தானியேல் 6:10-23

தானியேல் 6:10-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இக்கட்டளை பகிரங்கமாய் அறிவிக்கப்பட்டதைத் தானியேல் அறிந்தபோது, அவன் தனது வீட்டிற்குப்போய் மேல் வீட்டறையில் எருசலேமின் பக்கமாயிருந்த ஜன்னல் அருகே போனான். அவன் தான் முன்பு செய்ததுபோலவே நாளொன்றுக்கு மூன்றுமுறை முழங்காற்படியிட்டு தன் இறைவனுக்கு நன்றி செலுத்தி மன்றாடினான். அப்பொழுது அந்த மனிதர்கள், குழுவாக அங்கு சென்றபோது தானியேல் தனது இறைவனிடம் உதவிகேட்டு மன்றாடிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் அரசனிடம் சென்று, அரச கட்டளையைப் பற்றிப்பேசி, “அரசே, முப்பது நாட்களுக்கு அரசனைத் தவிர வேறு தெய்வத்திடமோ, மனிதனிடமோ மன்றாடுபவன் எவனும் சிங்கத்தின் குகையில் போடப்படவேண்டும் என்று நீர் கட்டளை பிறப்பித்தீர் அல்லவா?” எனறு கூறினார்கள். அரசன் அவர்களிடம், “இரத்துச் செய்யமுடியாத மேதியர், பெரிசியரின் சட்டப்படி நான் பிறப்பித்த கட்டளை நிலையானது என்றான்.” அப்பொழுது அவர்கள் அரசனிடம், “யூதேயாவிலிருந்து சிறைப்பிடித்து வரப்பட்டவர்களில் ஒருவனான, தானியேல் என்பவன் உமக்கோ, நீர் எழுதிவைத்த கட்டளைக்கோ கவனம் செலுத்தாமல் இருக்கிறான். அவன் ஒரு நாளுக்கு மூன்று வேளையும் மன்றாடி வருகிறான் என்றார்கள்.” இதைக் கேட்ட அரசன் மிகவும் மனம் வருந்தினான். அவன் தானியேலைக் காப்பாற்ற உறுதிகொண்டு, மாலைவரை முழு முயற்சி செய்தான். அப்பொழுது அந்த மனிதர் குழுவாக அரசனிடம் சென்று, “அரசே; மேதியர், பெரிசியரின் சட்டத்தின்படி, அரசர் பிறப்பிக்கும் எந்த ஒரு கட்டளையும், ஆணையும் மாற்றப்படமுடியாது என்பதை நினைவில்கொள்ளும் என்றார்கள்.” எனவே அரசன் உத்தரவிட, அவர்கள் தானியேலைப் பிடித்துக்கொண்டுவந்து சிங்கத்தின் குகைக்குள் வீசினார்கள். அப்பொழுது அரசன் தானியேலிடம், “நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உனது இறைவன் உன்னை காப்பாற்றுவாராக என்றான்.” பெருங்கல்லொன்று கொண்டுவரப்பட்டு அக்குகையின் வாசலில் மூடப்பட்டது. தானியேலுக்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மாற்றப்படாதபடி, அரசன் அந்தக் கல்லைத் தனது அடையாள மோதிரத்தாலும், தனது உயர்குடி மக்களின் மோதிரத்தாலும் முத்திரையிட்டான். பின் அரசன் தன் அரண்மனைக்குத் திரும்பிப்போய் அன்றிரவை சாப்பிடாமலும், எந்தவித ஆடல், பாடல் களிப்பு இன்றியும் கழித்தான். அவனால் நித்திரைகொள்ள முடியவில்லை. மறுநாள் அதிகாலையிலேயே அரசன் எழுந்து சிங்கத்தின் குகைக்கு விரைவாகப் போனான். அரசன் குகையின் அருகில் வந்ததும் துயரமான குரலில் தானியேலைக் கூப்பிட்டு, “தானியேலே, வாழும் இறைவனின் அடியவனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற இறைவன் சிங்கங்களிடத்திலிருந்து உன்னைத் தப்புவிக்க வல்லவராய் இருந்தாரோ?” என்று தானியேலைக் கேட்டான். அதற்கு தானியேல், “அரசே, நீர் நீடூழி வாழ்க. எனது இறைவன் தனது தூதனை அனுப்பினார், அவர் சிங்கங்களின் வாய்களைக் கட்டிப்போட்டார். அவை எனக்குத் தீங்கொன்றும் செய்யவில்லை. ஏனெனில் நான் இறைவனின் முன்னிலையில் குற்றமற்றவனாகக் காணப்பட்டேன். அரசே, நான் உமக்கு முன்னிலையிலும், ஒருபொழுதும் எந்தப் பிழையும் செய்யவில்லை என்றான்.” அப்பொழுது அரசன் மிகவும் மனம் மகிழ்ந்து, தானியேலைச் சிங்கத்தின் குகையிலிருந்து தூக்கி எடுக்கும்படி உத்தரவிட்டான். தானியேல் சிங்கக் குகையிலிருந்து தூக்கி எடுக்கப்பட்டபோது, அவனில் எவ்வித காயமும் காணப்படவில்லை. ஏனெனில், அவன் தனது இறைவனில் நம்பிக்கையாயிருந்தான்.

