அப்போஸ்தலர் 7:1-21

அப்போஸ்தலர் 7:1-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது பிரதான ஆசாரியன் ஸ்தேவானிடம், “இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா?” என்று கேட்டான். அதற்கு ஸ்தேவான் பதிலாக சொன்னதாவது: “சகோதரரே, தந்தையரே, எனக்குச் செவிகொடுங்கள்! நம்முடைய தந்தை ஆபிரகாம் ஆரானிலே வாழ்வதற்குமுன் மெசொப்பொத்தாமியாவிலே இருந்தார். அப்பொழுது மகிமையின் இறைவன் அவருக்கு அங்கே காட்சியளித்தார். இறைவன் ஆபிரகாமிடம், ‘நீ உன் நாட்டையும் உன் உறவினரையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குப் போ’ என்றார். “அப்படியே ஆபிரகாம் கல்தேயருடைய நாட்டைவிட்டுப் புறப்பட்டு, ஆரானில் குடியிருந்தான். ஆபிரகாமுடைய தகப்பன் இறந்தபின், நீங்கள் இப்பொழுது வாழுகிற இந்த நாட்டிற்கு இறைவன் அவனை அனுப்பினார். இறைவன் இங்கே ஆபிரகாமுக்கு ஒரு அடி நிலத்தைக்கூட உரிமைச்சொத்தாகக் கொடுக்கவில்லை. ஆனால் அந்தக் காலத்தில் அவனுக்குப் பிள்ளை இல்லாதிருந்தும்கூட, அவனுக்குப்பின் அவனுடைய தலைமுறையினரும் இந்நாட்டை உரிமையாக்கிக்கொள்வார்கள் என்று இறைவன் வாக்குப்பண்ணினார். இறைவன் ஆபிரகாமுடன் இவ்விதமாக பேசினார்: ‘உனது தலைமுறையினர் தங்களுக்குச் சொந்தமில்லாத ஒரு நாட்டிலே அந்நியர்களாக இருப்பார்கள். அவர்கள் நானூறு வருடங்களுக்கு அடிமைப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்படுவார்கள். ஆனால் அவர்கள் அடிமைகளாய் இருந்து பணிசெய்கிற அந்த நாட்டையோ நான் நியாயந்தீர்ப்பேன்.’ இறைவன் தொடர்ந்து, ‘அதற்குப் பின்பு அவர்கள் அந்த நாட்டைவிட்டுப் புறப்பட்டுவந்து, இந்த இடத்திலே என்னை வழிபடுவார்கள்’ என்றார். பின்பு இறைவன், ஆபிரகாமுக்கு விருத்தசேதனத்தின் உடன்படிக்கையைக் கொடுத்தார். ஆபிரகாம் ஈசாக்கிற்குத் தகப்பனாகி, அவன் பிறந்து எட்டாம் நாளில் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்தான். பின்பு ஈசாக்கு, யாக்கோபிற்குத் தகப்பனானான், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரத் தந்தையருக்குத் தகப்பனானான். “கோத்திரத் தந்தையர் யோசேப்பின்மேல் பொறாமை கொண்டதால், அவர்கள் அவனை எகிப்தியருக்கு அடிமையாக விற்றார்கள். ஆனால் இறைவனோ, அவனோடுகூட இருந்தார். அவனுடைய எல்லாத் துன்பங்களிலுமிருந்து, அவனைத் தப்புவித்தார். இறைவன் யோசேப்பிற்கு ஞானத்தைக் கொடுத்து, எகிப்தின் அரசனாகிய பார்வோனின் நல்மதிப்பைப் பெறும்படி செய்தார். ஆகவே அவன் யோசேப்பை எகிப்திலும் தனது அரண்மனை முழுவதிலும் அதிகாரியாக ஏற்படுத்தினான். “பின்பு முழு எகிப்தையும் கானான் நாட்டையும் பஞ்சம் தாக்கியது. இதனால் பெருந்துன்பம் ஏற்பட்டது; நமது தந்தையருக்கும் உணவு கிடைக்கவில்லை. எகிப்திலே தானியம் இருக்கிறது என யாக்கோபு கேள்விப்பட்டபோது, அவன் நமது தந்தையரை முதலாவது பயணமாக, அங்கே போகும்படி அனுப்பினான். அவர்களது இரண்டாவது பயணத்தின்போது, யோசேப்பு தன்னை யார் என்று தன் சகோதரருக்கு அறிவித்தான். பார்வோனும் யோசேப்பின் குடும்பத்தைப்பற்றி அறிந்துகொண்டான். இதற்குப் பின்பு, யோசேப்பு தனது தகப்பன் யாக்கோபையும், அவனுடைய குடும்பத்தார் எல்லோரையும் அழைத்தான். அவர்கள் எல்லோருமாக எழுபத்தைந்து பேர் இருந்தார்கள். அப்பொழுது யாக்கோபு எகிப்திற்குச் சென்றான். அங்கே அவனும், நமது தந்தையரும் காலமானார்கள். அவர்களது உடல்கள் சீகேமுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்த கல்லறையில் வைக்கப்பட்டன. அந்தக் கல்லறையைச் சீகேமில் ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்திற்கு ஆமோரின் மகன்களிடமிருந்து ஆபிரகாம் வாங்கியிருந்தான். “இறைவன் ஆபிரகாமுக்குத் தாம் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிற காலம் நெருங்கியபோது, எகிப்திலிருந்த நமது மக்களின் எண்ணிக்கை வெகுவாய்ப் பெருகியது. பின்பு, யோசேப்பைப்பற்றி எதுவுமே அறியாத புதிய அரசன், எகிப்திற்கு அதிகாரியாக வந்தான். அந்த அரசன் நமது மக்களைக் கொடுமையாக நடத்தினான். நமது முற்பிதாக்களைத் தங்கள் குழந்தைகளைச் சாகும்படி எறிந்துவிட வேண்டுமென்று பலவந்தப்படுத்தி, அவர்களை ஒடுக்கினான். “இந்தக் காலத்திலேதான் மோசே பிறந்தான். அவன் ஒரு சாதாரண குழந்தை அல்ல. மூன்று மாதங்களாக, அவன் தனது தகப்பன் வீட்டில் வைத்துப் பராமரிக்கப்பட்டான். பின்பு, அவன் வீட்டிலிருந்து வெளியே எறியப்பட்டபோது, பார்வோனின் மகள் அவனை எடுத்துத் தனது சொந்த மகனாக அவனை வளர்த்தாள்.

