எசேக்கியேல் 11:1-20

எசேக்கியேல் 11:1-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பின்பு ஆவியானவர் என்னை உயரத்தூக்கி, யெகோவாவின் ஆலயத்தில் கிழக்கு முகமாயிருக்கும் வாசலுக்குக் கொண்டுவந்தார். வாசலிலே இருபத்தைந்து மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் மத்தியிலே மக்கள் தலைவர்களான ஆசூரின் மகன் யசனியாவையும், பெனாயாவின் மகன் பெலத்தியாவையும் கண்டேன். யெகோவா என்னிடம், “மனுபுத்திரனே, இப்பட்டணத்தில் தீயவற்றைத் திட்டமிட்டு தீய ஆலோசனைகளைக் கொடுப்பவர்கள் இவர்களே. அவர்களோ, ‘இது வீடுகளைக் கட்டுவதற்கேற்ற காலமல்லவோ? என்றும், இந்த நகரம் பானை, நாங்கள் அதிலுள்ள இறைச்சியே என்றும்’ சொல்லுகிறார்கள். ஆகையால் அவர்களுக்கு விரோதமாக இறைவாக்கு சொல்; மனுபுத்திரனே, இறைவாக்கு சொல்” என்றார். அப்பொழுது யெகோவாவின் ஆவியானவர் என்மேல் அமர்ந்தார். அவர் சொல்லச் சொன்னதாவது: “யெகோவா கூறுவதாவது: இஸ்ரயேல் குடும்பத்தாரே! நீங்கள் அப்படித்தான் சொல்கிறீர்கள்! ஆனாலும் உங்கள் உள்ளத்தின் எண்ணங்களை நான் அறிவேன்.” இந்நகரத்தில் அநேக மக்களை நீங்கள் கொலைசெய்து, அதன் வீதிகளைப் பிரேதங்களால் நிரப்பியிருக்கிறீர்கள். “ஆகையால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நீங்கள் வீதிகளில் வீசியெறிந்த உடல்களே அந்த இறைச்சியும், இந்த நகரமே பானையுமாய் இருக்கின்றன. ஆனாலும் நான் உங்களை அங்கிருந்து துரத்திவிடுவேன். ” நீங்கள் வாளுக்குப் பயப்படுகிறீர்கள். அவ்வாளையே உங்களுக்கு விரோதமாகக் கொண்டுவருவேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். நான் உங்களைப் பட்டணத்திலிருந்து வெளியே துரத்தி, அந்நியர்களின் கைகளில் ஒப்புவித்து, உங்கள்மீது தண்டனையை வரப்பண்ணுவேன். நீங்கள் வாளால் மடிவீர்கள். இஸ்ரயேலின் எல்லைகளில் உங்கள் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். இந்த நகரம் உங்களுக்குப் பானையாக இருப்பதுமில்லை. நீங்களும் அதிலுள்ள இறைச்சியாய் இருக்கமாட்டீர்கள். இஸ்ரயேலின் எல்லைகளில் உங்கள்மீது நான் என் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். “ஏனெனில் நீங்கள் என் கட்டளைகளின்படி நடக்கவோ, என் சட்டங்களைப் பின்பற்றவோ இல்லை. ஆனால் உங்களைச் சுற்றிலும் இருக்கிற மற்ற நாடுகளின் வழக்கத்தின்படியே நடந்தீர்கள், என்று சொல்” என்றார். அவ்வாறே நான் இறைவாக்கு உரைக்கும்போது, பெனாயாவின் மகன் பெலத்தியா இறந்தான். உடனே நான் முகங்குப்புற விழுந்து, “ஆ, ஆண்டவராகிய யெகோவாவே! இஸ்ரயேலில் மீதியாய் இருப்பவர்களையும் நீர் முற்றிலும் அழித்துப்போடுவீரோ?” என உரத்த குரலில் அழுதேன். யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. “மனுபுத்திரனே, நாடுகடத்தப்பட்டு உன்னோடு இருக்கிறவர்களே உனது இரத்த உறவினரும் இஸ்ரயேல் முழுக் குடும்பமுமான உனது சகோதரர். அவர்களைக் குறித்தே, ‘அவர்கள் யெகோவாவை விட்டுத் தூரமாய் இருக்கிறார்கள்; இந்நாடு எங்களுக்கே உரிமையாய்க் கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்று எருசலேம் மக்கள் சொல்லிக்கொள்கிறார்கள். “ஆகையால் நீ சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: என் மக்களை நான் நாடுகளுக்குள் தூரமாய்த் துரத்தி, நாடுகளுக்குள்ளே சிதறடித்தேன். ஆனாலும் அவர்கள் சென்ற நாடுகளில் அந்தக் கொஞ்சக் காலத்துக்கு நானே அவர்களுக்கு பரிசுத்த இடமாயிருந்தேன்.’ “ஆகையால் நீ சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: உங்களை நான் மக்கள் கூட்டத்திலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட நாடுகளிலிருந்து உங்களை திரும்பவும் கொண்டுவந்து, மறுபடியும் இஸ்ரயேல் நாட்டை உங்களுக்குக் கொடுப்பேன்.’ “அவர்கள் அங்கு திரும்பிவந்து இழிவான எல்லா உருவச்சிலைகளையும், வெறுக்கத்தக்க விக்கிரகங்களையும் அங்கிருந்து அகற்றிவிடுவார்கள். நான் அவர்களுக்கு ஒருமனப்பட்ட உள்ளத்தைக் கொடுத்து, புதிய ஆவியையும் கொடுப்பேன். நான் அவர்களுடைய கல்லான இருதயத்தை நீக்கி, சதையான இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன். அப்பொழுது அவர்கள் என் நீதிச்சட்டங்களைப் பின்பற்றி என் கட்டளைகளைக் கைக்கொள்ளக் கவனமாயிருப்பார்கள். அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள். நான் அவர்களுடைய இறைவனாயிருப்பேன்.

எசேக்கியேல் 11:1-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு தேவ ஆவியானவர் என்னை எடுத்து, என்னைக் யெகோவாவுடைய ஆலயத்தின் கிழக்கு முகமாக இருக்கிற வாசலுக்குக் கொண்டுபோனார்; இதோ, அந்த வாசலின் நடையில் இருபத்தைந்து ஆண்கள் இருந்தார்கள்; அவர்களின் நடுவே மக்களின் பிரபுக்களாகிய அசூரின் மகனாகிய யசனியாவையும், பெனாயாவின் மகனாகிய பெலத்தியாவையும் கண்டேன். அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இவர்கள் இந்த நகரத்திலே அக்கிரமமான நினைவுகளை நினைத்து, தீய ஆலோசனை சொல்லுகிற மனிதர்கள். இது வீடுகளைக் கட்டுவதற்குக் காலமல்ல என்றும், இந்த நகரம் பானை, நாங்கள் அதிலுள்ள இறைச்சியென்றும் சொல்லுகிறார்கள். ஆகையால் அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம்சொல்லு, மனிதகுமாரனே, தீர்க்கதரிசனம்சொல்லு என்றார். அப்பொழுது யெகோவாவுடைய ஆவி என்மேல் இறங்கினார்; அவர் என்னை நோக்கி: நீ சொல்லவேண்டியது என்னவென்றால், இஸ்ரவேல் மக்களே, நீங்கள் இப்படிப் பேசுகிறது உண்டு; உங்களுடைய மனதில் எழும்புகிறதை நான் அறிவேன். இந்த நகரத்தில் நீங்கள் அநேகரைக் கொலைசெய்தீர்கள்; அதின் வீதிகளைக் கொலை செய்யப்பட்டவர்களாலே நிரப்பினீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார். ஆகையால் நீங்கள் கொலைசெய்து, அதின் நடுவிலே போட்டுவிட்டவர்களே இறைச்சியும், இந்த நகரம் பானையுமாமே; உங்களையோ அதற்குள் இல்லாதபடிக்குப் வெளியேற்றுவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். பட்டயத்திற்குப் பயப்பட்டீர்கள், வாளையே உங்கள்மேல் வரச்செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். நான் உங்களை அதற்குள் இல்லாதபடிக்குப் வெளியேற்றி, உங்களை அந்நியரின் கையில் ஒப்புக்கொடுத்து, உங்களில் நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவேன். பட்டயத்தால் விழுவீர்கள்; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள். இந்த நகரம் உங்களுக்குப் பானையாக இருப்பதுமில்லை நீங்கள் அதிலுள்ள இறைச்சியாக இருப்பதுமில்லை; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன். என்னுடைய கட்டளையின்படி நடக்காமலும், என்னுடைய நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலும் இருக்கிற அந்நியஜாதிகளுடைய முறைமைகளின்படி