யாத்திராகமம் 34:1-8

யாத்திராகமம் 34:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மேலும் யெகோவா மோசேயிடம், “நீ முந்தினவைகளைப்போன்ற இரண்டு கற்பலகைகளைச் செதுக்கி எடுத்துக்கொள். நீ உடைத்துப்போட்ட முந்தின கற்பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் இந்தக் கற்பலகைகளில் எழுதுவேன். நாளை காலையில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலைக்குமேல் ஏறி வா. மலை உச்சியில் எனது முன்னிலையில் வந்து நில். உன்னுடன் வேறெவரும் வரக்கூடாது. மலையின் எந்தப்பகுதியிலும் எங்காவது காணப்படவும் கூடாது. ஆடுமாடுகளும் அந்த மலைக்கு முன்னால் மேயக்கூடாது” என்றார். மோசே யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, முந்தின கற்பலகைகளைப்போன்ற இரண்டு கற்பலகைகளையும் செதுக்கி, அதிகாலையில் எழுந்து, அந்த இரண்டு கற்பலகைகளையும் தன் கைகளில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலைக்கு ஏறிப்போனான். அப்பொழுது யெகோவா மேகத்தில் இறங்கி அங்கே மோசேயுடன் நின்று, யெகோவா என்ற தமது பெயரைப் பிரசித்தப்படுத்தினார். அவர் மோசேயின் முன்னால் கடந்து போகையில், “யெகோவா! யெகோவா! மன இரக்கமும், கிருபையும் உள்ள இறைவன். கோபப்படுவதற்குத் தாமதிக்கிறவர். அன்பிலும், உண்மையிலும் நிறைந்தவர். ஆயிரம் தலைமுறைகளுக்கு அசையாத அன்பைக் காட்டுகிறவர். கொடுமையையும், கலகத்தையும், பாவத்தையும் மன்னிக்கிறவர். அப்படியிருந்தும் அவர் குற்றவாளிகளைத் தண்டியாமல் தப்பவிடுகிறவர் அல்ல. பெற்றோரின் பாவத்திற்காக பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் அவர்களின் மூன்றாம், நான்காம் தலைமுறைவரைக்கும் தண்டிக்கிறவர்” என்று பிரசித்தப்படுத்தினார். உடனே மோசே, தரையில் விழுந்து வழிபட்டான்.

யாத்திராகமம் 34:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவா மோசேயை நோக்கி: “முந்தினக் கற்பலகைகளை போன்ற இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன். அதிகாலையில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் மேல் காலையில் என்னுடைய சமுகத்தில் வந்து நில். உன்னோடு ஒருவனும் அங்கே வரக்கூடாது; மலையில் எங்கும் ஒருவனும் காணப்படவும்கூடாது; இந்த மலையின் அருகில் ஆடுமாடு மேயவும்கூடாது” என்றார். அப்பொழுது மோசே முந்தின கற்பலகைகளைப் போன்ற இரண்டு கற்பலகைகளை இழைத்து, அதிகாலையில் எழுந்து, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே அந்த இரண்டு கற்பலகைகளையும் தன்னுடைய கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய் மலையில் ஏறினான். யெகோவா ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, யெகோவாவுடைய நாமத்தைக் கூறினார். யெகோவா அவனுக்கு முன்பாக கடந்துபோகிறபோது, அவர்: “யெகோவா, யெகோவா; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயவும், சத்தியமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும், மீறுதலையும், பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றம் இல்லாதவனாக விடாமல், தகப்பன்மார்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டிக்கிறவர்” என்று கூறினார். மோசே உடனே தரைவரைக்கும் குனிந்து பணிந்துகொண்டு

யாத்திராகமம் 34:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் மோசேயை நோக்கி, “உடைந்து போன முதல் இரண்டு பலகைகளைப் போலவே வேறே இரண்டு கற்பலகைகளைச் செய். முதல் இரண்டு கற்களிலும் எழுதப்பட்ட அதே வார்த்தைகளை நான் இந்தக் கற்களிலும் எழுதுவேன். நாளை காலையில் தக்க ஆயத்தத்துடன் சீனாய் மலைக்கு வா. மலையின்மேல் என் முன்னே வந்து நில். உன்னோடு வேறு யாரும் வரக்கூடாது. யாரும் மலையில் காணப்படக் கூடாது. உங்கள் மிருகங்களோ, ஆட்டு மந்தைகளோ எதுவும் மலையடிவாரத்தில் புல்லை உண்பதற்குக்கூட அனுமதிக்கக் கூடாது” என்றார். எனவே, முதல் இரண்டு கற்பலகைகளைப் போலவே வேறே இரண்டு கற்பலகைகளை மோசே உருவாக்கினான். மறுநாள் அதிகாலையில் சீனாய் மலையின் மேல் ஏறிச் சென்றான். கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே எல்லாவற்றையும் செய்தான். மோசே இரண்டு கற்பலகைகளையும் தன்னோடு எடுத்துச் சென்றான். மோசே மலையின்மீது ஏறியவுடன், கர்த்தர் மேகத்தில் அவனிடம் இறங்கி வந்து, தமது பெயரை மோசேயிடம் சொன்னார். கர்த்தர் மோசேக்கு முன்னர் கடந்து சென்று, “யேகோவா என்னும் கர்த்தர், இரக்கமும் தயவும் உள்ள தேவன். கர்த்தர் எளிதில் கோபம் கொள்ளமாட்டார். கர்த்தர் அன்பு மிகுந்தவர், கர்த்தர் நம்பிக்கைக்குரியவர். ஆயிரம் தலைமுறைவரைக்கும் கர்த்தர் தமது இரக்கத்தைக் காட்டுவார். ஜனங்கள் செய்கிற தவறுகளை கர்த்தர் மன்னிப்பார். ஆனால் குற்றவாளிகளைத் தண்டிக்க கர்த்தர் மறப்பதில்லை. கர்த்தர் குற்றவாளிகளை மட்டும் தண்டிக்காமல் அவர்களின் பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும், அவர்களின் பிள்ளைகளையும், அவர்கள் செய்த தீயகாரியங்களுக்காகத் தண்டிப்பார்” என்றார். உடனே மோசே கீழே தரையில் குனிந்து கர்த்தரைத் தொழுதுகொண்டான். மோசே

யாத்திராகமம் 34:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன். விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமுகத்தில் வந்து நில். உன்னோடே ஒருவனும் அங்கே வரக்கூடாது; மலையிலெங்கும் ஒருவனும் காணப்படவுங்கூடாது; இந்த மலையின் சமீபத்தில் ஆடுமாடு மேயவுங்கூடாது என்றார். அப்பொழுது மோசே முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்து, அதிகாலமே எழுந்திருந்து, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே அவ்விரண்டு கற்பலகைகளையும் தன் கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய் மலையில் ஏறினான். கர்த்தர் ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, கர்த்தருடைய நாமத்தைக் கூறினார். கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார். மோசே தீவிரமாகத் தரைமட்டும் குனிந்து பணிந்துகொண்டு

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்