அப்போஸ்தலர் 26:12-29 - Compare All Versions
அப்போஸ்தலர் 26:12-29 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“இப்படியாக ஒருமுறை நான் தலைமை ஆசாரியரின் அதிகாரத்துடனும், ஆணையுடனும் தமஸ்கு பட்டணத்திற்கு போய்க்கொண்டிருந்தேன். அரசே, நான் போகும் வழியில், மத்தியான வேளையில், வானத்திலிருந்து ஒரு ஒளியைக் கண்டேன். அது சூரியனைவிடப் பிரகாசமுடையதாய், என்னையும் என்னுடன் வந்தவர்களையும் சுற்றிப் பிரகாசித்தது. நாங்கள் அனைவரும் தரையில் விழுந்தோம். ஒரு குரல் எபிரெய மொழியில் என்னுடன் பேசுவதைக் கேட்டேன். அது, ‘சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முட்களை உதைப்பது உனக்குக் கடினமே’ என்றது. “அப்பொழுது நான், ‘ஆண்டவரே, நீர் யார்?’ என்று கேட்டேன். “ ‘ஆண்டவர் அதற்கு மறுமொழியாக, நான் இயேசு, நீ என்னையே துன்புறுத்துகிறாய். இப்பொழுது நீ எழுந்து காலூன்றி நில். நான் உன்னை என் ஊழியனாகவும், சாட்சியாகவும் நியமிப்பதற்கே, உனக்குக் காட்சியளித்தேன். என்னைக் கண்டது குறித்தும், நான் உனக்குக் காண்பிக்கப் போகிறவற்றிற்கும், நீ சாட்சியாய் இருக்கவேண்டும். நான் உன்னை உன் சொந்த மக்களிடமிருந்தும், யூதரல்லாதவர்களிடமிருந்தும் காப்பாற்றுவேன். நீ அவர்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்கும், சாத்தானின் அதிகாரத்திலிருந்து இறைவனிடத்திற்கும் திரும்பும்படி அவர்களுடைய கண்களைத் திறக்கவும், அவர்கள் தங்களுடைய பாவமன்னிப்பைப் பெற்று, என்மேலுள்ள விசுவாசத்தினால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுடன் இடத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாகவே, நான் உன்னை அனுப்புகிறேன்’ என்றார். “அகிரிப்பா அரசே, ஆகவே அந்த பரலோக தரிசனத்திற்கு நான் கீழ்ப்படியாதவனாய் இருக்கவில்லை. எனவே முதலாவது தமஸ்குவில் இருந்தவர்களுக்கும், பின்பு எருசலேமிலும் முழு யூதேயாவில் இருந்தவர்களுக்கும், யூதரல்லாதவர்களுக்கும்கூட நான் பிரசங்கித்தேன். அவர்கள் மனந்திரும்பி இறைவனிடம் திரும்பவேண்டும் என்றும், தங்களுடைய மனந்திரும்புதலை அவர்கள் தங்கள் செயல்களினால் நிரூபிக்கவேண்டும் என்றும் அறிவித்தேன். இதனாலேயே யூதர்கள், ஆலய முற்றத்தில் இருந்த என்னைப் பிடித்துக் கொலைசெய்ய முயற்சித்தார்கள். ஆனால், இன்றுவரை, நான் இறைவனுடைய உதவியைப் பெற்றவனாய், இங்கே நின்று சிறியவர்கள் பெரியவர்கள் எல்லோருக்கும் சாட்சி கொடுக்கிறேன். இறைவாக்கினரும், மோசேயும் என்ன நடக்கும் என்று சொன்னார்களோ, அதையேதான் நானும் சொல்கிறேன். வேறு எதையும் நான் சொல்லவில்லை. கிறிஸ்து வேதனைகள் அனுபவித்து, பின் இறந்தவர்களிலிருந்து முதலாவதாய் எழுந்திருப்பவராய், தனது சொந்த மக்களுக்கும், யூதரல்லாதவர்களுக்கும் ஒளியைப் பிரசித்தப்படுத்துவார் என்றே அவர்களும் சொன்னார்கள்” என்றார். அந்நேரத்தில் பெஸ்து குறுக்கிட்டு பவுலிடம், “பவுலே, உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது!” உனது அதிக படிப்பினால் “உனக்கு மூளை குழம்பிவிட்டது” என்று சத்தமிட்டுச் சொன்னான். அதற்குப் பவுல், “மதிப்புக்குரிய பெஸ்து அவர்களே, எனக்கு மூளை குழம்பவில்லை. நான் சொல்வது உண்மையும், நியாயமானதுமாய் இருக்கிறது. அரசர் இவற்றையெல்லாம் அறிந்திருக்கிறார். அதனால்தான் நான் அவருடன் தாராளமாய் பேசுகிறேன். நான் பேசும் இவை ஒன்றும் அவருக்குத் தெரியாமல் நடந்தவை அல்ல என்பது எனக்குத் தெரியும். ஏனெனில், இவை மூலைமுடுக்கில் நடந்தவை