கொலோசெயர் 2:1-23
கொலோசெயர் 2:1-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
உங்களுக்காகவும், லவோதிக்கேயா பட்டணத்தில் இருக்கிறவர்களுக்காகவும், இன்னும் நேரடியாக என்னைச் சந்தித்திராத மற்றெல்லோருக்காகவும், நான் எவ்வளவாய் போராடுகிறேன் என்பதை நீங்கள் அறியவேண்டும் என நான் விரும்புகிறேன். நீங்களும் அவர்களும் இருதயத்தில் உற்சாகமடைந்தவர்களாய், அன்பினால் ஐக்கியப்பட்டிருக்கவேண்டும் என்பதே என் நோக்கம். இதனால் நீங்கள் முழுமையான விளக்கத்தை நிறைவாகப் பெற்று, இறைவனுடைய இரகசியத்தை அறிந்துகொள்வீர்கள். அந்த இரகசியம் கிறிஸ்துவே. ஞானம், அறிவு ஆகிய செல்வங்கள் எல்லாம் கிறிஸ்துவுக்குள்ளேயே மறைந்திருக்கின்றன. மனதைக் கவரும் விவாதங்களினால் ஒருவரும் உங்களை ஏமாற்றாதபடிக்கே நான் இதை உங்களுக்குச் சொல்கிறேன். உடலால் நான் உங்களுடன் இல்லாதிருந்தாலும், ஆவியில் நான் உங்களுடனேயே இருக்கிறேன். நீங்கள் எவ்வளவு ஒழுங்குள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்பதையும், கிறிஸ்துவில் நீங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தில் எவ்வளவு உறுதி உள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்பதையும் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். எனவே கிறிஸ்து இயேசுவை நீங்கள் கர்த்தராய் ஏற்றுக்கொண்டபடியே, அவரில் தொடர்ந்து வாழுங்கள். நீங்கள் அவரில் வேரூன்றி கட்டி எழுப்பப்பட்டவர்களாகவும் இருங்கள், உங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது போலவே விசுவாசத்தில் பெலன் கொண்டவர்களாயும், நன்றி மிக்கவர்களாயும் வாழுங்கள். தங்களுடைய வெறுமையான, ஏமாற்றும் தத்துவ ஞானத்தினால், ஒருவனும் உங்களை சிக்கவைக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். இவை மனித பாரம்பரியத்திலும், உலக அடிப்படைக் கொள்கையிலுமே தங்கியிருக்கின்றன. இவை கிறிஸ்துவை அடிப்படையாகக் கொண்டவையல்ல. ஏனெனில் இறைவனின் முழுநிறைவும் மனித உடலின்படி கிறிஸ்துவில் குடிகொண்டிருக்கிறது. ஆதலால் நீங்களும் கிறிஸ்துவில் நிறைவு பெற்றவர்களாய் இருக்கிறீர்கள். அவரே எல்லா வல்லமைகளுக்கும், அதிகாரங்களுக்கும் மேலாக தலைவராய் இருக்கிறார். நீங்கள் உங்கள் மாம்ச இயல்பை அகற்றிப்போட்டதினால், நீங்களும் கிறிஸ்துவில் விருத்தசேதனத்தைப் பெற்றீர்கள். இந்த விருத்தசேதனம் மனிதருடைய கைகளினால் செய்யப்பட்டது அல்ல. இது கிறிஸ்துவினாலேயே செய்யப்பட்டது. திருமுழுக்கினால் நீங்கள் அவருடன் அடக்கம்பண்ணப்பட்டு, இறைவனுடைய