எசேக்கியேல் 13:1-21
எசேக்கியேல் 13:1-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, இஸ்ரயேலில் இப்பொழுது தீர்க்கதரிசனம் சொல்லும் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ இறைவாக்கு உரை. தங்கள் சொந்தக் கற்பனையில் தீர்க்கதரிசனம் சொல்வோரிடம் நீ சொல்லவேண்டியதாவது: ‘யெகோவாவினுடைய வார்த்தையைக் கேளுங்கள்! ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: ஒன்றையும் காணாமலிருந்தும் தங்களுடைய சுய ஆவியினாலே ஏவப்பட்டு நடக்கிற, மதிகேடான தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ கேடு. இஸ்ரயேலே, உன் தீர்க்கதரிசிகள் வனாந்திரங்களிலுள்ள நரிகளைப் போன்றவர்கள். யெகோவாவினுடைய நாளின் யுத்தத்தில், இஸ்ரயேல் வீட்டார் உறுதியாய் நிற்கும்படி, சுவர் வெடிப்புகளைப் பழுதுபார்க்க அவர்கள் போகவில்லை. அவர்களுடைய தரிசனங்கள் போலியானதும், அவர்களுடைய குறிசொல்லுதல் பொய்யானதுமாய் இருக்கின்றன. யெகோவா தங்களை அனுப்பாதிருந்தும் அவர்கள், “யெகோவா சொல்கிறார்” என்கிறார்கள். அப்படியிருந்தும் தங்களுடைய வார்த்தைகள் நிறைவேறும் என எதிர்பார்க்கிறார்கள். பொய் தரிசனங்களை நீங்கள் காணவில்லையோ? நான் பேசாதிருந்தும், “யெகோவா கூறுகிறார்” என பொய்க் குறிசொல்லவில்லையோ? “ ‘ஆகையால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: உங்கள் உண்மையற்ற வார்த்தைகளினிமித்தமும், பொய்த் தரிசனங்களினிமித்தமும் நான் உங்களுக்கு விரோதமாயிருக்கிறேன் என்று ஆண்டவராகிய யெகோவா கூறுகிறார் போலியான தரிசனங்களைக் கண்டு, பொய்யாகக் குறிசொல்லும் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாய் என் கரம் இருக்கிறது. அவர்கள் என் மக்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாய் இருக்கமாட்டார்கள். இஸ்ரயேல் குடும்பத்தாரின் பதிவேட்டில் அவர்கள் எழுதப்படவும் மாட்டார்கள். இஸ்ரயேல் நாட்டிற்குள் அவர்கள் செல்லவும் மாட்டார்கள். அப்பொழுது ஆண்டவராகிய யெகோவா நானே என்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள். “ ‘ஏனெனில், சமாதானம் இல்லாதிருக்கும்போது, “சமாதானம்” என்று சொல்லி அவர்கள் என் மக்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள். உறுதியற்ற சுவர் கட்டப்படும்போது, அவர்கள் அதை மறைத்து வெள்ளையடிக்கிறார்கள். ஆகையால் அதை அப்படி மறைத்து வெள்ளையடிப்போரிடம், அது விழப்போகிறது என்று சொல். அடைமழை பெய்யும், நான் பனிக்கட்டியை மழையாய் விழப்பண்ணுவேன். கடுங்காற்று பயங்கரமாய் வீசும். சுவர் இடிந்து விழும்போது, “நீங்கள் வெள்ளையடித்து மூடினீர்களே! அது எங்கே? என மக்கள் உங்களைக் கேட்கமாட்டார்களோ?” “ ‘ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. என் கடுங்கோபத்திலே, பெரும் புயல்காற்றை வீசப்பண்ணுவேன். என் கோபத்திலே பனிக்கட்டி மழையும், அடைமழையும் பெருஞ் சீற்றத்துடன் பெய்யும். நீங்கள் வெள்ளையடித்து மூடிய சுவரை நான் இடித்து வீழ்த்துவேன். அஸ்திபாரம் வெளிப்படும்படி அதைத் தரைமட்டமாக்குவேன். அது விழும்போது நீங்களும் அதற்குள் அழிவீர்கள். