யாத்திராகமம் 9:1-9
யாத்திராகமம் 9:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அதன்பின் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நீ பார்வோனிடம் போய் எபிரெயரின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘என் மக்கள் என்னை வழிபடுவதற்கு போகவிடு. நீ அவர்களைப் போகவிட மறுத்து, அவர்களைத் தொடர்ந்து தடுத்து வைத்திருந்தால், வயல்வெளிகளிலுள்ள உங்கள் குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், மந்தைகள், செம்மறியாடுகள், வெள்ளாடுகள் ஆகிய எல்லா வளர்ப்பு மிருகங்கள்மேலும் கொடிய வாதையை யெகோவாவினுடைய கரம் கொண்டுவரும். இஸ்ரயேலருடைய வளர்ப்பு மிருகங்களுக்கும், எகிப்தியருடைய வளர்ப்பு மிருகங்களுக்கும் இடையில் யெகோவா வித்தியாசம் காட்டுவார். அதனால் இஸ்ரயேலரின் மிருகங்களில் ஒன்றாகிலும் சாகாது’ என்று அவனுக்குச் சொல்” என்றார். “யெகோவா நாளைக்கே இதை இந்த நாட்டில் செய்வார்” என்று சொல்லி யெகோவா ஒரு காலத்தைக் குறிப்பிட்டார். மறுநாள் அப்படியே யெகோவா செய்தார்: எகிப்தியரின் வளர்ப்பு மிருகங்கள் எல்லாம் செத்துப்போனது; ஆனால் இஸ்ரயேலருக்குச் சொந்தமான மிருகம் ஒன்றாயினும் சாகவில்லை. பார்வோன் அதுபற்றி விசாரிக்க ஆட்களை அனுப்பி, இஸ்ரயேலரின் மிருகங்களில் ஒன்றாகிலும் சாகவில்லை என்பதை அறிந்தான். ஆனாலும் அவனுடைய இருதயம் தொடர்ந்தும் கடினமாகவே இருந்தது, அவன் மக்களைப் போகவிடவில்லை. அப்பொழுது யெகோவா மோசேயிடமும், ஆரோனிடமும் சொன்னதாவது: “நீங்கள் சூளையில் இருந்து கைநிறையப் புகையின் கரித்தூளை அள்ளிக்கொள்ளுங்கள். மோசே அதைப் பார்வோனுக்கு முன்பாக ஆகாயத்தில் வீசட்டும். அது எகிப்து நாடு முழுவதிலும் தூசியாகி, நாடெங்குமுள்ள மனிதர்கள்மேலும், மிருகங்கள்மேலும் எரிச்சலூட்டும் கொப்புளங்களை உண்டாக்கும்” என்றார்.
யாத்திராகமம் 9:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்பு, யெகோவா மோசேயை நோக்கி: “நீ பார்வோனிடம் போய்: எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களைப் போகவிடு. நீ அவர்களை விடமாட்டேன் என்று இன்னும் நிறுத்திவைத்திருந்தால், யெகோவாவுடைய கரம் வெளியில் இருக்கிற உன்னுடைய மிருகங்களாகிய குதிரைகளின்மேலும் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஆடுமாடுகளின்மேலும் இருக்கும்; பெரிய கொடியதான கொள்ளை நோய் உண்டாகும். யெகோவா இஸ்ரவேலின் மிருகஜீவன்களுக்கும் எகிப்தியர்களின் மிருகஜீவன்களுக்கும் வித்தியாசத்தை ஏற்படுத்துவார்; இஸ்ரவேலுக்கு உரியவைகள் எல்லாவற்றிலும் ஒன்றும் சாவதில்லை” என்றார். மேலும், நாளைக்குக் யெகோவா இந்தக் காரியத்தை தேசத்தில் செய்வார் என்று சொல்லி, யெகோவா ஒரு காலத்தைக் குறித்தார் என்றும், எபிரெயர்களுடைய தேவனாகிய யெகோவா சொல்லுகிறார் என்றும் அவனிடம் சொல் என்றார். மறுநாளில் யெகோவா அந்தக் காரியத்தைச் செய்தார்; எகிப்தியர்களுடைய மிருகஜீவன்கள் எல்லாம் செத்துப்போனது; இஸ்ரவேலர்களின் மிருகஜீவன்களில் ஒன்றுகூட சாகவில்லை. பார்வோன் விசாரித்து, இஸ்ரவேல் மக்களின் மிருகஜீவன்களில் ஒன்றுகூட சாகவில்லை என்று அறிந்தான். பார்வோனுடைய இருதயமோ கடினப்பட்டது; அவன் மக்களைப் போகவிடவில்லை. அப்பொழுது யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “உங்கள் கைப்பிடி அளவு சூளையின் சாம்பலை அள்ளிக்கொள்ளுங்கள்; மோசே அதைப் பார்வோனுடைய கண்களுக்குமுன்பு வானத்திற்கு நேராக தூவட்டும். அது எகிப்து தேசம் முழுவதும் தூசியாகி, எகிப்து தேசமெங்கும் மனிதர்கள்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்களை எழும்பச்செய்யும்” என்றார்.
