யாத்திராகமம் 13:1-16

யாத்திராகமம் 13:1-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவா மோசேயிடம், “முதற்பேறான எல்லா ஆண்களையும் எனக்கு அர்ப்பணம் செய்யவேண்டும். எந்த மனிதனானாலும், மிருகமானாலும் இஸ்ரயேலருக்குள் கர்ப்பத்திலிருந்து வரும் ஒவ்வொரு முதற்பேறும் எனக்குரியது” என்றார். பின்பு மோசே இஸ்ரயேல் மக்களிடம் சொன்னதாவது, “நீங்கள் அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து வெளியேவந்த இந்த நாளை நினைவுபடுத்திக் கொண்டாடுங்கள். ஏனெனில் யெகோவா தமது வல்லமையான கரத்தினால் அவ்விடத்திலிருந்து உங்களை வெளியே கொண்டுவந்தார். புளிப்பூட்டப்பட்ட எதையும் சாப்பிடவேண்டாம். இன்று ஆபீப் மாதத்தில் நீங்கள் புறப்படுகிறீர்கள். யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என வாக்குப்பண்ணிய, பாலும் தேனும் வழிந்தோடும் செழிப்பான நாடான கானானியர், ஏத்தியர், எமோரியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய நாட்டுக்கு யெகோவா உங்களைக் கொண்டுவருவார். அப்போது இந்தப் பண்டிகையை வருடந்தோறும் இதே மாதத்தில் நீங்கள் கொண்டாடவேண்டும். புளிப்பில்லாத அப்பத்தை ஏழுநாட்களுக்குச் சாப்பிட்டு, ஏழாவதுநாள் யெகோவாவுக்கு பண்டிகையைக் கொண்டாடுவீர்களாக. ஏழுநாட்களும் புளிப்பில்லாத அப்பம் சாப்பிடவேண்டும்; உங்கள் வீட்டிலோ அல்லது நாட்டின் எல்லைக்குள்ளோ புளித்தது எதுவும் காணப்படக்கூடாது. அன்றையதினம் நீங்கள் உங்கள் மகன்களிடம், ‘நான் எகிப்திலிருந்து வந்தபோது யெகோவா எனக்குச் செய்தற்காகவே இதைச் செய்கிறேன்’ என்று சொல்லுங்கள். யெகோவாவின் சட்டம் உங்கள் வாயில் இருக்கவேண்டும் என்பதற்காக, இந்த கொண்டாட்டம் உங்கள் கையில் ஒரு அடையாளம் போலவும், உங்கள் நெற்றியில் ஒரு நினைவுச்சின்னம் போலவும் இருக்கும். ஏனெனில், யெகோவா தன் பலத்த கரத்தால் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். ஆதலால் நீங்கள் வருடந்தோறும், குறித்த காலத்தில் இந்த நியமத்தைக் கைக்கொள்ளவேண்டும். “யெகோவா உங்களுக்கும் உங்கள் முற்பிதாக்களுக்கும் கொடுப்பேன் என்று வாக்குப்பண்ணியபடி, கானானியருடைய நாட்டுக்கு உங்களைக் கொண்டுவந்து, அதை உங்களுக்குக் கொடுத்தபின்பு, யெகோவாவுக்கு நீங்கள் ஒவ்வொரு கர்ப்பத்தின் முதற்பிறப்புகளை கொடுக்கவேண்டும். உங்கள் கால்நடைகளில் ஆண் தலையீற்றுகளெல்லாம் யெகோவாவுக்கு உரியவை. கழுதையின் தலையீற்றுகளையெல்லாம் ஒரு செம்மறியாட்டுக் குட்டியால் மீட்டுக்கொள்ள வேண்டும்; மீட்காவிட்டால், அதன் கழுத்தை முறித்துப்போடுங்கள். உங்கள் மகன்களில் முதற்பேறானவனை மீட்டுக்கொள்ள வேண்டும். “இனிவரும் காலத்தில் உங்கள் மகன்கள் உங்களிடம், ‘இதன் பொருள் என்ன?’ என்று கேட்கும்போது அவர்களிடம், ‘யெகோவா தமது பலத்த கரத்தினால் அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து எங்களை வெளியே கொண்டுவந்தார். பார்வோன் எங்களைப் போகவிடாமல் பிடிவாதமாய் மறுத்தபோது, யெகோவா எகிப்திலுள்ள மனிதருடைய ஒவ்வொரு முதற்பேறானதையும், மிருகத்தினுடைய ஒவ்வொரு தலையீற்றையும் கொன்றுபோட்டார். அதனால்தான் நாங்களும் ஒவ்வொரு கர்ப்பத்தின் தலையீற்றான ஆணையும் யெகோவாவுக்குப் பலியிட்டு, என் முதற்பேறான மகன்களை மீட்டுக்கொள்கிறோம்.’ யெகோவா தமது பலத்த கரத்தினால் எங்களை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்தார் என்பதற்கு, இப்பண்டிகை உங்கள் கையில் ஒரு அடையாளம் போலவும், உங்கள் நெற்றியில் ஒரு நினைவுச்சின்னம் போலவும் இருக்கும் என்று சொல்லுங்கள்” என்றார்.

யாத்திராகமம் 13:1-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவா மோசேயை நோக்கி: “இஸ்ரவேலர்களுக்குள் மனிதர்களிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பம்திறந்து பிறக்கிற, முதற்பேறான அனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது” என்றார். அப்பொழுது மோசே மக்களை நோக்கி: “நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்; யெகோவா பலத்த கையினால் உங்களை இந்த இடத்திலிருந்து புறப்படச்செய்தார்; ஆகையால், நீங்கள் புளித்த அப்பம் சாப்பிடவேண்டாம். ஆபீப் மாதத்தின் இந்த நாளிலே நீங்கள் புறப்பட்டீர்கள். ஆகையால், யெகோவா உனக்குக் கொடுப்பேன் என்று உன்னுடைய முன்னோர்களுக்கு ஆணையிட்டதும், பாலும் தேனும் ஓடுகிறதுமான தேசமாகிய கானானியர்கள், ஏத்தியர்கள், எமோரியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்பவர்களுடைய தேசத்திற்கு உன்னை வரச்செய்யும் காலத்தில், நீ இந்த மாதத்திலே இந்த ஆராதனையை செய்வாயாக. புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாட்கள்வரை சாப்பிடவேண்டும்; ஏழாம்நாளிலே யெகோவாவுக்குப் பண்டிகை அனுசரிக்கப்படவேண்டும். அந்த ஏழுநாட்களும் புளிப்பில்லா அப்பம் சாப்பிடவேண்டும்; புளிப்புள்ள அப்பம் உன்னிடத்திலே காணப்படவேண்டாம்; உன்னுடைய எல்லைக்குள் எங்கும் புளித்தமாவும் உன்னிடத்தில் காணப்படவேண்டாம். அந்த நாளில் நீ உன்னுடைய பிள்ளைகளை நோக்கி: நான் எகிப்திலிருந்து புறப்படும்போது, யெகோவா எனக்குச் செய்ததற்காக இப்படி நடப்பிக்கப்படுகிறது என்று சொல். யெகோவாவின் நியாயப்பிரமாணம் உன்னுடைய வாயிலிருக்கும்படி, இது உன்னுடைய கையிலே ஒரு அடையாளமாகவும் உன்னுடைய கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருப்பதாக; பலத்த கையினால் யெகோவா உன்னை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; ஆகையால், நீ வருடந்தோறும் குறித்த காலத்தில் இந்த நியாயத்தை அனுசரித்து வரவும். மேலும், “யெகோவா உனக்கும் உன்னுடைய முன்னோர்களுக்கும் ஆணையிட்டபடியே, உன்னைக் கானானியரின் தேசத்திலே வரச்செய்து, அதை உனக்குக் கொடுக்கும்போது, கர்ப்பந்திறந்து