அப்போஸ்தலர் 7:1-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியா இருக்கிறது என்று கேட்டான். அதற்கு அவன்: சகோதரர்களே, தகப்பன்மார்களே, கேளுங்கள். நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்பே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி: நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும்விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்குப் போ என்றார். அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானூரிலே குடியிருந்தான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அந்த இடத்தைவிட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இந்த தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார். இதிலே ஒரு அடி நிலத்தையாவது அவனுக்கு சொத்தாகக் கொடுக்காமல், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதை சொத்தாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார். அப்படியே, தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் வேறு தேசத்தில் குடியிருப்பார்கள்; அந்த தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருடங்கள் துன்பப்படுத்துவார்கள். அவர்களை அடிமைப்படுத்தும் மக்களை நான் தண்டிப்பேன். அதற்குப்பின்பு அவர்கள் புறப்பட்டுவந்து இந்த இடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார். மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள். அந்தக் கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டு யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோகும்படியாக விற்றுப்போட்டார்கள். தேவனோ அவனோடிருந்து, எல்லா உபத்திரவங்களில் இருந்தும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடம் அவனுக்கு தயவையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீடு அனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான். பின்பு எகிப்து கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் அதிக வருத்தமும் உண்டாகி, நம்முடைய முற்பிதாக்களுக்கு ஆகாரம் கிடைக்காமல்போனது. அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டு என்று யாக்கோபு கேள்விப்பட்டு, யோசேப்புடைய மூத்த சகோதரர்களை முதல்முறை அனுப்பினான். இரண்டாம்முறை யோசேப்பு தன்னுடைய சகோதரர்களுக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குத் தெரியவந்தது. பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபையும் தன்னுடைய இனத்தார் எழுபத்தைந்துபேரையும் அழைத்துவரும்படி அனுப்பினான். அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப் போனான். அவனும் நம்முடைய முற்பிதாக்களும் மரித்து, அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் விலைக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள். ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறும் நேரம் நெருங்கியபோது, யோசேப்பைத் தெரியாத வேறொரு ராஜா தோன்றின காலம்வரையிலும், மக்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள். அவன் நம்முடைய மக்களை வஞ்சகமாக நடப்பித்து, நம்முடைய முற்பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான். அக்காலத்திலே மோசே பிறந்து, மிகுந்த அழகுள்ளவனாக இருந்து, மூன்று மாதங்கள் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான். அவன் வீட்டிற்கு வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய மகள் அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.