வல்லமையில் விசுவாசத்தின் மூலமாக, அவருடனேகூட எழுப்பப்பட்டும் இருக்கிறீர்கள். இறைவனே இறந்தோரிடத்தில் இருந்து கிறிஸ்துவை உயிருடன் எழுப்பினார். நீங்கள் உங்கள் பாவங்களிலேயும், மாம்சத்தின்படி விருத்தசேதனம் செய்யப்படாததிலேயும் இறந்தவர்களாய் இருக்கையில், இறைவன் உங்களைக் கிறிஸ்துவுடன் உயிர்ப்பித்தார். அவர் நம்முடைய பாவங்களையெல்லாம் மன்னித்தார். நமக்கு விரோதமாய் எழுதப்பட்டிருந்த கட்டளைகளைக்கொண்ட கடன் பத்திரத்தை அவர் நீக்கி, அதைச் சிலுவையில் ஆணியடித்து இல்லாமல் அழித்துவிட்டார். அவர் ஆளும் வல்லமைகளிடமிருந்தும், அதிகாரங்களிடமிருந்தும் அவற்றின் வல்லமைகளைக் களைந்து, சிலுவையினால் அவற்றின்மேல் வெற்றிகொண்டு, அவற்றைப் பகிரங்கக் காட்சிப் பொருளாக்கினார். எனவே நீங்கள் சாப்பிடுவது, குடிப்பது என்பவைகளைக் குறித்தோ, பண்டிகைகளையும், அமாவாசைகளையும், ஓய்வுநாட்களையும் குறித்தோ, ஒருவரும் உங்களை குற்றப்படுத்தாமல் இருக்கவேண்டும். இவையெல்லாம் வரவேண்டியிருந்த காரியங்களின் வெறும் நிழலே; உண்மைப் பொருளோ கிறிஸ்துவில் காணப்படுகின்றது. பொய்யான தாழ்மையிலும், இறைவனின் தூதர்களை ஆராதனை செய்வதிலும் மகிழ்கிற அவர்களால், நீங்கள் உங்கள் வெகுமதியைப் பெற்றுக்கொள்வதை இழந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படிப்பட்டவன் தான் கண்ட தரிசனங்களைக்குறித்து, அதிகமாய் விவரித்துச் சொல்கிறான். ஆவிக்குரிய தன்மையற்ற அவனுடைய மனம் வீணான சிந்தனைகளில் பெருமைகொள்கிறது. இப்படிப்பட்டவன் தலையாகிய கிறிஸ்துவிலிருந்து தொடர்பை இழந்துவிட்டான். அவரிடமிருந்தே மூட்டுக்களினாலும் தசைநார்களினாலும் தாங்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டிருக்கிற முழு உடலும், இறைவன் வளர்ச்சியைக் கொடுக்க, அது வளர்ச்சியைப் பெறுகிறது. நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு இறந்தீர்கள். அப்படியானால் நீங்கள் அதற்கு இன்னும் உட்பட்டவர்கள்போல் உலகத்தின் கட்டளைகளுக்கு ஏன் கீழ்ப்படிகிறீர்கள்? “பயன்படுத்தாதே! ருசிபாராதே! தொடாதே!” இவையெல்லாம் காலப்போக்கில் ஒழிந்துபோகின்றனவே. ஏனெனில் இவை மனிதருடைய கட்டளைகளையும், போதனைகளையும் அடிப்படையாகக் கொண்டவை. அவர்களுடைய இந்தக் கட்டளைகள், தாங்களே தங்கள்மேல் திணித்துக் கொண்ட வழிபாட்டையும், பொய்த் தாழ்மையையும், உடல் ஒடுக்குதல்களையும் பொறுத்தவரையில் ஞானமானதுபோல் தோன்றலாம். ஆனால் உடல் ஆசைகளை அடக்கி ஆள்வதற்கு இவை பயனற்றது.
