பிரசங்கி 1:1-11

பிரசங்கி 1:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

தாவீதின் மகனும், எருசலேமின் அரசனுமான பிரசங்கியின் வார்த்தைகள்: “அர்த்தமற்றவை! அர்த்தமற்றவை! முற்றிலும் அர்த்தமற்றவை; எல்லாமே அர்த்தமற்றவை” என்று பிரசங்கி கூறுகிறான். மனிதனின் எல்லா உழைப்பினாலும் அவன் பெறும் இலாபம் என்ன? சூரியனுக்குக் கீழே அவன் படும் பிரசாயத்தினால் பலன் என்ன? சந்ததிகள் தோன்றி, சந்ததிகள் மறைகின்றன; ஆனாலும் பூமி மட்டும் என்றென்றைக்கும் நிலைத்திருக்கின்றது. சூரியன் உதிக்கிறது, சூரியன் மறைகிறது; தான் உதிக்கும் இடத்திற்கே அது விரைந்து திரும்பிச் செல்கிறது. காற்று தெற்கு நோக்கி வீசுகிறது, வடக்கு நோக்கியும் திரும்புகிறது; அது சுழன்று சுழன்று அடித்து, எப்போதும் தான் சுற்றிவந்த இடத்திற்கே திரும்பிச் செல்கிறது. எல்லா ஆறுகளும் கடலில் கலக்கின்றன, ஆனாலும் கடல் ஒருபோதும் நிறைவதில்லை. ஆறுகள் ஊற்றெடுத்த இடத்திற்கே திரும்பிப் போகின்றன. ஒருவனாலும் சொல்ல முடியாத அளவுக்கு எல்லாக் காரியங்களும் வருத்தத்தையே கொடுக்கின்றன. எவ்வளவு பார்த்தாலும் கண்களுக்கு ஆவல் தீருவதில்லை, எவ்வளவு கேட்டாலும் காதுகள் திருப்தியடைவதில்லை. இருந்ததே இனிமேலும் இருக்கும், செய்யப்பட்டதே இனிமேலும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே புதிதாக ஒன்றுமேயில்லை. “பாருங்கள், இது புதிதானது!” என்று யாராவது சொல்லத்தக்கது ஏதாவது ஒன்று உண்டோ? அது நெடுங்காலத்திற்கு முன்பே இங்கு இருந்தது; நமது காலத்திற்கு முன்பும் இங்கு இருந்தது. முற்காலத்து மனிதரைக் குறித்து ஒருவருக்கும் ஞாபகம் இருப்பதில்லை; அதுபோல இனிமேல் வரப்போகிறவர்களுக்கும், பின்வரும் காரியங்களைக்குறித்து ஞாபகம் இருக்காது.

பிரசங்கி 1:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தாவீதின் மகனும் எருசலேமின் அரசாண்ட ராஜாவுமாகிய பிரசங்கியின் வார்த்தைகள். “மாயை, மாயை, எல்லாம் மாயை என்று” பிரசங்கி சொல்லுகிறான். சூரியனுக்குக் கீழே மனிதன் படுகிற எல்லாப் பாடுகளினாலும் அவனுக்குப் பலன் என்ன? ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது. சூரியன் உதிக்கிறது, சூரியன் மறைகிறது; தான் உதித்த இடத்திற்கே அது திரும்பவும் விரைகிறது. காற்று தெற்கே போய், வடக்கேயும்சுற்றி, சுழன்று சுழன்று அடித்து, தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வரும். எல்லா நதிகளும் கடலிலே ஓடி விழுந்தும் கடல் நிரம்பாது; தாங்கள் தோன்றிய இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும். எல்லாம் வருத்தத்தினால் நிறைந்திருக்கிறது; அது மனிதர்களால் சொல்லமுடியாது; காண்கிறதினால் கண் திருப்தியாவதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை. முன்பு இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன்பு செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே புதியது ஒன்றுமில்லை. இதைப் பார், இது புதியது என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள ஆரம்பகாலங்களிலும் இருந்ததே. முன்பு இருந்தவைகளைப்பற்றி ஞாபகம் இல்லை; அப்படியே பின்வரும் காரியங்களைப்பற்றியும் இனி மேலும் இருப்பவர்களுக்கு ஞாபகம் இருக்காது.

