தானியேல் 3:13-23 - Compare All Versions

தானியேல் 3:13-23 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

அதைக்கேட்ட அரசன் நேபுகாத்நேச்சார் கடுங்கோபங்கொண்டு சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரை அழைத்துவரக் கட்டளையிட்டான். எனவே அவர்கள் அரசனின் முன் கொண்டுவரப்பட்டார்கள். அப்பொழுது நேபுகாத்நேச்சார் அவர்களிடம், “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் எனது தெய்வங்களைப் பணிந்துகொள்ளாமலும், நான் நிறுத்தியுள்ள தங்கச் சிலையை வணங்காமலும் இருப்பது உண்மையா?” என்று கேட்டான். “இப்பொழுதும் கொம்பு வாத்தியம், புல்லாங்குழல், சித்தார், வீணை, யாழ், நாதஸ்வரம் ஆகியவற்றின் சத்தத்தையும், மற்ற எல்லா இசைகளையும் நீங்கள் கேட்கும்போது, கீழே விழுந்து நான் நிறுத்திய சிலையை வணங்கினீர்களென்றால் உங்களுக்கு நல்லது. அப்படி நீங்கள் வணங்காவிட்டால், உடனே பற்றியெரிகிற நெருப்புச்சூளையில் போடப்படுவீர்கள். அப்பொழுது எனது கையிலிருந்து உங்களை விடுவிக்கிற தெய்வம் எது என்றான்?” அதற்கு சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அரசனிடம், “நேபுகாத்நேச்சாரே, இதுபற்றி நாங்கள் உம்மோடு வாதிடவேண்டிய அவசியமில்லை. அரசே, நாங்கள் பற்றியெரிகிற நெருப்புச்சூளையில் போடப்பட்டால், நாங்கள் ஆராதிக்கிற இறைவன் அதிலிருந்து எங்களைக் காப்பாற்ற முடியுமானவராய் இருக்கிறார். உமது கையிலிருந்தும் அவர் எங்களை விடுவிப்பார். அவ்வாறு விடுவிக்காமற்போனாலுங்கூட, அரசே, நாங்கள் உமது தெய்வங்களுக்கு பணிசெய்யவோ, நீர் நிறுத்திய சிலையை வணங்கவோ மாட்டோம். இதை நீர் அறிய வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம் என்றார்கள்.” அப்பொழுது நேபுகாத்நேச்சார் அரசன், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர்மீது கடுங்கோபம் கொண்டான். அவர்களைப்பற்றி அவன் கொண்டிருந்த மனப்பாங்கு மாற்றமடைந்தது. அவன் அந்த சூளையை வழக்கத்தைவிட ஏழுமடங்கு அதிகமாகச் சூடாக்கும்படி கட்டளையிட்டான். பின்பு சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைக் கட்டி, பற்றியெரிகிற நெருப்புச்சூளையிலே போடும்படி தனது படையிலுள்ள வலிமையான போர் வீரருக்குக் கட்டளையிட்டான். அப்படியே இந்த மனிதர் தாங்கள் அணிந்திருந்த மேலுடைகளோடும், காற்சட்டைகளோடும், தலைப்பாகைகளோடும் மற்றும் உடைகளோடும் கட்டப்பட்டு, பற்றியெரியும் நெருப்புச்சூளையினுள் எறியப்பட்டார்கள். அரசனின் கட்டளை அவசரமானதாயிருந்ததாலும் சூளையோ மிகவும் சூடாயிருந்ததாலும் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைக் கொண்டுசென்ற வீரர்களையோ நெருப்பு ஜூவாலை எரித்துப்போட்டது. அதேவேளை இம்மூவரும் உறுதியாகக் கட்டுண்டவர்களாய் பற்றியெரியும் நெருப்புச்சூளைக்குள் விழுந்தார்கள்.

தானியேல் 3:13-23 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அப்பொழுது நேபுகாத்நேச்சார் கடுங்கோபங்கொண்டு சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் அழைத்துக்கொண்டுவரும்படி கட்டளையிட்டான்; அவர்கள் அந்த மனிதர்களை ராஜாவின் சமுகத்தில் கொண்டுவந்து விட்டபோது, நேபுகாத்நேச்சார் அவர்களை நோக்கி: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் என் தெய்வங்களுக்கு ஆராதனைசெய்யாமலும் நான் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருந்தது உண்மைதானா? இப்போதும் எக்காளம், நாதசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான இசைக்கருவிகளின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, கீழேவிழுந்து, நான் உண்டாக்கிய சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாமலிருந்தால், அந்நேரமே எரிகிற நெருப்புச்சூளையின் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றான். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு பதில்சொல்ல எங்களுக்கு அவசியமில்லை. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற நெருப்புச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தெய்வங்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்பது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள். அப்பொழுது நேபுகாத்நேச்சாருக்கு மிகவும் கோபம்கொண்டு: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு விரோதமாக அவனுடைய முகம் வேறுபட்டது; சூளையைச் சாதாரணமாகச் சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாகச் சூடாக்கும்படி கட்டளைகொடுத்து, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற நெருப்புச்சூளையிலே போடுவதற்கு அவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய மனிதர்களுக்குக் கட்டளையிட்டான். அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும், கால்சட்டைகளோடும், தலைப்பாகைகளோடும் மற்ற உடைகளோடும் கட்டப்பட்டு, எரிகிற நெருப்புச்சூளையின் நடுவிலே போடப்பட்டார்கள். ராஜாவின் கட்டளை கடுமையாக இருந்ததாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்ததாலும், நெருப்பு ஜூவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன மனிதர்களைக் கொன்றுபோட்டது. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று மனிதர்களும் கட்டப்பட்டவர்களாக எரிகிற நெருப்புச்சூளையின் நடுவிலே விழுந்தார்கள்.