கொலோசெயர் 2:1-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
உங்களுக்காகவும் லவோதிக்கேயாவில் இருக்கிறவர்களுக்காகவும், சரீரத்தில் என் முகத்தைக் காணாதிருக்கிற மற்றெல்லோருக்காகவும் மிகுந்த போராட்டம் எனக்கு உண்டென்று நீங்கள் அறியவிரும்புகிறேன். அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவிற்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன். அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது. ஒருவனும் பொய்யான வாதங்களால் உங்களை ஏமாற்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். சரீரத்தின்படி நான் தூரமாக இருந்தும், ஆவியின்படி உங்களோடுகூட இருந்து, உங்களுடைய ஒழுங்கையும், கிறிஸ்துவின் மேலுள்ள உங்களுடைய விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன். ஆகவே, நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, நன்றி செலுத்துவதோடு அதிலே பெருகுவீர்களாக. உலக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அது மனிதர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலக வழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப்பற்றினதல்ல. ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் குடிகொண்டிருக்கிறது. மேலும் எல்லாத் துரைத்தனங்களுக்கும் அதிகாரத்திற்கும் தலைவராக இருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணம் உள்ளவர்களாக இருக்கிறீர்கள். அல்லாமலும், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்திற்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள். ஞானஸ்நானத்திலே அவரோடுகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின தேவனுடைய செயலின்மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடுகூட உயிரோடு எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள். உங்களுடைய பாவங்களினாலேயும், உங்களுடைய சரீரவிருத்தசேதனம் இல்லாமையினாலேயும் மரித்தவர்களாக இருந்த உங்களையும் அவரோடுகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்கள் எல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து; நமக்கு எதிரானதாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தை அழித்து, அதை நடுவில் இல்லாதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் பறித்துக்கொண்டு, வெளியரங்கமாக வெளிப்படுத்தி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றி சிறந்தார். ஆகவே, உணவையும், பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையும் குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாமல் இருப்பானாக. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாக இருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது. மூட்டுகளாலும் தசை நரம்புகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு, தேவவளர்ச்சியாக வளர்ந்தேறுகிற சரீரமுழுவதையும் ஆதரிக்கிற தலையைப் பற்றிக்கொள்ளாமல், மாய்மாலமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமடைந்து, காணாத காரியங்களிலே துணிவாய் நுழைந்து, தன் சரீரசிந்தையினாலே வீணாக கர்வம் கொண்டிருக்கிற எவனும் உங்களுடைய பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை ஏமாற்றாதிருக்கப் பாருங்கள். நீங்கள் கிறிஸ்துவோடுகூட உலகத்தின் வழக்கங்களுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல, மனிதர்களுடைய கட்டளைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசி பாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உடன்படுகிறதென்ன? இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே. இப்படிப்பட்டப் போதனைகள் சுயவிருப்பமான ஆராதனையையும், போலியான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும்பற்றி ஞானம் என்கிற பெயர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பாதுகாப்பதற்கேயன்றி வேறு எதற்கும் உபயோகப்படாது.
கொலோசெயர் 2:1-23 பரிசுத்த பைபிள் (TAERV)
