பிரசங்கி 6:1-12

பிரசங்கி 6:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சூரியனுக்குக் கீழே இன்னுமொரு தீங்கையும் நான் கண்டேன். அது மனிதரை பாரமாய் அழுத்துகிறது. இறைவன் ஒருவனுக்கு செல்வத்தையும், சொத்துக்களையும், மதிப்பையும் கொடுத்திருக்கிறார்; அதினால் அவன் இருதயம் ஆசைப்படும் எதையும் குறைவில்லாமல் பெற்றிருக்கிறான். ஆனால் அவைகளை அனுபவிக்க இறைவன் அவனுக்கு இடம் கொடுக்கிறதில்லை. பதிலாக வேறொருவன் அவற்றை அனுபவிக்கிறான். இதுவும் அர்த்தமற்றதும், கொடுமையான தீங்குமாய் இருக்கிறது. ஒரு மனிதனுக்கு நூறு பிள்ளைகளும் நீடித்த வாழ்வும் இருக்கலாம்; எவ்வளவு காலம் அவன் வாழ்ந்தாலும் அவன் தனது செல்வச் செழிப்பை அனுபவியாமலும், செத்தபின் முறையான நல்லடக்கம் அவனுக்கு நடைபெறாமலும் போனால், அவனைவிட கருசிதைந்த பிண்டமே மேலானது என்றே நான் சொல்வேன். அது அர்த்தமற்றதாகவே வந்து, இருளில் மறைகிறது. இருளிலேயே அதின் பெயர் மூடப்பட்டிருக்கிறது. அக்குழந்தை சூரியனைக் காணாமலும், ஒன்றையும் அறியாமலும் இருந்தபோதுங்கூட, இந்த மனிதனைவிட அது அதிக இளைப்பாறுதலை உடையதாயிருக்கிறது. அந்த மனிதன் இரண்டு முறைக்கு மேலாக ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தாலும், தனது செல்வச் செழிப்பை அவன் அனுபவிக்கவில்லையே. அனைவரும் ஒரே இடத்திற்கு அல்லவோ போகிறார்கள். மனிதனுடைய எல்லா உழைப்பும் அவனுடைய வாய்க்காகத்தானே. ஆனாலும் அவனுடைய பசியோ ஒருபோதும் தீருவதில்லை. ஒரு மூடனைவிட, ஞானமுள்ளவன் எதில் உயர்ந்தவன்? மற்றவர்களுக்கு முன்பாக எப்படி நடந்துகொள்ள வேண்டும் என அறிவதினால் ஒரு ஏழைக்குக் கிடைக்கும் இலாபம் என்ன? ஆசைக்கு இடங்கொடுத்து அலைவதைவிட, கண்கள் கண்டதில் திருப்தியடைவதே நல்லது. இதுவும் அர்த்தமற்றதே, காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே. இருக்கிறவையெல்லாம் முன்னமே பெயரிடப்பட்டிருக்கின்றன; மனிதன் எப்படிப்பட்டவன் என்பதும் அறியப்பட்டேயிருக்கிறது. தன்னிலும் வலிமையுள்ளவரோடு ஒரு மனிதனாலும் வாக்குவாதம் பண்ண முடியாது. வார்த்தைகள் கூடும்போது, அர்த்தம் குறையும். இதினால் யாராவது பயனடைந்ததுண்டோ? ஒரு மனிதன் தனது குறுகியதும், அர்த்தமற்றதுமான வாழ்நாளில், ஒரு நிழலைப்போல் கடந்துபோகிறான்; அந்நாட்களில் எது வாழ்க்கையில் நல்லது என்று யாருக்குத் தெரியும்? அவன் செத்துப்போனபின் சூரியனுக்குக் கீழே என்ன நடக்கும் என அவனுக்கு யாரால் கூறமுடியும்?