அல்ல. அகிரிப்பா அரசே, நீர் இறைவாக்கினரை நம்புகிறீரா? நீர் நம்புகிறீர் என்று எனக்குத் தெரியும்” என்றான். அப்பொழுது அகிரிப்பா பவுலிடம், “என்ன! இந்தக் கொஞ்ச நேரத்திலே, நீ என்னைக் கிறிஸ்துவை பின்பற்றுகிறவனாக்க நினைக்கிறாயா?” என்றான். அதற்குப் பவுல், “கொஞ்ச நேரமோ, அதிக நேரமோ, நீர் மட்டுமல்ல, இன்று நான் சொல்வதைக் கேட்கும் அனைவரும், என்னைப்போல் ஆகவேண்டும்; ஆனால் இவ்விதம் சங்கிலிகளால் மட்டும் கட்டப்படக்கூடாது என்றே இறைவனிடம் மன்றாடுகிறேன்” என்றான்.
அப்போஸ்தலர் 26:12-29 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இப்படிச் செய்துவரும்போது, நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் அனுமதியும் பெற்று, தமஸ்குவிற்குப் போகும்போது, மத்தியான நேரத்தில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பயணம் செய்தவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன். நாங்களெல்லோரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினம் என்று எபிரெயு மொழியிலே என்னுடனே பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார்? என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். நீ பார்த்தவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும்குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குக் காட்சியளித்தேன். உன் சொந்த மக்களிடத்திலிருந்தும் அந்நிய மக்களிடத்திலிருந்தும் உன்னை விடுதலையாக்கி, அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய உரிமைப்பங்கையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறப்பதற்காக, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். ஆகவே, அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்திற்குக் கீழப்படியாதவனாக இருக்கவில்லை. முன்பு தமஸ்குவிலும் எருசலேமிலும் யூதேயா நாடெங்குமுள்ளவர்களிடத்திலும், பின்பு யூதரல்லாதோர்களிடத்திலும் நான் போய், அவர்கள் தேவனிடத்திற்கு மனம்திரும்பி குணப்படவும், மனம்திரும்புவதற்கேற்ற செயல்களைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன். இதினிமித்தமே யூதர்கள் தேவாலயத்திலே என்னைப் பிடித்துக் கொலைசெய்ய முயற்சிசெய்தார்கள். ஆனாலும் தேவ உதவியைப் பெற்று, நான் இந்த நாள்வரை சிறியோர்களுக்கும் பெரியோர்களுக்கும் சாட்சி சொல்லிவருகிறேன். தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சொந்த மக்களுக்கும் அந்நிய மக்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான். இவ்விதமாக அவன் தனக்காக பதில்சொல்லும்போது, பெஸ்து மிகவும் சத்தமாக: பவுலே, நீ உலறுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான். அதற்கு அவன்: கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சுயபுத்தியோடு வார்த்தைகளைப் பேசுகிறேன். இந்தச் செய்திகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகவே, தைரியமாக அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று நினைக்கிறேன்; இது ஒரு பக்கம் நடந்த காரியமல்ல. அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளை நம்புகிறீரா? நம்புகிறீர் என்று அறிவேன் என்றான். அப்பொழுது அகிரிப்பா பவுலைப் பார்த்து: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கச் செய்கிறாய் என்றான். அதற்குப் பவுல்: நீர் மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற அனைவரும், கொஞ்சங்குறையமட்டும் அல்ல, இந்தக் கட்டுகள்தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
