பிரசங்கி 8:2-15

பிரசங்கி 8:2-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அரசனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நட என்று நான் சொல்கிறேன்; ஏனெனில் இறைவனுக்கு முன்பாக நீ சத்தியப் பிரமாணம் செய்திருக்கிறாய். அரசனின் முன்னிருந்து போக அவசரப்படாதே. கொடிய காரியத்திற்கு உடந்தையாகாதே; ஏனெனில் அரசன் தான் விரும்பிய எதையும் செய்வான். அரசனின் வார்த்தை அதிகாரமுடையது ஆகையால், “நீ என்ன செய்கிறாய்” என்று அரசனுக்கு சொல்ல யாரால் முடியும்? அரசனின் கட்டளைக்குக் கீழ்ப்படிபவனுக்கு தீங்கு நேரிடாது; ஞானமுள்ள இருதயம் அதற்குத் தகுந்த காலத்தையும், அதின் நடைமுறையையும் அறியும். ஏனெனில் ஒவ்வொரு செயல்பாட்டிற்குரிய காலமும், அதற்குரிய ஒரு நடைமுறையும் உண்டு; ஒரு மனிதனுடைய கஷ்டம் அவனைப் பாரமாய் நெருக்கினாலும் ஒவ்வொரு செயல்பாட்டிற்குரிய காலமும், நடைமுறையும் உண்டு. எதிர்காலத்தை ஒரு மனிதனும் அறியாதிருப்பதால், வரப்போவதை அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்? காற்றை அடக்க யாராலும் முடியாது; அதுபோலவே தன் மரண நாளையும் யாராலும் தள்ளிப்போட முடியாது. அந்த யுத்தத்திலிருந்து ஒருவராலும் தப்பமுடியாது; அதுபோலவே கொடுமையைச் செய்கிறவர்களையும் கொடுமை விடுவிக்காது. சூரியனுக்குக் கீழே நடந்த எல்லாவற்றையும், என் மனதில் சீர்தூக்கிப் பார்த்தேன் அப்பொழுது, இவை எல்லாவற்றையும் நான் கண்டேன். தனக்கே துன்பம் ஏற்படுகிற போதிலும், ஒரு மனிதன் மற்றவனை அடக்கி ஆளும் காலமும் உண்டு. கொடியவர்கள் அடக்கம்பண்ணப்பட்டதையும் நான் கண்டேன்; அவர்கள் பரிசுத்த இடத்திற்கு போக்குவரவாய் இருந்ததால், அவர்கள் கொடுமை செய்த அதே பட்டணத்தில் புகழப்படுகிறார்கள். இதுவும் அர்த்தமற்றதே. ஒரு குற்றம் விரைவாகத் தண்டிக்கப்படாதபோது, மக்கள் தவறு செய்யத் துணிகிறார்கள். கொடுமையானவன் நூறு குற்றங்களைச் செய்து நீடியகாலம் வாழ்ந்தாலும், இறைவனில் பக்தியாயிருந்து, இறைவனுக்குப் பயந்து வாழ்கிற மனிதர்களுக்கே அதிக நன்மை உண்டு என நான் அறிந்திருக்கிறேன். ஆனாலும் கொடியவர்கள் இறைவனுக்குப் பயந்து நடக்காததினால், அவர்களுக்கு நலமுண்டாகாது; அவர்களுடைய வாழ்நாள் நீடித்திருக்காது, அது நிழலைப் போன்றது. மேலும் பூமியில் நிகழ்கின்ற வேறு ஒரு அர்த்தமற்ற காரியமும் உண்டு: கொடியவர்களுக்கு வரவேண்டியது, நீதிமான்களுக்கு வருகிறது. நீதிமான்களுக்கு வரவேண்டியது, கொடியவர்களுக்கு வருகிறது. இதுவும் அர்த்தமற்றது என்றே நான் சொல்வேன். எனவே நான் வாழ்க்கையில் இன்பமாயிருக்கச் சொல்கிறேன்; ஏனெனில் சூரியனுக்குக் கீழே மனிதனுக்கு சாப்பிட்டு, குடித்து, சந்தோஷமாய் இருப்பதைத் தவிர வேறு எந்த நன்மையும் இல்லை. அப்பொழுது சூரியனுக்குக் கீழே இறைவன் அவனுக்குக் கொடுத்திருக்கிற வாழ்நாளெல்லாம், அவனுடைய வேலையில் மகிழ்ச்சியிருக்கும்.

