ஆமோஸ் 3:1-10
ஆமோஸ் 3:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இஸ்ரயேல் மக்களே, யெகோவா உங்களுக்கெதிராகக் கூறிய இந்த வார்த்தையைக் கேளுங்கள். எகிப்திலிருந்து நான் கொண்டுவந்த முழுக் குடும்பத்தினருக்கும் எதிராக நான் பேசியதைக் கேளுங்கள். “பூமியின் குடும்பங்கள் எல்லாவற்றிலிருந்தும் உங்களையே நான் தெரிந்தெடுத்தேன். உங்கள் அநேக பாவங்களுக்காகவும் நான் உங்களைத் தண்டிப்பேன்.” ஒன்றுசேர்ந்து நடப்பதற்கு இருவர் ஒருமனப்படாமலிருந்தால், அவர்கள் ஒன்றுசேர்ந்து நடப்பது எப்படி? இரை அகப்படாமல் இருக்கும்போது, புதருக்குள் இருந்து சிங்கம் கர்ஜிக்குமோ? தான் ஒன்றும் பிடிக்காமல் இருக்கும்போது, அது தன் குகையில் இருந்து உறுமுமோ? கண்ணி விரிக்கப்படாத தரையில் பறவை சிக்குமோ? பொறியில் ஒன்றும் சிக்காதிருக்கையிலே, பொறி நிலத்திலிருந்து துள்ளுமோ? பட்டணத்தில் எக்காளம் முழங்குகையில் மக்கள் நடுங்காதிருப்பார்களோ? பட்டணத்தில் பேராபத்து வரும்போது, யெகோவா அல்லவா அதை ஏற்படுத்தினார்? தமது ஊழியர்களான இறைவாக்கினருக்கு தமது திட்டத்தை வெளிப்படுத்தாமல் ஆண்டவராகிய யெகோவா ஒன்றும் செய்வதில்லை. சிங்கம் கர்ஜித்தது, யார் பயப்படாதிருப்பான்? ஆண்டவராகிய யெகோவா பேசியிருக்கிறார், யாரால் இறைவாக்கு சொல்லாமல் இருக்கமுடியும்? அஸ்தோத்தின் கோட்டைகளுக்கும், எகிப்தின் கோட்டைகளுக்கும் பிரசித்தப்படுத்துங்கள். “சமாரியாவின் மலைகளின்மேல் ஒன்றுகூடுங்கள், இஸ்ரயேலில் நடக்கும் பெரும் கலவரத்தையும், அங்குள்ள மக்களிடையே நடக்கும் ஒடுக்குதலையும் பாருங்கள்.” “சரியானதை எப்படிச் செய்வது என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் கொள்ளைப்பொருட்களையும், சூறைப்பொருட்களையும் தங்கள் கோட்டைகளில் குவித்து வைக்கிறார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
ஆமோஸ் 3:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இஸ்ரவேல் மக்களே, யெகோவாகிய நான் எகிப்து தேசத்திலிருந்து வரவழைத்த முழுக்குடும்பமாகிய உங்களுக்கு விரோதமாகச் சொல்லிய இந்த வசனத்தைக் கேளுங்கள். பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களைமட்டும் அறிந்துகொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களுக்காக உங்களைத் தண்டிப்பேன். இரண்டுபேர் ஒருமனப்படாமல் இருந்தால் ஒன்றுசேர்ந்து நடந்துபோவார்களோ? தனக்கு இரை அகப்படாமல் இருக்கக் காட்டிலே சிங்கம் கெர்ச்சிக்குமோ? இரைபிடிக்காமல் இருக்கும்போது பாலசிங்கம் தன்னுடைய குகையிலிருந்து சத்தமிடுமோ? குருவிக்குத் தரையிலே சுருக்குப் போடப்படாமல் இருந்தால், அது கண்ணியில் அகப்படுமோ? ஒன்றும் அகப்படாமல் இருக்கும்போது, கண்ணி தரையிலிருந்து எடுக்கப்படுமோ? ஊரில் எக்காளம் ஊதினால், மக்கள் கலங்காமல் இருப்பார்களோ? யெகோவாவுடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ? யெகோவாகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர்களுக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யமாட்டார். சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாமல் இருப்பான்? யெகோவாகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்? நீங்கள் சமாரியாவின் மலைகளில் கூடிவந்து, அதின் நடுவில் நடக்கிற பெரிய கலகங்களையும் அதற்குள் செய்யப்படுகிற இடுக்கண்களையும் பாருங்கள் என்று அஸ்தோத்தின் அரண்மனைகள்மேலும், எகிப்துதேசத்தின் அரண்மனைகள்மேலும் கூறுங்கள். அவர்கள் செம்மையானதைச் செய்ய அறியாமல், தங்களுடைய அரண்மனைகளில் கொடுமையையும் கொள்ளையையும் குவித்துக்கொள்ளுகிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