அப்போஸ்தலர் 26:12-29 TAERV (பரிசுத்த பைபிள்)
“ஒரு முறை தலைமை ஆசாரியர் தமஸ்கு நகரத்திற்குப் போகும் அதிகாரத்தையும் அனுமதியையும் கொடுத்தார்கள். நான் தமஸ்குவுக்குப் போய்க்கொண்டிருந்தேன். அது நண்பகல் பொழுது. நான் வானத்திலிருந்து ஓர் ஒளியைப் பார்த்தேன். சூரியனைக் காட்டிலும் அதிகமாக அவ்வொளி பிரகாசித்தது. அந்த ஒளி என்னையும் என்னோடு பயணம் செய்த மனிதர்களைச் சுற்றியும் பிரகாசித்தது. நாங்கள் எல்லோரும் நிலத்தில் வீழ்ந்தோம். அப்போது யூத மொழியில் ஒரு குரல் என்னோடு பேசுவதைக் கேட்டேன். அக்குரல் ‘சவுலே, சவுலே, ஏன் இக்கொடுமைகளை எனக்கு எதிராகச் செய்கிறாய்? நீ என்னை எதிர்ப்பதன் மூலம் உன்னை நீயே துன்புறுத்திக்கொண்டிருக்கிறாய்’ என்றது. “நான், ‘ஆண்டவரே, நீங்கள் யார்’ என்றேன். ஆண்டவர், ‘நான் இயேசு. நீ துன்பப்படுத்துகிறவர் நானே. எழுந்திரு. நான் உன்னை எனது ஊழியனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நீ எனக்குச் சாட்சியாக இருப்பாய். இன்று பார்த்த என்னைப் பற்றிய செய்திகளையும், உனக்கு நான் காட்டப்போகிற விஷயங்களையும் நீ மக்களுக்குக் கூறுவாய். நான் உனது சொந்த மக்கள் உன்னைத் துன்புறுத்துவதற்கு அனுமதிக்கமாட்டேன். யூதரல்லாத மக்களிடமிருந்தும் நான் உன்னைப் பாதுகாப்பேன். நான் உன்னை இம்மக்களிடம் அனுப்புகிறேன். உண்மையை இம்மக்களுக்கு நீ காட்டுவாய். அதனால் மக்கள் இருளிலிருந்து ஒளிக்குத் திரும்புவார்கள். சாத்தானின் அதிகாரத்திலிருந்து தேவனிடம் திரும்புவார்கள். மேலும் அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும். என்னை நம்புவதால் பரிசுத்தமாக்கப்பட்ட மனிதரோடு அவர்களும் பங்குபெற முடியும்’ என்றார்” என்று கூறினான். பவுல் தொடர்ந்து பேசினான். “அகிரிப்பா மன்னரே, பரலோகத்திலிருந்து இக்காட்சி வந்தபோது, நான் அதற்குக் கீழ்ப்படிந்தேன். மக்கள் அவர்களது இருதயங்களையும் வாழ்க்கைகளையும் மாற்றிக்கொண்டு, தேவனிடம் திரும்ப வேண்டுமென்று அவர்களுக்குக் கூற ஆரம்பித்தேன். அவர்கள் மனம் மாறினார்கள் என்பதை வெளிக்காட்டும்படியான செயல்களைச் செய்யுமாறு மக்களுக்குக் கூறினேன். தமஸ்குவிலுள்ள மக்களுக்கு முதலில் இதைக் கூற ஆரம்பித்தேன். பின் எருசலேமுக்கும், யூதேயாவின் ஒவ்வொரு பாகத்திற்கும் சென்று, அங்குள்ள மக்களுக்கு இவற்றைக் கூறினேன். மேலும் யூதரல்லாத மக்களிடமும் நான் சென்றேன். “எனவேதான் யூதர்கள் என்னைப் பிடித்து, தேவாலயத்தில் என்னைக் கொல்ல முயன்றார்கள். ஆனால் தேவன் எனக்கு உதவினார். இன்னமும் எனக்கு உதவிக் கொண்டிருக்கிறார். தேவனுடைய உதவியால் நான் இன்று இங்கு நின்று கொண்டிருக்கிறேன். நான் கண்ட மகத்தானதும் எளியதுமானவற்றையும் கூறிக்கொண்டுள்ளேன். ஆனால் நான் எதையும் புதிதாகக் கூறிக் கொண்டிருக்கவில்லை. பின்னர் நிகழுமென்று மோசேயும் தீர்க்கதரிசிகளும் கூறியவற்றை நான் கூறிக்கொண்டிருக்கிறேன். தொல்லைகளை அனுபவித்தபின் மரணத்தின்று முதன் முதலில் எழுபவர் கிறிஸ்துவே என்று அவர்கள் கூறினர். மோசேயும் தீர்க்கதரிசிகளும் கிறிஸ்து யூத மக்களுக்கும் யூதரல்லாத மக்களுக்கும் ஒளியைத் தருபவர் என்று கூறினார்கள்” என்றான். பவுல் இவற்றைத் தனக்குச் சாதகமாகக் கூறிக்கொண்டிருந்தபொழுது பெஸ்து உரக்க, “பவுலே, நீ பைத்தியக்காரன்! அதிகப் படிப்பு உன்னைப் பித்தனாக்கிவிட்டது!” என்றான். பவுல், “மிக