பிறக்கும் அனைத்தையும், உனக்கு இருக்கும் மிருகஜீவன்களின் முதல்பிறப்பு அனைத்தையும், யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பாயாக; அவைகளிலுள்ள ஆண்கள் யெகோவாவுடையவைகள். கழுதையின் முதற்பிறப்பையெல்லாம் ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; மீட்காவிட்டால், அதின் கழுத்தை உடைத்துப்போடு. உன்னுடைய பிள்ளைகளில் முதற்பேறான எல்லோரையும் மீட்டுக்கொள். பிற்காலத்தில் உன்னுடைய மகன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்; நீ அவனை நோக்கி: யெகோவா எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படச்செய்தார். எங்களை விடாதபடி, பார்வோன் கடினப்பட்டிருக்கும்போது, யெகோவா எகிப்து தேசத்தில் மனிதரின் முதல்பிள்ளைகள்முதல் மிருகஜீவன்களின் முதற்பிறப்புகள்வரையும் உண்டாயிருந்த முதற்பிறப்புகள் யாவையும் கொன்றுபோட்டார்; ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆண்களையெல்லாம் நான் யெகோவாவுக்குப் பலியிட்டு, என்னுடைய பிள்ளைகளில் முதற்பிறப்புகள் அனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன். யெகோவா எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படச்செய்வதற்கு, இது உன்னுடைய கையில் அடையாளமாகவும், உன்னுடைய கண்களின் நடுவே ஞாபகக்குறியாகவும் இருப்பதாக என்று சொல்வாயாக” என்றான்.

யாத்திராகமம் 13:1-16 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேலில் ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் முதல் ஆண் குழந்தை ஒவ்வொன்றும் எனக்குரியதாகும். முதலில் பிறந்த ஒவ்வொரு ஆண் குழந்தையும், முதலில் பிறந்த ஒவ்வொரு விலங்கும் எனக்குரியதாகும்” என்றார். அப்போது மோசே ஜனங்களிடம், “இந்த நாளை நினைவுகூருங்கள். நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள். ஆனால் இந்த நாளில் கர்த்தர் அவரது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி உங்களை விடுதலை செய்தார். நீங்கள் புளிப்புள்ள ரொட்டியை உண்ணக்கூடாது. ஆபீப் மாதத்தின் இந்த நாளில் நீங்கள் எகிப்தை விட்டுச் செல்கிறீர்கள். கர்த்தர் உங்கள் முற்பிதாக்களுக்கு ஒரு விசேஷமான வாக்குறுதியை அளித்தார். கானானியர், ஏத்தியர், எமோரியர், ஏவியர், எபூசியர் ஜனங்களின் நாட்டை உங்களுக்குக் கொடுப்பதாக கர்த்தர் வாக்களித்தார். நல்ல பொருட்களால் நிரப்பப்பட்ட நாட்டிற்கு கர்த்தர் உங்களை வழிநடத்திய பிறகும் நீங்கள் இந்த நாளை நினைவுகூர வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் முதல் மாதத்தின் இந்த நாளை வழிபாட்டிற்குரிய விசேஷ தினமாகக் கொள்ளவேண்டும். “புளிப்பு இல்லாத ரொட்டியையே ஏழு நாட்களுக்கு நீங்கள் உண்ண வேண்டும். ஏழாவது நாளில் ஒரு பெரிய விருந்து கர்த்தரை மகிமைப்படுத்துவதற்காக நடைபெறும். எனவே ஏழு