தானியேல் 6:16-24 - Compare All Versions
தானியேல் 6:16-24 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அப்பொழுது ராஜா கட்டளையிட, அவர்கள் தானியேலைக் கொண்டுவந்து, அவனைச் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள்; ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார் என்றான். ஒரு கல் கெபியினுடைய வாசலின்மேல் கொண்டுவந்து வைக்கப்பட்டது; தானியேலைப்பற்றிய தீர்மானம் மாற்றப்படாதபடிக்கு ராஜா தன் மோதிரத்தினாலும் தன் பிரபுக்களின் மோதிரத்தினாலும் அதின்மேல் முத்திரைபோட்டான். பின்பு ராஜா தன் அரமனைக்குப் போய், இராமுழுதும் போஜனம்பண்ணாமலும், கீதவாத்தியம் முதலானவைகளைத் தனக்கு முன்பாக வரவொட்டாமலும் இருந்தான்; அவனுக்கு நித்திரையும் வராமற்போயிற்று. காலமே கிழக்கு வெளுக்கும்போது ராஜா எழுந்திருந்து, சிங்கங்களின் கெபிக்குத் தீவிரமாய்ப் போனான். ராஜா கெபியின் கிட்டவந்தபோது, துயரசத்தமாய்த் தானியேலைக் கூப்பிட்டு: தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான். அப்பொழுது தானியேல்: ராஜாவே நீர் என்றும் வாழ்க. சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான். அப்பொழுது ராஜா தன்னில் மிகவும் சந்தோஷப்பட்டு, தானியேலைக் கெபியிலிருந்து தூக்கிவிடச் சொன்னான்; அப்படியே தானியேல் கெபியிலிருந்து தூக்கிவிடப்பட்டான்; அவன் தன் தேவன்பேரில் விசுவாசித்திருந்தபடியால், அவனில் ஒரு சேதமும் காணப்படவில்லை. தானியேலின்மேல் குற்றஞ்சாற்றின மனுஷரையோவென்றால், ராஜா கொண்டுவரச்சொன்னான்; அவர்களையும் அவர்கள் குமாரரையும் அவர்கள் மனைவிகளையும் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள்; அவர்கள் கெபியின் அடியிலே சேருமுன்னே சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து, அவர்கள் எலும்புகளையெல்லாம் நொறுக்கிப்போட்டது.
தானியேல் 6:16-24 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது ராஜா கட்டளையிட, அவர்கள் தானியேலைக் கொண்டுவந்து, அவனைச் சிங்கங்களின் குகையிலே போட்டார்கள்; ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார் என்றான். ஒரு கல் குகையினுடைய வாசலின்மேல் கொண்டுவந்து வைக்கப்பட்டது; தானியேலைப்பற்றிய தீர்மானம் மாற்றப்படாதபடிக்கு ராஜா தன் மோதிரத்தினாலும் தன் பிரபுக்களின் மோதிரத்தினாலும் அதின்மேல் முத்திரைபோட்டான். பின்பு ராஜா தன் அரண்மனைக்குப் போய், இரவுமுழுவதும் சாப்பிடாமலும், இசைக்கருவி முதலானவைகளைத் தனக்கு முன்பாக வரவிடாமலும் இருந்தான்; அவனுக்கு தூக்கமும் வராமற்போனது. காலையில் சூரியன் உதிக்கும்போது ராஜா எழுந்திருந்து, சிங்கங்களின் குகைக்கு வேகமாகப் போனான். ராஜா குகையின் அருகில் வந்தபோது, துயரசத்தமாகத் தானியேலைக் கூப்பிட்டு: தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான். அப்பொழுது தானியேல்: ராஜாவே நீர் என்றும் வாழ்க. சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாகக் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் அநீதி செய்ததில்லை என்றான். அப்பொழுது ராஜா தன்னில் மிகவும் சந்தோஷப்பட்டு, தானியேலைக் குகையிலிருந்து தூக்கிவிடச் சொன்னான்; அப்படியே தானியேல் குகையிலிருந்து தூக்கிவிடப்பட்டான்; அவன் தன் தேவனை நம்பியிருந்ததினால், அவனுக்கு ஒரு சேதமும் ஏற்படவில்லை. தானியேலின்மேல் குற்றம்சுமத்தின மனிதர்களையோவென்றால், ராஜா கொண்டுவரச்சொன்னான்; அவர்களையும் அவர்களுடைய மகன்களையும் அவர்கள் மனைவிகளையும் சிங்கங்களின் குகையிலே போட்டார்கள்; அவர்கள் குகையின் அடியிலே சேருவதற்குமுன்பே சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து, அவர்களுடைய எலும்புகளையெல்லாம் நொறுக்கிப்போட்டது.