பிரசங்கி 8:2-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ராஜாவின் கட்டளையைக் கைக்கொண்டு நட என்று நான் உனக்கு எச்சரிக்கிறேன்; நீ தேவனுக்கு செய்த ஆணையின்படி இதைச் செய். நீ அவனுடைய சமுகத்தைவிட்டு விலக அவசரப்படாதே; பொல்லாத காரியத்திலே பிடிவாதமாக நில்லாதே: அவன் தனக்கு விருப்பமானதெல்லாம் செய்வான். ராஜாவின் வார்த்தை எங்கேயோ அங்கே அதிகாரம் உண்டு; நீர் என்ன செய்கிறீர் என்று அவனுக்குச் சொல்லக்கூடியவன் யார்? கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்; ஞானியின் இருதயம் காலத்தையும் நியாயத்தையும் அறியும். எல்லாக் காரியத்திற்கும் காலமும் நியாயமும் உண்டு; ஆதலால் மனிதனுக்கு நேரிடும் கலக்கம் மிகுதி. இன்னது நடக்கும் என்று அவன் அறியானே; அது இன்னவிதமாக நடக்கும் என்று அவனுக்கு சொல்லக்கூடியவன் யார்? தன் ஆவியை விடாமல் இருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனிதனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை; துன்மார்க்கர்களைத் துன்மார்க்கம் விடுவிக்கவுமாட்டாது. இவையெல்லாவற்றையும் நான் பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் எல்லா செயல்களையும் சிந்தித்தேன்; ஒரு மனிதன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனிதனை ஆளுகிற காலமும் உண்டு. பரிசுத்த இடத்திற்குப் போக்குவரவு செய்த துன்மார்க்கர்கள் அடக்கம்செய்யப்பட்டதைக் கண்டேன்; அவர்கள் அப்படிச் செய்துவந்த பட்டணத்திலேயே புகழப்பட்டார்கள்; இதுவும் மாயையே. தீயசெயல்களுக்குத்தகுந்த தண்டனைச் சீக்கிரமாக நடவாதபடியால், மனிதர்களின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரம் கொண்டிருக்கிறது. பாவி நூறுதரம் பொல்லாப்பைச் செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாக இருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன். துன்மார்க்கனோ நன்றாக இருப்பதில்லை; அவன் தேவனுக்கு முன்பாக பயப்படாமல் இருக்கிறபடியால், நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாட்கள் நீடித்திருப்பதுமில்லை. பூமியின்மேல் நடக்கிற வேறொரு மாயையான காரியமும் உண்டு; அதாவது, துன்மார்க்கர்களின் செய்கைக்கு வருவதுபோல, நீதிமான்களுக்கும் வரும்; நீதிமான்களின் செய்கைக்கு வருவதுபோல, துன்மார்க்கர்களுக்கும் வரும்; இதுவும் மாயை என்றேன். ஆகையால் நான் மகிழ்ச்சியைப் புகழ்ந்தேன்; சாப்பிடுவதும் குடிப்பதும் மகிழ்வதுமே தவிர சூரியனுக்குக்கீழே மனிதனுக்கு வேறொரு நன்மையும் இல்லை; சூரியனுக்குக்கீழே தேவன் அவனுக்கு கொடுத்த வாழ்நாளில் அவனுடைய பிரயாசத்தினால் அவனுக்கு நிலைக்கும் பலன் இதுவே.