நாட்கள் புளிப்புள்ள ரொட்டியை நீங்கள் உண்ணவே கூடாது. உங்கள் தேசத்தில் எப்பக்கத்திலும் புளிப்புள்ள ரொட்டி இருக்கவே கூடாது. இந்த நாளில் உங்கள் பிள்ளைகளுக்கு, ‘கர்த்தர் நம்மை எகிப்திலிருந்து வழிநடத்தியதால் இந்த விருந்து நடைப்பெறுகிறது’ என்று சொல்ல வேண்டும். “உங்கள் கண்களின் முன்னால் இது அடையாளமாக இருக்கும். இந்த பண்டிகை நாள் கர்த்தரின் போதனைகளை நினைவுபடுத்தவும், உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவர கர்த்தர் தமது பெரும் வல்லமையைப் பயன்படுத்தினார் என்பதை நினைவுபடுத்தவும் இது உதவும். எனவே ஒவ்வொரு ஆண்டும் அதன் காலத்தில் இந்த விடுமுறை நாளை நினைவு கூருங்கள். “உங்களுக்குக் கொடுப்பதாக கர்த்தர் வாக்களித்த தேசத்திற்கு அவர் உங்களை வழிநடத்துவார். கானானிய ஜனங்கள் இப்போது அங்கு வாழ்கிறார்கள். இத்தேசத்தை உங்களுக்குக் கொடுப்பதாக தேவன் உங்கள் முற்பிதாக்களுக்கு வாக்களித்தார்.” தேவன் இந்நாட்டை உங்களுக்குக் கொடுத்தபிறகு, நீங்கள் உங்கள் முதல் குமாரனை அவருக்குக் கொடுக்க வேண்டும் என்பதை நினைவு கூருங்கள். முதலில் பிறந்த எந்த ஆண் மிருகத்தையும் கர்த்தருக்குக் கொடுக்க வேண்டும். முதலில் பிறந்த ஒவ்வொரு ஆண் கழுதையையும் கர்த்தரிடமிருந்து திரும்பப்பெற்று, அதற்குப் பதிலாக ஒரு ஆட்டுக்குட்டியைக் கொடுக்கவேண்டும். கர்த்தரிடமிருந்து கழுதையை வாங்க உங்களுக்கு விருப்பமில்லையென்றால், அதனைக் கொன்றுவிடுங்கள். அது ஒரு பலியாகும். நீங்கள் அதன் கழுத்தை முறிக்க வேண்டும். முதலில் பிறக்கும் ஒவ்வொரு ஆண் குழந்தையையும் கர்த்தரிடமிருந்து திரும்பப் பெற வேண்டும். “வருங்காலத்தில் நீங்கள் இதைச் செய்வதன் காரணத்தை அறியும்படி உங்கள் பிள்ளைகள், ‘இதன் பொருள் என்ன?’ என்று கேட்பார்கள். நீங்கள் அவர்களிடம்: ‘கர்த்தர் தமது மகா வல்லமையைப் பயன்படுத்தி நம்மை எகிப்திலிருந்து மீட்டார். நாம் அந் நாட்டில் அடிமைகளாக இருந்தோம். ஆனால் கர்த்தர் நம்மை இங்கு வழிநடத்தினார். எகிப்தில், பார்வோன் பிடிவாதமாக இருந்தான். நாம் புறப்படுவதற்கு அவன் அனுமதி கொடுக்வில்லை. எனவே கர்த்தர் அந்நாட்டின் முதலாவதாகப் பிறந்த எல்லா உயிரினங்களையும் கொன்றார். (கர்த்தர் முதலில் பிறந்த குமாரர்களையும், முதலில் பிறந்த மிருகங்களையும் கொன்றார்.) எனவே நான் முதலில் பிறந்த ஆண் மிருகத்தை கர்த்தருக்குக் கொடுக்கிறேன், எல்லா முதலில் பிறந்த ஆண் பிள்ளைகளையும் கர்த்தரிடமிருந்து திரும்பப் பெறுகிறேன்!’ என்று நீங்கள் பதில் கூறுவீர்கள். இது உங்கள் கையில் கட்டப்பட்ட ஒரு குறியீடு போலவும், உங்கள் கண்களுக்கு நடுவில் தொங்கும் ஒரு அடையாளமாகவும் காணப்படும். கர்த்தர் தமது அளவில்லா வல்லமையினால் நம்மை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தார் என்பதை நீங்கள் நினைவுகூர இது உதவும்” என்றான்.

