கொலோசெயர் 1:13-22

கொலோசெயர் 1:13-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஏனெனில், பிதாவானவர் இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்து, அவருடைய அன்பான மகன் கிறிஸ்துவின் அரசுக்குள் நம்மைக் கொண்டுவந்திருக்கிறார். கிறிஸ்துவிலேயே நமக்கு மீட்பு உண்டு, அது பாவங்களுக்கான மன்னிப்பு. கண்ணுக்குத் தெரியாத இறைவனின் சாயலாய் இருப்பவர் கிறிஸ்துவே. எல்லாப் படைப்புகளுக்கும் மேலான முதற்பேறானவர் இவரே. இவர் மூலமே எல்லாம் படைக்கப்பட்டன, காணப்படுகிறவைகளோ, காணப்படாதவைகளோ, வானத்திலும் பூமியிலுமுள்ள எல்லாம் இவர் மூலமே படைக்கப்பட்டன. அரியணைகளோ, வல்லமைகளோ, ஆளுகிறவர்களோ, அதிகாரங்களோ எல்லாமே இவராலேயே, இவருக்கென்றே படைக்கப்பட்டன. இவரே எல்லாவற்றிற்கும் முந்தினவராக இருக்கிறார். எல்லாம் அவரோடிணைந்து நிலைநிற்கிறது. இவரே திருச்சபையாகிய உடலுக்குத் தலையாயிருக்கிறார். இவரே அதன் ஆரம்பமும் இறந்தவர்களிடையே இருந்து முதலாவதாய் உயிருடன் எழுந்தவரும் ஆவார். இதனால் எல்லாவற்றிலும் இவருக்கே முதன்மை இருக்கிறது. இறைவன் தம்முடைய எல்லா முழுநிறைவையும் கிறிஸ்துவில் குடியிருக்கச் செய்ய விரும்பினார். கிறிஸ்து சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலே, இறைவன் சமாதானத்தை உண்டாக்கவும் அத்துடன் கிறிஸ்துவின் மூலமாகவே பரலோகத்திலும், பூமியிலும் உள்ள எல்லாவற்றையும் தம்மோடு ஒப்புரவாக்கிக்கொள்ள பிரியங்கொண்டார். முன்பு நீங்கள் இறைவனிடமிருந்து அந்நியராகயிருந்தீர்கள். உங்கள் தீமையான நடத்தையின் காரணமாக உங்கள் மனதில் அவருக்குப் பகைவர்களாக இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது கிறிஸ்துவினுடைய மனித உடல் மரணத்திற்கு உட்பட்டதன் மூலமாக இறைவன் உங்களைத் தம்முடன் ஒப்புரவாக்கினார். இறைவனுடைய பார்வையிலே உங்களைக் கறைப்படாதவர்களாகவும், குற்றமற்றவர்களாகவும், பரிசுத்தமுள்ளவர்களாகவும் தம் முன்னே நிறுத்தும்படிக்கே அவர் இப்படிச் செய்தார்.

கொலோசெயர் 1:13-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாக இருக்கிற பிதாவிற்கு நன்றி செலுத்துகிறோம். குமாரனாகிய இயேசுகிறிஸ்துவிற்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. அவர் கண்ணுக்குத் தெரியாத தேவனுடைய ரூபமும், எல்லாப் படைப்புக்கும் முதற்பேறுமானவர். ஏனென்றால், அவருக்குள் எல்லாம் படைக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான எல்லாப் பொருட்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அரசாங்க ஆட்சி புரிவோர்களானாலும், அதிகாரங்களானாலும், எல்லாமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் படைக்கப்பட்டது. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராக இருக்கும்படி, அவரே துவக்கமும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த முதற்பேறுமானவர். எல்லாப் பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாக இருக்கவும், அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாகத் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் தேவனுக்கு விருப்பமானது. முன்னே தேவனுக்கு அந்நியர்களாகவும் தீய செயல்களினால் மனதிலே விரோதிகளாகவும் இருந்த உங்களையும் பரிசுத்தர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்குமுன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார். நீங்கள் கேட்ட நற்செய்தியினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், நிலையாகவும் உறுதியாகவும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்.

கொலோசெயர் 1:13-22 பரிசுத்த பைபிள் (TAERV)

இருளின் அதிகாரங்களிலிருந்து நம்மை அவர் விடுதலை செய்திருக்கிறார். நம்மை அவரது அன்பு குமாரனான இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்துக்குள் கொண்டு வந்தார். நமது பாவங்களுக்குரிய விலையை அவர் கொடுத்தார். அவருக்குள் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஒருவராலும் தேவனைக் காண இயலாது. ஆனால் இயேசு தேவனைப் போன்றவர். படைக்கப்பட்ட அனைத்து பொருட்களின் மேலும் இயேசுவே ஆட்சியாளர். பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள அனைத்துப் பொருட்களும் இயேசுவின் வல்லமையால் படைக்கப்பட்டவை. அவை கண்ணால் காணப்படுகிறவை, காணப்படாதவை, ஆன்மீக சக்திகள், அதிகாரங்கள், பிரபுக்கள், ஆள்வோர்கள் என அனைத்துமே அவருக்காகவும், அவர் மூலமாகவும் படைக்கப்பட்டவை. எதுவும் படைக்கப்படுவதற்கு முன்னரே கிறிஸ்து இருந்தார். அவராலேயே அனைத்துப் பொருட்களும் தொடர்ந்து இருக்கின்றன. கிறிஸ்துதான் சரீரத்தின் தலையாக இருக்கிறார் (சரீரம் என்பது சபையாகும்). எல்லாப் பொருட்களுமே அவராலேயே வருகின்றன. அவரே கர்த்தர். அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். எல்லாவற்றையும் விட இயேசுவே அதிமுக்கியமானவர். கிறிஸ்துவில் சகலமும் வாழ்வதே தேவனுடைய விருப்பமாக இருந்தது. பரலோகத்திலும், பூலோகத்திலும் உள்ள அனைத்துப் பொருள்களையும் கிறிஸ்துவின் மூலமாகத் தனக்குள்ளேயே திரும்பவும் கொண்டு வருவதில் தேவன் மகிழ்ச்சியடைந்தார். சிலுவையில் கிறிஸ்து இரத்தம் சிந்தியதன் மூலம் உலகில் தேவன் சமாதானத்தை உருவாக்கினார். ஒரு காலத்தில் நீங்கள் தேவனை விட்டுப் பிரிந்தீர்கள். உங்கள் மனதில் தேவனுக்குப் பகைவராக இருந்தீர்கள். ஏனென்றால் நீங்கள் செய்த எல்லா செயல்களும் தேவனுக்கு எதிரானவை. ஆனால் இப்போது கிறிஸ்து மீண்டும் உங்களை தேவனுக்கு நண்பர்களாக்கிவிட்டார். கிறிஸ்து இதனைத் தனது மரணத்தின் மூலம் தான் சரீரத்தில் இருக்கும்போது செய்தார். இதன் மூலம் அவர் உங்களைப் பரிசுத்தமுள்ளவர்களாகவும், உங்களில் குற்றம் இல்லாதவர்களாகவும், தேவனால் நீங்கள் பாவிகள் என்று தீர்ப்பளிக்க முடியாத வகையில் தேவன் முன் நிறுத்துகிறார்.

கொலோசெயர் 1:13-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம். (குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர். சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும், அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன்நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார். நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்.

கொலோசெயர் 1:13-22

கொலோசெயர் 1:13-22 TAOVBSIகொலோசெயர் 1:13-22 TAOVBSI