யாத்திராகமம் 28:1-8

யாத்திராகமம் 28:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“உன் சகோதரன் ஆரோனையும், அவன் மகன்களான நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோரையும் இஸ்ரயேலர் மத்தியிலிருந்து உன்னிடம் அழைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் ஆசாரியர்களாக எனக்கு ஊழியம் செய்யும்படி இதைச் செய்யவேண்டும். உன் சகோதரனாகிய ஆரோனுக்கு மதிப்பும், கனமும் கொடுக்கும்படி அவனுக்குப் பரிசுத்த உடைகளைச் செய்யவேண்டும். இவ்விதமான காரியங்களில், நான் ஞானத்தைக் கொடுத்திருக்கும் எல்லா திறமையுள்ள மனிதரிடமும் நீ பேசவேண்டும். ஆரோன் ஆசாரியனாக எனக்கு ஊழியம் செய்யும்படி அவனுடைய அர்ப்பணிப்புக்காக அவனுக்கான உடைகளைச் செய்யும்படி அவர்களுக்குச் சொல்லவேண்டும். அவர்கள் செய்யவேண்டிய உடைகள்: ஒரு மார்பு அணி, ஒரு ஏபோத், ஒரு மேலங்கி, நெய்யப்பட்ட ஒரு உள் அங்கி, ஒரு தலைப்பாகை, ஒரு இடைப்பட்டி ஆகியவையே. உன் சகோதரன் ஆரோனும், அவன் மகன்களும் எனக்கு ஆசாரியர்களாக ஊழியம் செய்யும்படி, திறமையுள்ளவர்கள் இந்த பரிசுத்த உடைகளைத் தயாரிக்க வேண்டும். அவர்கள் தங்கம், நீலம், ஊதா, கருஞ்சிவப்பு, மென்பட்டு நூல்களை பயன்படுத்த வேண்டும். “தங்கத்தையும், நீலநூலையும், ஊதா நூலையும், கருஞ்சிவப்பு நூலையும், திரிக்கப்பட்ட மென்பட்டையும் கொண்டு திறமையான கைவினைக் கலைஞனின் வேலைப்பாடாய் ஏபோத்தைச் செய்யவேண்டும். அதை அணிந்துகொள்ளத்தக்க விதமாய் அதன் இரண்டு முனைகளிலும் தோளுக்கான இரண்டு பட்டிகள் அதில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதன் நுட்பமாக நெய்யப்பட்ட அதன் இடைப்பட்டியும் அதைப் போலவே இருக்கவேண்டும். அது ஏபோத்துடன் ஒரே இணைப்பாக தங்கம், நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரித்த மென்பட்டு ஆகியவற்றால் செய்யப்படவேண்டும்.

யாத்திராகமம் 28:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

“உன்னுடைய சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, நீ ஆரோனையும் அவனுடன் அவனுடைய மகன்களாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் மகன்களையும் இஸ்ரவேலர்களிலிருந்து பிரித்து, உன்னிடம் சேர்த்துக்கொள். உன்னுடைய சகோதரனாகிய ஆரோனுக்கு, மகிமையும் அலங்காரமுமாக இருக்கும்படி, பரிசுத்த ஆடைகளை உண்டாக்கு. ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்ய அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அவனுக்கு ஆடைகளை உண்டாக்க, நான் ஞானத்தின் ஆவியால் நிரப்பின விவேகமான இருதயமுள்ள எல்லாரோடும் நீ சொல்லு. அவர்கள் உண்டாக்கவேண்டிய ஆடைகள்; மார்ப்பதக்கமும், ஏபோத்தும், அங்கியும், வேலைப்பாடுடன் நெய்யப்பட்ட உள்சட்டையும், தலைப்பாகையும், இடுப்புக்கச்சையுமே. உன்னுடைய சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் பரிசுத்த ஆடைகளை உண்டாக்கவேண்டும். அவர்கள் பொன்னும் இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் மெல்லிய பஞ்சுநூலும் சேகரிக்கட்டும். “ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் விசித்திரவேலையாகச் செய்யட்டும். அது ஒன்றாக இணைக்கப்படும்படி, இரண்டு தோள்துண்டுகளின்மேலும், அதின் இரண்டு முனைகளும் சேர்க்கப்படவேண்டும். அந்த ஏபோத்தின்மேல் இருக்கவேண்டிய வேலைப்பாடு மிகுந்த வார்க்கச்சை அந்த வேலையைப்போலவே, பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்டு, அதனோடு ஒன்றாக இருக்கவேண்டும்.

