தானியேல் 2:24-30
தானியேல் 2:24-30 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பாபிலோனின் ஞானிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும்படி, அரசனால் நியமிக்கப்பட்ட ஆரியோகிடம் தானியேல் போய், “நீர் பாபிலோன் ஞானிகளை மரண தண்டனைக்குள்ளாக்க வேண்டாம். என்னை அரசனிடம் அழைத்துச் செல்லும். அரசனுடைய கனவின் விளக்கத்தை நான் அவருக்குச் சொல்வேன் என்றான்.” ஆரியோக் உடனே தானியேலை அரசனிடம் அழைத்துச்சென்று, “உமது கனவுக்கான விளக்கத்தைச் சொல்லக்கூடிய ஒருவனை, யூதா நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்களில் கண்டுபிடித்தேன் என்றான்.” அப்பொழுது அரசன், பெல்தெஷாத்சார் என்று அழைக்கப்பட்ட தானியேலிடம், “எனது கனவில் எதைக் கண்டேன் என்று சொல்லவும், அதன் விளக்கத்தைக் கூறவும் உன்னால் முடியுமா?” என்று கேட்டான். அதற்குத் தானியேல் அரசனிடம், “அரசர் வெளிப்படுத்துபடி கேட்டிருக்கும் இந்த மறைபொருளை அரசருக்கு விளக்கிக்கூற எந்த ஞானியாலோ, மந்திரவாதியாலோ, மாந்திரீகனாலோ, குறிசொல்கிறவர்களாலோ முடியாது. ஆனால் அரசே, மறைபொருட்களை வெளிப்படுத்துகிற ஒரு இறைவன் பரலோகத்தில் இருக்கிறார். வரப்போகும் நாட்களில் நிகழப்போவதை அவரே நேபுகாத்நேச்சார் அரசருக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். நீர் படுக்கையில் படுத்திருந்தபோது, நீர் கண்ட கனவும், உமது மனதைக் கடந்துசென்ற தரிசனங்களும் இவையே: “அரசே, நீர் படுத்திருக்கையில் வரப்போகும் காரியங்களை உமது மனம் சிந்திக்கத் தொடங்கியது. அந்நேரத்தில் மறைபொருட்களை வெளிப்படுத்துகிறவர், இனி நிகழப்போவது என்ன என்பதை உமக்குக் காண்பித்தார். என்னைப் பொறுத்தவரையில் வாழ்கின்ற மற்ற மனிதர்களைவிட நான் மிகுந்த ஞானமுள்ளவன் என்பதால் எனக்கு இந்தக் கனவின் மறைபொருள் வெளிப்படுத்தப்படவில்லை; அரசராகிய நீர் அதற்குரிய விளக்கத்தை அறிந்துகொள்ளும்படியும், உமது மனதில் கடந்துசென்றவற்றை நீர் விளங்கிக்கொள்ளும்படியுமே இந்த கனவின் மறைபொருள் எனக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
தானியேல் 2:24-30 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்பு தானியேல் பாபிலோனின் ஞானிகளை அழிக்க ராஜா கட்டளையிட்ட ஆரியோகினிடத்தில் போய்: பாபிலோனின் ஞானிகளை அழிக்காதேயும், என்னை ராஜாவின் முன்பாக அழைத்துக்கொண்டுபோம்; ராஜாவிற்கு அர்த்தத்தைத் தெரிவிப்பேன் என்று சொன்னான். அப்பொழுது ஆரியோகு தானியேலை ராஜாவின்முன் வேகமாக அழைத்துக்கொண்டுபோய்: சிறைப்பட்டுவந்த யூதேயா தேசத்தாரில் ஒரு மனிதனைக் கண்டுபிடித்தேன்; அவன் ராஜாவிற்கு அர்த்தத்தைத் தெரிவிப்பான் என்றான். ராஜா பெல்தெஷாத்சாரென்னும் பெயருள்ள தானியேலை நோக்கி: நான் கண்ட கனவுகளையும் அதின் அர்த்தத்தையும் நீ எனக்கு அறிவிக்கமுடியுமா என்று கேட்டான். தானியேல் ராஜசமுகத்தில் மறுமொழியாக: ராஜா கேட்கிற மறைபொருளை ராஜாவிற்குத் தெரிவிக்க ஞானிகளாலும், சோதிடராலும், விண் ஆராய்ச்சியாளர்களாலும், குறிசொல்லுகிறவர்களாலும் முடியாது. மறைபொருட்களை வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குத் தெரிவித்திருக்கிறார்; உம்முடைய கனவும் உமது படுக்கையின்மேல் உம்முடைய எண்ணத்தில் உண்டான தரிசனங்களும் என்னவென்றால்: ராஜாவே, உம்முடைய படுக்கையின்மேல் நீர் படுத்திருக்கும்போது, இனிமேல் சம்பவிக்கப்போகிறதென்ன என்கிற நினைவுகள் உமக்குள் எழும்பினது; அப்பொழுது மறைபொருட்களை வெளிப்படுத்துகிறவர் சம்பவிக்கப்போகிறதை உமக்குத் தெரிவித்தார். உயிரோடிருக்கிற எல்லோரைப்பார்க்கிலும் எனக்கு அதிக ஞானம் உண்டென்பதினாலே அல்ல; அர்த்தம் ராஜாவிற்குத் தெரியவரவும், உம்முடைய இருதயத்தின் நினைவுகளை நீர் அறியவும், இந்த மறைபொருள் எனக்கு வெளியாக்கப்பட்டது.