பிரசங்கி 6:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு தீங்கும் உண்டு; அது மனிதர்களுக்குள்ளே பெரும்பாலும் நடந்துவருகிறது. அதாவது, ஒருவனுக்கு தேவன் செல்வத்தையும், பொருட்களையும், மதிப்பையும் கொடுக்கிறார்; அவன் என்ன ஆசைப்பட்டாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அனுபவிக்கும் சக்தியை தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனிதன் அதை அனுபவிக்கிறான்; இதுவும் மாயையும், கொடிய நோயுமானது. ஒருவன் நூறு பிள்ளைகளைப் பெற்று, அநேகம் வருடங்கள் வாழ்ந்து, தீர்க்காயுசை அடைந்திருந்தாலும், அவனுடைய ஆத்துமா அந்தச் செல்வத்தால் திருப்தியடையாமலும், அவனுக்குப் பிரேதக்கல்லறை முதலாக இல்லாமலும் போனால், அவனைவிட கரு சிதைந்த பிண்டமே சிறப்பானது என்கிறேன். அது மாயையாகத் தோன்றி இருளிலே மறைந்துபோய்விடுகிறது; அதின் பெயரும் மறைந்து போகும். அது சூரியனைக் கண்டதுமில்லை, ஒன்றையும் அறிந்ததுமில்லை; அவனுக்கு இல்லாத ஓய்வு அதற்கு உண்டு. அவன் இரண்டாயிரம் வருடங்கள் பிழைத்திருத்தாலும் ஒரு நன்மையையும் காண்பதில்லை; எல்லோரும் ஒரே இடத்திற்குப் போகிறார்கள் அல்லவா? மனிதனின் பிரயாசமெல்லாம் அவனுடைய வாய்க்காகத்தானே? அவனுடைய மனதுக்கோ திருப்தியில்லை. இப்படியிருக்க, மூடனைவிட ஞானிக்கு உண்டாகும் மேன்மை என்ன? உயிருள்ளவர்களுக்கு முன்பாக நடந்துகொள்ளும்படி அறிந்த ஏழைக்கும் உண்டாகும் மேன்மை என்ன? ஆசையானது அலைந்து தேடுகிறதைவிட கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும் மனதை கலங்கச் செய்கிறதுமாக இருக்கிறது. இருக்கிறவன் எவனும் தோன்றுமுன்பே பெயரிடப்பட்டிருக்கிறான்; அவன் மனிதனென்று தெரிந்திருக்கிறது; தன்னைவிட வலிமையானவர்களோடு போராட அவனால் முடியாது. மாயையைப் பெருகச்செய்கிற அநேக காரியங்கள் உண்டாயிருக்கிறபடியால் அதினாலே மனிதர்களுக்குப் பயன் என்ன? நிழலைப்போன்ற மாயையான தன்னுடைய வாழ்நாளை போக்கும் மனிதர்களுக்கு இந்த வாழ்வில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்? தனக்குப்பின்பு சூரியனுக்குக் கீழே நடக்கும் காரியம் இன்னதென்று மனிதனுக்கு அறிவிப்பவன் யார்?

பிரசங்கி 6:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)

வாழ்க்கையில் நான் நேர்மையாக இல்லாத இன்னொன்றையும் பார்த்திருக்கிறேன். இதனைப் புரிந்துக்கொள்ளவும் கடினமாக இருக்கிறது. ஒருவனுக்கு தேவன் பெருஞ்செல்வத்தையும், சிறப்பையும், சொத்துக்களையும் கொடுக்கிறார். ஒருவன் தனக்குத் தேவையானவற்றையும் தான் விரும்புகின்றவற்றையும் பெற்றுக்கொள்கிறான். ஆனால் தேவன் அவனை அவற்றை அனுபவிக்கும்படி விடுவதில்லை. எவனோ ஒரு அந்நியன் வந்து அவற்றை எடுத்துக்கொண்டு போகிறான். இது மிகவும் மோசமான அர்த்தமற்ற ஒன்றாகும். ஒருவன் நீண்டகாலம் வாழலாம். அவனுக்கு 100 பிள்ளைகள் இருக்கலாம். ஆனால், அவன் நல்லவற்றில் திருப்தி அடையாவிட்டால், அவன் மரித்தப் பிறகு அவனை எவரும் நினைவில் வைத்துக்கொள்ளாவிட்டால், அவனைவிட பிறக்கும் முன்பே மரித்துப்போகும் குழந்தை சிறந்தது என்று என்னால் சொல்ல முடியும். ஒரு குழந்தை மரித்தே பிறக்குமானால் அது உண்மையில் பொருளற்றது. அது விரைவில் இருண்ட கல்லறைக்குள்ளே பெயர்கூட இல்லாமல் புதைக்கப்படும். அது சூரியனைப் பார்த்ததில்லை. அது எதையும் அறிந்துக்கொள்வதில்லை. தேவன் கொடுத்தவற்றை அனுபவிக்காத ஒருவனைவிட அது அதிக ஓய்வைப் பெறும். அவன் 2,000 ஆண்டுகள் வாழ்ந்தவனாக இருக்கலாம். எனினும் அவன் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிக்காவிட்டால், மரித்துப் பிறக்கும் குழந்தை அதே முடிவுக்குச் செல்ல எளிய பாதையைக் கண்டடைகிறது. ஒருவன் மேலும், மேலும் வேலை செய்கிறான். ஏனென்றால், அவன் தனக்கு உணவு தேடிக்கொள்ளவே அவ்வாறு உழைக்கிறான். அதனால் அவன் திருப்தி அடைவதில்லை. இந்த வழியில், ஞானமுள்ள ஒருவன் அறிவற்றைவனைவிடச் சிறந்தவன் இல்லை. வாழ்க்கையை அதன் இயல்பிலேயே ஏற்றுக்கொள்வதை அறிந்த ஏழையாக இருப்பது நல்லது. நாம் மேலும், மேலும் பெறவேண்டும் என்று விரும்புவதைவிட இருப்பதை வைத்துக்கொண்டு மகிழ்ச்சி அடைவதே நல்லது. எப்பொழுதும் மேலும், மேலும் விரும்புவது பயனற்றது. அது காற்றைப் பிடிக்கும் முயற்சியைப் போன்றது. ஒரு மனிதன் தான் உருவாக்கப்பட்ட வண்ணமே, அதாவது மனிதனாக மாத்திரம் இருக்கிறான். இதைப்பற்றி விவாதம் செய்வது வீணானது. ஒருவன் இதைப்பற்றி தேவனிடம் வாக்குவாதம் செய்ய முடியாது. ஏனென்றால் தேவன் மனிதனைவிட வல்லமை வாய்ந்தவர். நீண்ட விவாதங்கள் உண்மையை மாற்றிவிட முடியாது. பூமியில் ஒருவனது குறுகிய வாழ்நாளில், எது சிறந்தது என்று எவருக்குத் தெரியும்? அவனது வாழ்க்கை நிழலைப்போன்று கடந்துபோனது. பின்னால் என்ன நடக்கும் என்பதை எவராலும் சொல்ல முடியாது.