செய்த நீங்கள் அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார். நான் இப்படித் தீர்க்கதரிசனம் சொல்லும்போது, பெனாயாவின் மகனாகிய பெலத்தியா செத்தான்; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்து, மகா சத்தமாக: ஆ, யெகோவாகிய ஆண்டவரே, தேவரீர் இஸ்ரவேலில் மீதியானவர்களை முற்றிலும் அழித்துப்போடுவீரோ என்று முறையிட்டேன். அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனிதகுமாரனே, நீங்கள் யெகோவாவைவிட்டுத் தூரமாகப்போங்கள், எங்களுக்கு இந்த தேசம் சொந்தமாகக் கொடுக்கப்பட்டதென்று, உன்னுடைய சகோதரர்களுக்கும், உன்னுடைய குடும்பத்தாருக்கும், உன்னுடைய சொந்த மக்களுக்கும், இஸ்ரவேலர்கள் அனைவருக்கும், எருசலேமின் வாழ்கிறவர்கள் சொல்லுகிறார்கள். ஆகையால் நான் அவர்களைத் தூரமாக அந்நியஜாதிகளுக்குள்ளே துரத்தியிருந்தாலும், நான் அவர்களைத் தேசங்களிலே சிதறடித்திருந்தாலும், நான் அவர்கள் போன தேசங்களில் அவர்களுக்குக் கொஞ்சகாலத்திற்குப் பரிசுத்த ஸ்தலமாக இருப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல். ஆதலால் நான் உங்களை மக்களிடத்திலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல்லு. அவர்கள் அங்கே வந்து, அதில் சீ என்று வெறுக்கப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமாக இருக்கிறதையெல்லாம் அதிலிருந்து அகற்றுவார்கள். அவர்கள் என்னுடைய கட்டளைகளின்படி நடந்து, என்னுடைய நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஒருமனப்பட்ட இருதயத்தைத் தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் சரீரத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன். அவர்கள் என்னுடைய மக்களாக இருப்பார்கள், நான் அவர்கள் தேவனாக இருப்பேன்.

எசேக்கியேல் 11:1-20 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு ஆவியானவர் என்னை கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு வாசலுக்குத் தூக்கிச் சென்றார். இந்த வாசல் சூரியன் உதிக்கிற கிழக்கு நோக்கி இருந்தது. நுழை வாசலில் 25 பேர் இருப்பதை நான் பார்த்தேன். அம்மனிதர்களோடு ஆசூரின் குமாரனான பெலத்தியாவும் இருந்தான். பெலத்தியா ஜனங்களின் தலைவனாயிருந்தான். பிறகு, தேவன் என்னிடம் பேசினார். அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, இவர்கள்தான் நகரத்திற்குக் கேடான திட்டங்களைத் தீட்டுகிறவர்கள். இம்மனிதர்கள் எப்பொழுதும் ஜனங்களிடம் கெட்டவற்றைச் செய்யும்படிக் கூறுகிறார்கள். இம்மனிதர்கள், ‘நாங்கள் விரைவில் எங்களது வீடுகளை கட்டப்போகிறோம். நாங்கள் இந்நகரத்தில் பாத்திரத்திற்குள் இருக்கிற இறைச்சிபோன்று பத்திரமாக இருக்கிறோம்’ என்கின்றனர். அவர்கள் இப்பொய்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எனவே, எனக்காக நீ ஜனங்களிடம் பேசவேண்டும். மனுபுத்திரனே, ஜனங்களுக்கு தீர்க்கதரிசனம் சொல்லப் போ.” பிறகு கர்த்தருடைய ஆவி என்மேல் வந்தார். அவர் என்னிடம் சொன்னார்: “கர்த்தர் இவற்றைச் சொன்னார் என்று அவர்களிடம் கூறு: இஸ்ரவேல் குடும்பமே, நீ பெரியவற்றைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாய். ஆனால் நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்பதை நான் அறிவேன்! நீ இந்நகரத்தில் பலரைக் கொன்றிருக்கிறாய். நீ தெருக்களைப் பிணங்களால் நிறைத்திருக்கிறாய். இப்போது நமது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: ‘மரித்த உடல்களே இறைச்சியாகும். நகரமே பானையாகும். ஆனால் அவன் (நேபுகாத்நேச்சார்) வந்து உன்னைப் பாதுகாப்பான பானையிலே இருந்து வெளியே எடுப்பான்! நீ வாளுக்குப் பயப்படுகிறாய். ஆனால் நான் உனக்கு எதிராக வாளைக் கொண்டு வருகிறேன்!’” நமது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார். எனவே அவை நிகழும்! தேவன் மேலும் சொன்னார்: “நான் ஜனங்களாகிய உங்களை நகரத்திலிருந்து வெளியேற்றுவேன். நான் அந்நியர்களிடம் உங்களைக் கொடுப்பேன் உங்களைக் கடுமையாகத் தண்டிப்பேன்! நீங்கள் வாளால் மரணம் அடைவீர்கள். நான் உங்களை இங்கே இஸ்ரவேலில் தண்டிப்பேன். எனவே, உங்களைத் தண்டிக்கிறவர் நானே என்பதை நீங்கள் அறிவீர்கள். நானே கர்த்தர். ஆம், இந்த இடம் சமையல் பானையாக இருக்கும். அதற்குள் வேகும் இறைச்சி நீங்களே! நான் உங்களை இஸ்ரவேலில் தண்டிப்பேன். பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் மீறியது எனது சட்டம்! நீங்கள் எனது ஆணைகளுக்கு அடிபணியவில்லை. உங்களைச் சுற்றிலும் உள்ள நாட்டினரைப்போன்று நீங்கள் வாழ முடிவுசெய்தீர்கள்.” நான் தீர்க்கதரிசனம் சொல்லி முடிக்கும்போது, பெனாயாவின் குமாரனான பெலத்தியா மரித்தான்! நான் தரையில் விழுந்தேன். என் முகம் தரையில் படும்படி குனிந்து, “ஓ, எனது கர்த்தராகிய ஆண்டவரே, இஸ்ரவேலில் வாழ்கிற மீதியான உயிர் தப்பியோர் அனைவரையும் நீர் அழித்துக்கொண்டிருக்கிறீர்!” என்று உரத்த குரலெழுப்பினேன். ஆனால், கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, உனது சகோதரர்களை நினைத்துப்பார். இஸ்ரவேல் குடும்பத்தாரையும் இந்நகரை விட்டு வெளியேற்றப்பட்டவர்களையும் நினைத்துப்பார்! அந்த ஜனங்கள் இந்நாட்டிலிருந்து தொலை தூரத்தில் வாழ்கிறார்கள். ஆனால் எருசலேமில் வாழ்கிற ஜனங்களே அவர்களிடம் கூறுகிறார்கள்: ‘கர்த்தரிடமிருந்து விலகி தூரத்தில் இருங்கள். இந்த நிலம் எங்களுக்குக் கொடுக்கப்பட்டது, இது எங்களுடையது!’ “எனவே, ஜனங்களிடம் இவற்றைப்பற்றிச் சொல்; எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; ‘இது உண்மை. நான் எனது ஜனங்களை அந்நிய நாடுகளுக்குப் போகும்படி கட்டாயப்படுத்தினேன். பல நாடுகளில் அவர்களைச் சிதறும்படிச் செய்தேன். அவர்கள் அங்குத் தங்கும்பொழுது, குறுகிய காலத்திற்கு நான் அவர்களுடைய ஆலயமாயிருப்பேன். எனவே நீ அந்த ஜனங்களிடம் அவர்களது கர்த்தராகிய ஆண்டவர், அவர்களைத் திரும்ப கொண்டு வருவார் என்று சொல்லவேண்டும். உங்களைப் பல நாடுகளில் சிதறடித்திருந்தேன். ஆனால் நான் உங்களைச் சேர்த்து அந்நாடுகளில் இருந்து திரும்ப அழைப்பேன். நான் இஸ்ரவேல் நாட்டை உங்களுக்கு திரும்பத் தருவேன்! எனது ஜனங்கள் திரும்பி வரும்போது அவர்களுடைய வெறுக்கத்தக்க அருவருக்கத்தக்கச் சிலைகளை அழிப்பார்கள். நான் அவர்களை ஒன்று சேர்த்து ஒரே ஆள்போன்று செய்வேன். நான் அவர்களுக்குப் புதிய ஆவியைக் கொடுப்பேன். நான் அவர்களிடமுள்ள கல்போன்ற இருதயத்தை எடுத்துவிட்டு அந்த இடத்தில் உண்மையான இருதயத்தை வைப்பேன். பின்னர் அவர்கள் எனது சட்டங்களுக்குப் பணிவார்கள். நான் அவர்களிடம் சொல்வதைச் செய்வார்கள். அவர்கள் எனது உண்மையான ஜனங்களாக இருப்பார்கள். நான் அவர்களின் தேவனாக இருப்பேன்.’”

