அப்போஸ்தலர் 22:1-21

அப்போஸ்தலர் 22:1-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பவுல் அவர்களைப் பார்த்து, “சகோதரரே, தந்தையரே, எனது சார்பாக நான் சொல்வதைக் கேளுங்கள்” என்றான். அவன் தங்களுடன் எபிரெய மொழியில் பேசுவதை அவர்கள் கேட்டபோது, அவர்கள் அமைதியாயிருந்தார்கள். அப்பொழுது பவுல் சொன்னதாவது: “நான் ஒரு யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சு பட்டணத்தில் பிறந்தவன், ஆனால் எருசலேம் நகரத்திலே வளர்க்கப்பட்டவன். கல்விமான் கமாலியேலிடம் நமது தந்தையர்களின் மோசேயின் சட்டத்தையும், அதன் வழக்கங்களையும் நுட்பமாகக் கற்றேன். இன்று நீங்கள் ஒவ்வொருவரும் இறைவனிடம் பக்திவைராக்கியமாய் இருப்பதுபோலவே நானும் இருந்தேன். இந்த வழியைப் பின்பற்றியவர்களை கொலைசெய்யும் அளவிற்கு துன்பப்படுத்தி இருக்கிறேன். இந்த வழியைப் பின்பற்றுகிற ஆண்களையும், பெண்களையும் கைதுசெய்து சிறையில் அடைத்தேன். இதைக்குறித்து பிரதான ஆசாரியனும், நீதிமன்றத்திலுள்ள அனைவரும் சாட்சி கொடுப்பார்கள். அவர்களிடமிருந்து தமஸ்குவிலுள்ள சகோதரர்களுக்குக் கொடுக்கும்படி கடிதங்களையும் பெற்றேன். இந்த வழியைப் பின்பற்றுகிறவர்களைத் தண்டிப்பதற்கென அவர்களைக் கைதுசெய்து, எருசலேமுக்குக் கொண்டுவரும்படி தமஸ்குவுக்குப் போனேன். “நான் தமஸ்குவை நெருங்கியபோது, மத்தியான வேளையானது. அப்பொழுது திடீரென வானத்திலிருந்து ஒரு பிரகாசமான ஒளி என்னைச் சுற்றிலும் பிரகாசித்தது. நான் தரையில் விழுந்தேன். ‘சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?’ என்று ஒரு குரல் எனக்குச் சொல்வதைக் கேட்டேன். “ ‘அப்பொழுது நான், ஆண்டவரே, நீர் யார்?’ ” என்றேன். “அதற்கு அவர், ‘நான் நசரேயனாகிய இயேசு, நீ துன்புறுத்துவது என்னைத்தான்’ என்று சொன்னார். என்னுடனேகூட வந்தவர்கள் அந்த வெளிச்சத்தைக் கண்டார்கள். ஆனால், என்னுடன் பேசிக் கொண்டிருந்தவரின் குரலை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை. “அப்பொழுது நான் அவரிடம், ‘ஆண்டவரே, நான் என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டேன். “அதற்கு அவர், ‘நீ எழுந்து, தமஸ்கு பட்டணத்திற்குள்ளே போ. நீ செய்ய வேண்டியதெல்லாம், அங்கே உனக்குச் சொல்லப்படும்’ என்றார். என்னுடனேகூட வந்தவர்கள் எனது கையைப் பிடித்து, தமஸ்கு பட்டணத்திற்குள்ளே என்னைக் கூட்டிக்கொண்டு சென்றார்கள். ஏனெனில், அந்த ஒளியின் பிரகாசத்தினால் நான் பார்வை இழந்துபோனேன். “பின்பு அனனியா என்னும் பெயருடைய ஒருவன் என்னைப் பார்க்க வந்தான். அவன் மோசேயின் சட்டத்தைப் பக்தியுடன் கைக்கொள்ளும் ஒருவனாயிருந்தான். தமஸ்குவில் வாழ்ந்த எல்லா யூதராலும், அவன் உயர்வாய் மதிக்கப்பட்டவனாகவும் இருந்தான். அவன் என் அருகே நின்று, ‘சகோதரனாகிய சவுலே, நீ உன் கண் பார்வையைப் பெற்றுக்கொள்!’ என்றான். அந்த வினாடியிலேயே, என்னால் அவனைப் பார்க்கமுடிந்தது. “பின்பு அனனியா என்னிடம்: ‘நமது தந்தையரின் இறைவன் உன்னைத் தெரிந்தெடுத்திருக்கிறார். நீ அவருடைய திட்டத்தை அறியும்படிக்கும், நீதிமானாகிய அவரைக் காணும்படிக்கும், அவருடைய வாயிலிருந்து வார்த்தைகளைக் கேட்கும்படிக்கும் அவர் உன்னைத் தெரிந்திருக்கிறார். நீ கண்டதையும் கேட்டதையும் குறித்து, அனைவருக்கும் அவருடைய சாட்சியாய் இருப்பாய். இப்பொழுதும், நீ எதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறாய்? எழும்பி, அவருடைய பெயரைக் கூப்பிட்டு, திருமுழுக்கைப் பெற்றுக்கொண்டு, உன் பாவங்களைக் கழுவிக்கொள்’ என்றான். “பின்பு நான், எருசலேமுக்கு திரும்பிவந்து ஆலயத்தில் மன்றாடிக்கொண்டிருக்கையில், நான் ஆவிக்குட்பட்டேன். அப்பொழுது நான் கர்த்தரைக் கண்டேன். அவர் என்னிடம், ‘தாமதியாதே! எருசலேமைவிட்டு சீக்கிரமாய் புறப்படு. ஏனெனில், அவர்கள் என்னைக்குறித்து நீ சொல்லும் சாட்சியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்’ என்றார். “அப்பொழுது நான், ‘கர்த்தாவே, நான் ஒவ்வொரு ஜெப ஆலயத்திற்கும் போய், உம்மில் விசுவாசமாய் இருந்தவர்களைச் சிறையிலிட்டு அடித்தது இவர்களுக்குத் தெரியுமே. உமக்காக இரத்தச் சாட்சியாய் இறந்த ஸ்தேவான் கொலைசெய்யப்பட்டபோது, நானும் அங்கு நின்று அவர்களோடு உடன்பட்டேன். அத்துடன், அவனைக் கொன்றவர்களின் உடைகளுக்கும் நானே காவல் இருந்தேன்’ என்றேன். “அப்பொழுது கர்த்தர் என்னிடம், ‘நீ போ; நான் உன்னைத் தூரத்திலிருக்கிற யூதரல்லாதவர்களிடத்திற்கு அனுப்புவேன்’ என்றார்” என்று பவுல் பேசி முடித்தான்.

அப்போஸ்தலர் 22:1-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சகோதரர்களே, பெரியோர்களே, நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லப்போகிற நியாயங்களை கவனித்துக் கேளுங்கள் என்றான். அவன் எபிரெய மொழியிலே தங்களோடு பேசுகிறதை அவர்கள் கேட்டபொழுது, மிகவும் அமைதியாக இருந்தார்கள். அப்பொழுது அவன்: நான் யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சு பட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதபிரமாணத்தின்படியே திட்டமாக போதிக்கப்பட்டு, இன்றையதினம் நீங்களெல்லோரும் தேவனைக்குறித்து வைராக்கியம் உள்ளவர்களாக இருக்கிறதுபோல நானும் வைராக்கியம் உள்ளவனாக இருந்தேன். நான் இந்த மார்க்கத்தைச் சார்ந்த ஆண்களையும் பெண்களையும் பிடித்து, சிறைச்சாலைகளில் ஒப்படைத்து, மரணம் ஏற்படும்வரை துன்பப்படுத்தினேன். அதற்கு பிரதான ஆசாரியர்களும் மூப்பர்கள் அனைவரும் சாட்சிகொடுப்பார்கள்; அவர்கள் கையினாலே நான் சகோதரர்களுக்கு கடிதங்களை வாங்கிக்கொண்டு, தமஸ்குவில் இருக்கிறவர்களைத் தண்டிப்பதற்கு, அவர்களைக் கைதுசெய்து, எருசலேமுக்குக் கொண்டு வருவதற்காக அங்குப்போனேன். அப்படி நான் புறப்பட்டுப் போகும் வழியில் தமஸ்குவிற்கு அருகில், மத்தியான நேரத்திலே, திடீரென்று வானத்திலிருந்து பெரிய வெளிச்சம் உண்டாகி, என்னைச் சுற்றிப் பிரகாசித்தது. நான் தரையிலே விழுந்தேன். அந்தநேரத்தில்: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார். அச்சமயம் என்னுடனேகூட இருந்தவர்கள் அந்த வெளிச்சத்தைக் கண்டு, பயந்துவிட்டார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை. அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவிற்குப் போ; அங்கே நீ செய்யவேண்டியதெல்லாம் உனக்குச் சொல்லப்படும் என்றார். அந்த ஒளியின் மிகுதியினாலே நான் பார்வையை இழந்துபோனதினால், என்னோடிருந்தவர்களின் உதவியால் வழிநடத்தப்பட்டு தமஸ்குவிற்கு வந்தேன். அப்பொழுது வேதபிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற எல்லா யூதர்களாலும் நல்லவனென்று பெயர்பெற்றவனுமாகிய அனனியா என்பவன், என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, பார்வையடைவாயாக என்றான்; உடனே நான் பார்வையடைந்து, அவனைப் பார்த்தேன். அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனின் சித்தத்தை நீ தெரிந்துகொள்ளவும், நீதியுள்ளவரை தரிசிக்கவும், அவருடைய உயர்வான வாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார். நீ பார்த்தவைகளையும் கேட்டவைகளையும்குறித்துச் எல்லா மனிதர்களுக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாக இருப்பாய். இப்பொழுது நீ தாமதிக்கிறது என்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் பணிந்துகொண்டு, ஞானஸ்நானம் பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான். பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து, தேவாலயத்திலே ஜெபம் செய்துகொண்டிருக்கும்போது, நான் தரிசனத்திலே அவரைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்த்து: நீ என்னைக்குறித்துச் சொல்லும் சாட்சியை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; ஆகவே, நீ தாமதம்பண்ணாமல் சீக்கிரமாக எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போ என்றார். அதற்கு நான்: ஆண்டவரே, உம்மிடத்தில் விசுவாசமாக இருக்கிறவர்களை நான் காவலில் வைத்து ஜெப ஆலயங்களிலே அடித்ததையும், உம்முடைய சாட்சியாக வாழ்ந்த ஸ்தேவானுடைய இரத்தம் சிந்தப்படுகிறபோது, நானும் அருகே நின்று, அவனைக் கொலை செய்வதற்குச் சம்மதித்து, அவனைக் கொலைசெய்தவர்களின் உடைகளை பாதுகாத்துக் கொண்டிருந்ததையும், இவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றேன். அதற்கு அவர்: நீ போ, நான் உன்னை தொலைவில் உள்ள யூதரல்லாதவர்களிடத்திலே அனுப்புவேன் என்று சொன்னார் என்றான்.

அப்போஸ்தலர் 22:1-21 பரிசுத்த பைபிள் (TAERV)

பவுல், “எனது சகோதரர்களே! தந்தையரே! நான் கூறுவதைக் கேளுங்கள், நான் என் சார்பான நியாயங்களை உங்கள் முன்வைக்கிறேன்” என்றான். பவுல் யூத மொழியில் பேசுவதை யூதர்கள் கேட்டார்கள். எனவே அவர்கள் மேலும் அமைதியாயினர். பவுல், “நான் ஒரு யூதன், நான் சிலிசியா நாட்டிலுள்ள தர்சுவில் பிறந்தவன். இந்நகரில் வளர்ந்தவன். நான் கமாலியேலின் மாணவன். நமது முன்னோரின் சட்டங்களை அவர் எனக்கு மிக நம்பிக்கையுடன் போதித்தார். நான் தேவனுடைய சேவையில், நீங்கள் எல்லோரும் இப்போது இருப்பதைப் போல், முனைந்து நின்றேன். இயேசுவின் வழியைப் பின்பற்றிய மக்களைத் தண்டித்தேன். அவர்களில் சிலர் என் நிமித்தமாகக் கொல்லப்பட்டனர். நான் ஆண்களையும் பெண்களையும் கைது செய்தேன். அவர்களை சிறையில் வைத்தேன். “தலைமை ஆசாரியரும் முதிய யூதர்களின் சங்கமும் இது உண்மை என்பதை உங்களுக்குக் கூறமுடியும்! ஒருமுறை இந்த அதிகாரிகள் என்னிடம் சில கடிதங்களைக் கொடுத்தனர். அக்கடிதங்கள் தமஸ்குவிலுள்ள யூத சகோதரர்களுக்கு முகவரி இடப்பட்டிருந்தன. நான் அங்கு இயேசுவின் சீஷர்களைக் கைது செய்வதற்கும் தண்டனைக்காக அவர்களை எருசலேமுக்குக் கொண்டுவரவும் போய்க் கொண்டிருந்தேன். “ஆனால் தமஸ்குவிற்கு நான் செல்லும் வழியில் ஏதோ ஒன்று எனக்கு நிகழ்ந்தது. நான் தமஸ்குவை நெருங்கிக்கொண்டிருந்தபோது அது நண் பகல் நேரம். தீடீரென்று என்னைச் சுற்றிலும் வானிலிருந்து மிகுந்த ஒளி பிரகாசித்தது. நான் தரையில் வீழ்ந்தேன். ஒரு குரல் என்னிடம், ‘சவுலே, சவுலே, நீ ஏன் எனக்கு இத்தீய காரியங்களைச் செய்கின்றாய்?’ என்றது. “நான், ‘ஆண்டவரே நீர் யார்?’ என்று கேட்டேன், அக்குரல், ‘நான் நாசரேத்தின் இயேசு. நீ கொடுமைப்படுத்துகிறவன் நானே’ என்றது. என்னோடிருந்த மனிதர்கள் அக்குரலைக் கேட்கவில்லை. ஆனால் அம்மனிதர்கள் ஒளியைக் கண்டார்கள். “நான், ‘ஆண்டவரே, நான் என்ன செய்யட்டும்?’ என்றேன். கர்த்தராகிய இயேசு பதிலாக, ‘எழுந்து தமஸ்குவுக்குள் போ, நீ செய்ய வேண்டுமென நான் திட்டமிட்டுள்ள அனைத்தையும் குறித்து அங்கே உனக்கு அறிவிக்கப்படும்’ என்றார். என்னால் பார்க்கமுடியாதபடிக்கு, அப்பிரகாசமான ஒளி என்னைக் குருடாக்கிற்று. எனவே என் மனிதர்கள் என்னைத் தமஸ்குவுக்கு வழி நடத்தினார்கள். “தமஸ்குவில் அனனியா என்னும் பெயருள்ள மனிதன் என்னிடம் வந்தான். அனனியா பக்திமான். அவன் மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தவன். அங்கு வாழ்ந்த யூதர்கள் அனைவரும் அவனை மதித்தனர். அனனியா என் அருகில் வந்து, ‘சகோதரனாகிய சவுலே, மீண்டும் பார்ப்பாயாக’ என்றான். உடனே என்னால் பார்க்க முடிந்தது. “அனனியா என்னிடம், ‘நமது முன்னோர்களின் தேவன் அவரது திட்டத்தைத் தெரிந்துகொள்வதற்கு உன்னைத் தேர்ந்தெடுத்தார். நேர்மையானவரைக் கண்டு அவரது வார்த்தைகளை அவரிடமிருந்து கேட்பதற்காக அவர் உன்னைத் தெரிந்துகொண்டார். எல்லா மக்களுக்கும் நீ அவரது சாட்சியாக இருப்பாய். நீ பார்த்ததையும் கேட்டதையும் மனிதருக்குக் கூறுவாய். இப்போது இன்னும் காத்திராமல் எழுந்திரு. ஞானஸ்நானம் பெற்றுக்கொள். உன் பாவங்கள் நீங்கக் கழுவப்படு. உன்னை இரட்சிப்பதற்காக இயேசுவின் மீது விசுவாசம் கொண்டு இதனைச் செய்’ என்றான். “பிற்பாடு நான் எருசலேமுக்குத் திரும்பி வந்தேன். நான் தேவாலய முற்றத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது ஒரு காட்சியைக் கண்டேன். நான் இயேசுவைக் கண்டேன். இயேசு என்னிடம், ‘விரைவாகச் செயல்படு. இப்போதே எருசலேமை விட்டுச் செல். இங்குள்ள மக்கள் என்னைப்பற்றிய உனது சாட்சியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்’ என்றார். “நான், ‘ஆனால் கர்த்தாவே, நான் விசுவாசிகளைச் சிறையில் அடைத்தும் அவர்களை அடித்துத் துன்புறுத்தியவனுமாயிருந்தேன் என்பதை மக்கள் அறிவர். உங்களிடம் நம்பிக்கை வைத்த மக்களைத் தேடி யூத ஜெப ஆலயங்களுக்கெல்லாம் சென்றேன். உங்கள் சாட்சியாக ஸ்தேவான் கொல்லப்பட்டபோது நான் அங்கிருந்ததையும் மக்கள் அறிவர். நான் அங்கு நின்று ஸ்தேவான் கொல்லப்பட வேண்டுமென ஆமோதித்தேன். அவனைக் கொன்று கொண்டிருந்த மனிதர்களின் அங்கிகளையும் வைத்திருந்தேன்!’ என்றேன். “ஆனால் பின்னர் இயேசு என்னை நோக்கி, ‘இப்போது புறப்பட்டுச் செல். நான் உன்னைத் தூர இடங்களுக்கு யூதரல்லாத மக்களிடம் அனுப்புவேன்’ என்றார்” என்றான்.

அப்போஸ்தலர் 22:1-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சகோதரரே, பிதாக்களே, நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லப்போகிற நியாயங்களுக்குச் செவிகொடுப்பீர்களாக என்றான். அவன் எபிரெயுபாஷையிலே தங்களுடனே பேசுகிறதை அவர்கள் கேட்டபொழுது, அதிக அமைதலாயிருந்தார்கள். அப்பொழுது அவன்: நான் யூதன், சிலிசியாநாட்டிலுள்ள தர்சுபட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டு, இன்றையத்தினம் நீங்களெல்லாரும் தேவனைக்குறித்து வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறதுபோல நானும் வைராக்கியமுள்ளவனாயிருந்தேன். நான் இந்த மார்க்கத்தாராகிய புருஷரையும் ஸ்திரீகளையும் கட்டி, சிறைச்சாலைகளில் ஒப்புவித்து, மரணபரியந்தம் துன்பப்படுத்தினேன். அதற்குப் பிரதான ஆசாரியரும் மூப்பர் யாவரும் சாட்சிகொடுப்பார்கள்; அவர்கள் கையிலே நான் சகோதரருக்கு நிருபங்களை வாங்கிக்கொண்டு, தமஸ்குவிலிருக்கிறவர்களும் தண்டிக்கப்படும்படிக்கு, அவர்களைக் கட்டி, எருசலேமுக்குக் கொண்டுவரும்படி அவ்விடத்திற்குப்போனேன். அப்படி நான் பிரயாணப்பட்டுத் தமஸ்குவுக்குச் சமீபமானபோது, மத்தியான வேளையிலே, சடிதியாய் வானத்திலிருந்து பேரொளி உண்டாகி, என்னைச் சுற்றிப் பிரகாசித்தது. நான் தரையிலே விழுந்தேன். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார். என்னுடனேகூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக் கண்டு, பயமடைந்தார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை. அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ; நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். அந்த ஒளியின் மகிமையினாலே நான் பார்வையற்றுப்போனபடியினால், என்னோடிருந்தவர்களால் கைலாகுகொடுத்து வழிநடத்தப்பட்டுத் தமஸ்குவுக்கு வந்தேன். அப்பொழுது வேதப்பிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற சகல யூதராலும் நல்லவனென்று சாட்சிபெற்றவனுமாகிய அனனியா என்னும் ஒருவன், என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, பார்வையடைவாயாக என்றான்; அந்நேரமே நான் பார்வையடைந்து, அவனை ஏறிட்டுப்பார்த்தேன். அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனுடைய திருவுளத்தை நீ அறியவும், நீதிபரரைத் தரிசிக்கவும், அவருடைய திருவாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார். நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய். இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள்போகக் கழுவப்படு என்றான். பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து, தேவாலயத்திலே ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், ஞானதிருஷ்டியடைந்து, அவரைத் தரிசித்தேன். அவர் என்னை நோக்கி: நீ என்னைக்குறித்துச் சொல்லும் சாட்சியை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; ஆதலால் நீ தாமதம்பண்ணாமல் சீக்கிரமாய் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போ என்றார். அதற்கு நான்: ஆண்டவரே, உம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களை நான் காவலில் வைத்து ஜெப ஆலயங்களிலே அடித்ததையும், உம்முடைய சாட்சியாகிய ஸ்தேவானுடைய இரத்தம் சிந்தப்படுகிறபோது, நானும் அருகே நின்று, அவனைக் கொலைசெய்வதற்குச் சம்மதித்து, அவனைக் கொலைசெய்தவர்களின் வஸ்திரங்களைக் காத்துக்கொண்டிருந்ததையும், இவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றேன். அதற்கு அவர்: நீ போ, நான் உன்னைத் தூரமாய்ப் புறஜாதிகளிடத்திலே அனுப்புவேன் என்று சொன்னார் என்றான்.