பிரசங்கி 1:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)

இவை பிரசங்கியின் வார்த்தைகள். பிரசங்கி தாவீதின் குமாரனும் எருசலேமின் அரசனுமானவன். எல்லாமே பொருளற்றவை. எல்லாமே வீணானவை என்று பிரசங்கி கூறுகிறான். தங்கள் வாழ்க்கையில் ஜனங்கள் செய்யும் கடினமான வேலைகளுக்கு உண்மையில் ஏதாவது பயன் உண்டா? ஜனங்கள் வாழ்கிறார்கள், ஜனங்கள் மரிக்கிறார்கள்; ஆனால், பூமியோ எப்பொழுதும் நிலைத்திருக்கின்றது. சூரியன் உதயமாகிறது. சூரியன் அஸ்தமிக்கிறது. பின் சூரியன் மீண்டும் அதே இடத்தில் உதயமாகவே விரைந்து செல்கிறது. காற்று தெற்கு நோக்கி அடிக்கிறது. வடக்கு நோக்கியும் அடிக்கிறது. காற்று சுழன்று, சுழன்று அடிக்கிறது. பின்னர் அது திரும்பிப் புறப்பட்ட இடத்திற்கே திரும்பவும் வீசுகின்றது. அனைத்து ஆறுகளும் மீண்டும், மீண்டும் ஒரே இடத்திற்கே பாய்கின்றன. எல்லாம் கடலிலேயே பாய்கின்றன. ஆனாலும் கடல் நிரம்புவதில்லை. வார்த்தைகள் ஒன்றைக் குறித்து முழுமையாக விளக்குவதில்லை. ஆனாலும் ஜனங்கள் தொடர்ந்து பேசுகிறார்கள். நம் காதுகளுக்கு வார்த்தைகள் மீண்டும், மீண்டும் வருகின்றன. எனினும் காதுகள் நிறைவதில்லை. நம் பார்வைகள் மூலம் கண்களும் நிரம்புவதில்லை. துவக்கத்தில் இருந்ததுபோலவே அனைத்துப் பொருட்களும் இருக்கின்றன. எல்லாம் ஏற்கெனவே செய்யப்பட்டதுபோலவே செய்யப்படுகின்றன. வாழ்க்கையில் எதுவும் புதியதில்லை. ஒருவன், “பாருங்கள் இது புதிது” என்று கூறலாம். ஆனால் அந்தப் பொருள் ஏற்கெனவே இங்கே இருக்கிறது. நாம் இருப்பதற்கு முன்னரே அவை இருக்கின்றன. நீண்டகாலத்திற்கு முன்பு நடந்ததை ஜனங்கள் நினைவில் வைத்திருப்பதில்லை. எதிர்காலத்தில், இப்பொழுது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதையும் நினைவில் வைத்திருக்கப்போவதில்லை. பின்னர் மற்றவர்களுக்கும் தங்களுக்கு முன்னிருந்தவர்கள் என்ன செய்தார்களென்பது நினைவில் இருக்காது.

பிரசங்கி 1:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தாவீதின் குமாரனும் எருசலேமின் ராஜாவுமாகிய பிரசங்கியின் வாக்கியங்கள். மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான். சூரியனுக்குக் கீழே மனுஷன் படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன? ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது. சூரியன் உதிக்கிறது, சூரியன் அஸ்தமிக்கிறது; தான் உதித்த இடத்திற்கே அது திரும்பவும் தீவிரிக்கிறது. காற்று தெற்கே போய், வடக்கேயுஞ்சுற்றி, சுழன்று சுழன்று அடித்து, தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வரும். எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும். எல்லாம் வருத்தத்தினால் நிறைந்திருக்கிறது; அது மனுஷரால் சொல்லிமுடியாது; காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை. முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை. இதைப் பார், இது நூதனம் என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள பூர்வகாலங்களிலும் இருந்ததே. முன் இருந்தவைகளைப்பற்றி ஞாபகம் இல்லை; அப்படியே பின்வரும் காரியங்களைப்பற்றியும் இனிமேலிருப்பவர்களுக்கு ஞாபகம் இராது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்