அப்போஸ்தலர் 26:9-19
அப்போஸ்தலர் 26:9-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவின் பெயருக்கு எதிராக இயன்றதையெல்லாம் செய்யவேண்டும் என்று நானும் எண்ணியிருந்தேன். அதையே நான் எருசலேமில் செய்தேன். தலைமை ஆசாரியரின் அதிகாரத்தைப் பெற்று, பரிசுத்தவான்களில் பலரைச் சிறையில் அடைத்தேன்; அவர்கள் கொலைசெய்யப்படும்போது, அவர்களுக்கு எதிராக நானும் என் ஒப்புதலை வழங்கியிருந்தேன். பலமுறை அவர்களைத் தண்டனைக்கு உட்படுத்தும்படி, ஒவ்வொரு ஜெப ஆலயத்திற்கும் போனேன். இறைவனை அவமதித்துப் பேசும்படி அவர்களை வற்புறுத்தினேன். நான் அவர்களுக்கு எதிராகக் கடுங்கோபம் கொண்டிருந்ததால், அவர்களைத் துன்புறுத்தும்படி வெளிநாட்டின் பட்டணங்களுக்கும் போனேன். “இப்படியாக ஒருமுறை நான் தலைமை ஆசாரியரின் அதிகாரத்துடனும், ஆணையுடனும் தமஸ்கு பட்டணத்திற்கு போய்க்கொண்டிருந்தேன். அரசே, நான் போகும் வழியில், மத்தியான வேளையில், வானத்திலிருந்து ஒரு ஒளியைக் கண்டேன். அது சூரியனைவிடப் பிரகாசமுடையதாய், என்னையும் என்னுடன் வந்தவர்களையும் சுற்றிப் பிரகாசித்தது. நாங்கள் அனைவரும் தரையில் விழுந்தோம். ஒரு குரல் எபிரெய மொழியில் என்னுடன் பேசுவதைக் கேட்டேன். அது, ‘சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முட்களை உதைப்பது உனக்குக் கடினமே’ என்றது. “அப்பொழுது நான், ‘ஆண்டவரே, நீர் யார்?’ என்று கேட்டேன். “ ‘ஆண்டவர் அதற்கு மறுமொழியாக, நான் இயேசு, நீ என்னையே துன்புறுத்துகிறாய். இப்பொழுது நீ எழுந்து காலூன்றி நில். நான் உன்னை என் ஊழியனாகவும், சாட்சியாகவும் நியமிப்பதற்கே, உனக்குக் காட்சியளித்தேன். என்னைக் கண்டது குறித்தும், நான் உனக்குக் காண்பிக்கப் போகிறவற்றிற்கும், நீ சாட்சியாய் இருக்கவேண்டும். நான் உன்னை உன் சொந்த மக்களிடமிருந்தும், யூதரல்லாதவர்களிடமிருந்தும் காப்பாற்றுவேன். நீ அவர்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்கும், சாத்தானின் அதிகாரத்திலிருந்து இறைவனிடத்திற்கும் திரும்பும்படி அவர்களுடைய கண்களைத் திறக்கவும், அவர்கள் தங்களுடைய பாவமன்னிப்பைப் பெற்று, என்மேலுள்ள விசுவாசத்தினால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுடன் இடத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாகவே, நான் உன்னை அனுப்புகிறேன்’ என்றார். “அகிரிப்பா அரசே, ஆகவே அந்த பரலோக தரிசனத்திற்கு நான் கீழ்ப்படியாதவனாய் இருக்கவில்லை.
அப்போஸ்தலர் 26:9-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
முன்னே நானும் நசரேயனாகிய இயேசுவின் நாமத்திற்கு எதிராக அநேக காரியங்களைச் செய்யவேண்டுமென்று நினைத்திருந்தேன். அப்படியே நான் எருசலேமிலும் செய்தேன். நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அனுமதிபெற்று, பரிசுத்தவான்களில் அநேகரைச் சிறைச்சாலைகளில் அடைத்தேன்; அவர்கள் கொலைசெய்யப்படும்போது நானும் சம்மதித்திருந்தேன். எல்லா ஜெபஆலயங்களிலும் நான் அவர்களை பலமுறைத் தண்டித்து அவதூறு சொல்லக் கட்டாயப்படுத்தினேன்; அவர்கள் பேரில் கோபவெறிகொண்டவனாக அந்நியப் பட்டணங்கள்வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன். இப்படிச் செய்துவரும்போது, நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் அனுமதியும் பெற்று, தமஸ்குவிற்குப் போகும்போது, மத்தியான நேரத்தில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பயணம் செய்தவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன். நாங்களெல்லோரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினம் என்று எபிரெயு மொழியிலே என்னுடனே பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார்? என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். நீ பார்த்தவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும்குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குக் காட்சியளித்தேன். உன் சொந்த மக்களிடத்திலிருந்தும் அந்நிய மக்களிடத்திலிருந்தும் உன்னை விடுதலையாக்கி, அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய உரிமைப்பங்கையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறப்பதற்காக, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். ஆகவே, அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்திற்குக் கீழப்படியாதவனாக இருக்கவில்லை.
