ஆமோஸ் 2:1-3
ஆமோஸ் 2:1-3 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவா சொல்வது இதுவே: “மோவாபின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், என் கோபத்தை நான் விலக்கமாட்டேன். ஏனெனில் ஏதோமுடைய அரசனின் எலும்புகளைச் சுட்டு சாம்பலாக்கிப் போட்டானே. மோவாபின்மேல் நெருப்பை அனுப்புவேன். அது கீரியோத்தின் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும். யுத்த சத்தத்தின் மத்தியிலும், எக்காள முழக்கத்தின் மத்தியிலும் மோவாப் பெரும் சத்தத்துடன் வீழ்ந்து போகும். நான் அவளுடைய ஆளுநனை அழிப்பேன். அவளுடைய அதிகாரிகளை அவனுடன் கொல்லுவேன்” என்று யெகோவா சொல்லுகிறார்.
ஆமோஸ் 2:1-3 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: மோவாபின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவனுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவன் ஏதோமுடைய ராஜாவின் எலும்புகளைச் சுட்டு சாம்பலாக்கிப் போட்டானே. மோவாப் தேசத்தில் தீக்கொளுத்துவேன்; அது கீரியோத்தின் அரண்மனைகளை அழிக்கும்; மோவாபியர்கள் இரைச்சலோடும் ஆர்ப்பரிப்போடும் எக்காள சத்தத்தோடும் சாவார்கள். நியாயாதிபதியை அவர்களுடைய நடுவில் இல்லாமல் நான் அழித்து, அவனோடு அவர்களுடைய பிரபுக்களையெல்லாம் கொன்றுபோடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
ஆமோஸ் 2:1-3 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “நான் நிச்சயமாக மோவாப் ஜனங்களை அவர்கள் செய்த பல குற்றங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் மோவாபியர், ஏதோம் ராஜாவின் எலுப்புகளைச் சுண்ணாம்பில் எரித்தார்கள். எனவே நான் மோவாப் நாட்டில் நெருப்பைப் பற்றவைப்பேன். அந்த நெருப்பு கீரியோத்தின் உயர்ந்த கோபுரங்களை அழிக்கும். அங்கே பயங்கர சத்தமும் எக்காளச் சத்தமும் கேட்க அவர்கள் மரிபார்கள். எனவே நான் மோவாபின் ராஜாக்களுக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன். நான் மோவாபின் அனைத்துத் தலைவர்களையும் கொல்வேன்” கர்த்தர் இதனைக் கூறினார்.
ஆமோஸ் 2:1-3 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: மோவாபின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவன் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவன் ஏதோமுடைய ராஜாவின் எலும்புகளை நீறாகச் சுட்டுப்போட்டானே. மோவாப் தேசத்தில் தீக்கொளுத்துவேன்; அது கீரியோத்தின் அரமனைகளைப் பட்சிக்கும்; மோவாபியர் அமளியோடும் ஆர்ப்பரிப்போடும் எக்காள சத்தத்தோடும் சாவார்கள். நியாயாதிபதியை அவர்கள் நடுவில் இராதபடிக்கு நான் சங்காரம்பண்ணி, அவனோடேகூட அவர்களுடைய பிரபுக்களையெல்லாம் கொன்றுபோடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.