உபாகமம் 5:28-33

உபாகமம் 5:28-33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நீங்கள் என்னோடு பேசுவதை யெகோவா கேட்டார். அவர் என்னிடம், “இந்த மக்கள் உனக்குச் சொன்னவற்றை எல்லாம் நான் கேட்டேன். அவர்கள் சொன்னதெல்லாம் நல்லதே. அவர்களுடைய இருதயங்கள் எனக்குப் பயந்து, எப்பொழுதும் என் கட்டளைகளைக் கைக்கொண்டால் அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் என்றென்றைக்கும் நலமாய் இருப்பார்களே! “நீ போய் அவரவர் கூடாரங்களுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல். ஆனால் நீயோ இங்கே என்னிடம் தங்கியிரு. அவர்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி நான் அவர்களுக்குக் கொடுக்கிற நாட்டில், அவர்கள் பின்பற்றும்படி நீ அவர்களுக்குப் போதிக்கவேண்டிய எல்லா கட்டளைகளையும், விதிமுறைகளையும், சட்டங்களையும் நான் உனக்குக் கொடுப்பேன்” என்றார். ஆகவே நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா கட்டளையிட்டிருக்கிறதை கைக்கொள்ளக் கவனமாயிருங்கள். அதைவிட்டு வலதுபக்கமோ, இடது பக்கமோ விலகிப்போக வேண்டாம். உங்கள் இறைவனாகிய யெகோவா கட்டளையிட்டிருக்கிற வழிகளிலெல்லாம் நடவுங்கள், அப்பொழுது நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும் அந்த நாட்டில் வாழ்ந்து, செழித்து நீடித்திருப்பீர்கள்.

உபாகமம் 5:28-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நீங்கள் என்னுடன் பேசும்போது, யெகோவா உங்கள் வார்த்தைகளைக் கேட்டு, யெகோவா என்னை நோக்கி; “இந்த மக்கள் உன்னிடம் சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன்; அவர்கள் சொன்னது எல்லாம் நன்றாக இருந்தது. அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருப்பதற்கு, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும். நீ போய்: உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள் என்று அவர்களுக்குச் சொல். நீயோ இங்கே என்னிடத்தில் நில்; நான் அவர்களுக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில் அவர்கள் செய்யும்படி நீ அவர்களுக்குப் போதிக்கவேண்டிய சகல கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் உனக்குச் சொல்லுவேன் என்றார். உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கற்பித்தபடியே செய்ய கவனமாக இருங்கள்; வலதுபுறமும் இடதுபுறமும் சாயாதிருப்பீர்களாக. நீங்கள் சொந்தமாக்கிக்கொள்கிற தேசத்திலே பிழைத்து சுகமாக நீண்டநாட்கள் வாழ, உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்கு ஏற்படுத்தின வழிகளெல்லாவற்றிலும் நடக்கக்கடவீர்கள்.

உபாகமம் 5:28-33 பரிசுத்த பைபிள் (TAERV)

“கர்த்தர் நீங்கள் என்னோடு பேசியதைக் கேட்டுக்கொண்டு, அவர் என்னிடம் சொன்னது, ‘இந்த ஜனங்கள் உன்னோடு பேசியதை எல்லாம் நான் கேட்டேன். அவர்கள் சொன்னது எல்லாமே நன்றாகவே இருந்தன. நான் விரும்புவதெல்லாம் அவர்களது சிந்தனை வழிமாறாமல் என்னை மதித்து எனக்குக் கீழ்ப்படிந்து, எனது கட்டளைகளை எல்லாம் பின்பற்றக்கூடிய மனஉறுதியைப் பெறவேண்டும். அப்போது அவர்களுக்கு எல்லாவற்றிலும் நன்மை உண்டாயிருக்கும். அவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களது சந்ததிகளுக்கும் என்றென்றைக்கும் அனைத்தும் நன்றாய் அமையும். “‘நீ சென்று அந்த ஜனங்களிடம், அவர்களது கூடாரங்களுக்குத் திரும்பிப் போகச் சொல், ஆனால் நீயோ இங்கே எனது அருகிலேயே நில். நான் உன்னிடம் எல்லா கட்டளைகளையும், சட்டங்களையும் நியாயங்களையும் சொல்லுகிறேன். அவற்றை நீ அவர்களுக்குப் போதிக்க வேண்டும். நான் அவர்கள் வாழும்படி கொடுத்த நிலத்தில் உன் போதனைப்படியே அவர்கள் ஒவ்வொன்றையும் செய்ய வேண்டும்.’” ஆகையால், நீங்கள் கர்த்தர் உங்களுக்குக் கூறிய கட்டளைகளின்படி நடந்துகொள்ளக் கவனமாக இருங்கள். தேவன் கூறியவற்றைப் பின்பற்றுவதை நிறுத்திவிடாதீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு கொடுத்த கட்டளைகளின்படியே நெறி தவறாது வாழவேண்டும். பின் நீங்கள் தொடர்ந்து எல்லாவற்றிலும் நலம்பெற்று வாழலாம். உங்களுக்குச் சொந்தமான நிலத்தில் நீண்டநாள் நீங்கள் வாழ்வீர்கள்.

உபாகமம் 5:28-33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நீங்கள் என்னோடே பேசுகையில், கர்த்தர் உங்கள் வார்த்தைகளைக் கேட்டு, கர்த்தர் என்னை நோக்கி; இந்த ஜனங்கள் உன்னோடே சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன்; அவர்கள் சொன்னது எல்லாம் நன்றாய்ச் சொன்னார்கள். அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும். நீ போய்: உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள் என்று அவர்களுக்குச் சொல். நீயோ இங்கே என்னிடத்தில் நில்; நான் அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் அவர்கள் செய்யும்படி நீ அவர்களுக்குப் போதிக்கவேண்டிய சகல கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் உனக்குச் சொல்லுவேன் என்றார். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்தபடியே செய்ய சாவதானமாயிருங்கள்; வலதுபுறம் இடதுபுறம் சாயாதிருப்பீர்களாக. நீங்கள் சுதந்தரிக்கும் தேசத்திலே பிழைத்து சுகித்து நீடித்திருக்கும்படி, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழிகளெல்லாவற்றிலும் நடக்கக்கடவீர்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்