யாத்திராகமம் 9:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)
அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, “பார்வோனிடம் போய் அவனைப் பார்த்து, ‘எபிரெய ஜனங்களின் தேவனாகிய கர்த்தர்: என்னைத் தொழுதுக்கொள்ளும்படி என் ஜனங்களைப் போக அனுமதி! நீ விடாப்பிடியாக அவர்களை அனுப்ப மறுத்தால், உனது பண்ணை மிருகங்களுக்கு எதிராக கர்த்தர் தமது வல்லமையைப் பயன்படுத்துவார். ஒரு கொடிய நோயால் உனது குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், பசுக்கள், ஆடுகள், ஆகியவை பாதிக்கப்படும்படியாக கர்த்தர் செய்வார். எகிப்தியரின் மிருகங்களுக்கும், இஸ்ரவேலரின் மிருகங்களுக்கும் கர்த்தர் வித்தியாசம் காட்டுவார். இஸ்ரவேல் ஜனங்களின் மிருகங்கள் எதுவும் சாகாது. இது நடப்பதற்குரிய காலத்தை கர்த்தர் குறித்துவிட்டார். நாளை இதனை இத்தேசத்தில் கர்த்தர் நிறைவேற்றுவார் என்று சொல்கிறார்’ என்று சொல்” என்றார். மறுநாள் காலையில் எகிப்தின் பண்ணை மிருகங்கள் அனைத்தும் மடிந்தன. ஆனால் இஸ்ரவேலருக்குரிய மிருகங்கள் எதுவும் மரிக்கவில்லை. இஸ்ரவேலரின் மிருகங்களில் ஏதேனும் மரித்திருக்கிறதா என்று பார்ப்பதற்கு பார்வோன் ஆட்களை அனுப்பினான். இஸ்ரவேலரின் மிருகங்கள் எதுவும் மரிக்கவில்லை என்று பார்வோன் அறிந்தும் பிடிவாதமாகவே இருந்தான். அவன் ஜனங்களைப் போக அனுமதிக்கவில்லை. கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி, “உலையிலுள்ள சாம்பலை உங்கள் கைகளில் அள்ளிக்கொள்ளுங்கள். மோசே, நீ பார்வோனுக்கு முன்பாக உன் கைகளிலுள்ள சாம்பலைக் காற்றில் வீசு. எகிப்து தேசம் முழுவதும் இச்சாம்பல் பரவி தூளாக இது மாறும். அந்தத் தூள் ஒரு மனிதன் மீதோ, ஒரு மிருகத்தின்மீதோ பட்டவுடன் தோலின் மீது கொப்புளங்கள் ஏற்படும்” என்றார்.
யாத்திராகமம் 9:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களைப் போகவிடு. நீ அவர்களை விடமாட்டேன் என்று இன்னும் நிறுத்திவைத்தாயாகில், கர்த்தருடைய கரம் வெளியிலிருக்கிற உன் மிருகஜீவன்களாகிய குதிரைகளின்மேலும் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஆடுமாடுகளின் மேலும் இருக்கும்; மகா கொடிதான கொள்ளை நோய் உண்டாகும். கர்த்தர் இஸ்ரவேலின் மிருகஜீவன்களுக்கும் எகிப்தியரின் மிருகஜீவன்களுக்கும் வித்தியாசம் பண்ணுவார்; இஸ்ரவேல் புத்திரருக்கு உரியவைகள் எல்லாவற்றிலும் ஒன்றும் சாவதில்லை என்றார். மேலும், நாளைக்குக் கர்த்தர் இந்தக் காரியத்தை தேசத்தில் செய்வார் என்று சொல்லி, கர்த்தர் ஒரு காலத்தைக் குறித்தார் என்றும், எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றும் அவனிடத்தில் சொல் என்றார். மறுநாளில் கர்த்தர் அந்தக் காரியத்தைச் செய்தார்; எகிப்தியருடைய மிருகஜீவன்கள் எல்லாம் செத்துப்போயிற்று; இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை. பார்வோன் விசாரித்து, இஸ்ரவேலரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை என்று அறிந்தான். பார்வோனுடைய இருதயமோ கடினப்பட்டது; அவன் ஜனங்களைப் போகவிடவில்லை. அப்பொழுது கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: உங்கள் கைப்பிடி நிறைய சூளையின் சாம்பலை அள்ளிக்கொள்ளுங்கள்; மோசே அதைப் பார்வோனுடைய கண்களுக்குமுன் வானத்திற்கு நேராக இறைக்கக்கடவன். அது எகிப்து தேசம் மீதெங்கும் தூசியாகி, எகிப்து தேசமெங்கும் மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்களை எழும்பப்பண்ணும் என்றார்.