத நியாயங்களையும் நான் அவர்களுக்குக் கொடுத்தேன். நான் கர்த்தர் என்று அவர்கள் அறியத்தக்கதாக. நான் அவர்களைப் பாழாக்கும்படி, அவர்கள் கர்ப்பந்திறந்து பிறக்கிறதையெல்லாம் தீக்கடக்கப்பண்ணி, இவ்விதமாய் அவர்களுடைய பலிகளினாலே அவர்களைத் தீட்டுப்படப்பண்ணினேன். ஆகையால் மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் வம்சத்தாரோடே பேசி, அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உங்கள் பிதாக்கள் இன்னும் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, என்னைத் தூஷித்தார்கள். அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்திலே நான் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணினபின்பு, அவர்கள் உயர்ந்த ஒரு மேட்டையும் தழைத்த ஒரு விருட்சத்தையும் எங்கெங்கே கண்டார்களோ, அங்கங்கே தங்கள் பலிகளைச் செலுத்தி, அவ்விடங்களிலெல்லாம் எனக்கு எரிச்சல் உண்டாக்குகிற தங்கள் காணிக்கைகளைப் படைத்து, சுகந்த வாசனையான தங்கள் தூபங்களைக் காட்டி, தங்கள் பானபலிகளை வார்த்தார்கள். அப்பொழுது நான் அவர்களை நோக்கி: நீங்கள் போகிற அந்த மேடு என்னவென்று கேட்டேன்; அதினால் இந்நாள்வரைக்கும் அதற்குப் பாமா என்று பேர். ஆகையால் நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உங்கள் பிதாக்களுடைய மார்க்கத்தின்படியே நீங்களும் தீட்டுப்பட்டவர்கள் அல்லவோ? அவர்களுடைய அருவருப்புகளை நீங்களும் பின்பற்றிச் சோரம்போகிறீர்கள் அல்லவோ? நீங்கள் உங்கள் பிள்ளைகளைத் தீக்கடக்கப்பண்ணி, உங்கள் பலிகளைச் செலுத்துகிறபோது, இந்நாள் வரைக்கும் அவர்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களாலும் நீங்கள் தீட்டுப்படுவீர்களே; நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடுப்பேனோ? இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் என்னிடத்தில் விசாரிக்கும்படி இடங்கொடுப்பதில்லை என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். மரத்துக்கும் கல்லுக்கும் ஆராதனை செய்து, அஞ்ஞானிகளைப்போலவும் தேசத்து ஜனங்களின் ஜாதிகளைப்போலவும் இருப்போம் என்று சொல்லுகிறீர்களே; உங்கள் மனதில் எழும்புகிற இந்த நினைவின்படி ஆவதே இல்லை. பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும், ஊற்றப்பட்ட உக்கிரத்தினாலும், உங்களை ஆளுவேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். நீங்கள் ஜனங்களுக்குள் இராதபடிக்கு நான் உங்களைப் புறப்படப்பண்ணி, நீங்கள் சிதறியிருக்கிற தேசங்களில் இராதபடிக்கு நான் உங்களைப் பலத்தகையினாலும், ஓங்கிய புயத்தினாலும், ஊற்றப்பட்ட உக்கிரத்தினாலும் கூடிவரச்செய்து, உங்களை ஜனசதளங்களின் வனாந்தரத்திலே கொண்டுபோய், அங்கே உங்களோடே முகமுகமாய் வழக்காடுவேன். நான் எகிப்துதேசத்தின் வனாந்தரத்தில் உங்கள் பிதாக்களோடு வழக்காடினதுபோல உங்களோடும் வழக்காடுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். நான் உங்களைக் கோலின்கீழ் செல்லும்படி செய்து, உங்களை உடன்படிக்கையின் கட்டுக்குட்படுத்தி, கலகக்காரரையும் துரோகிகளையும் உங்களைவிட்டுப் பிரித்துப்போடுவேன்; அவர்களைத் தாங்கள் தங்கும் தேசத்திலிருந்து புறப்படப்பண்ணுவேன்; ஆனாலும் அவர்கள் இஸ்ரவேல் தேசத்தில் பிரவேசிப்பதில்லை; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள். இப்போதும் இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் என் சொல்லைக்கேட்க மனதில்லாதிருந்தால், நீங்கள் போய், அவனவன் தன் தன் நரகலான விக்கிரகங்களை இன்னும் சேவியுங்கள்; ஆனாலும் என் பரிசுத்த நாமத்தை உங்கள் காணிக்கைகளாலும் உங்கள் நரகலான விக்கிரகங்களாலும் இனிப்பரிசுத்தக் குலைச்சலாக்காதிருங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். இஸ்ரவேலின் உயரமான மலையாகிய என் பரிசுத்த மலையிலே இஸ்ரவேலுடைய எல்லா வம்சத்தாருமாகிய தேசத்திலுள்ள அனைவரும் என்னைச் சேவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அங்கே அவர்கள்மேல் பிரியம் வைப்பேன்; அங்கே நீங்கள் பரிசுத்தம்பண்ணுகிற எல்லாவற்றிலும் உங்கள் காணிக்கைகளையும் உங்கள் முதற்பலன்களையும் செலுத்தும்படி கேட்பேன். நான் உங்களை ஜனங்களிலிருந்து புறப்படப்பண்ணி, நீங்கள் சிதறுண்டிருக்கிற தேசங்களிலிருந்து உங்களைச் சேர்த்துக்கொள்ளும்போது, சுகந்த வாசனையினிமித்தம் நான் உங்கள்பேரில் பிரியமாயிருப்பேன்; அப்பொழுது புறஜாதிகளின் கண்களுக்கு முன்பாக உங்களால் பரிசுத்தம் பண்ணப்படுவேன். உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசமாகிய இஸ்ரவேல் தேசத்திலே நான் உங்களைத் திரும்பிவரப்பண்ணும்போது, நான் கர்த்தர் என்று நீங்கள் அறிந்துகொண்டு, அங்கே உங்களுடைய எல்லா வழிகளையும் உங்களைத் தீட்டுப்படுத்தின உங்களுடைய எல்லாக் கிரியைகளையும் நினைத்து, நீங்கள் செய்திருந்த உங்களுடைய எல்லாப் பொல்லாப்புகளினிமித்தமும் உங்களை நீங்களே அருவருப்பீர்கள். இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளுக்குத்தக்கதாகவும், உங்கள் கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் நான் உங்களுக்குச் செய்யாமல், என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்கிறதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார். கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, நீ உன் முகத்தைத் தென்திசைக்கு நேரே திருப்பி, தெற்குக்கு விரோதமாக உன் வசனத்தைப் பொழிந்து, தென்புறமான வயல்வெளியின் காட்டுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, தென்திசைக்காட்டை நோக்கி: கர்த்தருடைய வார்த்தையைக் கேள், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன்னில் அக்கினியைக் கொளுத்துவேன்; அது உன்னில் பச்சையான சகல மரங்களையும் பட்டுப்போன சகல மரங்களையும் பட்சிக்கும்; ஜூவாலிக்கிற ஜூவாலை அவிக்கப்படமாட்டாது; தெற்கு துவக்கி வடக்குமட்டுமுள்ள தேசமெங்கும் அதினால் வெந்துபோகும். கர்த்தராகிய நான் அதைக்கொளுத்தினேன் என்பதை எல்லா மாம்சமும் காணும்; அது அவிக்கப்படுவதில்லை என்று சொல் என்றார். அப்பொழுது நான்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இவன் உவமைகளையல்லவோ சொல்லுகிறான் என்று அவர்கள் என்னைக்குறித்துச் சொல்லுகிறார்கள் என்றேன்.