தானியேல் 6:16-24 TAERV (பரிசுத்த பைபிள்)
எனவே, தரியு ராஜா கட்டளையிட்டான். அவர்கள் தானியேலை அழைத்து வந்து சிங்கங்களின் கூண்டில் போட்டனர். ராஜா தானியேலிடம், “நீ தொழுதுகொள்ளும் தேவன் உன்னைக் காப்பாற்றுவார் என்று நான் நம்புகிறேன்” என்று சொன்னான். ஒரு பெரிய பாறங்கல்லைக் கொண்டு வந்து சிங்கக்குகையின் வாசலை மூடினார்கள். பிறகு ராஜா தனது மோதிரத்தைப் பயன்படுத்தி பாறையின்மேல் முத்திரையிட்டான். பிறகு அவன் தன் அதிகாரிகளின் மோதிரங்களாலும் பாறையின்மேல் முத்திரையிட்டான். இது, எவராலும் பாறாங்கல்லைத் திறந்து தானியேலை கூண்டிலிருந்து வெளியே கொண்டுவர முடியாது என்று காட்டியது. பிறகு ராஜாவாகிய தரியு தன் வீட்டிற்குத் திரும்பிப் போனான். ராஜா அன்றிரவு உணவு உண்ணவில்லை, அவன் யாரும் வந்து வேடிக்கை செய்து மகிழ்வூட்டுவதை விரும்பவில்லை. ராஜாவால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. மறுநாள் காலையில் கிழக்கு வெளுக்கும்போது ராஜாவாகிய தரியு எழுந்து சிங்கங்களின் குகைக்கு ஓடினான். ராஜா மிகத்துயரமாக இருந்தான். அவன் சிங்கங்களின் குகைக்கருகில் போய், தானியேலைக் கூப்பிட்டான். ராஜா, “தானியேலே ஜீவனுள்ள தேவனுடைய ஊழியனே, நீ எப்பொழுதும் உன் தேவனுக்குச் சேவைசெய்கிறாயே, உனது தேவனால் உன்னைச் சிங்கங்களிடமிருந்து காப்பாற்ற முடிந்ததா?” என்றான். தானியேல் அதற்குப் பதிலாக, “ராஜாவே, நீர் என்றென்றும் வாழ்க. தேவன் என்னைக் காக்கத் தூதனை அனுப்பினார். தூதன் சிங்கங்களின் வாயை அடைத்தான். சிங்கங்கள் என்னைக் காயப்படுத்தவில்லை. ஏனென்றால், நான் குற்றமறியாதவன் என்று தேவன் அறிவார். ராஜாவே நான் உமக்கு எதிராக எந்தக் கேடும் செய்யவில்லை” என்றான். ராஜாவாகிய தரியு மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். அவன் தனது வேலைக்காரர்களிடம் சிங்ககுகையிலிருந்து தானியேலை வெளியேற்றும்படிச் சொன்னான். தானியேலைச் சிங்கக்குகையிலிருந்து வெளியே அழைத்தபோது அவர்கள் அவன் உடலில் எவ்வித காயத்தையும் காணவில்லை. தானியேல் சிங்கங்களால் காயப்படுத்தப்படவில்லை, ஏனென்றால் அவன் தேவனிடம் விசுவாசம் வைத்தான். பிறகு ராஜா, தானியேல்மீது குற்றம் சாட்டி அவனைச் சிங்கக்குகைக்குள் அனுப்பியவர்களைக் கொண்டுவரும்படிக் கட்டளையிட்டான். அம்மனிதர்களும் அவர்களது மனைவிகளும் குழந்தைகளும் சிங்கக்குகைக்குள் தள்ளப்பட்டனர். அவர்கள் குகையின் தரைக்குள் விழுவதற்குமுன்பே சிங்கங்கள் அவர்கள் மேல் பாய்ந்து, அவர்களது உடல்களைக் கிழித்து எலும்புகளை மென்று உண்டன.
