கொலோசெயர் 2:6-10

கொலோசெயர் 2:6-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எனவே கிறிஸ்து இயேசுவை நீங்கள் கர்த்தராய் ஏற்றுக்கொண்டபடியே, அவரில் தொடர்ந்து வாழுங்கள். நீங்கள் அவரில் வேரூன்றி கட்டி எழுப்பப்பட்டவர்களாகவும் இருங்கள், உங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது போலவே விசுவாசத்தில் பெலன் கொண்டவர்களாயும், நன்றி மிக்கவர்களாயும் வாழுங்கள். தங்களுடைய வெறுமையான, ஏமாற்றும் தத்துவ ஞானத்தினால், ஒருவனும் உங்களை சிக்கவைக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். இவை மனித பாரம்பரியத்திலும், உலக அடிப்படைக் கொள்கையிலுமே தங்கியிருக்கின்றன. இவை கிறிஸ்துவை அடிப்படையாகக் கொண்டவையல்ல. ஏனெனில் இறைவனின் முழுநிறைவும் மனித உடலின்படி கிறிஸ்துவில் குடிகொண்டிருக்கிறது. ஆதலால் நீங்களும் கிறிஸ்துவில் நிறைவு பெற்றவர்களாய் இருக்கிறீர்கள். அவரே எல்லா வல்லமைகளுக்கும், அதிகாரங்களுக்கும் மேலாக தலைவராய் இருக்கிறார்.

கொலோசெயர் 2:6-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆகவே, நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, நன்றி செலுத்துவதோடு அதிலே பெருகுவீர்களாக. உலக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அது மனிதர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலக வழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப்பற்றினதல்ல. ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் குடிகொண்டிருக்கிறது. மேலும் எல்லாத் துரைத்தனங்களுக்கும் அதிகாரத்திற்கும் தலைவராக இருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணம் உள்ளவர்களாக இருக்கிறீர்கள்.

கொலோசெயர் 2:6-10 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நீங்கள் அடைந்துள்ளீர்கள். எனவே எதையும் மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து அவரைப் பின்பற்றி வாழுங்கள். கிறிஸ்துவை மட்டும் நீங்கள் சார்ந்திருங்கள். வாழ்க்கையும், பலமும் அவரிடமிருந்து வருகின்றன. உங்களுக்கு அந்த உண்மை கற்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த உண்மையான போதனையில் நீங்கள் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும். எப்பொழுதும் நன்றி உள்ளவர்களாய் இருங்கள். பொய்யான எண்ணங்களாலும், பொருளற்ற சொற்களாலும் எவரும் உங்களை வழி நடத்திச் செல்லாதபடி உறுதியாய் இருங்கள். இத்தகைய எண்ணங்கள் கிறிஸ்துவிடமிருந்து வராது. மக்களிடமிருந்தே வருகிறது. இவை உலக மக்களின் பயனற்ற எண்ணங்கள். தேவனுடைய முழுமை கிறிஸ்துவிடம் வாழ்கிறது. கிறிஸ்துவுக்குள் நீங்கள் முழுமையாக இருக்கிறீர்கள். உங்களுக்கு வேறு எதுவும் தேவை இல்லை. அனைத்து அதிகாரங்களையும் ஆள்வோர்களையும் ஆளுபவர் கிறிஸ்து ஆவார்.

கொலோசெயர் 2:6-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக. லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப்பற்றினதல்ல. ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது. மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.

கொலோசெயர் 2:6-10

கொலோசெயர் 2:6-10 TAOVBSIகொலோசெயர் 2:6-10 TAOVBSI

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்