தானியேல் 6:10-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்தில் கையெழுத்து போடப்பட்டதென்று அறிந்திருந்தாலும், தன் வீட்டிற்குள்ளேபோய், தன் மேலறையிலே எருசலேமிற்கு நேராக ஜன்னல்கள் திறந்திருக்க, அங்கே தான் முன்பு செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்செய்து, ஸ்தோத்திரம் செலுத்தினான். அப்பொழுது அந்த மனிதர்கள் ஒன்றுகூடி, தானியேல் தன் தேவனுக்கு முன்பாக ஜெபித்து விண்ணப்பம் செய்கிறதைக் கண்டார்கள். பின்பு அவர்கள் ராஜாவிற்கு முன்பாக வந்து, ராஜாவின் உத்திரவைக்குறித்து: எந்த மனிதனாகிலும் முப்பது நாட்கள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையோ மனிதனையோ நோக்கி எந்தவொரு காரியத்தைக்குறித்து விண்ணப்பம்செய்தால், அவன் சிங்கங்களின் குகையிலே போடப்படவேண்டும் என்று நீர் கட்டளைப் பத்திரத்தில் கையெழுத்திட்டீர் அல்லவா என்றார்கள். அதற்கு ராஜா: அந்தக் காரியம் மேதியர்களுக்கும் பெர்சியர்களுக்கும் இருக்கிற மாறாத பிரமாணத்தின்படி உறுதியாக்கப்பட்டதே என்றான். அப்பொழுது அவர்கள் ராஜாவை நோக்கி: சிறைபிடிக்கப்பட்ட யூதேயா தேசத்தின் மக்களில் தானியேல் என்பவன் உம்மையும் நீர் கையெழுத்திட்டுக்கொடுத்த கட்டளையையும் மதிக்காமல், தினம் மூன்று வேளையும் தான்செய்யும் விண்ணப்பத்தைச் செய்கிறான் என்றார்கள். ராஜா இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன்னில் மிகவும் கலக்கமடைந்து, தானியேலைக் காப்பாற்றுவதற்கு அவன்மேல் தன் மனதை வைத்து, அவனைத் தப்புவிப்பதற்காக சூரியன் மறையும்வரை முயற்சிசெய்துகொண்டிருந்தான். அப்பொழுது அந்த மனிதர்கள் ராஜாவினிடத்தில் கூட்டமாக வந்து: ராஜா கட்டளையிட்ட எந்த உத்திரவும் கட்டளையும் மாற்றப்படமுடியாது என்பது மேதியர்களுக்கும் பெர்சியர்களுக்கும் பிரமாணமாயிருக்கிறதென்று அறிவீராக என்றார்கள். அப்பொழுது ராஜா கட்டளையிட, அவர்கள் தானியேலைக் கொண்டுவந்து, அவனைச் சிங்கங்களின் குகையிலே போட்டார்கள்; ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார் என்றான். ஒரு கல் குகையினுடைய வாசலின்மேல் கொண்டுவந்து வைக்கப்பட்டது; தானியேலைப்பற்றிய தீர்மானம் மாற்றப்படாதபடிக்கு ராஜா தன் மோதிரத்தினாலும் தன் பிரபுக்களின் மோதிரத்தினாலும் அதின்மேல் முத்திரைபோட்டான். பின்பு ராஜா தன் அரண்மனைக்குப் போய், இரவுமுழுவதும் சாப்பிடாமலும், இசைக்கருவி முதலானவைகளைத் தனக்கு முன்பாக வரவிடாமலும் இருந்தான்; அவனுக்கு தூக்கமும் வராமற்போனது. காலையில் சூரியன் உதிக்கும்போது