அப்போஸ்தலர் 26:9-19 பரிசுத்த பைபிள் (TAERV)
“நான் பரிசேயனாக இருந்தபோது, நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவின் பெயருக்கு எதிராகப் பல காரியங்களைச் செய்ய எண்ணினேன். எருசலேமில் விசுவாசிகளுக்கு எதிராகப் பல காரியங்களைச் செய்தேன். விசுவாசிகளில் பலரைச் சிறையிலிடும் அதிகாரத்தைத் தலைமை ஆசாரியர் எனக்குக் கொடுத்திருந்தனர். இயேசுவின் சீஷர்கள் கொல்லப்பட்டபோது, அது ஒரு நல்ல செய்கை என்று நான் ஒப்புக்கொண்டேன். ஒவ்வொரு யூத ஜெப ஆலயத்திலும் நான் அவர்களைத் தண்டித்தேன். இயேசுவுக்கு எதிராக அவர்கள் தகாதவற்றைப் பேசச் செய்வதற்கு முயற்சித்தேன். அம்மக்களிடம் நான் கொண்ட அதிக சினத்தால் அவர்களைக் கண்டு பிடித்துத் துன்புறுத்துவதற்காக வேறு நகரங்களுக்கு சென்றேன். “ஒரு முறை தலைமை ஆசாரியர் தமஸ்கு நகரத்திற்குப் போகும் அதிகாரத்தையும் அனுமதியையும் கொடுத்தார்கள். நான் தமஸ்குவுக்குப் போய்க்கொண்டிருந்தேன். அது நண்பகல் பொழுது. நான் வானத்திலிருந்து ஓர் ஒளியைப் பார்த்தேன். சூரியனைக் காட்டிலும் அதிகமாக அவ்வொளி பிரகாசித்தது. அந்த ஒளி என்னையும் என்னோடு பயணம் செய்த மனிதர்களைச் சுற்றியும் பிரகாசித்தது. நாங்கள் எல்லோரும் நிலத்தில் வீழ்ந்தோம். அப்போது யூத மொழியில் ஒரு குரல் என்னோடு பேசுவதைக் கேட்டேன். அக்குரல் ‘சவுலே, சவுலே, ஏன் இக்கொடுமைகளை எனக்கு எதிராகச் செய்கிறாய்? நீ என்னை எதிர்ப்பதன் மூலம் உன்னை நீயே துன்புறுத்திக்கொண்டிருக்கிறாய்’ என்றது. “நான், ‘ஆண்டவரே, நீங்கள் யார்’ என்றேன். ஆண்டவர், ‘நான் இயேசு. நீ துன்பப்படுத்துகிறவர் நானே. எழுந்திரு. நான் உன்னை எனது ஊழியனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நீ எனக்குச் சாட்சியாக இருப்பாய். இன்று பார்த்த என்னைப் பற்றிய செய்திகளையும், உனக்கு நான் காட்டப்போகிற விஷயங்களையும் நீ மக்களுக்குக் கூறுவாய். நான் உனது சொந்த மக்கள் உன்னைத் துன்புறுத்துவதற்கு அனுமதிக்கமாட்டேன். யூதரல்லாத மக்களிடமிருந்தும் நான் உன்னைப் பாதுகாப்பேன். நான் உன்னை இம்மக்களிடம் அனுப்புகிறேன். உண்மையை இம்மக்களுக்கு நீ காட்டுவாய். அதனால் மக்கள் இருளிலிருந்து ஒளிக்குத் திரும்புவார்கள். சாத்தானின் அதிகாரத்திலிருந்து தேவனிடம் திரும்புவார்கள். மேலும் அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும். என்னை நம்புவதால் பரிசுத்தமாக்கப்பட்ட மனிதரோடு அவர்களும் பங்குபெற முடியும்’ என்றார்” என்று கூறினான். பவுல் தொடர்ந்து பேசினான். “அகிரிப்பா மன்னரே, பரலோகத்திலிருந்து இக்காட்சி வந்தபோது, நான் அதற்குக் கீழ்ப்படிந்தேன்.
அப்போஸ்தலர் 26:9-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
முன்னே நானும் நசரேயனாகிய இயேசுவின் நாமத்திற்கு விரோதமாய் அநேகக் காரியங்களை நடப்பிக்கவேண்டுமென்று நினைத்திருந்தேன். அப்படியே நான் எருசலேமிலும் செய்தேன். நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரம் பெற்று, பரிசுத்தவான்களில் அநேகரைச் சிறைச்சாலைகளில் அடைத்தேன்; அவர்கள் கொலைசெய்யப்படுகையில் நானும் சம்மதித்திருந்தேன். சகல ஜெப ஆலயங்களிலும் நான் அவர்களை அநேகந்தரம் தண்டித்து, தேவதூஷணஞ்சொல்லக் கட்டாயப்படுத்தினேன்; அவர்கள்பேரில் மூர்க்கவெறிகொண்டவனாய் அந்நியப்பட்டணங்கள்வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன். இப்படிச் செய்துவருகையில், நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் உத்தரவும் பெற்று, தமஸ்குவுக்குப் போகும்போது, மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பிரயாணம்பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன். நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன். உன் சுயஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி, அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். ஆகையால், அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழப்படியாதவனாயிருக்கவில்லை.