பிரசங்கி 8:2-15 பரிசுத்த பைபிள் (TAERV)

நீங்கள் ராஜாவின் கட்டளைகளுக்கு எப்பொழுதும் கீழ்ப்படிய வேண்டும் என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். நீ இதனைச் செய்யவேண்டும். ஏனென்றால் ஏற்கெனவே தேவனுக்கு வாக்களித்து இருக்கிறாய். ராஜாவுக்கு ஆலோசனை சொல்ல அஞ்சவேண்டாம். தவறான ஒன்றுக்கு ஆதரவு செலுத்தவேண்டாம் ராஜா தனக்குப் பிடித்தமான ஆணைகளையே தருகிறான். ராஜாவுக்கு ஆணைகளைத் தரும் அதிகாரம் உள்ளது. எதைச் செய்ய வேண்டும் என்று எவரும் அவனுக்குச் சொல்வதில்லை. ராஜாவின் ஆணைகளுக்குக் கீழ்படிந்தால் ஒருவன் பாதுகாப்பாக இருப்பான். இதைச் செய்ய வேண்டிய சரியான கால்த்தை ஞானமுள்ளவன் அறிவான். சரியானவற்றை எப்போது செய்யவேண்டும் என்பதையும் அவன் அறிவான். எல்லாவற்றையும் செய்ய ஒருவனுக்குச் சரியான காலமும், சரியான வழியும் உள்ளன. எனவே ஒவ்வொருவனும் ஒரு வாய்ப்பை எடுத்துக்கொண்டு எதைச் செய்யவேண்டும் என்பதை முடிவெடுக்க வேண்டும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதில் குழப்பம் இருந்தாலும், பல துன்பங்களில் உழன்றாலும் ஒருவன் அதனைச் செய்யவேண்டும். ஏனென்றால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எவரும் அவனிடம் சொல்வதில்லை. எவருக்கும் தன் ஆவியை விடாமல் தங்கவைக்கும் வலிமை இல்லை. எவருக்கும் தன் சாவைத் தடுக்கும் அதிகாரமில்லை. போர்க் காலத்தில் தன் விருப்பப்படி போய்வர ஒரு போர் வீரனுக்கு சுதந்திரம் இல்லை. இதுபோலவே, ஒருவன் பாவம் செய்தால் அது அவனை சுதந்திரம் உள்ளவனாக இருக்கும்படி செய்யாது. நான் அனைத்தையும் பார்த்தேன். உலகில் நடைபெறுகிற அத்தனையையும் பற்றி நான் கடுமையாகச் சிந்தித்தேன். ஜனங்கள் எப்பொழுதும் மற்றவர்களை ஆள்வதற்கான வல்லமையைப் பெறுவதற்காகப் போராடுகிறார்கள் என்பதை நான் பார்த்தேன். இது அவர்களுக்குக் கெட்டது. தீய ஜனங்களுக்கு அழகான சிறந்த சவ அடக்கங்கள் நடைபெறுவதை நான் பார்த்தேன். அடக்கச் சடங்கு முடிந்து ஜனங்கள் வீட்டிற்குப் போனதும் மரித்துப்போன தீயவர்களைப்பற்றி நல்லவற்றைக் கூறினார்கள். இத்தகைய காரியங்கள் தீயவன் வாழ்ந்த அதே நகரத்திலேயே நடந்து வருகின்றன. இது அர்த்தமற்றது. சில நேரங்களில் ஜனங்கள் தாம் செய்கிற தீமைக்கு உடனே தண்டிக்கப்படமாட்டார்கள். அவர்களுக்கான தண்டனை மெதுவாக வரும். இது மற்றவர்களையும் தீமை செய்யும்படி தூண்டும். ஒரு பாவி நூற்றுக்கணக்கான தீமைகளைச் செய்யலாம். அவனுக்கு நீண்ட வாழ்க்கையும் இருக்கலாம். ஆனால், தேவனுக்குக் கீழ்ப்படிவதும் மரியாதை செலுத்துவதும் இன்னும் சிறந்ததாக நான் கருதுகிறேன். தீயவர்கள் தேவனுக்கு மரியாதை செலுத்துவதில்லை. எனவே அவர்கள் நல்லவற்றைப் பெறுவதில்லை. அவர்கள் நீண்ட வாழ்க்கையைப் பெறுவதில்லை. சூரியன் அஸ்தமிக்கும்போது நிழல் நீண்டு தோன்றுவதுபோன்று, அவர்களின் வாழ்க்கை வளருவதில்லை. நியாயமாகத் தோன்றாத சில காரியமும் உலகில் நடக்கிறது. கெட்டவைகள் கெட்டவர்களுக்கும், நல்லவைகள் நல்லவர்களுக்கும் நிகழவேண்டும். ஆனால் சில நேரங்களில் நல்லவர்களுக்கு தீயவைகளும் தீயவர்களுக்கு நல்லவைகளும் ஏற்படலாம். எனினும் அவை நல்லதன்று. எனவே நான் வாழ்க்கையை அனுபவிப்பதுதான் நல்லது என்று முடிவு செய்தேன். ஏனென்றால், ஜனங்கள் தம் வாழ்வில் செய்யவேண்டிய நல்ல காரியங்களாவன: உண்பது, குடிப்பது, வாழ்க்கையை அனுபவிப்பதுமேயாகும். தேவன் இவ்வுலகில் தங்களுக்குக்கொடுத்த கடினமான வேலையில் இன்பம் காண்பதற்காகவாவது இவை உதவும்.