ராஜா எழுந்திருந்து, சிங்கங்களின் குகைக்கு வேகமாகப் போனான். ராஜா குகையின் அருகில் வந்தபோது, துயரசத்தமாகத் தானியேலைக் கூப்பிட்டு: தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான். அப்பொழுது தானியேல்: ராஜாவே நீர் என்றும் வாழ்க. சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாகக் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் அநீதி செய்ததில்லை என்றான். அப்பொழுது ராஜா தன்னில் மிகவும் சந்தோஷப்பட்டு, தானியேலைக் குகையிலிருந்து தூக்கிவிடச் சொன்னான்; அப்படியே தானியேல் குகையிலிருந்து தூக்கிவிடப்பட்டான்; அவன் தன் தேவனை நம்பியிருந்ததினால், அவனுக்கு ஒரு சேதமும் ஏற்படவில்லை.

தானியேல் 6:10-23 பரிசுத்த பைபிள் (TAERV)

தானியேல் ஒவ்வொரு நாளும் தேவனிடம் மூன்றுமுறை ஜெபம் செய்வான். தானியேல் ஒவ்வொரு நாளும் மூன்றுமுறை முழங்காலில் நின்று தேவனிடம் ஜெபித்து அவரைப் போற்றுவான். தானியேல் இப்புதிய சட்டத்தைக் கேள்விப்பட்டதும் தனது வீட்டிற்குப் போய் தனது அறையில் உள்ள மாடியின்மீது ஏறினான். தானியேல் எருசலேமை நோக்கியிருக்கிற ஜன்னல் அருகில் போய் முழங்காலிட்டு எப்பொழுதும் செய்வதுபோன்று ஜெபித்தான். அந்த ஆட்கள் குழுவாகச் சென்று தானியேலைக் கண்டுபிடித்தனர். அவர்கள் தானியேல் தேவனிடம் உதவிகேட்டு ஜெபிப்பதைக் கண்டனர். எனவே அந்த ஆட்கள் ராஜாவிடம் சென்றனர். அவர்கள் அவனிடம் அவன் இயற்றிய சட்டத்தைப்பற்றி பேசினர். அவர்கள், “தரியு ராஜாவே, எந்த மனிதனும் 30 நாள்வரையிலும் ராஜாவாகிய உம்மைத் தவிர வேறு எந்தத் தேவனையும், ஆளையும் நோக்கி யாதொரு காரியத்தைக் குறித்தும் ஜெபம் செய்தால் அவனைச் சிங்கக்கூண்டிலே போடவேண்டும் என்று நீர் கட்டளைப் பத்திரத்திலே கையெழுத்திட்டீர் அல்லவா?” என்றனர். அதற்கு ராஜா, “ஆமாம். நான் அந்தச் சட்டத்தில் கையெழுத்திட்டேன். அதோடு மேதியர்கள் மற்றும் பெர்சியர்களுக்கு இருக்கும் மாறாத சட்டத்தின்படி அது ரத்து செய்யப்படவோ அல்லது மாற்றப்படவோ கூடாது” என்றான். அந்த ஆட்கள் ராஜாவிடம், “தானியேல் என்ற பெயருடைய அந்த மனிதன் உமக்கு மரியாதை செலுத்துவதில்லை. தானியேல் யூதாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கைதிகளில் ஒருவன். தானியேல் நீர் கையெழுத்திட்ட சட்டத்தைப்பற்றி கவலைப்படவில்லை. தானியேல் ஒவ்வொரு நாளும் மூன்று முறை தன் தேவனிடத்தில் ஜெபம் பண்ணி உதவிக்காக மன்றாடுகிறான்” என்றனர். ராஜா இதனைக் கேள்விப்பட்டதும் மிக வருத்தப்பட்டு கலக்கமடைந்தான். ராஜா தானியேலைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தான். அவன் மாலைவரை இதற்கான ஒரு திட்டத்தைப்பற்றியே எண்ணினான். பிறகு அந்த ஆட்கள் ஒரு குழுவாக ராஜாவிடம் சென்றனர். அவர்கள் அவனிடம், “ராஜாவே, நினைத்துப்பாரும். மேதியர் மற்றும் பெர்சியரின் சட்டமானது, ராஜாவால் கையெழுத்திடப்பட்ட கட்டளையோ அல்லது சட்டமோ விலக்கப்படவோ மாற்றப்படவோ முடியாது என்று கூறுகிறது” என்றார்கள். எனவே, தரியு ராஜா கட்டளையிட்டான். அவர்கள் தானியேலை அழைத்து வந்து சிங்கங்களின் கூண்டில் போட்டனர். ராஜா தானியேலிடம், “நீ தொழுதுகொள்ளும் தேவன் உன்னைக் காப்பாற்றுவார் என்று நான் நம்புகிறேன்” என்று சொன்னான். ஒரு பெரிய பாறங்கல்லைக் கொண்டு வந்து சிங்கக்குகையின் வாசலை மூடினார்கள். பிறகு ராஜா தனது மோதிரத்தைப் பயன்படுத்தி பாறையின்மேல் முத்திரையிட்டான். பிறகு அவன் தன் அதிகாரிகளின் மோதிரங்களாலும் பாறையின்மேல் முத்திரையிட்டான். இது, எவராலும் பாறாங்கல்லைத் திறந்து தானியேலை கூண்டிலிருந்து வெளியே கொண்டுவர முடியாது என்று காட்டியது. பிறகு ராஜாவாகிய தரியு தன் வீட்டிற்குத் திரும்பிப் போனான். ராஜா அன்றிரவு உணவு உண்ணவில்லை, அவன் யாரும் வந்து வேடிக்கை செய்து மகிழ்வூட்டுவதை விரும்பவில்லை. ராஜாவால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. மறுநாள் காலையில் கிழக்கு வெளுக்கும்போது ராஜாவாகிய தரியு எழுந்து சிங்கங்களின் குகைக்கு ஓடினான். ராஜா மிகத்துயரமாக இருந்தான். அவன் சிங்கங்களின் குகைக்கருகில் போய், தானியேலைக் கூப்பிட்டான். ராஜா, “தானியேலே ஜீவனுள்ள தேவனுடைய ஊழியனே, நீ எப்பொழுதும் உன் தேவனுக்குச் சேவைசெய்கிறாயே, உனது தேவனால் உன்னைச் சிங்கங்களிடமிருந்து காப்பாற்ற முடிந்ததா?” என்றான். தானியேல் அதற்குப் பதிலாக, “ராஜாவே, நீர் என்றென்றும் வாழ்க. தேவன் என்னைக் காக்கத் தூதனை அனுப்பினார். தூதன் சிங்கங்களின் வாயை அடைத்தான். சிங்கங்கள் என்னைக் காயப்படுத்தவில்லை. ஏனென்றால், நான் குற்றமறியாதவன் என்று தேவன் அறிவார். ராஜாவே நான் உமக்கு எதிராக எந்தக் கேடும் செய்யவில்லை” என்றான். ராஜாவாகிய தரியு மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். அவன் தனது வேலைக்காரர்களிடம் சிங்ககுகையிலிருந்து தானியேலை வெளியேற்றும்படிச் சொன்னான். தானியேலைச் சிங்கக்குகையிலிருந்து வெளியே அழைத்தபோது அவர்கள் அவன் உடலில் எவ்வித காயத்தையும் காணவில்லை. தானியேல் சிங்கங்களால் காயப்படுத்தப்படவில்லை, ஏனென்றால் அவன் தேவனிடம் விசுவாசம் வைத்தான்.

தானியேல் 6:10-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான். அப்பொழுது அந்த மனுஷர் கூட்டங்கூடி, தானியேல் தன் தேவனுக்கு முன்பாக ஜெபம்பண்ணி விண்ணப்பம் செய்கிறதைக் கண்டார்கள். பின்பு அவர்கள் ராஜாவுக்கு முன்பாக வந்து, ராஜாவின் தாக்கீதைக்குறித்து: எந்த மனுஷனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி யாதொரு காரியத்தைக்குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்படவேண்டும் என்று நீர் கட்டளைப்பத்திரத்தில் கையெழுத்து வைத்தீர் அல்லவா என்றார்கள். அதற்கு ராஜா: அந்தக் காரியம் மேதியருக்கும் பெர்சியருக்கும் இருக்கிற மாறாத பிரமாணத்தின்படி உறுதியாக்கப்பட்டதே என்றான். அப்பொழுது அவர்கள் ராஜாவை நோக்கி: சிறைப்பிடிக்கப்பட்ட யூதேயா தேசத்தின் புத்திரரில் தானியேல் என்பவன் உம்மையும் நீர் கையெழுத்து வைத்துக்கொடுத்த கட்டளையையும் மதியாமல், தினம் மூன்று வேளையும் தான்பண்ணும் விண்ணப்பத்தைப்பண்ணுகிறான் என்றார்கள். ராஜா இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன்னில் மிகவும் சஞ்சலப்பட்டு, தானியேலைக் காப்பாற்றும்படிக்கு அவன்பேரில் தன் மனதை வைத்து, அவனைத் தப்புவிக்கிறதற்காகச் சூரியன் அஸ்தமிக்குமட்டும் பிரயாசப்பட்டுக்கொண்டிருந்தான். அப்பொழுது அந்த மனுஷர் ராஜாவினிடத்தில் கூட்டமாய் வந்து: ராஜா கட்டளையிட்ட எந்தத் தாக்கீதும் கட்டளையும் மாற்றப்படக்கூடாதென்பது மேதியருக்கும் பெர்சியருக்கும் பிரமாணமாயிருக்கிறதென்று அறிவீராக என்றார்கள். அப்பொழுது ராஜா கட்டளையிட, அவர்கள் தானியேலைக் கொண்டுவந்து, அவனைச் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள்; ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார் என்றான். ஒரு கல் கெபியினுடைய வாசலின்மேல் கொண்டுவந்து வைக்கப்பட்டது; தானியேலைப்பற்றிய தீர்மானம் மாற்றப்படாதபடிக்கு ராஜா தன் மோதிரத்தினாலும் தன் பிரபுக்களின் மோதிரத்தினாலும் அதின்மேல் முத்திரைபோட்டான். பின்பு ராஜா தன் அரமனைக்குப் போய், இராமுழுதும் போஜனம்பண்ணாமலும், கீதவாத்தியம் முதலானவைகளைத் தனக்கு முன்பாக வரவொட்டாமலும் இருந்தான்; அவனுக்கு நித்திரையும் வராமற்போயிற்று. காலமே கிழக்கு வெளுக்கும்போது ராஜா எழுந்திருந்து, சிங்கங்களின் கெபிக்குத் தீவிரமாய்ப் போனான். ராஜா கெபியின் கிட்டவந்தபோது, துயரசத்தமாய்த் தானியேலைக் கூப்பிட்டு: தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான். அப்பொழுது தானியேல்: ராஜாவே நீர் என்றும் வாழ்க. சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான். அப்பொழுது ராஜா தன்னில் மிகவும் சந்தோஷப்பட்டு, தானியேலைக் கெபியிலிருந்து தூக்கிவிடச் சொன்னான்; அப்படியே தானியேல் கெபியிலிருந்து தூக்கிவிடப்பட்டான்; அவன் தன் தேவன்பேரில் விசுவாசித்திருந்தபடியால், அவனில் ஒரு சேதமும் காணப்படவில்லை.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்