தானியேல் 2:24-30 பரிசுத்த பைபிள் (TAERV)
பின்னர் தானியேல், ஆரியோகுவிடம் சென்றான். ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனிலுள்ள ஞானிகளைக் கொல்ல ஆரியோகுவைத் தேர்ந்தெடுத்திருந்தான். தானியேல் ஆரியோகிடம், “பாபிலோனிலுள்ள ஞானிகளைக் கொல்லவேண்டாம். என்னை ராஜாவிடம் கொண்டுபோங்கள். நான் அவரிடம் அவரது கனவையும் அதன் பொருளையும் கூறுவேன்” என்றான். எனவே ஆரியோகு தானியேலை மிக விரைவாக ராஜாவிடம் அழைத்துச் சென்றான். ஆரியோகு ராஜாவிடம், “நான் யூதாவிலுள்ள கைதிகளில் ஒருவனைக் கண்டுபிடித்திருக்கிறேன். அவன் ராஜாவிடம் அவரது கனவைப்பற்றிச் சொல்லமுடியும்” என்றான். ராஜா தானியேலிடம் (பெல்தெஷாத்சார்), “உன்னால் எனது கனவையும் அதன் பொருளையும் பற்றி சொல்லமுடியுமா?” என்று கேட்டான். தானியேல்: “ராஜாவான நேபுகாத்நேச்சாரே, எந்த ஞானிகளாலும், எந்த ஜோசியர்களாலும், எந்த கல்தேயர்களாலும் ராஜாவின் இரகசியம் குறித்த கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது. ஆனால் பரலோகத்தில் இரகசியங்களைப் பற்றிச் சொல்ல ஒரு தேவன் இருக்கிறார். தேவன் ராஜாவான நேபுகாத்நேச்சாருக்கு வருங்காலத்தில் என்ன நடைபெறும் என்பதைக் காட்ட கனவுகளைக் கொடுத்தார். இதுதான் உமது கனவு. உமது படுக்கையில் படுத்துக்கொண்டு நீர் பார்த்தவை இவைதான். ராஜாவே, நீர் உமது படுக்கையில் படுத்துக்கொண்டிருந்தீர். நீர் வருங்காலத்தைப் பற்றி எண்ணிப் பார்க்கத் தொடங்கினீர். எதிர்காலத்தைக் குறித்த இரகசியங்களைத் தேவன் ஜனங்களுக்குச் சொல்லமுடியும். அவர் உமக்கு வருங்காலத்தில் என்ன நிகழும் என்பதைக் காட்டினார். தேவன் என்னிடம் இந்த இரகசியத்தைச் சொன்னார். ஏன்? நான் மற்றவர்களைவிட ஞானம் கொண்டவன் என்பதற்காக அல்ல. ராஜாவான நீர் அந்த கனவின் பொருளை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தேவன் என்னிடம் சொன்னார். அதே வழியில், உம் மனதில் ஓடிய நினைவுகளையும் நீர் புரிந்துகொள்வீர்.
தானியேல் 2:24-30 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்பு தானியேல் பாபிலோனின்ஞானிகளை அழிக்க ராஜா கட்டளையிட்ட ஆரியோகினிடத்தில் போய்: பாபிலோனின் ஞானிகளை அழிக்காதேயும், என்னை ராஜாவின் முன்பாக அழைத்துக்கொண்டுபோம்; ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பேன் என்று சொன்னான். அப்பொழுது ஆரியோகு தானியேலை ராஜாவின் முன்பாகத் தீவிரமாய் அழைத்துக்கொண்டுபோய்: சிறைப்பட்டுவந்த யூதேயா தேசத்தாரில் ஒரு புருஷனைக் கண்டுபிடித்தேன்; அவன் ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பான் என்றான். ராஜா பெல்தெஷாத்சாரென்னும் நாமமுள்ள தானியேலை நோக்கி: நான் கண்ட சொப்பனங்களையும் அதின் அர்த்தத்தையும் நீ எனக்கு அறிவிக்கக்கூடுமா என்று கேட்டான். தானியேல் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: ராஜா கேட்கிற மறைபொருளை ராஜாவுக்குத் தெரிவிக்க ஞானிகளாலும், ஜோசியராலும், சாஸ்திரிகளாலும், குறிசொல்லுகிறவர்களாலும் கூடாது. மறைபொருள்களை வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குத் தெரிவித்திருக்கிறார்; உம்முடைய சொப்பனமும் உமது படுக்கையின்மேல் உம்முடைய தலையில் உண்டான தரிசனங்களும் என்னவென்றால்: ராஜாவே, உம்முடைய படுக்கையின்மேல் நீர் படுத்திருக்கையில், இனிமேல் சம்பவிக்கப்போகிறதென்ன என்கிற நினைவுகள் உமக்குள் எழும்பிற்று; அப்பொழுது மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவர் சம்பவிக்கப்போகிறதை உமக்குத் தெரிவித்தார். உயிரோடிருக்கிற எல்லாரைப்பார்க்கிலும் எனக்கு அதிக ஞானம் உண்டென்பதினாலே அல்ல; அர்த்தம் ராஜாவுக்குத் தெரியவரவும், உம்முடைய இருதயத்தின் நினைவுகளை நீர் அறியவும், இந்த மறைபொருள் எனக்கு வெளியாக்கப்பட்டது.