யாத்திராகமம் 28:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் மோசேயை நோக்கி, “உன் சகோதரனாகிய ஆரோனையும், நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரர்களையும் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து பிரித்து உன்னிடம் வரவழை. இவர்கள் எனக்கு ஆசாரியர்களாக ஊழியம் செய்வார்களாக. “உனது சகோதரனாகிய ஆரோனுக்கென்று சிறப்பான ஆடைகளை உண்டாக்கு. அந்த ஆடைகள் அவனுக்குக் கனமும், மேன்மையும் தரும். இந்த ஆடைகளைச் செய்யும் திறமைமிக்கவர்கள் ஜனங்கள் மத்தியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு விசேஷ அறிவை நான் கொடுத்துள்ளேன். அவர்களிடம் ஆரோனுடைய ஆடைகளைத் தயாரிக்கச் சொல். அவன் எனக்குச் சிறப்பான பணிவிடை செய்வதை அந்த உடை காட்டும். அவன் என்னைச் சேவிக்கிற ஆசாரியனாகப் பணியாற்றுவான். அந்த மனிதர்கள் செய்யவேண்டிய ஆடைகள் இவைகளே: நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கம், ஏபோத், நீல அங்கி, முழுவதும் நெய்யப்பட்ட வெள்ளை அங்கி, தலைப்பாகை, கச்சை. ஆரோனுக்கும் அவன் குமாரன்களுக்கென்றும் இந்தச் சிறப்பு ஆடைகளை உண்டாக்க வேண்டும். பின்பு ஆரோனும், அவனது குமாரர்களும் எனக்கு ஆசாரியர்களாக ஊழியம் செய்யமுடியும். பொன்னையும், ஜரிகைகளையும், மெல்லிய துகிலையும், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூலையும் பயன்படுத்துமாறு அவர்களுக்குச் சொல். “ஏபோத்தைச் செய்வதற்குப் பொன்னையும், சரிகைகளையும், மெல்லிய துகிலையும், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூலையும் பயன்படுத்து. இது திறமை மிக்க கலைஞனின் வேலை ஆகும். ஏபோத்தின் தோள் பகுதி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தோள்பட்டை இருக்கவேண்டும். இந்தத் தோள் பட்டைகள் ஏபோத்தின் இரண்டு மூலைகளிலும் கட்டப்படவேண்டும். “ஏபோத்திற்கு ஒரு இடைக்கச்சையைச் செய்ய வேண்டும். ஏபோத்தை நெய்தது போலவே, இடைக் கச்சையையும், பொன் ஜரிகை, மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூல் ஆகியவற்றால் செய்ய வேண்டும்.

யாத்திராகமம் 28:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ ஆரோனையும் அவனோடேகூட அவன் குமாரராகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரரையும் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உன்னிடத்தில் சேர்த்துக்கொள்வாயாக. உன் சகோதரனாகிய ஆரோனுக்கு, மகிமையும் அலங்காரமுமாய் இருக்கும் பொருட்டு, பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணுவாயாக. ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யத்தக்கதாக அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அவனுக்கு வஸ்திரங்களை உண்டாக்கும்பொருட்டு, நான் ஞானத்தின் ஆவியால் நிரப்பின விவேகமான இருதயமுள்ள யாவரோடும் நீ சொல்லுவாயாக. அவர்கள் உண்டாக்கவேண்டிய வஸ்திரங்களாவன; மார்ப்பதக்கமும், ஏபோத்தும், அங்கியும், விசித்திரமான உள்சட்டையும், பாகையும், இடைக்கச்சையுமே. உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவனுக்கும் அவன் குமாரருக்கும் பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணவேண்டும். அவர்கள் பொன்னும் இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் மெல்லிய பஞ்சுநூலும் சேகரிப்பார்களாக. ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் விசித்திரவேலையாய்ச் செய்யக்கடவர்கள். அது ஒன்றாக இணைக்கப்படும் பொருட்டு, இரண்டு தோள்த்துண்டுகளின்மேலும், அதின் இரண்டு முனைகளும் சேர்க்கப்படவேண்டும். அந்த ஏபோத்தின்மேல் இருக்கவேண்டிய விசித்திரமான கச்சை அந்த வேலைக்கு ஒப்பாகவே, பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் பண்ணப்பட்டு, அதனோடே ஏகமாயிருக்கவேண்டும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்