உபாகமம் 16:9-16

உபாகமம் 16:9-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அறுவடைக்கு ஆயத்தமான கதிரில் அரிவாளை வைக்கத்தொடங்கும் நாள் முதல் ஏழு வாரங்களை எண்ணுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் ஆசீர்வாதத்திற்குத் தக்கபடியே நீங்கள் சுயவிருப்பக் காணிக்கையைச் செலுத்தி, உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு வாரங்களின் பண்டிகையைக் கொண்டாடுங்கள். அவருடைய பெயருக்கான உறைவிடமாக அவர் தெரிந்துகொள்ளும் இடத்தில் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முன்பாகக் களிகூருங்கள். நீங்களும், உங்கள் மகன்களும், மகள்களும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், உங்கள் பட்டணங்களிலுள்ள லேவியரும், உங்கள் மத்தியில் வாழும் அந்நியரும், தந்தையற்றவர்களும், விதவைகளுமான எல்லோரும் களிகூருங்கள். நீங்கள் எகிப்தில் அடிமையாய் இருந்ததை நினைவுகூர்ந்து, இந்த விதிமுறைகளைக் கவனமாய்ப் பின்பற்றுங்கள். நீங்கள் உங்கள் சூடடிக்கும் களத்திலிருந்தும், திராட்சை ஆலையிலிருந்தும் அவற்றின் பலனைச் சேர்த்தபின், ஏழுநாட்களுக்குக் கூடாரப்பண்டிகையைக் கொண்டாடுங்கள். நீங்கள் இந்த பண்டிகையில் மகிழ்ச்சியாயிருங்கள். நீங்களும், உங்கள் மகன்களும், மகள்களும் வேலைக்காரரும், வேலைக்காரிகளும், உங்கள் பட்டணங்களில் வாழ்கின்ற லேவியர், அந்நியர், தந்தையற்றவர்கள், விதவைகள் ஆகிய எல்லோருமே மகிழ்ந்திருங்கள். யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு ஏழு நாட்கள் இந்தப் பண்டிகையை கொண்டாடுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் எல்லா அறுவடையிலும், உங்கள் கையின் வேலையிலும் உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் மகிழ்ச்சியும் நிறைவாயிருக்கும். உங்கள் எல்லா ஆண்களும், உங்கள் இறைவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் வருடத்திற்கு மூன்றுமுறை யெகோவாவுக்கு முன்பாக வரவேண்டும். புளிப்பில்லாத அப்பம் சாப்பிடும் பண்டிகை, வாரங்களின் பண்டிகை, கூடாரப்பண்டிகை ஆகிய இந்த மூன்று பண்டிகைகளுக்கும் இவ்வாறு வரவேண்டும். யெகோவாவுக்கு முன்பாக ஒருவரும் வெறுங்கையுடன் வரக்கூடாது.

உபாகமம் 16:9-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

“ஏழு வாரங்களை எண்ணுவாயாக; அறுப்பு அறுக்கத் துவங்கும் காலமுதல் நீ அந்த ஏழு வாரங்களையும் எண்ணவேண்டும். அவைகள் முடிந்தபோது வாரங்களின் பண்டிகையை உன் தேவனாகிய யெகோவாவுக்கென்று ஆசரித்து, உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதித்ததற்குத்தக்கதாக உன்னால் முடிந்த மனப்பூர்வமான காணிக்கையாகிய பகுதியைச் செலுத்தி, உன் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடத்திலே, நீயும், உன் மகனும், மகளும், வேலைக்காரனும், வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும், உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு, நீ எகிப்தில் அடிமையாயிருந்ததை நினைத்து, இந்தக் கட்டளைகளைக் கைக்கொண்டு இவைகளின்படி செய்யக்கடவாய். “நீ உன் களத்தின் பலனையும் உன் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு, கூடாரப்பண்டிகையை ஏழு நாட்கள் ஆசரித்து, உன் பண்டிகையில் நீயும், உன் மகனும், மகளும், வேலைக்காரனும், வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் சந்தோஷப்படக்கடவீர்கள்; உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லா செயலிலும் உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதித்தபடியால், யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் உன் தேவனாகிய யெகோவாவுக்கு ஏழு நாட்கள் பண்டிகையை ஆசரித்து சந்தோஷமாயிருப்பாயாக. வருடத்தில் மூன்றுமுறை புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லோரும் உன் தேவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்.