மாட்சிமைமிக்க பெஸ்துவே, நான் பித்தன் அல்லன். நான் கூறுபவை உண்மையானவை. எனது வார்த்தைகள் ஒரு மூடனின் வார்த்தைகள் அல்ல. அவை உண்மையானவையும், ஞானமிக்கவையும் ஆகும். அகிரிப்பா மன்னர் இவற்றை நன்கு அறிந்திருக்கிறார். நான் சுதந்திரமாக அவரோடு பேசமுடியும். இவை அனைத்தையும் குறித்து அவர் கேள்விப்பட்டிருக்கிறார் என்பதை நான் அறிவேன். ஏன்? இவையனைத்தும் மக்கள் காணும்படியாக நடந்தவையே. அகிரிப்பா மன்னரே, தீர்க்கதிரிசிகள் எழுதியவற்றை நம்புகிறீர்களா? நீங்கள் நம்புகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்!” என்றான். அகிரிப்பா பவுலிடம் “நீ அவ்வளவு எளிதாக என்னைக் கிறிஸ்தவனாக மாறுவதற்குத் தூண்ட முடியும் என்று நினைக்கிறாயா?” என்று கேட்டான். பவுல், “அது எளிதானதா கடினமானதா, என்பது முக்கியமல்ல. நீங்கள் மட்டுமல்ல, என்னைக் கேட்கிற இங்குள்ள ஒவ்வொருவரும் இன்று இரட்சிக்கப்பட்டு எனக்குப் பூட்டப்பட்டுள்ள இந்த விலங்குகளைத் தவிர்த்து எல்லாவற்றிலும் என்னைப் போலாக வேண்டுமென்று தேவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என்றான்.
அப்போஸ்தலர் 26:12-29 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
இப்படிச் செய்துவருகையில், நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் உத்தரவும் பெற்று, தமஸ்குவுக்குப் போகும்போது, மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பிரயாணம்பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன். நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன். உன் சுயஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி, அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். ஆகையால், அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழப்படியாதவனாயிருக்கவில்லை. முன்பு தமஸ்குவிலும் எருசலேமிலும் யூதேயா தேசமெங்குமுள்ளவர்களிடத்திலும், பின்பு புறஜாதியாரிடத்திலும் நான் போய், அவர்கள் தேவனிடத்திற்கு மனந்திரும்பிக் குணப்படவும், மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன். இதினிமித்தமே யூதர்கள் தேவாலயத்திலே என்னைப் பிடித்துக் கொலைசெய்யப் பிரயத்தனம் பண்ணினார்கள். ஆனாலும் தேவ அநுக்கிரகம் பெற்று, நான் இந்நாள்வரைக்கும் சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சிகூறி வருகிறேன். தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சுயஜனங்களுக்கும் அந்நிய ஜனங்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான். இவ்விதமாய் அவன் தனக்காக உத்தரவு சொல்லுகையில், பெஸ்து உரத்தசத்தமாய்: பவுலே, நீ பிதற்றுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான். அதற்கு அவன்: கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சொஸ்தபுத்தியுமுள்ள வார்த்தைகளைப் பேசுகிறேன். இந்தச் சங்கதிகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று எண்ணுகிறேன்; இது ஒரு மூலையிலே நடந்த காரியமல்ல. அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீரா? விசுவாசிக்கிறீர் என்று அறிவேன் என்றான். அப்பொழுது அகிரிப்பா பவுலை நோக்கி: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய் என்றான். அதற்குப் பவுல்: நீர்மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற யாவரும், கொஞ்சங்குறையமாத்திரம் அல்ல, இந்தக் கட்டுகள் தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.