யாத்திராகமம் 12:12-19

யாத்திராகமம் 12:12-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“அதே இரவில் நான் எகிப்து வழியாகக் கடந்துசென்று, அங்குள்ள மனிதர் மற்றும் மிருகங்களின் தலையீற்றுகளையும் சாகடிப்பேன். எகிப்திய தெய்வங்கள் எல்லாவற்றின் மீதும் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவேன். நானே யெகோவா. இந்த இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளின்மேல் உங்களுக்கான ஒரு அடையாளமாயிருக்கும். நான் அந்த இரத்தத்தைக் காணும்போது, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்தியரைச் சாகடிக்கும்போது, அழிவின் வாதை எதுவும் உங்களைத் தொடமாட்டாது. “இது நீங்கள் நினைவுகூரவேண்டிய ஒரு நாள்; தலைமுறைதோறும் யெகோவாவுக்குரிய பண்டிகையாக நீங்கள் இதைக் கொண்டாடவேண்டும்; இது ஒரு நிரந்தர நியமம். புளிப்பில்லாத அப்பத்தை ஏழுநாட்களுக்கு நீங்கள் சாப்பிடவேண்டும். முதலாம் நாளில் புளிப்பாக்கும் பொருட்கள் எல்லாவற்றையும் வீட்டிலிருந்து அகற்றவேண்டும். ஏனெனில், முதலாம் நாள் தொடங்கி, ஏழாம் நாள்வரை புளிப்பூட்டப்பட்ட எதையாவது சாப்பிடுகிறவன் எவனோ, அவன் இஸ்ரயேலில் இருந்து அகற்றப்படவேண்டும். முதலாம் நாள் ஒரு பரிசுத்த சபையையும், ஏழாம்நாளில் இன்னுமொரு பரிசுத்த சபையையும் கூட்டுங்கள். அந்நாட்களில் எந்தவித வேலையும் செய்யக்கூடாது. நீங்கள் ஒவ்வொருவரும் சாப்பிடுவதற்குத் தேவையான உணவைத் தயாரிக்கும் வேலையை மட்டும் செய்யலாம். இதை மட்டுமே நீங்கள் செய்யலாம். “புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை நீங்கள் கொண்டாடவேண்டும். ஏனெனில், அந்நாளில்தான் உங்கள் கோத்திரப்பிரிவுகளை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தேன். நீங்களும், உங்கள் தலைமுறைதோறும் நிரந்தரமாக அந்நாளைக் கொண்டாடுங்கள். முதலாம் மாதம் பதினான்காம் நாள் மாலைமுதல், அம்மாதத்தின் இருபத்தோராம் நாள் மாலைவரை புளிப்பில்லாத அப்பத்தை நீங்கள் சாப்பிடவேண்டும். புளிப்பூட்டும் பொருட்கள் எதுவும் ஏழுநாட்களுக்கு உங்கள் வீடுகளில் காணப்படக்கூடாது. புளிப்பூட்டப்பட்ட எதையாவது சாப்பிடும் எவனும், அவன் பிறநாட்டினனானாலும் சொந்த இஸ்ரயேலரானாலும் இஸ்ரயேல் சமுதாயத்திலிருந்து அகற்றப்படவேண்டும்.

யாத்திராகமம் 12:12-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அந்த இரவிலே நான் எகிப்து தேசம் எங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர்கள்முதல் மிருகஜீவன்கள்வரை, முதலில் பிறந்திருக்கிறவைகளையெல்லாம் நாசம்செய்து, எகிப்து தெய்வங்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே யெகோவா. நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாக இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராமல் இருக்கும். அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாக இருக்கட்டும்; அதைக் யெகோவாவுக்குப் பண்டிகையாக அனுசரியுங்கள்; அதை உங்களுடைய தலைமுறைதோறும் நிரந்தர கட்டளையாக அனுசரிக்கவேண்டும். புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாட்கள்வரை சாப்பிடுவீர்களாக; முதலாம் நாளிலே புளித்தமாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம்நாள்துவங்கி ஏழாம் நாள்வரையும் புளித்த அப்பம் சாப்பிடுகிறவன் எவனோ அவன் இஸ்ரவேலர்களிலிருந்து துண்டிக்கப்படுவான். முதலாம் நாளில் பரிசுத்த சபைகூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்த சபைகூடுதலும் இருக்கவேண்டும்; அவைகளில் ஒரு வேலையும் செய்யக்கூடாது; அவரவர் சாப்பிடுவதற்குத் தேவையானதுமட்டும் உங்களால் செய்யப்படலாம். புளிப்பில்லா அப்பப்பண்டிகையை அனுசரியுங்கள்; இந்த நாளில்தான் நான் உங்களுடைய சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நிரந்தரக் கட்டளையாக இந்த நாளை அனுசரிக்கவேண்டும். முதலாம் மாதம் பதினான்காம் தேதி சாயங்காலந்தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதி சாயங்காலம்வரைக்கும் புளிப்பில்லா அப்பம் சாப்பிடுவீர்களாக. ஏழுநாட்கள்வரை உங்களுடைய வீடுகளில் புளித்தமாவு காணப்படக்கூடாது; எவனாவது புளிப்பிடப்பட்டதைச் சாப்பிட்டால், அவன் அந்நியனானாலும் சொந்த தேசப் பிறப்பானாலும், அந்த ஆத்துமா இஸ்ரவேல் சபையில் இல்லாமல் துண்டிக்கப்படுவான்.

