உபாகமம் 34:1-8

உபாகமம் 34:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதன்பின் மோசே, மோவாபின் சமபூமியிலிருந்து புறப்பட்டு நேபோ மலையின்மேல் ஏறி, பிஸ்கா உச்சிக்குப் போனான். நேபோ மலை எரிகோவுக்கு எதிரே இருந்தது. அங்கே யெகோவா அந்த முழு நாட்டையும் அவனுக்குக் காண்பித்தார். யெகோவா அவனுக்கு தாண்வரைக்கும் உள்ள கீலேயாத் நாடு, முழு நப்தலி நாடு, எப்பிராயீம், மனாசேயின் பிரதேசங்கள், மத்திய தரைக்கடல்வரை உள்ள முழு யூதாவின் நாடு, தெற்கே, பேரீச்சமரங்களின் பட்டணமான எரிகோவின் பள்ளத்தாக்கிலிருந்து சோவார் வரையுள்ள முழுபிரதேசம் ஆகிய முழு நாட்டையும் காட்டினார். யெகோவா அவனிடம், “உங்கள் சந்ததிக்குக் கொடுப்பேன் என ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்த நாடு இதுவே. நான் உன் கண்களால் அதைக் காணும்படி அனுமதித்தேன். ஆனால் நீ அதற்குள் கடந்துசெல்லமாட்டாய்” என்றார். யெகோவாவின் அடியவனான மோசே யெகோவா சொல்லியிருந்தபடியே மோவாப், நாட்டில் இறந்தான். மோவாபிய நாட்டிலே பெத்பெயோருக்கு எதிரே உள்ள பள்ளத்தாக்கில் யெகோவா அவனை அடக்கம்பண்ணினார், ஆனால் இன்றுவரை அவனுடைய கல்லறை எங்கேயிருக்கிறது என ஒருவருக்கும் தெரியாது. இறக்கும்போது மோசேக்கு வயது நூற்று இருபது. ஆனாலும் அவன் கண்கள் மங்கிப்போகவுமில்லை. அவன் பெலன் குறையவுமில்லை. இஸ்ரயேலர் மோவாப் சமபூமியிலே மோசேக்காக முப்பது நாட்கள் துக்கங்கொண்டாடினர். அந்த துக்கநாட்கள் முடியும்வரை அவர்கள் அங்கேயே தங்கியிருந்தனர்.

உபாகமம் 34:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு மோசே மோவாபின் சமவெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் மலையுச்சியில் ஏறினான்; அப்பொழுது யெகோவா அவனுக்கு, தாண்வரை உள்ள கீலேயாத் தேசம் அனைத்தையும், நப்தலி தேசம் அனைத்தையும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் தேசத்தையும், கடைசி மத்திய தரை சமுத்திரம்வரை உள்ள யூதா தேசம் அனைத்தையும், தென்புறத்தையும், சோவார்வரை உள்ள பேரீச்சமரங்களின் பட்டணம் என்னும் ஊர் முதற்கொண்டு எரிகோவின் பள்ளத்தாக்காகிய சமமான பூமியையும் காண்பித்தார். அப்பொழுது யெகோவா அவனை நோக்கி: “நான் உங்களுடைய சந்ததிக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் வாக்களித்த தேசம் இதுதான், இதை உன்னுடைய கண் காணும்படி செய்தேன்; ஆனாலும் நீ அந்த இடத்திற்குக் கடந்துபோவதில்லை” என்றார். அப்படியே யெகோவாவின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அந்த இடத்திலே யெகோவாவுடைய வார்த்தையின்படியே மரணமடைந்தான். அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம் செய்தார். ஒருவனுக்கும் அவனுடைய பிரேதக்குழி எங்கேயென்று இந்நாள்வரைக்கும் தெரியாது. மோசே மரணமடைகிறபோது 120 வயதாயிருந்தான்; அவனுடைய கண்கள் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை. இஸ்ரவேல் மக்கள் மோவாபின் சமவெளிகளில் மோசேக்காக முப்பது நாட்கள் அழுதுகொண்டிருந்தார்கள்; மோசேக்காக அழுது துக்கங்கொண்டாடின நாட்கள் முடிந்தது.

