உபாகமம் 4:9-14

உபாகமம் 4:9-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எச்சரிக்கையாயிருங்கள், உங்கள் கண்கள் கண்ட காரியங்களை மறவாமலும், நீங்கள் உயிர்வாழும் நாளெல்லாம் அவற்றை உங்கள் இருதயத்தில் காத்துக்கொள்ள கவனமாயிருங்கள். அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கும் உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் போதியுங்கள். ஓரேபிலே உங்கள் இறைவனாகிய யெகோவா முன்பாக நீங்கள் நின்ற அந்த நாளை நினைவுகூருங்கள். அப்பொழுது யெகோவா என்னிடம், “என் வார்த்தைகளைக் கேட்கும்படி மக்களை எனக்கு முன்பாக கூடிவரச்செய். அவர்கள் அந்த நாட்டில் வாழும் காலம் முழுவதும் எனக்குப் பயபக்தியாய் இருக்கக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கட்டும்” என்றார். நீங்கள் அருகே வந்து மலையடிவாரத்தில் நின்றீர்கள். அப்பொழுது மலை நெருப்புப் பற்றி, அதன் ஜூவாலை வானமட்டும் எழும்ப, கார்மேகமும் காரிருளும் சூழ்ந்தன. பின்பு யெகோவா நெருப்பின் நடுவிலிருந்து உங்களுடன் பேசினார். நீங்கள் அவருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டீர்கள், ஆனால் ஒரு உருவத்தையும் காணவில்லை. குரல் மட்டுமே கேட்டது. அவர் பத்துக் கட்டளைகளான தமது உடன்படிக்கையை உங்களுக்கு அறிவித்து, நீங்கள் அவற்றைப் பின்பற்றும்படி உங்களுக்குக் கட்டளையிட்டார். பின்பு அவர் அவற்றை இரண்டு கற்பலகைகளில் எழுதினார். நீங்கள் யோர்தானைக் கடந்து உரிமையாக்கப்போகும் நாட்டில் நீங்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகளையும், சட்டங்களையும் உங்களுக்குப் போதிக்கும்படியாக அக்காலத்தில் யெகோவா எனக்குக் கட்டளையிட்டார்.

உபாகமம் 4:9-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஓரேபிலே உன் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நீ நிற்கும்போது, யெகோவா என்னை நோக்கி: “மக்களை என்னிடத்தில் கூடிவரச்செய்து, என் வார்த்தைகளை அவர்கள் கேட்கச்செய்வேன்; அவர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் எனக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள் என்று சொன்ன நாளில், உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறக்காமலிருக்கவும், நீ உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் அவைகள் உன் இருதயத்தைவிட்டு நீங்காமலிருக்கவும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவை கவனமாகக் காத்துக்கொள்; அவைகளை உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிப்பாயாக. நீங்கள் சேர்ந்து வந்து, மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள்; அந்த மலையில் வானளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது. அந்த அக்கினியின் நடுவிலிருந்து யெகோவா உங்களுடன் பேசினார்; வார்த்தைகளின் சத்தத்தை நீங்கள் கேட்டீர்கள்; அந்தச் சத்தத்தை நீங்கள் கேட்டதேயன்றி, ஒரு உருவத்தையும் காணவில்லை. நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக் கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து, அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார். நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளப்போகிற தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளையும் நியாயங்களையும் உங்களுக்குப் போதிக்கவேண்டுமென்று அக்காலத்தில் யெகோவா எனக்குக் கட்டளையிட்டார்.

உபாகமம் 4:9-14 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆனால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் இவைகள் உங்கள் இதயத்திலிருந்து நீங்காதபடிக்கு காத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அவற்றை உங்கள் குழந்தைகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் எடுத்துக்கூற வேண்டும். ஓரேப் மலையில் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு முன்னால் நின்றதை நினைத்துப்பாருங்கள். கர்த்தர் என்னிடம், ‘நான் சொல்வதைக் கேட்க ஜனங்களை ஒன்று கூட்டு. பின்னர் அவர்கள் வாழ்நாள் முழுவதும் எனக்குப் பயந்து மதிப்பளிக்க கற்பார்கள். மேலும் இவற்றை அவர்கள் தமது குழந்தைகளுக்குக் கற்பிப்பார்கள்’ என்று கூறினார். நீங்கள் நெருங்கிவந்து மலையின் கீழ்ப்பகுதியில் நின்றீர்கள். தீப்பற்றி மலை வான உயரத்திற்கு எரிந்தது. கரிய மேகங்கள் சூழ்ந்து இருண்டது. பின் நெருப்பிலிருந்து கர்த்தர் உங்களிடம் பேசினார். யாரோ பேசும் குரலை நீங்கள் கேட்டீர்கள். ஆனால் உருவம் எதையும் நீங்கள் பார்க்கவில்லை. குரல்மட்டுமே கேட்டது. கர்த்தர் உங்களிடம் தமது உடன்படிக்கையைச் சொன்னார். அவர் பத்துக் கட்டளைகளைக் கூறி, அவற்றிற்குக் கீழ்ப்படியச் சொன்னார். அந்த உடன்படிக்கையின் சட்டங்களை கர்த்தர் இரு கற்பலகைகளில் எழுதினார். அதே சமயம், நீங்கள் எடுத்துக்கொண்டு வாழப்போகும் நாடுகளில், நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்டவிதிகளை உங்களுக்குப் போதிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்.

உபாகமம் 4:9-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஓரேபிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ நிற்கும்போது, கர்த்தர் என்னை நோக்கி: ஜனங்களை என்னிடத்தில் கூடிவரச்செய்து, என் வார்த்தைகளை அவர்கள் கேட்கும்படி பண்ணுவேன்; அவர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் எனக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள் என்று சொல்லிய நாளில், உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும், உன் ஜீவனுள்ள நாளெல்லாம் அவைகள் உன் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவைச் சாக்கிரதையாய்க் காத்துக்கொள்; அவைகளை உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவாய். நீங்கள் சேர்ந்து வந்து, மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள்; அந்த மலையில் வானத்தை அளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது. அந்த அக்கினியின் நடுவிலிருந்து கர்த்தர் உங்களோடே பேசினார்; வார்த்தைகளின் சத்தத்தை நீங்கள் கேட்டீர்கள்; அந்தச் சத்தத்தை நீங்கள் கேட்டதேயன்றி, ஒரு ரூபத்தையும் காணவில்லை. நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக் கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து, அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார். நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளப்போகிற தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளையும் நியாயங்களையும் உங்களுக்குப் போதிக்கவேண்டுமென்று அக்காலத்தில் கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்