யாத்திராகமம் 23:20-26

யாத்திராகமம் 23:20-26 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“பாருங்கள், வழியெல்லாம் உங்களைப் பாதுகாத்து நான் ஆயத்தப்படுத்தியிருக்கிற இடத்திற்கு உங்களைக் கொண்டுவருவதற்காக, நான் உங்களுக்கு முன்னால் ஒரு தூதனை அனுப்புகிறேன். அவர் சொல்வதை கவனித்துக் கேளுங்கள். அவருக்கு விரோதமாகக் கலகம் செய்யவேண்டாம். ஏனெனில் என் பெயர் அவரில் இருப்பதால் உங்கள் கலகத்தை அவர் மன்னிக்கமாட்டார். அவர் சொல்வதை நீங்கள் கவனமாகக் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வீர்களானால், நான் உங்கள் பகைவர்களுக்குப் பகைவராய் இருப்பேன். உங்களை எதிர்ப்பவர்களை நானும் எதிர்ப்பேன். என் தூதன் உங்களுக்கு முன்சென்று, எமோரியர், ஏத்தியர், பெரிசியர் கானானியர், ஏவியர், எபூசியர் வாழும் இடத்திற்கு உங்களைக் கொண்டுபோவார். நானும் அவர்களை அழித்தொழிப்பேன். நீங்கள் அவர்களுடைய தெய்வங்களை வணங்கவோ, வழிபடவோ, அவர்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றவோ வேண்டாம். நீங்கள் அவற்றை அழித்து அவர்களின் தெய்வச்சிலைகளையும் துண்டுகளாக நொறுக்கவேண்டும். நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவையே வழிபடுங்கள், அவருடைய ஆசீர்வாதம் உங்கள் உணவிலும், தண்ணீரிலும் இருக்கும். உங்களிடமிருந்து நோயை நீக்கிவிடுவேன். உங்கள் நாட்டில் ஒருவரும் கருச்சிதைவடையவோ, மலட்டுத்தன்மை உடையவர்களாகவோ இருக்கமாட்டார்கள். உங்களுக்கு முழுமையான ஆயுள் காலத்தை நான் கொடுப்பேன்.

யாத்திராகமம் 23:20-26 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்செய்த இடத்திற்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன். அவருடைய சமுகத்தில் எச்சரிக்கையாக இருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்களுடைய துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என்னுடைய பெயர் அவருடைய உள்ளத்தில் இருக்கிறது. நீ அவருடைய வாக்கை நன்றாகக் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்தால், நான் உன்னுடைய எதிரிகளுக்கு எதிரியாகவும், உன்னுடைய விரோதிகளுக்கு விரோதியாகவும் இருப்பேன். என்னுடைய தூதனானவர் உனக்கு முன்னேசென்று, எமோரியர்களும், ஏத்தியர்களும், பெரிசியர்களும், கானானியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும், இருக்கிற இடத்திற்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அழித்துப்போடுவேன். நீ அவர்களுடைய தெய்வங்களைப் பணிந்துகொள்ளாமலும், தொழுதுகொள்ளாமலும், அவர்களுடைய செயல்களின்படி செய்யாமலும், அவர்களை முழுவதும் அழித்து, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடவேண்டும். உங்களுடைய தேவனாகிய யெகோவாவையே ஆராதிக்கவேண்டும்; அவர் உன்னுடைய அப்பத்தையும் உன்னுடைய தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன். கர்ப்பம் களைகிறதும், மலடும் உன்னுடைய தேசத்தில் இருப்பதில்லை; உன்னுடைய ஆயுசு நாட்களை பூரணப்படுத்துவேன்.

யாத்திராகமம் 23:20-26 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவன், “நான் உங்களுக்கு முன்பாக ஒரு தூதனை அனுப்புவேன். நான் உங்களுக்கென தயாராக வைத்திருக்கிற இடத்திற்கு அத்தூதன் அழைத்துச் செல்வார். அந்தத் தூதன் உங்களைப் பாதுகாப்பார். தூதனுக்குக் கீழ்ப்படிந்து அவரைப் பின்பற்றுங்கள். அவரை எதிர்க்காதீர்கள். நீங்கள் அவரை எதிர்த்துச் செய்கிற தவறுகளைத் தூதன் மன்னிக்கமாட்டார். அவரில் என் வல்லமை (நாமம்) இருக்கிறது. அவர் சொல்கிற எல்லாவற்றிற்கும் நீங்கள் செவிகொடுக்கவேண்டும். அவ்வாறு செய்தால் நான் உங்களோடிருப்பேன். உங்கள் பகைவர்களை எதிர்ப்பேன். உங்களை எதிர்க்கிற ஒவ்வொருவருக்கும் நான் பகைவனாவேன்” என்றார். தேவன், “என் தூதன் உங்களை தேசத்தில் வழி நடத்துவார். எமோரியர், ஏத்தியர், பெரிசியர், கானானியர், ஏவியர், எபூசியர் ஆகிய வெவ்வேறு ஜனங்களுக்கு எதிராக உங்களை வழிநடத்துவார். நான் அந்த ஜனங்களை எல்லாம் தோற்கடிப்பேன். “அந்த ஜனங்களின் தேவர்களைத் தொழுதுகொள்ளாதீர்கள். அவைகளுக்கு முன்பு பணியாதீர்கள். அவர்கள் வாழுகிறபடி நீங்கள் வாழாதீர்கள். அவர்களின் விக்கிரகங்களை அழித்துவிடுங்கள். அவர்கள் தெய்வங்களின் நினைவுச் சின்னங்களை உடைத்துவிடுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் சேவை செய்யுங்கள். நீங்கள் இதைச் செய்தால், உங்களை ஏராளமான ஆகாரத்தாலும், தண்ணீராலும் ஆசீர்வதிப்பேன். உங்களிலிருந்து எல்லா நோய்களையும் அகற்றுவேன். உங்களது பெண்களுக்கு குழந்தைகள் பிறக்கும், உங்களது பெண்களின் பிரசவத்தின்போது குழந்தைகள் மரிப்பதில்லை. நீங்கள் நீண்ட ஆயுளோடு இருக்கும்படிச் செய்வேன்.

யாத்திராகமம் 23:20-26 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன். அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது. நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன். என் தூதனானவர் உனக்குமுன்சென்று, எமோரியரும், ஏத்தியரும், பெரிசியரும், கானானியரும், ஏவியரும், எபூசியரும், இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அதம்பண்ணுவேன். நீ அவர்களுடைய தேவர்களைப்பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம்பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக. உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன். கர்ப்பம் விழுகிறதும், மலடும் உன் தேசத்தில் இருப்பதில்லை; உன் ஆயுசு நாட்களைப் பூரணப்படுத்துவேன்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்