யாத்திராகமம் 12:12-19 பரிசுத்த பைபிள் (TAERV)

“இன்றிரவில் நான் எகிப்தின் வழியாகச் சென்று ஒவ்வொரு முதற்பேறான மனிதனையும், மிருகத்தையும் கொன்றுபோடுவேன். இவ்வாறாக, எகிப்தின் தேவர்கள் அனைத்தின் மேலும் தீர்ப்பு கொண்டு வருவேன். நானே கர்த்தர் என்பதைக் காட்டுவேன். ஆனால் உங்கள் வீடுகளில் பூசப்பட்ட இரத்தம் ஒரு விசேஷ அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைப் பார்த்ததும் உங்கள் வீட்டைக் கடந்து போவேன். எகிப்தின் ஜனங்களுக்குத் தீமையான காரியங்கள் ஏற்படுமாறு செய்வேன். அத்தீய நோய்கள் ஒன்றும் உங்களைப் பாதிக்காது. “இந்த இரவை நீங்கள் எப்போதும் நினைவு கூருவீர்கள். இது உங்களுக்கு ஒரு விசேஷ விடுமுறை நாளாக இருக்கும். எப்போதும் இந்த விடுமுறை நாளில் உங்கள் சந்ததியார் கர்த்தரை மகிமைப்படுத்துவார்கள். இந்த விடுமுறையின் ஏழு நாட்களும் புளிக்காத மாவினால் செய்த ரொட்டியை உண்ணவேண்டும். இந்த விடுமுறையின் முதல் நாளில் புளிப்பான யாவற்றையும் உங்கள் வீடுகளிலிருந்து அகற்ற வேண்டும். இப்பண்டிகையின் ஏழு நாட்களிலும் யாரும் புளிப்பான எதையும் உண்ணக்கூடாது. யாரேனும் புளிப்பானதைச் சாப்பிட்டால், அவன் இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து ஒதுக்கப்படவேண்டும். விடுமுறை காலத்தின் முதல் நாளிலும் கடைசி நாளிலும் பரிசுத்த சபைக் கூட்டங்கள் நடைபெற வேண்டும். இந்நாட்களில் நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது. உங்கள் சாப்பாட்டிற்கான உணவைத் தயாரிப்பது மட்டுமே நீங்கள் செய்யும் வேலையாக இருக்க வேண்டும். நீங்கள் புளிப்பில்லா அப்பப் பண்டிகையை நினைவுகூர வேண்டும். ஏனெனில் இந்நாளில் உங்கள் ஜனங்கள் எல்லோரையும் குழுக்களாக எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தேன். எனவே உங்கள் எல்லா சந்ததியாரும் இந்த நாளை நினைவுகூர வேண்டும். எந்நாளும் நிலைபெற்றிருக்கும் சட்டமாக இது அமையும். எனவே (நிசான்) முதல் மாதத்தின் பதினான்காவது நாளில் நீங்கள் புளிப்பில்லாத ரொட்டியை உண்ணத் துவங்க வேண்டும். அதே மாதத்தின் இருபத்தொன்றாம் நாள் மாலைவரைக்கும் இந்த புளிப்பில்லாத ரொட்டியைத் தொடர்ந்து நீங்கள் சாப்பிட வேண்டும். ஏழு நாட்கள் உங்கள் வீடுகளில் எந்தப் புளிப்பான பொருளும் காணப்படக் கூடாது. இஸ்ரவேலின் குடிமகனாகிலும், அந்நியனாகிலும், புளிப்பானதைச் சாப்பிட்டால் அவன் இஸ்ரவேல் ஜனத்தினின்று ஒதுக்கப்பட வேண்டும்.

யாத்திராகமம் 12:12-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அந்த ராத்திரியிலே நான் எகிப்து தேசம் எங்கும் கடந்துபோய், எகிப்துதேசத்திலுள்ள மனிதர்முதல் மிருகஜீவன்கள்மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர். நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும். அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது; அதைக் கர்த்தருக்குப் பண்டிகையாக ஆசரிப்பீர்களாக; அதை உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக ஆசரிக்கக்கடவீர்கள். புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளில்தானே புளித்தமாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள்வரைக்கும் புளித்த அப்பம் புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டுபோவான். முதலாம் நாளில் பரிசுத்த சபைகூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்த சபைகூடுதலும் இருக்கவேண்டும்; அவைகளில் ஒரு வேலையும் செய்யப்படலாகாது; அவரவர் சாப்பிடுகிறதற்குத் தேவையானதுமாத்திரம் உங்களால் செய்யப்படலாம். புளிப்பில்லா அப்பப்பண்டிகையை ஆசரிப்பீர்களாக; இந்த நாளில்தான் நான் உங்கள் சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக இந்த நாளை ஆசரிக்கக்கடவீர்கள். முதலாம் மாதம் பதினாலாம் தேதி சாயங்காலந்தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதி சாயங்காலம்வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள். ஏழுநாளளவும் உங்கள் வீடுகளில் புளித்த மா காணப்படலாகாது; எவனாகிலும் புளிப்பிடப்பட்டதைப் புசித்தால், அவன் பரதேசியானாலும் சுதேசியானாலும், அந்த ஆத்துமா இஸ்ரவேல் சபையில் இராமல் அறுப்புண்டுபோவான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்