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். இவ்விதமாய் சுவருக்கும், சுவரை வெள்ளையடித்து மூடியவர்களுக்கும் விரோதமாய் நான் என் கோபத்தைத் தீர்த்துக்கொள்வேன். நான் உங்களிடம், “உங்களுக்குச் சுவரும் இல்லை. அதற்கு வெள்ளையடித்தவர்களும் இல்லை. இஸ்ரயேலின் தீர்க்கதரிசிகளான இவர்கள் எருசலேமுக்குத் தீர்க்கதரிசனம் கூறினார்கள். அவர்களோ சமாதானம் இல்லாதிருந்தும், அவளுக்குச் சமாதானம் எனத் தரிசனம் கண்டோம் எனச் சொன்னார்கள் என்று சொல்வேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்” ’ என்று சொல். “இப்பொழுதும் மனுபுத்திரனே, தங்கள் சொந்தக் கற்பனையில் தீர்க்கதரிசனம் கூறும் உன் மக்களின் மகள்களுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு விரோதமாய் இறைவாக்கு உரை. நீ சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. மக்களைக் கண்ணியில் சிக்கவைக்கும்படி, தங்கள் மணிக்கட்டுகளில் மந்திர வசிய நூல்களைக் கட்டி, தங்கள் தலைகளுக்குப் பல அளவுகளில் முக்காடுகளை உண்டுபண்ணும் பெண்களுக்கு ஐயோ கேடு! நீங்கள் உங்கள் சொந்த வாழ்வைப் பாதுகாத்துக்கொண்டு என் மக்களின் வாழ்வைக் கண்ணியில் சிக்கவைப்பீர்களோ? நீங்கள் கையளவு வாற்கோதுமைக்காகவும், அப்பத்துண்டுகளுக்காகவும் என் மக்கள் மத்தியில் என்னை நிந்தித்தீர்கள். பொய்க்குச் செவிகொடுக்கும் என் மக்களிடம் பொய் சொல்லி, சாகக்கூடாதவர்களைக் கொலைசெய்தீர்கள். வாழக்கூடாதவர்களைத் தப்ப வைத்தீர்கள். “ ‘ஆகையால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நான் உங்கள் மந்திர வசிய நூல்களுக்கு விரோதமாயிருக்கிறேன். அவைகளால் மக்களைப் பறவைகளைப்போல, கண்ணியில் சிக்கவைக்கிறீர்கள். அவைகளை உங்கள் கைகளிலிருந்து அறுத்துப்போடுவேன். நீங்கள் பறவைகளைப்போல சிக்கவைக்கும் மக்களை நான் விடுவிப்பேன். உங்கள் முக்காடுகளை நான் கிழித்து என் மக்களை உங்கள் கைகளிலிருந்து விடுவிப்பேன். இனி ஒருபோதும் அவர்கள் உங்கள் வல்லமைக்கு இரையாகமாட்டார்கள். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
எசேக்கியேல் 13:1-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனிதகுமாரனே, தீர்க்கதரிசனம் சொல்லுகிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ தீர்க்கதரிசனம் சொல்லி, தங்களுடைய இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவர்களுடன் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால்: யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள். யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறதாவது: தாங்கள் ஒன்றும் பார்க்காமல் இருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ, இஸ்ரவேலே, உன்னுடைய தீர்க்கதரிசிகள் வனாந்திரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். நீங்கள் யெகோவாவுடைய நாளிலே போரிலே நிலைநிற்கும்படி, திறப்புகளில் ஏறினதுமில்லை; இஸ்ரவேல் வீட்டாருக்காகச் சுவரை அடைத்ததுமில்லை. யெகோவா தங்களை அனுப்பாமல் இருந்தும், யெகோவா சொன்னாரென்று சொல்லி, அவர்கள் பொய்யானதையும், பொய்க்குறியையும் பார்த்து, காரியத்தை நிர்வாகம் செய்யலாமென்று நம்பிக்கையாக இருக்கிறார்கள். நான் சொல்லாமல் இருந்தும், நீங்கள் யெகோவா சொன்னார் என்று சொல்லும்போது, பொய் தரிசனத்தைப் பார்த்து, பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா? ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் அபத்தமானதைச் சொல்லி, பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு எதிரானவர் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். பொய்யானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என்னுடைய கை எதிராக இருக்கும்; அவர்கள் என்னுடைய மக்களின் சங்கத்தில் இருப்பதுமில்லை; இஸ்ரவேல் மக்களின் அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை; இஸ்ரவேல் தேசத்திற்குள் நுழைவதுமில்லை; அப்பொழுது நான் யெகோவாகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வீர்கள். சமாதானம் இல்லாமல் இருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என்னுடைய மக்களை மோசம் போக்குகிறார்கள்; ஒருவன் மண்சுவரை வைக்கிறான்; இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள். சாரமில்லாத சாந்தைப் பூசுகிறவர்களை நோக்கி: அது இடிந்து விழுமென்று சொல்; வெள்ளமாகப் பெருகுகிற மழை பெய்யும்; மகா கல்மழையே, நீ பெய்வாய்; கொடிய புயல்காற்றும் அதைப் பிளக்கும். இதோ, சுவர் விழும்போது: நீங்கள் பூசின பூச்சு எங்கே என்று சொல்வார்கள் அல்லவா? ஆகையால் என்னுடைய கடுங்கோபத்திலே கொடிய புயல்காற்றை எழும்பி அடிக்கச்செய்வேன்; என்னுடைய கோபத்திலே வெள்ளமாக அடிக்கிற மழையும், என்னுடைய கடுங்கோபத்திலே அழிக்கத்தக்க பெருங்கல்மழையும், பெய்யும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். அப்பொழுது நீங்கள் சாரமில்லாத சாந்தைப் பூசின சுவரை நான் இடித்து, அதின் அஸ்திபாரம் திறந்து கிடக்கும்படி அதைத் தரையிலே விழச்செய்வேன்; உள்ளே இருக்கிற நீங்கள் அழியும்படி அது விழும்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள். இப்படிச் சுவரிலும், அதற்குச் சாரமில்லாத சாந்தைப் பூசினவர்களிலும் நான் என்னுடைய கடுங்கோபத்தைத் தீர்த்துக்கொண்டு: சுவருமில்லை, அதற்குச் சாந்து பூசினவர்களுமில்லை. எருசலேமைக்குறித்துத் தீர்க்கதரிசனம்சொல்லி, சமாதானம் இல்லாமல் இருந்தும் சமாதானம் உண்டென்று தரிசனங்காண்கிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் இல்லாமற்போவார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். மனிதகுமாரனே, தங்களுடைய இருதயத்தில் இருக்கிறதையே எடுத்து, தீர்க்கதரிசனம்சொல்லுகிற உன்னுடைய மக்களின் மகள்களுக்கு எதிராக உன்னுடைய முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு எதிராக தீர்க்கதரிசனம் சொல்லி, சொல்லவேண்டியது என்னவென்றால்: ஆத்துமாக்களை வேட்டையாடும்படி எல்லா கைகளுக்கும் காப்புகளைத் தைத்து, அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைக்கும் தலையணைகளை உண்டாக்குகிறவர்களுக்கு ஐயோ, நீங்கள் என்னுடைய மக்களின் ஆத்துமாக்களை வேட்டையாடி, அவைகளை உங்களுக்கு உயிரோடு காப்பாற்றுவீர்களோ? சாகத்தகாத ஆத்துமாக்களைக் கொல்வதற்கும், உயிரோடு இருக்கத்தகாத ஆத்துமாக்களை உயிரோடு காப்பாற்றுவதற்குமாக நீங்கள் பொய்யைக் கேட்கிற என்னுடைய மக்களுக்குப் பொய் சொல்லுகிறதினாலே சில கைப்பிடியளவு வாற்கோதுமைக்காகவும் அப்பத்துண்டுகளுக்காகவும் என்னை என்னுடைய மக்களுக்குள்ளே பரிசுத்தக்குலைச்சலாக்குவீர்களோ என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீங்கள் ஆத்துமாக்களைப் பறக்கடிக்கும்படி வேட்டையாடுகிற உங்களுடைய காப்புகளுக்கு விரோதமாக நான் வந்து, அவைகளை உங்களுடைய புயங்களிலிருந்து பிடுங்கிக்கிழித்து, நீங்கள் பறக்கடிக்க வேட்டையாடுகிற ஆத்துமாக்களை நான் விடுதலைசெய்து, உங்களுடைய தலையணைகளைக் கிழித்து, என் மக்களை உங்களுடைய கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அவர்கள் இனி வேட்டையாடப்படும்படி உங்களுடைய கைகளில் இருக்கமாட்டார்கள்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.
எசேக்கியேல் 13:1-21 பரிசுத்த பைபிள் (TAERV)
பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, நீ எனக்காக இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளிடம் பேச வேண்டும். அத்தீர்க்கதரிசிகள் உண்மையில் எனக்காகப் பேசவில்லை, அவர்கள் தாம் சொல்ல விரும்புவதையே சொல்கிறார்கள். எனவே நீ அவர்களிடம் பேசவேண்டும். அவர்களிடம் இவற்றைப் பேசு, ‘கர்த்தரிடமிருந்து வந்த இச்செய்தியைக் கேளுங்கள்! எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார். மூடத் தீர்க்கதரிசிகளே, உங்களுக்குத் தீயவை ஏற்படும். நீங்கள் உங்களது சொந்த ஆவிகளைப் பின்பற்றுகிறீர்கள். நீங்கள் உண்மையில் எவற்றைத் தரிசிக்கிறீர்களோ அவற்றை ஜனங்களிடம் கூறுவதில்லை. “‘இஸ்ரவேலே, உங்கள் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலும் பாழடைந்த கட்டிடங்களிலும் வாழும் நரிகளுக்கு ஒப்பானவர்கள். நீங்கள் நகரத்தின் உடைந்த சுவர்களுக்கு அருகில் படை வீரர்களை நிறுத்தி வைக்கவில்லை. நீங்கள் இஸ்ரவேல் வம்சத்தாரைப் பாதுகாப்பதற்காக சுவர்களைக் கட்டியிருக்கவில்லை. எனவே கர்த்தர் உங்களைத் தண்டிக்கும் காலம் வரும்போது நீங்கள் போரை இழப்பீர்கள்! “‘பொய்த் தீர்க்கதரிசிகள் தரிசனங்களைக் கண்டதாகக் கூறினார்கள். அவர்கள் தம் மந்திரங்களைச் செய்தார்கள். அவர்கள் எதிர்காலத்தைக் குறித்து தீர்க்கதரிசனம் சொன்னார்கள். ஆனால் அவர்கள் பொய் சொன்னார்கள். அவர்கள் தம்மை கர்த்தர் அனுப்பியதாகச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் பொய் சொன்னார்கள். அவர்கள் இன்னும் தாம் கூறிய பொய்கள் உண்மையாவதற்காக காத்திருக்கிறார்கள். “‘பொய்த் தீர்க்கதரிசிகளே, நீங்கள் கண்ட தரிசனங்களெல்லாம் உண்மையல்ல. நீங்கள் உங்கள் மந்திரங்களைச் செய்தீர்கள். சில நிகழும் என்றீர்கள். ஆனால் நீங்கள் பொய் சொன்னீர்கள்! கர்த்தர் அவற்றைக் கூறியதாக நீங்கள் சொன்னீர்கள். ஆனால் நான் உங்களிடம் பேசவில்லை!’” எனவே இப்போது, எனது கர்த்தராகிய ஆண்டவர் உண்மையிலேயே பேசுவார்! அவர் கூறுகிறார்: “நீங்கள் பொய்களைச் சொன்னீர்கள். நீங்கள் உண்மையற்ற தரிசனங்களைப் பார்த்தீர்கள். எனவே நான் (தேவன்) இப்பொழுது உங்களுக்கு எதிராக இருக்கிறேன்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இதனைச் சொன்னார். கர்த்தர் கூறுகிறார்: “பொய்த் தரிசனங்களைப் பார்த்து பொய் சொன்ன தீர்க்கதரிசிகளை நான் தண்டிப்பேன். அவர்களை என் ஜனங்களிடமிருந்து விலக்குவேன். இஸ்ரவேல் வம்சத்தாரின் பட்டியலில் அவர்களின் பெயர்கள் இருக்காது. அவர்கள் மீண்டும் இஸ்ரவேல் நாட்டிற்கு வரமாட்டார்கள். பிறகு, நான்தான் கர்த்தராகிய ஆண்டவர் என்றும், நீங்கள் அறிவீர்கள்! “மீண்டும், மீண்டும் அந்தப் பொய்த் தீர்க்கதரிசிகள் என் ஜனங்களிடம் பொய் சொல்கிறார்கள். சமாதானம் இருக்கிறது என்று தீர்க்கதரிசிகள் சொன்னார்கள். ஆனால் அங்கே சமாதானம் இல்லை. ஜனங்களுக்கு சுவரை நிர்மாணித்து போர் செய்ய தயாராகிட அவசியம் இருந்தது. ஆனால் அவர்கள் உடைந்த சுவரின் மேல் ஒரு மெல்லிய பூச்சை மட்டுமே பூசினார்கள். நான் கல்மழையையும் பெருமழையையும் (பகைவர் படை) அனுப்புவேன் என்று அம்மனிதர்களிடம் சொல். காற்று கடுமையாக அடிக்கும். புயல் காற்றும் வரும். பிறகு அந்தச் சுவர் கீழே விழும். ஜனங்கள் தீர்க்கதரிசிகளிடம், ‘சுவரில் நீங்கள் பூசிய பூச்சு என்னவாயிற்று?’ என்று கேட்பார்கள்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நான் கோபமாக இருக்கிறேன். நான் உனக்கு எதிராகப் பலமான புயல் காற்றை அனுப்புவேன். நான் கோபமாக இருக்கிறேன். நான் உனக்கு எதிராகப் பெருமழையை அனுப்புவேன். நான் கோபமாக இருக்கிறேன். நான் வானத்திலிருந்து பெருங்கல் மழையைப் பொழியச் செய்து உன்னை முழுமையாக அழிப்பேன்! நீங்கள் அவற்றில் பூச்சு பூசினீர்கள். ஆனால் நான் முழுச் சுவற்றையும் அழித்துவிட்டேன். அதைத் தரையிலே விழப்பண்ணுவேன். அச்சுவர் உன்மீது விழும். பிறகு, நான்தான் கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். நான் சுவருக்கும் சாந்து பூசினவர்களுக்கும் எதிரான எனது கோபத்தை முடிப்பேன். பிறகு நான் சொல்லுவேன்; ‘சுவரும் இல்லை, சாந்து பூசின வேலைக்காரர்களும் இல்லை.’ “இஸ்ரவேலில் உள்ள பொய்த் தீர்க்கதரிசிகளுக்கு இவை எல்லாம் ஏற்படும். அத்தீர்க்கதரிசிகள் எருசலேம் ஜனங்களிடம் பேசுகிறார்கள். அத்தீர்க்கதரிசிகள் சமாதானம் உண்டென்று சொல்கிறார்கள். ஆனால் சமாதானம் இல்லை” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார். தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, இஸ்ரவேலில் உள்ள பெண் தீர்க்கதரிசிகளைப் பாருங்கள். அப்பெண் தீர்க்கதரிசிகள் எனக்காகப் பேசுவதில்லை. அவர்கள் விரும்புவதையே சொல்லுகிறார்கள். எனவே அவர்களுக்கு எதிராக நீ எனக்காக அவர்களிடம் பேச வேண்டும். ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்: பெண்களாகிய உங்களுக்குத் தீமைகள் ஏற்படும். நீங்கள், ஜனங்கள் தம் கையில் அணிந்துகொள்ளத் தாயத்துகளைச் செய்கிறீர்கள். ஜனங்கள், தம் தலையில் அணிந்துக்கொள்ள சிறப்பான முக்காட்டுச் சேலைகளை உண்டாக்குகிறீர்கள். ஜனங்களது வாழ்வை அடக்கி ஆள மந்திரசக்தி இவற்றில் உள்ளதாகக் கூறுகிறீர்கள். உங்களது வாழ்வுக்காக அந்த ஜனங்களை நீங்கள் வேட்டையாடுகிறீர்கள்! நான் முக்கியமானவனில்லை என்று ஜனங்களை நினைக்கும்படிச் செய்கிறீர்கள். சில பிடி வாற்கோதுமைக்காகவும் அப்பத்துண்டுகளுக்காகவும் அவர்களை எனக்கு எதிராக நீங்கள் திருப்புகிறீர்கள். நீங்கள் என் ஜனங்களிடம் பொய் கூறுகிறீர்கள். அவர்கள் பொய்களைக் கேட்க விரும்புகிறார்கள். வாழவேண்டிய ஜனங்களைக் கொல்லுகிறீர்கள். மரிக்கவேண்டிய ஜனங்களை வாழவைக்கிறீர்கள். எனவே கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: நீங்கள் துணியையும் தாயத்துக்களையும் ஜனங்களை வலைக்குட்படுத்த உருவாக்குகிறீர்கள். ஆனால் நான் அந்த ஜனங்களை விடுவிப்பேன். அவர்கள் கைகளிலிருந்து அத்தாயத்துகளைப் பிய்த்து எறிவேன். ஜனங்கள் உங்களிடமிருந்து விடுதலை பெறுவார்கள். அவர்கள் வலையிலிருந்து பறக்கும் பறவைகளைப்போன்று இருப்பார்கள்! நான் உங்கள் முக்காட்டுச் சேலைகளைக் கிழித்து உங்கள் வல்லமையிலிருந்து என் ஜனங்களைக் காப்பேன். அந்த ஜனங்கள் உங்கள் வலைகளிலிருந்து தப்புவார்கள். நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
எசேக்கியேல் 13:1-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, தீர்க்கதரிசனம் சொல்லுகிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ தீர்க்கதரிசனம் உரைத்து, தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களோடே நீ சொல்ல வேண்டியது என்னவென்றால்: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: தாங்கள் ஒன்றும் தரிசியாதிருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ! இஸ்ரவேலே, உன் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள், நீங்கள் கர்த்தருடைய நாளிலே யுத்தத்தில் நிலைநிற்கும்படிக்கு, திறப்புகளில் ஏறினதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாருக்காகச் சுவரை அடைத்ததுமில்லை. கர்த்தர் தங்களை அனுப்பாதிருந்தும், கர்த்தர் உரைத்தாரென்று சொல்லி, அவர்கள் அபத்தத்தையும் பொய்க்குறியையும் தரிசித்து, காரியத்தை நிர்வாகம்பண்ணலாமென்று நம்பிக்கையாயிருக்கிறார்கள். நான் உரைக்காதிருந்தும், நீங்கள் கர்த்தர் உரைத்தார் என்று சொல்லும்போது, அபத்தமான தரிசனையைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா? ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நீங்கள் அபத்தமானதைச் சொல்லி, பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு விரோதமானவர் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். அபத்தமானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என் கை விரோதமாயிருக்கும்; அவர்கள் என் ஜனத்தின் சங்கத்தில் இருப்பதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாரின் அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை; இஸ்ரவேல் தேசத்துக்குள் பிரவேசிப்பதுமில்லை; அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வீர்கள். சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம் போக்குகிறார்கள்; ஒருவன் மண்சுவரை