யாத்திராகமம் 16:13-17

யாத்திராகமம் 16:13-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சாயங்காலத்தில் காடைகள் வந்து விழுந்து பாளயத்தை மூடிக்கொண்டது. விடியற்காலத்தில் பாளயத்தைச் சுற்றி பனி பெய்திருந்தது. பெய்திருந்த பனி நீங்கினபின், இதோ, வனாந்தரத்தின்மீதெங்கும் உருட்சியான ஒரு சிறிய வஸ்து உறைந்த பனிக்கட்டிப் பொடியத்தனையாய்த் தரையின்மேல் கிடந்தது. இஸ்ரவேல் புத்திரர் அதைக் கண்டு, அது இன்னது என்று அறியாதிருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பம். கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால், அவரவர் புசிக்கும் அளவுக்குத் தக்கதாக அதில் எடுத்துச் சேர்க்கக்கடவீர்கள்; உங்களிலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்தின்படி, அவனவன் தன் தன் கூடாரத்தில் இருக்கிறவர்களுக்காக தலைக்கு ஒரு ஓமர் அளவு எடுத்துக்கொள்ளக்கடவன் என்றான். இஸ்ரவேல் புத்திரர் அப்படியே செய்து, சிலர் மிகுதியாயும் சிலர் கொஞ்சமாயும் சேர்த்தார்கள்.

யாத்திராகமம் 16:13-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அந்த மாலை வேளையிலேயே காடைகள் வந்து அவர்கள் முகாமை மூடிக்கொண்டன. காலையில் முகாமைச் சுற்றி ஒரு பனிப்படலம் படிந்தது. பனி விலகிய பின்பு, தரையின்மீது உறைபனி போன்ற மெல்லிய துகள்கள் பாலைவனத்தில் காணப்பட்டன. அதை இஸ்ரயேலர் கண்டபோது, ஒருவரையொருவர் பார்த்து, “இது என்ன?” என்றார்கள். ஏனெனில், அது என்ன என்பது அவர்களுக்குத் தெரியாதிருந்தது. அப்பொழுது மோசே அவர்களிடம், “இதுதான் நீங்கள் உண்பதற்காக யெகோவா கொடுத்திருக்கும் அப்பம். யெகோவா கட்டளையிட்டிருப்பது இதுவே: ‘ஒவ்வொருவரும் தான் சாப்பிடக்கூடியதைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். உங்கள் கூடாரத்தில் உள்ளவர்களில் ஒருவருக்கு ஒரு ஓமர் அளவுப்படி, ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ளுங்கள்’ ” என்றான். இஸ்ரயேலர் தங்களுக்குச் சொல்லப்பட்டபடியே செய்தார்கள். சிலர் அதிகமாகவும், சிலர் குறைவாகவும் சேர்த்தார்கள்.

யாத்திராகமம் 16:13-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மாலையில் காடைகள் வந்து விழுந்து முகாமை மூடிக்கொண்டது. அதிகாலையில் முகாமைச் சுற்றி பனி பெய்திருந்தது. பெய்திருந்த பனி நீங்கினபின்பு, இதோ, வனாந்திரத்தின்மீது எங்கும் உருண்டையான ஒரு சிறிய பொருள் உறைந்த பனிக்கட்டிப் பொடியைப்போலத் தரையின்மேல் கிடந்தது. இஸ்ரவேல் மக்கள் அதைக் கண்டு, அது என்னவென்று அறியாமல் இருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, “இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: “இது யெகோவா உங்களுக்குச் சாப்பிடக்கொடுத்த அப்பம். யெகோவா கட்டளையிடுகிறது என்னவென்றால், அவரவர் சாப்பிடும் அளவுக்குத் தகுந்தபடி அதில் எடுத்துச் சேர்க்கட்டும்; உங்களிலுள்ள நபர்களின் எண்ணிக்கையின்படி, அவனவன் தன் தன் கூடாரத்தில் இருக்கிறவர்களுக்காக தலைக்கு ஒரு ஓமர் அளவு எடுத்துக்கொள்ளட்டும்” என்றான். இஸ்ரவேல் மக்கள் அப்படியே செய்து, சிலர் அதிகமாகவும் சிலர் குறைவாகவும் சேர்த்தார்கள்.

யாத்திராகமம் 16:13-17 பரிசுத்த பைபிள் (TAERV)

அன்றிரவு, காடைப் பறவைகள் அவர்கள் தங்கியிருந்த இடத்தைச் சுற்றிலும் வந்து விழுந்தன. ஜனங்கள் இறைச்சிக்காக அவற்றைப் பிடித்தனர். காலையில் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகே பனிபடர்ந்திருந்தது. பனி மறைந்ததும் மெல்லிய அப்பம் போன்ற ஒரு பொருள் நிலத்தின் மேல் காணப்பட்டது. இஸ்ரவேல் ஜனங்கள் ஒருவரையொருவர் நோக்கி, “இது என்ன?” என்றனர். அப்பொருள் என்ன என்று அவர்களுக்குத் தெரியாததினால், ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். மோசே அவர்களை நோக்கி, “கர்த்தர் உங்களுக்கு உணவாகக் கொடுப்பது இதுவே. ஒவ்வொருவனும் அவனவனுக்குத் தேவையான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவனுக்கும் எட்டு கிண்ண அளவின்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறார்” என்றான். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் அவ்வாறே செய்தார்கள். ஒவ்வொருவனும் இந்த உணவைச் சேகரித்துக்கொண்டான். சிலர் மற்றவர்களை விட அதிகமாக எடுத்துக்கொண்டனர்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்