பிரசங்கி 6:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு தீங்குமுண்டு; அது மனுஷருக்குள்ளே பெரும்பாலும் நடந்துவருகிறது. அதாவது, ஒருவனுக்கு தேவன் செல்வத்தையும் சம்பத்தையும் கனத்தையும் கொடுக்கிறார்; அவன் என்ன இச்சித்தாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அநுபவிக்கும் சக்தியை தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனுஷன் அதை அநுபவிக்கிறான்; இதுவும் மாயையும், கொடிய நோயுமானது. ஒருவன் நூறு பிள்ளைகளைப் பெற்று, அநேகம் வருஷம் ஜீவித்து, தீர்க்காயுசை அடைந்திருந்தாலும், அவன் ஆத்துமா அந்தச் செல்வத்தால் திருப்தியடையாமலும், அவனுக்குப் பிரேதக்கல்லறை முதலாய் இல்லாமலும் போகுமானால், அவனைப்பாக்கிலும் கருவழிந்த பிண்டம் வாசி என்கிறேன். அது மாயையாய்த் தோன்றி இருளிலே மறைந்துபோய்விடுகிறது; அதின் பேர் அந்தகாரத்தால் மூடப்படும். அது சூரியனைக் கண்டதுமில்லை, ஒன்றையும் அறிந்ததுமில்லை; அவனுக்கு இல்லாத அமைச்சல் அதற்கு உண்டு. அவன் இரண்டாயிரம் வருஷம் பிழைத்திருத்தாலும் ஒரு நன்மையையும் காண்பதில்லை; எல்லாரும் ஒரே இடத்துக்குப் போகிறார்கள் அல்லவா? மனுஷன் படும் பிரயாசமெல்லாம் அவன் வாய்க்காகத்தானே? அவன் மனதுக்கோ திருப்தியில்லை. இப்படியிருக்க, மூடனைப்பார்க்கிலும் ஞானிக்கு உண்டாகும் மேன்மை என்ன? ஜீவனுள்ளோருக்கு முன்பாக நடந்துகொள்ளும்படி அறிந்த ஏழைக்கும் உண்டாகும் மேன்மை என்ன? ஆசையானது அலைந்து தேடுகிறதைப் பார்க்கிலும் கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும் மனதைச் சஞ்சலப்படுத்துகிறதுமாயிருக்கிறது. இருக்கிறவன் எவனும் தோன்றுமுன்னமே பேரிடப்பட்டிருக்கிறான்; அவன் மனுஷனென்று தெரிந்திருக்கிறது; தன்னிலும் பலத்தவரோடே போராட அவனால் கூடாது. மாயையைப் பெருகப்பண்ணுகிற அநேக விசேஷங்கள் உண்டாயிருக்கிறபடியால் அதினாலே மனுஷருக்குப் பிரயோஜனமென்ன? நிழலைப்போன்ற மாயையான தன் ஜீவகாலத்தைப் போக்கும் மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்? தனக்குப்பின்பு சூரியனுக்குக் கீழே சம்பவிக்குங்காரியம் இன்னதென்று மனுஷனுக்கு அறிவிப்பவன் யார்?