வைக்கிறான்; இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள். சாரமில்லாத சாந்தைப் பூசுகிறவர்களை நோக்கி: அது இடிந்து விழுமென்று சொல்; வெள்ளமாகப் பெருகுகிற மழை பெய்யும்; மகா கல்மழையே, நீ சொரிவாய்; கொடிய புசல்காற்றும் அதைப் பிளக்கும். இதோ, சுவர் விழும்போது: நீங்கள் பூசின பூச்சு எங்கே என்று சொல்வார்கள் அல்லவா? ஆகையால் என் உக்கிரத்திலே கொடிய புசல்காற்றை எழும்பி அடிக்கப்பண்ணுவேன்; என் கோபத்திலே வெள்ளமாக அடிக்கிற மழையும், என் உக்கிரத்திலே நிர்மூலமாக்கத்தக்க பெருங்கல்மழையும், சொரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். அப்பொழுது நீங்கள் சாரமில்லாத சாந்தைப் பூசின சுவரை நான் இடித்து, அதின் அஸ்திபாரம் திறந்து கிடக்கும்படி அதைத் தரையிலே விழப்பண்ணுவேன்; உள்ளே இருக்கிற நீங்கள் நிர்மூலமாகும்படி அது விழும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள். இப்படிச் சுவரிலும், அதற்குச் சாரமில்லாத சாந்தைப் பூசினவர்களிலும் நான் என் உக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டு: சுவருமில்லை, அதற்குச் சாந்துபூசினவர்களுமில்லை. எருசலேமைக்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லி, சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானம் உண்டென்று தரிசனங்காண்கிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் இல்லாமற்போவார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். மனுபுத்திரனே, தங்களுடைய இருதயத்தில் இருக்கிறதையே எடுத்து, தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற உன் ஜனத்தின் குமாரத்திகளுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்: ஆத்துமாக்களை வேட்டையாடும்படிக்குச் சகல கைகளுக்கும் தழுவணைகளைத் தைத்து, அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைக்கும் தலையணைகளை உண்டுபண்ணுகிறவர்களுக்கு ஐயோ! நீங்கள் என் ஜனத்தின் ஆத்துமாக்களை வேட்டையாடி, அவைகளை உங்களுக்கு உயிரோடே காப்பாற்றுவீர்களோ? சாகத்தகாத ஆத்துமாக்களைக் கொல்வதற்கும், உயிரோடே இருக்கத்தகாத ஆத்துமாக்களை உயிரோடே காப்பாற்றுவதற்குமாக நீங்கள் பொய்க்குச் செவிகொடுக்கிற என் ஜனத்துக்குப் பொய் சொல்லுகிறதினாலே சில சிறங்கை வாற்கோதுமைக்காகவும் அப்பத்துண்டுகளுக்காகவும் என்னை என் ஜனத்துக்குள்ளே பரிசுத்தக்குலைச்சலாக்குவீர்களோ என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீங்கள் ஆத்துமாக்களைப் பறக்கடிக்கும்படி வேட்டையாடுகிற உங்கள் தழுவணைகளுக்கு விரோதமாக நான் வந்து, அவைகளை உங்கள் புயங்களிலிருந்து பிடுங்கிக்கிழித்து, நீங்கள் பறக்கடிக்க வேட்டையாடுகிற ஆத்துமாக்களை நான் விடுதலைபண்ணி, உங்கள் தலையணைகளைக் கிழித்து, என் ஜனத்தை உங்கள் கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அவர்கள் இனி வேட்டையாடப்படும்படி உங்கள் கைகளில் இரார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.