யாத்திராகமம் 13:1-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் புத்திரருக்குள் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது என்றார். அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்; கர்த்தர் பலத்த கையினால் உங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்; ஆகையால், நீங்கள் புளித்த அப்பம் புசிக்கவேண்டாம். ஆபிப் மாதத்தின் இந்த நாளிலே நீங்கள் புறப்பட்டீர்கள். ஆகையால், கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதும், பாலும் தேனும் ஓடுகிறதுமான தேசமாகிய கானானியர், ஏத்தியர், எமோரியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய தேசத்துக்கு உன்னை வரப்பண்ணும் காலத்தில், நீ இந்த மாதத்திலே இந்த ஆராதனையைச் செய்வாயாக. புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கக்கடவாய்; ஏழாம்நாளிலே கர்த்தருக்குப் பண்டிகை ஆசரிக்கப்படுவதாக. அந்த ஏழுநாளும் புளிப்பில்லா அப்பம் புசிக்கவேண்டும்; புளிப்புள்ள அப்பம் உன்னிடத்திலே காணப்படவேண்டாம்; உன் எல்லைக்குள் எங்கும் புளித்தமாவும் உன்னிடத்தில் காணப்படவேண்டாம். அந்நாளில் நீ உன் புத்திரனை நோக்கி: நான் எகிப்திலிருந்து புறப்படுகையில், கர்த்தர் எனக்குச் செய்ததற்காக இப்படி நடப்பிக்கப்படுகிறது என்று சொல். கர்த்தரின் நியாயப்பிரமாணம் உன் வாயிலிருக்கும்படிக்கு, இது உன் கையிலே ஒரு அடையாளமாகவும் உன் கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருக்கக்கடவது; பலத்த கையினால் கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார். ஆகையால், நீ வருஷந்தோறும் குறித்த காலத்தில் இந்த நியாயத்தை ஆசரித்து வருவாயாக. மேலும், கர்த்தர் உனக்கும் உன் பிதாக்களுக்கும் ஆணையிட்டபடியே, உன்னைக் கானானியரின் தேசத்திலே வரப்பண்ணி, அதை உனக்குக் கொடுக்கும்போது, கர்ப்பந்திறந்து பிறக்கும் அனைத்தையும், உனக்கு இருக்கும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும், கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பாயாக; அவைகளிலுள்ள ஆண்கள் கர்த்தருடைய வைகள். கழுதையின் தலையீற்றையெல்லாம் ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; மீட்காவிட்டால், அதின் கழுத்தை முறித்துப்போடு. உன் பிள்ளைகளில் முதற்பேறான சகல நரஜீவனையும் மீட்டுக்கொள்வாயாக. பிற்காலத்தில் உன் குமாரன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்; நீ அவனை நோக்கி: கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார். எங்களை விடாதபடிக்கு, பார்வோன் கடினப்பட்டிருக்கும்போது, கர்த்தர் எகிப்து தேசத்தில் மனிதரின் தலைப்பிள்ளைகள்முதல் மிருகஜீவன்களின் தலையீற்றுகள்வரைக்கும் உண்டாயிருந்த முதற்பேறுகள் யாவையும் கொன்றுபோட்டார்; ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆணையெல்லாம் நான் கர்த்தருக்குப் பலியிட்டு, என் பிள்ளைகளில் முதற்பேறனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன். கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதற்கு, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களின் நடுவே ஞாபகக்குறியாகவும் இருக்கக்கடவது என்று சொல்வாயாக என்றான்.