எசேக்கியேல் 11:1-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு முகமாயிருக்கிற வாசலுக்குக் கொண்டுபோனார்; இதோ, அந்த வாசலின் நடையில் இருபத்தைந்து புருஷர் இருந்தார்கள்; அவர்களின் நடுவே ஜனத்தின் பிரபுக்களாகிய ஆசூரின் குமாரனாகிய யசனியாவையும், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியாவையும் கண்டேன். அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இவர்கள் இந்த நகரத்திலே அக்கிரமமான நினைவுகளை நினைத்து, துராலோசனை சொல்லுகிற மனுஷர். இது வீடுகளைக் கட்டுவதற்குக் காலமல்ல என்றும், இந்த நகரம் பானை, நாங்கள் அதிலுள்ள இறைச்சியென்றும் சொல்லுகிறார்கள். ஆகையால் அவர்களுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனஞ்சொல்லு, மனுபுத்திரனே, தீர்க்கதரிசனஞ்சொல்லு என்றார். அப்பொழுது கர்த்தருடைய ஆவி என்மேல் இறங்கினார்; அவர் என்னை நோக்கி: நீ சொல்லவேண்டியது என்னவென்றால், இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் இப்படிப் பேசுகிறது உண்டு; உங்கள் மனதில் எழும்புகிறதை நான் அறிவேன். இந்த நகரத்தில் நீங்கள் அநேகரைக் கொலைசெய்தீர்கள்; அதின் வீதிகளைக் கொலையுண்டவர்களால் நிரப்பினீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆகையால் நீங்கள் கொலைசெய்து, அதின் நடுவிலே போட்டுவிட்டவர்களே இறைச்சியும், இந்த நகரம் பானையுமாமே; உங்களையோ அதற்குள் இராதபடிக்குப் புறம்பாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். பட்டயத்துக்குப் பயப்பட்டீர்கள், பட்டயத்தையே உங்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். நான் உங்களை அதற்குள் இராதபடிக்குப் புறம்பாக்கி, உங்களை அந்நியரின் கையில் ஒப்புக்கொடுத்து, உங்களில் நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவேன். பட்டயத்தால் விழுவீர்கள்; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள். இந்த நகரம் உங்களுக்குப் பானையாயிருப்பதுமில்லை நீங்கள் அதிலுள்ள இறைச்சியாயிருப்பதுமில்லை; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன். என் கட்டளையின்படி நடவாமலும், என் நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளுடைய முறைமைகளின்படி செய்த நீங்கள் அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார். நான் இப்படித் தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியா செத்தான்; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்து, மகா சத்தமாய்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் இஸ்ரவேலில் மீதியானவர்களைச் சர்வசங்காரஞ்செய்வீரோ என்று முறையிட்டேன். அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, நீங்கள் கர்த்தரை விட்டுத் தூரமாய்ப்போங்கள், எங்களுக்கு இந்த தேசம் சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டதென்று, உன் சகோதரருக்கும், உன் குடும்பத்தாருக்கும், உன் பந்து ஜனங்களுக்கும், இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும், எருசலேமின் குடிகள் சொல்லுகிறார்கள். ஆகையால் நான் அவர்களைத் தூரமாகப் புறஜாதிகளுக்குள்ளே துரத்தியிருந்தாலும், நான் அவர்களை தேசங்களிலே சிதறடித்திருந்தாலும், நான் அவர்கள் போன தேசங்களில் அவர்களுக்குக் கொஞ்சகாலத்துக்குப் பரிசுத்த ஸ்தலமாக இருப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல். ஆதலால் நான் உங்களை ஜனங்களிடத்திலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு. அவர்கள் அங்கே வந்து, அதில் சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமாயிருக்கிறதையெல்லாம் அதிலிருந்து அகற்றுவார்கள். அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஏக இருதயத்தைத் தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன். அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்.