உபாகமம் 11:22-25
உபாகமம் 11:22-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நீங்கள் பின்பற்றும்படி நான் கொடுக்கும் கட்டளைகளை நீங்கள் கவனமாகக் கைக்கொண்டால், அதாவது உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் அன்புகூர்ந்து, அவருடைய வழிகளில் நடந்து, அவரை உறுதியாய்ப் பற்றிக்கொண்டால், யெகோவா உங்களுக்கு முன்பாக அந்த நாட்டினர் அனைவரையும் துரத்திவிடுவார்; நீங்கள் உங்களைவிடப் பெரியதும், வலியதுமான நாடுகளை அவர்களுக்குரிய இடத்திலிருந்து துரத்துவீர்கள். நீங்கள் கால் வைக்கும் இடமெல்லாம் உங்களுடையதாகும். உங்கள் ஆட்சிக்குரிய பிரதேசம் பாலைவனம்தொடங்கி லெபனோன் வரைக்கும், ஐபிராத்து நதிதொடங்கி மத்திய தரைக்கடல் வரைக்கும் பரந்திருக்கும். உங்களை எதிர்த்துநிற்க ஒருவராலும் முடியாது. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு வாக்குப்பண்ணியபடி, நீங்கள் போகும் இடமெல்லாம் உங்களைப்பற்றிய பயத்தையும், திகிலையும் முழு நாட்டிலும் வரப்பண்ணுவார்.
உபாகமம் 11:22-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவிடத்தில் அன்புசெலுத்தி, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவரைப் பற்றிக்கொண்டிருக்கும்படி, நான் உங்களுக்குச் செய்யக் கற்பிக்கிற இந்தக் கற்பனைகளையெல்லாம் கவனமாகக் கைக்கொள்வீர்களானால், யெகோவா உங்களுக்கு முன்பாக அந்த மக்களையெல்லாம் துரத்திவிடுவார்; உங்களைப்பார்க்கிலும் எண்ணிக்கையில் அதிகமும், பலத்ததுமான மக்களை நீங்கள் துரத்துவீர்கள். உங்களுடைய உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும்; வனாந்திரத்தையும் லீபனோனையும் துவங்கி, ஐப்பிராத்து நதியையும் துவங்கி, கடைசி மத்திய தரை சமுத்திரம்வரைக்கும் உங்களுடைய எல்லையாக இருக்கும். ஒருவரும் உங்களுக்கு எதிர்த்து நிற்பதில்லை; உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குச் சொன்னபடி உங்களால் உண்டாகும் பயமும் திகிலும் நீங்கள் மிதிக்கும் பூமியின்மேலெல்லாம் வரச்செய்வார்.
உபாகமம் 11:22-25 பரிசுத்த பைபிள் (TAERV)
“நான் உங்களிடம் கூறியவற்றைப் பின்பற்றுவதிலும், ஒவ்வொரு கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவதிலும் எச்சரிக்கையுடன் இருங்கள்! உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது அன்பு செலுத்துங்கள். அவரது எல்லா வழிகளையும் பின்பற்றுங்கள். அவருக்கு உண்மையானவர்களாய் இருங்கள். பின் உங்கள் தேசத்திற்குள் செல்லும்போது கர்த்தர் உங்களுக்கு எதிரான மற்ற இனத்தவர்களை வெளியே துரத்திவிடுவார். உங்களைவிடப் பெரிய பலம் வாய்ந்தவர்களிடமிருந்து அந்த நிலத்தை நீங்கள் கைப்பற்றிவிடலாம். உங்கள் பாதங்கள் படும் இடமெல்லாம் உங்களுடையதாகும். உங்களின் நிலமானது தெற்கே பாலைவனம் முதல் வடக்கே லீபனோன் வரை விரிந்து செல்லும். கிழக்கே ஐபிராத்து நதிதொடங்கி மத்தியதரைக் கடல் வரையிலும் உங்கள் தேசத்தின் எல்லையாக இருக்கும். உங்களை எதிர்த்து நிற்பவர் எவருமில்லை. உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்த நிலத்தில் நீங்கள் எங்கெல்லாம் செல்கிறீர்களோ அங்கெல்லாம் அந்த ஜனங்களைப் பயமடையச் செய்வார். அதைத்தான் கர்த்தர் உங்களுக்கு ஏற்கெனவே வாக்களித்திருக்கிறார்.
உபாகமம் 11:22-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரைப் பற்றிக்கொண்டிருக்கும்படி, நான் உங்களுக்குச் செய்யக் கற்பிக்கிற இந்தக் கற்பனைகளையெல்லாம் ஜாக்கிரதையாய்க் கைக்கொள்வீர்களானால், கர்த்தர் உங்களுக்கு முன்பாக அந்த ஜாதிகளையெல்லாம் துரத்திவிடுவார்; உங்களைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த பலத்த ஜாதிகளை நீங்கள் துரத்துவீர்கள். உங்கள் உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும்; வனாந்தரத்தையும் லீபனோனையும் தொடங்கி, ஐபிராத்து நதியையும் தொடங்கி, கடைசிச் சமுத்திரம் வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும். உங்கள்முன் ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லை; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி உங்களால் உண்டாகும் பயமும் கெடியும் நீங்கள் மிதிக்கும் பூமியின்மேலெல்லாம் வரப்பண்ணுவார்.