ஆமோஸ் 3:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)
இஸ்ரவேல் ஜனங்களே, இந்தச் செய்தியைக் கவனியுங்கள். இஸ்ரவேலே உங்களைபற்றி கர்த்தர் இவற்றைக் கூறினார். இந்த செய்தி நான் எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த எல்லாக் குடும்பங்களையும் (இஸ்ரவேல்) பற்றியது. “பூமியில் அநேகக் குடும்பங்கள் இருந்தன. ஆனால் உன்னுடைய ஒரே குடும்பத்தைதான் சிறப்பான வழியில் அறிந்துகொள்ள நான் தேர்ந்தெடுத்தேன். நீ எனக்கு எதிராகத் திரும்பினாய். எனவே, நான் உனது எல்லா பாவங்களுக்காக உன்னைத் தண்டிப்பேன்.” இரண்டு பேர் ஒத்துப்போனாலொழிய ஒரே வழியில் நடக்க முடியாது. காட்டிலுள்ள சிங்கம், ஒரு மிருகத்தைப் பிடித்த பிறகுதான் கெர்ச்சிக்கும். ஒரு இளஞ்சிங்கம் தன் குகையில் கெர்ச்சிக்கிறது என்றால், அது ஏதோ ஒன்றைப் பிடித்துவிட்டது என்று அர்த்தம். கண்ணிக்குள்ளே உணவு இல்லாவிட்டால் ஒரு பறவை தரையிலுள்ள கண்ணிக்குள் பறக்காது. கண்ணி மூடினால் அது பறவையைப் பிடிக்கும். எக்காளம் எச்சரிக்கையாக ஊதினால், ஜனங்கள் நிச்சயம் பயத்தால் நடுங்குவார்கள். நகரத்திற்கு துன்பம் வந்தால், அதற்கு கர்த்தர் காரணமாவார். எனது கர்த்தராகிய ஆண்டவர் சிலவற்றைச் செய்ய முடிவுசெய்வார். ஆனால் அவர் எதையும் செய்யும் முன்னால் அவர் தனது தீர்க்கதரிசிகளிடம் சொல்வார். ஒரு சிங்கம் கெர்ச்சித்தால் ஜனங்கள் பயப்படுவார்கள். கர்த்தர் பேசினால் தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள். நீங்கள் அஸ்தோத்தின் கோபுரங்களுக்கும், எகிப்துக்கும் போய் இச்செய்தியைக் கூறுங்கள். “சமாரியாவின் மலைகளுக்கு வாருங்கள். நீங்கள் அங்கே பெருங்குழப்பத்தைக் காண்பீர்கள். ஏனென்றால் ஜனங்களுக்குச் சரியாக வாழ்வது எப்படி என்று தெரியாது. அந்த ஜனங்கள் மற்ற ஜனங்களிடம் கொடூரமாக இருந்தார்கள். அவர்கள் மற்றவர்களிடமிருந்து பொருட்களை எடுத்துத் தங்கள் கோபுரங்களில் ஒளித்து வைத்தார்கள். அவர்கள் போரில் எடுத்தப் பொருட்களால் அவர்களது கருவூலங்கள் நிறைந்திருக்கின்றன.”
ஆமோஸ் 3:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தராகிய நான் எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின முழுக்குடும்பமாகிய உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லிய இந்த வசனத்தைக் கேளுங்கள். பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களைமாத்திரம் அறிந்துகொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன். இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்துபோவார்களோ? தனக்கு இரை அகப்படாமலிருக்கக் காட்டிலே சிங்கம் கெர்ச்சிக்குமோ? இரைபிடியாமல் இருக்கும்போது பாலசிங்கம் தன் கெபியிலிருந்து சத்தமிடுமோ? குருவிக்குத் தரையிலே சுருக்குப் போடப்படாதிருந்தால், அது கண்ணியில் அகப்படுமோ? ஒன்றும் படாதிருக்கையில், கண்ணி தரையிலிருந்து எடுக்கப்படுமோ? ஊரில் எக்காளம் ஊதினால், ஜனங்கள் கலங்காதிருப்பார்களோ? கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ? கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார். சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்? கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்? நீங்கள் சமாரியாவின் பர்வதங்களில் வந்துகூடி, அதின் நடுவில் நடக்கிற பெரிய கலகங்களையும் அதற்குள் செய்யப்படுகிற இடுக்கண்களையும் பாருங்கள் என்று அஸ்தோத்தின் அரமனைகள்மேலும், எகிப்துதேசத்தின் அரமனைகள்மேலும் கூறுங்கள். அவர்கள் செம்மையானதைச் செய்ய அறியாமல், தங்கள் அரமனைகளில் கொடுமையையும் கொள்ளையையும் குவித்துக்கொள்ளுகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.