அப்போஸ்தலர் 7:1-21 பரிசுத்த பைபிள் (TAERV)

தலைமை ஆசாரியன் ஸ்தேவானை நோக்கி, “இந்தக் காரியங்கள் எல்லாம் உண்மைதானா?” என்று கேட்டான். ஸ்தேவான் பதிலாக, “எனது யூத தந்தையரே, சகோதரரே, நான் கூறுவதைக் கேளுங்கள். மகிமைபொருந்திய நமது தேவன் நமது தந்தையாகிய ஆபிரகாமுக்குக் காட்சி கொடுத்தார். ஆபிரகாம் மெசொபொதாமியாவில் இருந்தார். அவர் ஆரானில் வாழ்வதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது. தேவன் ஆபிரகாமை நோக்கி, ‘உன் நாட்டையும் உன் உறவினர்களையும் விட்டுவிட்டு, நான் காண்பிக்கும் நாட்டிற்குப் போ’ என்றார். “எனவே ஆபிரகாம் கல்தேயா நாட்டை விட்டுச் சென்றார். ஆரானில் வசிப்பதற்காகச் சென்றார். ஆபிரகாமின் தந்தை இறந்த பிறகு, நீங்கள் இப்போது வசிக்கிற இந்த இடத்திற்கு தேவன் அவரை அனுப்பினார். ஆனால் தேவன் ஆபிரகாமுக்கு இந்த நாட்டில் எதையும் கொடுக்கவில்லை. ஒரு அடி நிலம் கூடக் கொடுக்கவில்லை. ஆனால் ஆபிரகாமுக்கும் அவர் குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் இந்நாட்டைக் கொடுப்பதாக தேவன் வாக்களித்தார். (ஆபிரகாமுக்குக் குழந்தை இல்லாதிருந்தபோது இது நடந்தது) “தேவன் அவருக்குக் கூறியது இதுவாகும். ‘உன் சந்ததியர் மற்றொரு நாட்டில் வாழ்வர். அவர்கள் அந்நியர்களாயிருப்பர். அந்நாட்டின் மக்கள் அவர்களை அடிமைப்படுத்துவர். 400 வருடங்களுக்கு அவர்களை மோசமாக நடத்துவர். ஆனால் அவர்களை அடிமையாக்கிய நாட்டினரை நான் தண்டிப்பேன்.’ தேவன் மேலும், ‘இந்தக் காரியங்கள் நடந்தபின் உன் மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறுவர். பின் உன் மக்கள் இங்கு இந்த இடத்தில் என்னை வழிபடுவர்’ என்றார். “தேவன் ஆபிரகாமோடு ஓர் உடன்படிக்கை பண்ணினார். இந்த உடன்படிக்கையின் அடையாளமே விருத்த சேதனமாகும். எனவே ஆபிரகாமுக்கு ஒரு குமாரன் பிறந்ததும், அவன் பிறந்து எட்டு நாட்களான பின் ஆபிரகாம் தன் குமாரனுக்கு விருத்தசேதனம் செய்வித்தார். அவரது குமாரனின் பெயர் ஈசாக்கு. ஈசாக்கும் தனது குமாரன் யாக்கோபுக்கு விருத்தசேதனம் செய்வித்தார். யாக்கோபும் தனது மக்களுக்கு அதைச் செய்தார். அந்த குமாரன்களே பின்னர் பன்னிரண்டு தந்தையராக மாறினர். “இந்தத் தந்தையர் யோசேப்பைக் (அவர்களது இளைய சகோதரன்) கண்டு பொறாமை கொண்டனர். எகிப்தில் ஒரு அடிமையாக யோசேப்பை அவர்கள் விற்றனர். ஆனால் தேவன் யோசேப்போடு இருந்தார். யோசேப்புக்கு அங்கு பல தொல்லைகள் நேர்ந்தாலும், தேவன் அத்தொல்லைகள் எல்லாவற்றிலிருந்தும் அவரைக் காப்பாற்றினார். பார்வோன் எகிப்தின் ராஜாவாக இருந்தான். அவன் யோசேப்புக்கு தேவன் கொடுத்த ஞானத்தைக் கண்டு அவரை விரும்பவும் நேசிக்கவும் செய்தான். எகிப்தின் ஆளுநர் வேலையைப் பார்வோன் யோசேப்புக்குக் கொடுத்தான். பார்வோனின் வீட்டிலுள்ள எல்லா மக்களையும் ஆளுவதற்கும் யோசேப்பை பார்வோன் அனுமதித்தான். ஆனால் எகிப்திலும், கானானிலுமிருந்த எல்லா நிலங்களும் வறண்டு போயின. அங்கு உணவு தானியங்கள் வளர முடியாதபடிக்கு நாடு வறட்சியுற்றது. இது மக்களுக்குப் பெரும் துன்பத்தை விளைவித்தது. நமது தந்தையருக்கு உண்பதற்கு எதுவும் அகப்படவில்லை. “ஆனால் எகிப்தில் உணவு சேமித்து வைக்கப்பட்டிருப்பதை யாக்கோபு கேள்விப்பட்டார். எனவே அவர் நமது தந்தையரை அங்கு அனுப்பினார். (இது எகிப்துக்கு அவர்களின் முதற்பயணமாயிருந்தது.) பின்னர், அவர்கள் இரண்டாம் முறையாகவும் அங்கு சென்றார்கள். இந்தத் தடவை யோசேப்பு தன் சகோதரர்களிடம் தான் யாரென்பதைக் கூறினான். பார்வோனுக்கும் யோசேப்பின் குடும்பத்தைக் குறித்துத் தெரிய வந்தது. பின் யோசேப்பு தன் தந்தையாகிய யாக்கோபை எகிப்துக்கு அழைத்து வருவதற்கென்று சில மனிதர்களை அனுப்பினார். தன் எல்லா உறவினர்களையும் கூட (அங்கு மொத்தம் 75 பேர்) அழைத்தார். எனவே யாக்கோபு எகிப்திற்குப் போனார். யாக்கோபும் நமது தந்தையரும் அவர்களின் மரணம் மட்டும் அங்கு வாழ்ந்தனர். பின்னர் அவர்கள் சரீரங்கள் சீகேமுக்கு அனுப்பப்பட்டன. அவர்கள் அங்கு ஒரு கல்லறையில் வைக்கப்பட்டனர். (வெள்ளியைக் கொடுத்து ஏமோரின் குமாரர்களிடமிருந்து சீகேமில் ஆபிரகாம் வாங்கிய கல்லறை அது.) “எகிப்தில் யூத மக்களின் தொகை பெருகியது. நமது