தானியேல் 6:16-24 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எனவே அரசன் உத்தரவிட, அவர்கள் தானியேலைப் பிடித்துக்கொண்டுவந்து சிங்கத்தின் குகைக்குள் வீசினார்கள். அப்பொழுது அரசன் தானியேலிடம், “நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உனது இறைவன் உன்னை காப்பாற்றுவாராக என்றான்.” பெருங்கல்லொன்று கொண்டுவரப்பட்டு அக்குகையின் வாசலில் மூடப்பட்டது. தானியேலுக்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மாற்றப்படாதபடி, அரசன் அந்தக் கல்லைத் தனது அடையாள மோதிரத்தாலும், தனது உயர்குடி மக்களின் மோதிரத்தாலும் முத்திரையிட்டான். பின் அரசன் தன் அரண்மனைக்குத் திரும்பிப்போய் அன்றிரவை சாப்பிடாமலும், எந்தவித ஆடல், பாடல் களிப்பு இன்றியும் கழித்தான். அவனால் நித்திரைகொள்ள முடியவில்லை. மறுநாள் அதிகாலையிலேயே அரசன் எழுந்து சிங்கத்தின் குகைக்கு விரைவாகப் போனான். அரசன் குகையின் அருகில் வந்ததும் துயரமான குரலில் தானியேலைக் கூப்பிட்டு, “தானியேலே, வாழும் இறைவனின் அடியவனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற இறைவன் சிங்கங்களிடத்திலிருந்து உன்னைத் தப்புவிக்க வல்லவராய் இருந்தாரோ?” என்று தானியேலைக் கேட்டான். அதற்கு தானியேல், “அரசே, நீர் நீடூழி வாழ்க. எனது இறைவன் தனது தூதனை அனுப்பினார், அவர் சிங்கங்களின் வாய்களைக் கட்டிப்போட்டார். அவை எனக்குத் தீங்கொன்றும் செய்யவில்லை. ஏனெனில் நான் இறைவனின் முன்னிலையில் குற்றமற்றவனாகக் காணப்பட்டேன். அரசே, நான் உமக்கு முன்னிலையிலும், ஒருபொழுதும் எந்தப் பிழையும் செய்யவில்லை என்றான்.” அப்பொழுது அரசன் மிகவும் மனம் மகிழ்ந்து, தானியேலைச் சிங்கத்தின் குகையிலிருந்து தூக்கி எடுக்கும்படி உத்தரவிட்டான். தானியேல் சிங்கக் குகையிலிருந்து தூக்கி எடுக்கப்பட்டபோது, அவனில் எவ்வித காயமும் காணப்படவில்லை. ஏனெனில், அவன் தனது இறைவனில் நம்பிக்கையாயிருந்தான். பின்பு அரசனின் கட்டளைப்படியே தானியேலைக் குற்றஞ்சாட்டிய மனிதர்களும், அவர்களுடைய மனைவிகளும், பிள்ளைகளும் கொண்டுவரப்பட்டு சிங்கத்தின் குகையில் போடப்பட்டார்கள். ஆனால் அவர்கள் குகையின் தரையில் விழும் முன்னரே சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து, கிழித்து அவர்கள் எலும்புகளை நொறுக்கிப்போட்டன.