எசேக்கியேல் 1:22-28

எசேக்கியேல் 1:22-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவ்வுயிரினங்களின் தலைகளுக்கு மேலாக ஆகாயவிரிவு போன்ற அமைப்பு பரந்திருக்கக் காணப்பட்டது. அது பனிக்கட்டிபோல் பளபளப்பாகவும், பிரமிக்கத்தக்கதாகவும் இருந்தது. அந்த ஆகாயவிரிவின்கீழ் உயிரினங்களின் சிறகுகள் ஒன்றையொன்று நோக்கியபடி விரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு உயிரினத்திற்கும் தங்கள் தங்கள் உடலை மூடிக்கொள்ள சிறகுகள் இருந்தன. அந்த உயிரினங்கள் நகர்ந்தபோது, அவைகளுடைய செட்டைகளின் சத்தத்தைக் கேட்டேன். அது பாய்ந்தோடும் வெள்ளத்தின் இரைச்சலைப்போலவும், எல்லாம் வல்ல இறைவனுடைய குரலைப் போலவும், இராணுவத்தின் இரைச்சலைப்போலவும் இருந்தது. அவை நின்றபோது தங்கள் இறகுகளைக் கீழே இறக்கிவிட்டன. அவை இறகுகளைத் இறக்கிவிட்டு நின்றபோது, அவைகளின் தலைகளுக்கு மேலாய் காணப்பட்ட ஆகாயவிரிவின் மேலிருந்து ஒரு குரல் ஒலித்தது. அவைகளின் தலைகளுக்கு மேலிருந்த ஆகாயவிரிவின் மேலே காணப்பட்ட, இரத்தினக்கற்களினாலான அரியணைபோன்ற ஒன்று காணப்பட்டது. மேலே, மிக உயரத்தில் அரியணையில் ஒரு மனிதனைப் போன்ற உருவம் இருந்தது. அந்த உருவத்தின் இடுப்பைப்போல் தோன்றிய மேல்பாகத்தில், அவர் நெருப்புக்கனல் ஒளிவீசும் உலோகத்தைப்போல் காணப்பட்டார். கீழேயுள்ள பாகமோ நெருப்பைப்போல் காணப்பட்டது. பிரகாசமான வெளிச்சம் அவரைச் சுற்றி இருந்தது. மழைபெய்யும் நாளில் மேகங்களில் உள்ள வானவில்லின் தோற்றத்தைப்போல, அவரைச் சுற்றியுள்ள பிரகாசமும் இருந்தது. இது யெகோவாவின் மகிமையின் சாயலின் தோற்றம், நான் அதைக் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; பேசுகிற ஒருவரின் குரலையும் கேட்டேன்.

எசேக்கியேல் 1:22-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உயிரினங்களுடைய தலைகளின்மேல் ஆச்சரியப்படத்தக்க சுடர் வீசி மின்னும் பளிங்குபோல் ஒரு மண்டலம் இருந்தது; அது அவைகளுடைய தலைகளின்மேல் உயர விரிந்திருந்தது. மண்டலத்தின்கீழ் அவைகளுடைய இறக்கைகள் ஒன்றுக்கொன்று எதிர்நேராக விரிந்திருந்தன; தங்கள்தங்கள் உடல்களை மூடிக்கொள்ளுகிற இரண்டிரண்டு இறக்கைகள் இருபக்கத்திலும் இருக்கிற ஒவ்வொன்றுக்கும் இருந்தன. அவைகள் செல்லும்போது அவைகளுடைய இறக்கைகளின் இரைச்சலைக் கேட்டேன்; அது பெருவெள்ளத்தின் இரைச்சல் போலவும், சர்வ வல்ல தேவனுடைய சத்தம் போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலைப் போன்ற ஆரவாரத்தின் சத்தம் போலவும் இருந்தது; அவைகள் நிற்கும்போது தங்களுடைய இறக்கைகளைத் தளரவிட்டிருந்தன. அவைகள் நின்று தங்களுடைய இறக்கைகளைத் தளரவிட்டிருக்கும்போது, அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது. அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல காட்சியளிக்கும் ஒரு சிங்காசனத்தின் தோற்றமும், அந்தச் சிங்காசனத்தின் தோற்றத்தின்மேல் மனிததோற்றத்தை போல ஒரு தோற்றமும் இருந்தது. அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான உருகிப்பிரகாசிக்கிற உலோகத்தின் நிறமாக இருக்கக்கண்டேன்; அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன். மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே யெகோவாவுடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாக இருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.