பிரசங்கி 8:2-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ராஜாவின் கட்டளையைக் கைக்கொண்டு நட என்று நான் உனக்கு எச்சரிக்கிறேன்; நீ தேவனுக்கு இட்ட ஆணையின்படியே இதைச் செய். நீ அவன் சமுகத்தை விட்டுவிலகத் துரிதப்படாதே; பொல்லாத காரியத்திலே பிடிவாதமாய் நில்லாதே: அவன் தனக்கு இஷ்டமானதெல்லாம் செய்வான். ராஜாவின் வார்த்தை எங்கேயோ அங்கே அதிகாரம் உண்டு; நீர் என்ன செய்கிறீர் என்று அவனுக்குச் சொல்லத் தக்கவன் யார்? கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்; ஞானியின் இருதயம் காலத்தையும் நியாயத்தையும் அறியும். எல்லாக் காரியத்துக்கும் காலமும் நியாயமுமுண்டு; ஆதலால் மனுஷனுக்கு நேரிடும் சஞ்சலம் மிகுதி. இன்னது சம்பவிக்கும் என்று அவன் அறியானே; அது இன்னவிதமாய்ச் சம்பவிக்கும் என்று அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்? ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை; துன்மார்க்கரைத் துன்மார்க்கம் விடுவிக்கவுமாட்டாது. இவையெல்லாவற்றையும் நான் பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் எல்லாக் கிரியைகளையும் சிந்தித்தேன்; ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வெறொரு மனுஷனை ஆளுகிற காலமுமுண்டு. பரிசுத்த ஸ்தலத்துக்குப் போக்குவரவு செய்த துன்மார்க்கர் அடக்கம்பண்ணப்பட்டதைக் கண்டேன்; அவர்கள் அப்படிச் செய்துவந்த பட்டணத்திலேயே மறக்கப்பட்டுப்போனார்கள்; இதுவும் மாயையே. துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது. பாவி நூறுதரம் பொல்லாப்பைச் செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன். துன்மார்க்கனோ நன்றாயிருப்பதில்லை; அவன் தேவனுக்கு முன்பாக பயப்படாதிருக்கிறபடியால், நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாள் நீடித்திருப்பதுமில்லை. பூமியின்மேல் நடக்கிற வேறொரு மாயையான காரியமுமுண்டு; அதாவது, துன்மார்க்கரின் கிரியைக்கு வருவதுபோல, நீதிமான்களுக்கும் வரும்; நீதிமான்களின் கிரியைக்கு வருவதுபோல, துன்மார்க்கருக்கும் வரும்; இதுவும் மாயை என்றேன். ஆகையால் நான் களிப்பைப் புகழ்ந்தேன்; புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை; சூரியனுக்குக்கீழே தேவன் அவனுக்குத் தந்த ஜீவகாலத்தில் அவன் பிரயாசத்தினால் அவனுக்கு நிலைக்கும் பலன் இதுவே.