உபாகமம் 34:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)

மோசே நேபோ மலைமீது ஏறினான். மோசே மோவாபிலுள்ள யோர்தான் சமவெளியிலிருந்து பிஸ்காவின் உச்சிக்குச் சென்றான். இது எரிகோவிலிருந்து யோர்தான் ஆற்றுக்கு எதிர்புறத்தில் உள்ளது. கர்த்தர் மோசேக்கு கீலேயாத் முதல் தாண்வரையுள்ள அனைத்து நாடுகளையும் காட்டினார். கர்த்தர் அவனுக்கு நப்தலி, எப்பிராயீம், மற்றும் மனாசேயின் நாடுகள் எல்லாவற்றையும் காட்டினார். அவர் அவனுக்கு மத்தியதரைக் கடல் வரையுள்ள யூதா நாடு முழுவதையும் காட்டினார். கர்த்தர் மோசேக்கு பாலைவனத்தையும், பேரீச்ச மரங்களின் நகரம் என்னும் சோவார் முதல் எரிகோவரையுள்ள பள்ளத்தாக்கையும் காட்டினார். கர்த்தர் மோசேயிடம், “நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு வாக்களித்த நாடு இதுதான். நான் அவர்களிடம் சொன்னேன் ‘நான் இந்த நாட்டை உங்கள் சந்ததிகளுக்குத் தருவேன். அந்த நாட்டை நீ பார்க்கும்படி செய்வேன். ஆனால் அங்கே உன்னால் போகமுடியாது’” என்று கூறினார். பின்னர் கர்த்தருடைய தாசனாகிய மோசே மோவாப் நாட்டில் மரித்தான். கர்த்தர் மோசேயிடம் இவை நிகழும் என்று சொல்லியிருந்தார். கர்த்தர் மோசேயை மோவாபில் அடக்கம் செய்தார். இது பெத்பேயோருக்கு எதிர்புறத்தில் உள்ள பள்ளத்தாக்கிலே உள்ளது. ஆனால் இன்றுவரை மோசேயின் கல்லறை எங்கே இருக்கிறது என்று எவருக்கும் தெரியாது. மோசே மரணமடையும்போது 120 வயதுடையவனாக இருந்தான். அவன் எப்பொழுதும்போல் பலமுள்ளவனாக இருந்தான். அவனது கண்கள் அப்பொழுதும் நன்றாக இருந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் மோசேக்காக 30 நாட்கள் அழுதனர். அவர்கள் துக்ககாலம் முடியும்வரை மோவாபிலுள்ள யோர்தான் சமவெளியில் தங்கினார்கள்.

உபாகமம் 34:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு மோசே மோவாபின் சமனான வெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நெபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறினான்; அப்பொழுது கர்த்தர் அவனுக்கு, தாண்மட்டுமுள்ள கீலேயாத் தேசம் அனைத்தையும், நப்தலி தேசம் அனைத்தையும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் தேசத்தையும், கடைசிச் சமுத்திரம் வரைக்குமுள்ள யூதா தேசம் அனைத்தையும், தென்புறத்தையும், சோவார் வரைக்குமுள்ள பேரீச்சமரங்களின் பட்டணம் என்னும் ஊர்முதற்கொண்டு எரிகோவின் பள்ளத்தாக்காகிய சமனான பூமியையும் காண்பித்தார். அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: நான் உங்கள் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்ட தேசம் இதுதான், இதை உன் கண்காணும்படி செய்தேன்; ஆனாலும் நீ அவ்விடத்திற்குக் கடந்துபோவதில்லை என்றார். அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தான். அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம் பண்ணினார். இந்நாள்வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக்குழியை அறியான். மோசே மரிக்கிறபோது நூற்றிருபது வயதாயிருந்தான்; அவன் கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை. இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் சமனான வெளிகளில் மோசேக்காக முப்பது நாள் அழுதுகொண்டிருந்தார்கள்; மோசேக்காக அழுது துக்கங்கொண்டாடின நாட்கள் முடிந்தது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்