எசேக்கியேல் 1:22-28 பரிசுத்த பைபிள் (TAERV)

ஜீவன்களின் தலைகளின்மேல் வியப்படையச்செய்யும் ஒன்று இருந்தது. அது தலை கீழாகத் திருப்பப்பட்ட ஒரு கிண்ணம்போல் இருந்தது. அப்பாத்திரம் படிகக்கட்டியைப்போன்று தெளிவாக இருந்தது. இது ஜீவன்களின் தலைக்குமேல் காற்றில் தொங்கிக்கொண்டிருந்தது! பாத்திரத்திற்குக் கீழே, ஒவ்வொரு ஜீவனுக்கும் நான்கு நேரான சிறகுகள் இருந்தன. இரண்டு சிறகுகள் விரிக்கபட்டு அருகிலிருக்கும் ஜீவனின் சிறகுகளை நோக்கி நீட்டப்பட்டிருந்தன. இரண்டு சிறகுகள் மற்ற திசையில் விரிக்கப்பட்டு ஜீவனின் உடலை மூடியிருந்தன. பிறகு, நான் சிறகுகளின் சத்தம் கேட்டேன். ஜீவன்கள் ஒவ்வொருமுறை நகரும்போதும் அதன் சிறகுகள் பெருஞ்சத்தத்தை எழுப்பின. அச்சத்தம் வெள்ளப்பெருக்கின் சத்தத்தைப் போன்றிருந்தது. சர்வ வல்லமையுள்ள தேவனுடைய குரல் போல் இருந்தது. அது ஒரு படை அல்லது ஜனங்கள் கூட்டத்தின் சத்தத்தைப் போலவும் இருந்தது. ஜீவன்கள் நகர்வதை நிறுத்தும்போது தம் சிறகுகளை பக்கவாட்டில் வைத்துக்கொள்ளும். ஜீவன்கள் நகர்வதை நிறுத்தின. தமது சிறகுகளைத் தாழ்த்தின. இன்னொரு பெருஞ்சத்தம் கேட்டது, அது அவற்றின் தலைக்கு மேலிருந்த கிண்ணத்திலிருந்து கேட்டது. பாத்திரத்திற்கு மேலே ஏதோ இருந்தது. அது சிங்காசனத்தைப்போல் இருந்தது. அது நீல வண்ணத்தில் ரத்தினம்போல் இருந்தது. அந்தச் சிங்காசனத்தில் யாரோ ஒரு மனிதர் உட்கார்ந்திருப்பதுபோன்று தோன்றியது. நான் அவரை இடுப்பிலிருந்து மேல்நோக்கிப் பார்த்தேன். அவர் சூடான உலோகத்தைப்போன்று இருந்தார். அவரைச் சுற்றிலும் நெருப்பு இருப்பதைப் போன்றிருந்தது. நான் அவரை இடுப்பிலிருந்து கீழ் நோக்கிப் பார்த்தேன். அது நெருப்பைப் போன்றிருந்தது. அவரைச் சுற்றிலும் அது மின்னியது. அவரைச் சுற்றிலும் மின்னிக்கொண்டிருந்த வெளிச்சமானது வானவில்லைப் போன்றிருந்தது. அது கர்த்தருடைய மகிமை. அதைப் பார்த்த உடனே நான் தரையிலே விழுந்தேன். என் முகம் தரையிலே படும்படிக் குனிந்தேன். பின்னர் ஒரு குரல் என்னோடு பேசுவதைக் கேட்டேன்.

எசேக்கியேல் 1:22-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஜீவனுடைய தலைகளின்மேல் பிரமிக்கத்தக்க வச்சிரப்பிரகாசமான ஒரு மண்டலம் இருந்தது; அது அவைகளுடைய தலைகளின்மேல் உயர விரிந்திருந்தது. மண்டலத்தின்கீழ் அவைகளுடைய செட்டைகள் ஒன்றுக்கொன்று எதிர்நேராய் விரிந்திருந்தன; தங்கள்தங்கள் உடல்களை மூடிக்கொள்ளுகிற இரண்டிரண்டு செட்டைகள் இருபக்கத்திலும் இருக்கிற ஒவ்வொன்றுக்கும் இருந்தன. அவைகள் செல்லும்போது அவைகளுடைய செட்டைகளின் இரைச்சலைக் கேட்டேன்; அது பெருவெள்ளத்தின் இரைச்சல் போலவும், சர்வவல்லவருடைய சத்தம் போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலுக்கு ஒத்த ஆரவாரத்தின் சத்தம் போலவுமிருந்தது; அவைகள் நிற்கும்போது தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருந்தன. அவைகள் நின்று தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருக்கையில், அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது. அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலும், அந்தச் சிங்காசனத்தின் சாயலின்மேல் மனுஷசாயலுக்கு ஒத்த ஒரு சாயலும் இருந்தது. அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான சொகுசாவின் நிறமாயிருக்கக்கண்டேன்; அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன். மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்