உபாகமம் 16:9-16 பரிசுத்த பைபிள் (TAERV)

“உங்களது அறுவடைக்காலம் துவங்குவதிலிருந்து ஏழு வாரங்களை எண்ணிக்கொள்ளுங்கள். பின் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கான வாரங்களின் பண்டிகையைக் கொண்டாடுங்கள். நீங்கள் தேவனுக்குக் கொடுக்க விரும்புகின்ற சிறப்பான அன்பளிப்பைக் கொண்டு வருவதின் மூலம் இதைச் செய்யுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை எந்த அளவிற்கு ஆசீர்வதித்தாரோ அதற்கேற்ப உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். கர்த்தர் சிறப்பாகத் தேர்ந்தெடுத்த இடத்துக்குச் செல்லுங்கள். நீஙகளும் உங்கள் பிள்ளைகளும் சேர்ந்து உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதானத்தில் மகிழ்ச்சியாய் இருங்கள். அனைவரையும் அழைத்துச் செல்லுங்கள். உங்கள் குமாரர்கள், குமாரத்திகள், உங்களது வேலையாட்கள், லேவியர்கள், உங்களிடத்தில் இருக்கின்ற அந்நியர்கள், அநாதைகள், உங்கள் நகரங்களில் வாழும் விதவைகள், ஆகிய எல்லோரையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். எகிப்தில் நீங்கள் அடிமைகளாக இருந்ததை எண்ணிப் பாருங்கள். ஆகையால் இந்தக் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும் “நீங்கள், உங்கள் தானியக் களத்தின் பலனையும், உங்கள் திராட்சைரச ஆலைகளின் பலனையும் சேர்த்தபின்பு, ஏழு நாட்கள் உங்கள் அடைக்கலக் கூடாரப் பண்டிகையைக் கொண்டாடவேண்டும். இந்தப் பண்டிகையை உங்களுக்குள் மகிழ்வாகக் கொண்டாடுங்கள். நீங்கள், உங்கள் குமாரர்கள், உங்கள் குமாரத்திகள், உங்கள் வேலையாட்கள், உங்களை சார்ந்த பகுதியில் வசிக்கும் லேவியர்கள், அந்நியர்கள், அநாதைகள், உங்கள் நகரங்களில் வாழும் விதவைகள், எல்லோருமாகச் சேர்ந்து கொண்டாடுங்கள், இந்தப் பண்டிகையை உங்கள் கர்த்தர் தேர்ந்தெடுத்த இடத்தில் ஏழு நாட்கள் கொண்டாடி மகிழுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மரியாதை செலுத்தும்படி இதைச் செய்யுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களது விளைச்சல்களையும், நீங்கள் செய்யும் எல்லா வேலைகளையும் ஆசீர்வதித்துள்ளார். ஆகவே நீங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவீர்களாக! “வருடத்திற்கு மூன்றுமுறை உங்களது ஆண் ஜனங்கள் அனைவரும் தவறாது உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் கூடவேண்டும். அவர்கள் அனைவரும், புளிப்பில்லாத அப்பப் பண்டிகைக்கும், வாரங்களின் பண்டிகைக்கும், அடைக்கல கூடாரங்களின் பண்டிகைக்கும் கண்டிப்பாக வரவேண்டும். ஒவ்வொருவரும் வரும் பொழுது, கர்த்தருக்குரிய அன்பளிப்புகளை எடுத்துவர வேண்டும்.

உபாகமம் 16:9-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஏழு வாரங்களை எண்ணுவாயாக; அறுப்பு அறுக்கத் தொடங்கும் காலமுதல் நீ அந்த ஏழு வாரங்களையும் எண்ணவேண்டும். அவைகள் முடிந்தபோது வாரங்களின் பண்டிகையை உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று ஆசரித்து, உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததற்குத் தக்கதாய் உன் கைக்கு நேர்ந்த மனப்பூர்வமான காணிக்கையாகிய பகுதியைச் செலுத்தி, உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு, நீ எகிப்தில் அடிமையாயிருந்ததை நினைத்து, இந்தக் கட்டளைகளைக் கைக்கொண்டு இவைகளின்படி செய்யக்கடவாய். நீ உன் களத்தின் பலனையும் உன் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு, கூடாரப்பண்டிகையை ஏழு நாள் ஆசரித்து, உன் பண்டிகையில் நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் சந்தோஷப்படக்கடவீர்கள்; உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லாக் கிரியையிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தபடியினால், கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஏழு நாளளவும் பண்டிகையை ஆசரித்துச் சந்தோஷமாயிருப்பாயாக. வருஷத்தில் மூன்று தரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்