மக்கள் அங்கு மென்மேலும் பெருகினர். (தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியைச் செயல்படுத்த வேண்டிய காலம் நெருங்கிக்கொண்டிருந்தது) பின் இன்னொரு மன்னன் எகிப்தை ஆளத் தொடங்கினான். அவனுக்கு யோசேப்பைப்பற்றி எதுவும் தெரியாது. இந்த மன்னன் நமது மக்களை ஏமாற்றினான். நம் முன்னோருக்கு அவன் தீமை செய்தான். அம்மன்னன் அவர்களது குழந்தைகளை இறக்கும்படியாக வெளியே போடும்படிச் செய்தான். “இக்காலத்தில் தான் மோசே பிறந்தார். அவர் அழகான குழந்தையாகவும் தேவனுக்கு இனிமையானவராகவும் இருந்தார். தன் தந்தையின் வீட்டில் மூன்று மாத காலத்துக்கு மோசேயை வைத்துப் பராமரித்தார்கள். மோசேயை வெளியில் விட்டபொழுது பார்வோனின் குமாரத்தி அவனை எடுத்துத் தன் சொந்தக் குழந்தையைப் போன்றே வளர்த்தாள்.

அப்போஸ்தலர் 7:1-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியாயிருக்கிறது என்று கேட்டான். அதற்கு அவன்: சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி: நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார். அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானூரிலே வாசம்பண்ணினான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அவ்விடத்தை விட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இத்தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார். இதிலே ஒரு அடி நிலத்தையாகிலும் அவனுடைய கையாட்சிக்குக் கொடாமலிருக்கையில், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதைச் சுதந்தரமாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார். அந்தப்படி தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் அந்நிய தேசத்தில் சஞ்சரிப்பார்கள்; அத்தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருஷம் துன்பப்படுத்துவார்கள். அவர்களை அடிமைப்படுத்தும் ஜனத்தையோ நான் ஆக்கினைக்குட்படுத்துவேன். அதற்குப்பின்பு அவர்கள் புறப்பட்டுவந்து இவ்விடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார். மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனை விருத்தசேதனம் பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள். அந்தக் கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டு யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோகும்படியாக விற்றுப்போட்டார்கள். தேவனோ அவனுடனேகூட இருந்து, எல்லா உபத்திரவங்களினின்றும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் சமுகத்திலே அவனுக்குக் கிருபையையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீடனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான். பின்பு எகிப்து கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் மிகுந்த வருத்தமும் உண்டாகி, நம்முடைய பிதாக்களுக்கு ஆகாரம் கிடையாமற்போயிற்று. அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு கேள்விப்பட்டு, நம்முடைய பிதாக்களை முதலாந்தரம் அனுப்பினான். இரண்டாந்தரம் யோசேப்பு தன்னுடைய சகோதரருக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குத் தெரியவந்தது. பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்துபேரை அழைக்க அனுப்பினான். அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப் போனான். அவனும் நம்முடைய பிதாக்களும் மரித்து, அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் ரொக்கக்கிரயத்துக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள். ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் சமீபித்தபோது, யோசேப்பை அறியாத வேறொரு ராஜா தோன்றின காலமளவும், ஜனங்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள். அவன் நம்முடைய ஜனங்களை வஞ்சனையாய் நடப்பித்து, நம்முடைய பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான். அக்காலத்திலே மோசே பிறந்து, திவ்விய சவுந்தரியமுள்ளவனாயிருந்து, மூன்று மாதமளவும் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான். அவன் வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்