உங்களுக்கு உதவ நான் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். லவோதிக்கேயா மக்களுக்கும், என்னை இதுவரை காணாத ஏனைய மக்களுக்கும் நான் உதவி செய்ய முயல்கிறேன். அவர்களை பலப்படுத்தவும், அன்புடன் ஒன்று சேர்த்துக்கொள்ளவும் விரும்புகிறேன். உறுதியான விசுவாசம் என்னும் செல்வத்தை அவர்கள் பெறவேண்டும் என்று விரும்புகிறேன். அந்த விசுவாசம் சரியான அறிவில் இருந்து பிறக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன். தேவன் வெளிப்படுத்திய இரகசிய உண்மையை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன். அந்த உண்மை கிறிஸ்து தான். கிறிஸ்துவுக்குள் ஞானத்தின் எல்லாக் கருவூலங்களும், அறிவும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. தோற்றத்தில் உண்மை போன்ற பொய்களைச் சொல்லி உங்களை யாரும் முட்டாளாக்கிவிடக் கூடாது என்பதற்காக இவ்வளவையும் உங்களுக்கு எழுதுகிறேன். அங்கே நான் உங்களோடு இல்லை. எனினும் எனது இதயம் உங்களோடு உள்ளது. உங்களது நல்ல வாழ்வைக் காணும்போதும் கிறிஸ்துவுக்குள் உறுதியான விசுவாசத்தைக் காணும்போதும் நான் மகிழ்வடைகிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நீங்கள் அடைந்துள்ளீர்கள். எனவே எதையும் மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து அவரைப் பின்பற்றி வாழுங்கள். கிறிஸ்துவை மட்டும் நீங்கள் சார்ந்திருங்கள். வாழ்க்கையும், பலமும் அவரிடமிருந்து வருகின்றன. உங்களுக்கு அந்த உண்மை கற்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த உண்மையான போதனையில் நீங்கள் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும். எப்பொழுதும் நன்றி உள்ளவர்களாய் இருங்கள். பொய்யான எண்ணங்களாலும், பொருளற்ற சொற்களாலும் எவரும் உங்களை வழி நடத்திச் செல்லாதபடி உறுதியாய் இருங்கள். இத்தகைய எண்ணங்கள் கிறிஸ்துவிடமிருந்து வராது. மக்களிடமிருந்தே வருகிறது. இவை உலக மக்களின் பயனற்ற எண்ணங்கள். தேவனுடைய முழுமை கிறிஸ்துவிடம் வாழ்கிறது. கிறிஸ்துவுக்குள் நீங்கள் முழுமையாக இருக்கிறீர்கள். உங்களுக்கு வேறு எதுவும் தேவை இல்லை. அனைத்து அதிகாரங்களையும் ஆள்வோர்களையும் ஆளுபவர் கிறிஸ்து ஆவார். கிறிஸ்துவுக்குள் நீங்கள் வித்தியாசமான விருத்தசேதனத்தைப் பெற்றிருக்கிறீர்கள். இதுவேறு எவரின் கையாலும் செய்யப்பட்டதன்று. உங்களுடைய பழைய பாவம் மிக்க சுபாவத்தின் சக்தியிலிருந்து கிறிஸ்துவின் விருத்தசேதனம் வழியாக விடுதலையாக்கப்பட்டீர்கள். இது கிறிஸ்துவின் விருத்தசேதனமாகும். நீங்கள் ஞானஸ்நானம் பெற்றபோது உங்கள் பழைமை இறந்து கிறிஸ்துவோடு புதைக்கப்பட்டது. அந்த ஞானஸ்நானத்தில் கிறிஸ்துவுடன் நீங்களும் உயிர்த்தெழுந்தீர்கள். ஏனென்றால் நீங்கள் தேவனுடைய சக்தியில் விசுவாசமாய் இருந்தீர்கள். கிறிஸ்துவை மரணத்திலிருந்து உயிர்த்தெழச் செய்ததன்மூலம் தேவன் தன் வல்லமையை வெளிப்படுத்திவிட்டார். உங்களது பாவங்களாலும் பாவம் மிக்க சுயசுபாவத்தின் சக்தியிலிருந்தும் விடபட முடியாததாலும் ஆன்மீக நிலையில் இறந்திருந்தீர்கள். ஆனால், தேவன் உங்களைக் கிறிஸ்துவுடன் உயிருடன் இருக்கச் செய்தார். அவர் நமது பாவங்களையும் மன்னித்துவிட்டார். தேவனுடைய சட்டங்களை நாம் மீறிவிட்டதால் நாம் கடன்பட்டிருந்தோம். எந்தெந்த சட்டங்களை நாம் மீறினோம் என்பதை அக்கடன் பட்டியலிட்டது. ஆனால் தேவன் அந்தக் கடனை நமக்கு மன்னித்துவிட்டார். தேவன் அக்கடனை அப்புறப்படுத்தி ஆணிகளால் சிலுவையில் அறைந்துவிட்டார். தேவன் ஆன்மீக நிலையில் ஆள்வோர்களையும் அதிகாரங்களையும் தோற்கடித்தார். இவ்வெற்றியை அவர் சிலுவையின் மூலம் பெற்றார். அவை பலமற்றவை என்பதை தேவன் உலகுக்குக் காட்டினார். ஆகையால், உண்பதைப் பற்றியும், குடிப்பதைப் பற்றியும், பண்டிகைகள், பௌர்ணமிகள், ஓய்வு நாட்கள் ஆகிய யூதர்களின் பழக்க வழக்கங்களைக் குறித்தும் எவரும் சட்டங்கள் உருவாக்க நீங்கள் அனுமதிக்காதீர்கள். மனித விதிமுறைகளைப் பின்பற்றாதீர்கள் கடந்த காலத்தில், இவை நிழலாக இருந்து எதிர்காலத்தில் வருவதைச் சுட்டிக் காட்டியது. ஆனால் புதிதாக வந்தவை கிறிஸ்துவில் காணப்படுகின்றன. சிலர் தாழ்மையுள்ளவர்கள் போல் நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்கள் தேவ தூதர்களை வழிபட விரும்புவர். அவர்கள் எப்பொழுதும் தாங்கள் கண்ட தரிசனங்களையும், கனவுகளையும் பற்றியே பேசிக்கொண்டிருப்பர். அவர்கள் “நீங்கள் தவறானவர்கள், உங்களால் எதுவும் செய்ய முடியாது” என்று கூறுவர். எனவே அவர்களை எதுவும் சொல்ல அனுமதிக்காதீர்கள். அவர்களுக்கு எப்பொழுதும் முட்டாள்தனமான பெருமிதமே இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் மனிதர்களின் எண்ணங்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறார்களே ஒழிய தேவனுடைய எண்ணங்களைப் பற்றி சிந்திப்பதில்லை. அவர்கள், தலையாகிய கிறிஸ்துவின் அதிகாரத்துக்குள் தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்வதில்லை. முழு சரீரமும் கிறிஸ்துவைச் சார்ந்துள்ளது. அவரால் நம் சரீரத்தின் எல்லா உறுப்புகளும் ஒன்றுக்கொன்று அக்கறை கொள்கிறது. மேலும் அவை ஒன்றுக்கொன்று உதவியும் செய்கிறது. இது சரீரத்தை வலிமைப்படுத்தி ஒன்றாய்ச் சேர்க்கிறது. தேவன் விரும்புகிற விதத்திலேயே சரீரம் வளருகின்றது. நீங்கள் கிறிஸ்துவோடு இறந்தீர்கள். உலகத்தின் பயனற்ற சட்டதிட்டங்களில் இருந்தும் விடுதலை பெற்றீர்கள். எனினும் நீங்கள் இந்த உலகத்தைச் சார்ந்தவர்களைப் போன்று நடித்து வருகிறீர்கள். “இதனை உண்ணக்கூடாது.” “அதனைச் சுவைபார்க்கக்கூடாது” “அதனைத் தொடக்கூடாது” என்கிறீர்கள். ஏன் இன்னும் இது போன்ற சட்ட திட்டங்களைப் பின்பற்றுகிறீர்கள்? இவை பயன்படுத்தப்பட்டவுடன் போய்விடும். இச்சட்டதிட்டங்கள் பூலோகத்தைப் பற்றியவை. இவை மனிதர்களின் கட்டளைகளும், போதனைகளுமேயாகும். தேவனுடையவை அல்ல. இவை புத்திசாலித்தனமாய்த் தோன்றலாம். ஆனால் இச்சட்டங்கள் போலிப் பணிவும் சரீரத்தைத் தண்டிக்கக் கூடியதுமான மனிதரால் உருவாக்கப்பட்ட மதத்தின் சட்டங்கள் மட்டுமே ஆகும். ஆனால் இவை மக்கள் பாவத்தில் இருந்து விடுபட உதவாது.
கொலோசெயர் 2:1-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உங்களுக்காகவும் லவோதிக்கேயாவிலிருக்கிறவர்களுக்காகவும், சரீரத்தில் என் முகத்தைக் காணாதிருக்கிற மற்றெல்லாருக்காகவும் மிகுந்த போராட்டம் எனக்கு உண்டென்று நீங்கள் அறியவிரும்புகிறேன். அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன். அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது. ஒருவனும் நயவசனிப்பினாலே உங்களை வஞ்சியாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். சரீரத்தின்படி நான் தூரமாயிருந்தும், ஆவியின்படி உங்களுடனேகூட இருந்து, உங்கள் ஒழுங்கையும், கிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன். ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக. லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப்பற்றினதல்ல. ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது. மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள். அல்லாமலும், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்துக்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள். ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள். உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து; நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார். ஆகையால், போஜனத்தையும் பானத்தையும்குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது. கணுக்களாலும் கட்டுகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு, தேவவளர்ச்சியாய் வளர்ந்தேறுகிற சரீரமுழுவதையும் ஆதரிக்கிற தலையைப்பற்றிக்கொள்ளாமல், மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள். நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல, மனுஷருடைய கற்பனைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உட்படுகிறதென்ன? இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே. இப்படிப்பட்ட போதனைகள் சுய இஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும் பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது.