அப்போஸ்தலர் 21:27-32

அப்போஸ்தலர் 21:27-32 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அந்த ஏழு நாட்கள் முடியப்போகும் வேளையில், ஆசியா பகுதியைச் சேர்ந்த சில யூதர்கள் பவுலை ஆலயத்தில் கண்டார்கள். அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களைத் தூண்டியெழுப்பி, பவுலைப் பிடித்தார்கள். அவர்கள் சத்தமிட்டு, “இஸ்ரயேலரே, எங்களுக்கு உதவிசெய்யுங்கள்! நமது மக்களுக்கும், மோசேயின் சட்டத்திற்கும், இந்த இடத்திற்கும் விரோதமாக, எல்லா இடங்களிலும் எல்லா மக்களுக்கும் போதிக்கிறவன் இவன்தான். இவன் ஆலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கொண்டுவந்து, இந்தப் பரிசுத்த இடத்தையும் தூய்மைக் கேடாக்கிவிட்டான்” என்றார்கள். ஏனெனில் அவர்கள் எபேசியனான துரோப்பீமும், பவுலுடனே பட்டணத்தில் இருந்ததை முன்பு கண்டிருந்தார்கள். இதனால் பவுல், அவனையும் ஆலயத்திற்குள் கூட்டிக்கொண்டு வந்திருப்பான் என்று அவர்கள் நினைத்தார்கள். முழுப்பட்டணமும் குழப்பமடைந்தது, எல்லாப் பகுதிகளிலும் இருந்த மக்கள் அங்கு ஓடிவந்தார்கள். அவர்கள் பவுலைப் பிடித்து, ஆலயத்திலிருந்து இழுத்துக்கொண்டு சென்றார்கள். உடனே ஆலயத்தின் கதவுகள் பூட்டப்பட்டன. அவர்கள் அவனைக் கொலைசெய்ய முயற்சிக்கையில் எருசலேம் நகரம் முழுவதும் குழப்பம் அடைந்திருக்கிறது என்ற செய்தி ரோமப் படைத்தளபதிக்கு எட்டியது. அவன் உடனடியாகச் சில அதிகாரிகளையும், படைவீரரையும் கூட்டிக்கொண்டு மக்கள் கூட்டத்தை நோக்கி ஓடிவந்தான். குழப்பம் விளைவித்தவர்கள் படைத்தளபதியையும் படைவீரர்களையும் கண்டபோது, பவுலை அடிப்பதை நிறுத்திவிட்டார்கள்.

அப்போஸ்தலர் 21:27-32 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அந்த ஏழு நாட்களும் நிறைவேறும்பொழுது ஆசியா நாட்டிலிருந்து வந்த யூதர்கள் அவனை தேவாலயத்திலே கண்டு, மக்களெல்லோரையும் தூண்டிவிட்டு, அவனைப் பிடித்து: இஸ்ரவேலர்களே, உதவிசெய்யுங்கள். நம்முடைய மக்களுக்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த இடத்திற்கும் எதிராக எல்லா இடத்திலும் எல்லோருக்கும் போதித்துவருகிறவன் இவன்தான்; இந்த தேவாலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கூட்டிக்கொண்டுவந்து, இந்த பரிசுத்த இடத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று சத்தமிட்டார்கள். எபேசு பட்டணத்தைச் சேர்ந்த துரோப்பீமு என்பவன் நகரத்தில் பவுலோடு இருக்கிறதை ஏற்கனவே பார்த்திருந்தபடியால், பவுல் அவனைத் தேவாலயத்திற்கு உள்ளேயும் கூட்டிக்கொண்டு வந்திருப்பான் என்று நினைத்தார்கள். அப்பொழுது நகரம் முழுவதும் கலக்கம் உண்டானது; மக்கள் கூட்டமாக ஓடிவந்து, பவுலைப் பிடித்து, அவனை தேவாலயத்திற்கு வெளியே இழுத்துக்கொண்டுபோனார்கள்; உடனே கதவுகள் பூட்டப்பட்டது. அவர்கள் அவனைக் கொலைசெய்ய முயற்சி செய்யும்போது, எருசலேம் முழுவதும் கலக்கமாக இருக்கிறது என்று ரோம இராணுவ அதிபதிக்குச் செய்தி வந்தது. உடனே அவன் போர்வீரர்களையும் அவர்களுடைய அதிபதிகளையும் கூட்டிக்கொண்டு, அங்கே ஓடினான்; ரோம அதிபதியையும் போர்வீரர்களையும் அவர்கள் பார்த்தவுடனே பவுலை அடிக்கிறதை நிறுத்திவிட்டார்கள்.

அப்போஸ்தலர் 21:27-32 பரிசுத்த பைபிள் (TAERV)

ஏழு நாட்களும் முடிவடையும் காலம் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆசியாவிலுள்ள யூதர்களில் சிலர் பவுலை தேவாலயத்தில் கண்டனர். அவர்கள் எல்லா மக்களிடமும் குழப்பம் விளைவித்தனர். அவர்கள் பவுலைப் பிடித்தனர். அவர்கள் உரக்க, “யூத மனிதரே, எங்களுக்கு உதவுங்கள்! மோசேயின் சட்டத்தை எதிர்க்கவும் நம் மக்களுக்கும் தேவாலயத்துக்கும் எதிராகவும் பலவற்றையும் கற்பிக்கின்ற மனிதன் இவன்தான். இம்மனிதன் எல்லா இடங்களிலுமுள்ள எல்லா மனிதருக்கும் இவ்விஷயங்களை உபதேசிக்கின்றான். இப்போது தேவாலயத்துக்கு உள்ளே சில கிரேக்க மக்களை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறான். இத்தூய ஸ்தலத்தைத் தூய்மையிழக்கச் செய்திருக்கிறான்!” என்றார்கள். பவுலோடு துரோப்பீமுவை எருசலேமில் பார்த்ததால் யூதர்கள் இதைச் சொன்னார்கள். எபேசுவிலுள்ள துரோப்பீமு ஒரு கிரேக்கன். பவுல் அவனை தேவாலயத்துக்குள் அழைத்துச் சென்றான் என்று யூதர்கள் எண்ணினர். எருசலேமின் எல்லா மக்களும் நிலைகுலைந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஓடிப் பவுலைப் பிடித்தனர். தேவாலயத்துக்கு வெளியே அவனை இழுத்து வந்தனர். உடனே கதவுகள் மூடப்பட்டன. மக்கள் பவுலைக் கொல்ல முயற்சித்தனர். எருசலேமிலுள்ள ரோமப் படை அதிகாரி நகரம் முழுவதும் தொல்லை அடைந்துள்ளது என்ற செய்தியைப் பெற்றான். உடனே அவன் மக்கள் கூடியிருந்த இடத்திற்கு ஓடினான். அவன் வீரர்களையும் படை அதிகாரிகளையும் தன்னுடன் அழைத்து வந்தான். மக்கள் அதிகாரிகளையும் வீரர்களையும் கண்டனர். எனவே பவுலை அடிப்பதை நிறுத்தினர்.

அப்போஸ்தலர் 21:27-32 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அந்த ஏழுநாட்களும் நிறைவேறிவருகையில் ஆசியா நாட்டிலிருந்து வந்த யூதர்கள் அவனை தேவாலயத்திலே கண்டு, ஜனங்களெல்லாரையும் எடுத்துவிட்டு, அவன்மேல் கைபோட்டு: இஸ்ரவேலரே, உதவிசெய்யுங்கள். நம்முடைய ஜனத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த ஸ்தலத்திற்கும் விரோதமாக எங்கும் எல்லாருக்கும் போதித்துவருகிறவன் இவன்தான்; இந்தத் தேவாலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கூட்டிக்கொண்டுவந்து, இந்தப் பரிசுத்தஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று சத்தமிட்டார்கள். எபேசியனாகிய துரோப்பீமு என்பவன் முன்னே நகரத்தில் பவுலுடனேகூட இருக்கிறதைக் கண்டிருந்தபடியால், பவுல் அவனைத் தேவாலயத்தில் கூட்டிக்கொண்டு வந்திருப்பானென்று நினைத்தார்கள். அப்பொழுது நகரமுழுவதும் கலக்கமுற்றது; ஜனங்கள் கூட்டமாய் ஓடிவந்து, பவுலைப் பிடித்து, அவனை தேவாலயத்திற்குப் புறம்பே இழுத்துக்கொண்டுபோனார்கள்; உடனே கதவுகள் பூட்டப்பட்டது. அவர்கள் அவனைக் கொலைசெய்ய எத்தனித்திருக்கையில், எருசலேம் முழுவதும் கலக்கமாயிருக்கிறதென்று போர்ச்சேவகரின் சேனாதிபதிக்குச் செய்திவந்தது. உடனே அவன் போர்ச்சேவகரையும் அவர்களுடைய அதிபதிகளையும் கூட்டிக்கொண்டு, அவர்களிடத்திற்கு ஓடினான்; சேனாதிபதியையும் போர்ச்சேவகரையும் அவர்கள் கண்டபோது பவுலை அடிக்கிறதை விட்டு நிறுத்தினார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்