தானியேல் 3:13-23 TAERV (பரிசுத்த பைபிள்)

நேபுகாத்நேச்சார் மிகவும் கோபங்கொண்டான். அவன் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரை அழைத்தான். எனவே அவர்கள் ராஜா முன்பு கொண்டுவரப்பட்டார்கள். நேபுகாத்நேச்சார் அவர்களிடம், “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரே நீங்கள் எனது தெய்வத்தைத் தொழவில்லை என்பது உண்மையா? நீங்கள், என்னால் நிறுவப்பட்ட தங்க விக்கிரகத்தைத் தொழவில்லை என்பது உண்மையா? இப்பொழுது நீங்கள் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு ஆகிய இசைக் கருவிகளின் ஒலியைக் கேட்டதும் நான் நிறுவிய தங்க விக்கிரகத்தைப் பணிந்து தொழவேண்டும். நான் செய்திருக்கிற இவ்விக்கிரகத்தை நீங்கள் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது. ஆனால், நீங்கள் இதனைத் தொழாவிட்டால், மிகவும் சூடான எரிகிற அக்கினிச் சூளையில் போடப்படுவீர்கள். பிறகு உங்களை என் அதிகாரத்திலிருந்து எந்தத் தேவனாலும் காப்பாற்ற முடியாது” என்றான். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவிடம்: “நேபுகாத்நேச்சாரே, நாங்கள் உம்மிடம் இவற்றைப்பற்றி விளக்கிடத் தேவையில்லை. நீர் எங்களை எரிகிற அக்கினி சூளையில் போட்டால் நாங்கள் சேவிக்கிற எங்கள் தேவன் எங்களைக் காப்பாற்றுவார். அவர் விரும்பினால் உமது வல்லமையிலிருந்தும் எங்களைக் காப்பாற்றுவார். ஆனால் எங்களை அவர் காப்பாற்றாவிட்டாலும்கூட, நாங்கள் உமது தெய்வங்களைச் சேவிக்கமாட்டோம். நீர் நிறுவிய தங்க விக்கிரகத்தை தொழமாட்டோம். இது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கவேண்டும்” என்றார்கள். பின்னர் நேபுகாத்நேச்சார் மிகவும் கோபங்கொண்டான். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கெதிரான கோபம் அவனது முகத்தில் வெளிப்பட்டது. அவன், வழக்கத்தை விடச் சூளையை ஏழு மடங்கு மிகுதியாகச் சூடாக்கும்படிக் கட்டளையிட்டான். பிறகு நேபுகாத்நேச்சார் தனது வீரர்களில் மிகவும் பலமானவர்களிடம் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரை நன்றாகக் கட்டும்படி கட்டளையிட்டான். ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரை அக்கினி சூளையிலே போடும்படி வீரர்களிடம் கட்டளையிட்டான். எனவே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் கட்டப்பட்டு அக்கினி சூளையிலே போடப்பட்டனர். அவர்கள் சால்வை, நிசார் தலைப்பாகை, மற்றும் ஆடைகளை அணிந்திருந்தனர். ராஜா கட்டளையிடும்போது மிகவும் கோபமுடையவனாக இருந்தான். எனவே அவர்கள் சூளையைச் சீக்கிரமாக சூடாக்கினார்கள். அந்நெருப்பு பலமான வீரர்களையும் எரிக்கும் அளவில் மிகவும் சூடாக இருந்தது. அவர்கள் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைத் தூக்கிச் சென்று அக்கினிச் சூளையில் போடுவதற்கு அருகில் சென்றபோது அவ்வீரர்களை நெருப்பு அழித்துப்போட்டது. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் இறுகக் கட்டப்பட்ட நிலையில் நெருப்பில் விழுந்தனர்.

தானியேல் 3:13-23 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அப்பொழுது நேபுகாத்நேச்சார் உக்கிரகோபங்கொண்டு சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் அழைத்துக்கொண்டுவரும்படி கட்டளையிட்டான்; அவர்கள் அந்தப் புருஷரை ராஜாவின் சமுகத்தில் கொண்டுவந்துவிட்டபோது, நேபுகாத்நேச்சார் அவர்களை நோக்கி: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் என் தேவர்களுக்கு ஆராதனைசெய்யாமலும் நான் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருந்தது மெய்தானா? இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, தாழ விழுந்து, நான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாதிருந்தீர்களேயாகில், அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றான். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவுசொல்ல எங்களுக்கு அவசியமில்லை. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள். அப்பொழுது நேபுகாத்நேச்சாருக்குக் கடுங்கோபமூண்டு: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு விரோதமாய் அவனுடைய முகம் வேறுபட்டது; சூளையைச் சாதாரணமாய்ச் சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி உத்தரவுகொடுத்து, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற அக்கினிச்சூளையிலேபோடுவதற்கு அவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய புருஷருக்குக் கட்டளையிட்டான். அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும், நிசார்களோடும், பாகைகளோடும் மற்ற வஸ்திரங்களோடும் கட்டப்பட்டு, எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்பட்டார்கள். ராஜாவின் கட்டளை கடுமையாயிருந்தபடியினாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும், அக்கினி ஜூவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன புருஷரைக் கொன்றுபோட்டது. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று புருஷரும் கட்டுண்டவர்களாய் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே விழுந்தார்கள்.