அப்போஸ்தலர் 2:14-18,32-41

அப்போஸ்தலர் 2:14-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது பேதுரு மற்ற பதினொரு பேருடனும் எழுந்து நின்று, உரத்த சத்தமாய் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசத் தொடங்கினான்: “யூதமக்களே, எருசலேமில் வாழுகிறவர்களே, உங்கள் எல்லோருக்கும் நான் இதை விளக்கிச் சொல்லுகிறேன்; நான் சொல்வதைக் கவனமாய் கேளுங்கள். நீங்கள் நினைப்பதுபோல இவர்கள் குடிவெறி கொண்டவர்கள் அல்ல. நேரமோ இன்னும் காலை ஒன்பது மணிதானே! இறைவாக்கினன் யோவேலினால் கூறப்பட்டபடி இது நிறைவேறுகிறது: “ ‘இறைவன் சொல்லியபடி, கடைசி நாட்களில், நான் எல்லா மக்கள்மேலும் என் ஆவியானவரைப் பொழிவேன். உங்கள் மகன்களும் மகள்களும் இறைவாக்கு உரைப்பார்கள், உங்கள் இளைஞர் தரிசனங்களைக் காண்பார்கள், உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள். மேலும் அந்நாட்களில் நான், எனது ஊழியக்காரர்கள்மேலும் ஊழியக்காரிகள்மேலும், என் ஆவியைப் பொழிவேன். அப்பொழுது அவர்கள் இறைவாக்கு உரைப்பார்கள்.

அப்போஸ்தலர் 2:32-41 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இறைவன் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். அதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகளாய் இருக்கிறோம். கிறிஸ்து இறைவனுடைய வலதுபக்கத்திற்கு உயர்த்தப்பட்டு, பிதா வாக்குப்பண்ணிய பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டார். நீங்கள் இப்பொழுது காண்கிறபடியும் கேட்கிறபடியும் அவரே அந்த பரிசுத்த ஆவியானவரை ஊற்றியிருக்கிறார். தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே, ஆனால் அவன், “ ‘கர்த்தர் என் கர்த்தரிடம், சொன்னதாவது: “நான் உமது பகைவரை உமது கால்களுக்குப் பாதபடி ஆக்கும்வரை, நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்.” ’ என்று சொன்னான். “ஆகவே இஸ்ரயேலராகிய நீங்கள் அனைவரும் நிச்சயமாய் அறிந்துகொள்ள வேண்டியது: நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே இறைவன், கர்த்தரும் கிறிஸ்துவும் ஆக்கியிருக்கிறார்” என்று பேதுரு சொன்னான். அந்த மக்கள் இதைக் கேட்டபோது, இருதயத்தில் குத்தப்பட்டவர்களாய், பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து, “சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்றார்கள். அதற்குப் பேதுரு, “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பாவங்களுக்கு மன்னிப்புப் பெறும்படி மனந்திரும்பி, இயேசுகிறிஸ்துவின் பெயரில் திருமுழுக்கு பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியானவரை நன்கொடையாகப் பெறுவீர்கள். இந்த வாக்குத்தத்தம் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், தொலைவிலுள்ள அனைவருக்கும் உரியது. நமது இறைவனாகிய கர்த்தர் அழைக்கப்போகிற அனைவருக்கும் இது உரியது” என்றான். பேதுரு இன்னும் வேறு பல வார்த்தைகள் மூலமாயும் அவர்களை எச்சரித்தான்: “இந்தக் கறைபட்ட தலைமுறையிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்றும் அவர்களை எச்சரித்தான். பேதுருவினுடைய செய்தியை ஏற்றுக்கொண்ட அனைவரும் திருமுழுக்குப் பெற்றார்கள். திருச்சபையில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் அன்று சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.

அப்போஸ்தலர் 2:14-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது பேதுரு பதினொரு சீடர்களோடு நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாக: யூதர்களே, எருசலேமில் வசிக்கின்ற மக்களே, நீங்களெல்லோரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளைக் கேளுங்கள். நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் மது அருந்தியவர்கள் அல்ல, பொழுதுவிடிந்து ஒன்பது மணியாக இருக்கிறதே. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நிறைவேறுகிறது. கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியைப் பொழிவேன், அப்பொழுது உங்களுடைய குமாரர்களும் உங்களுடைய குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்; உங்களுடைய வாலிபர்கள் தரிசனங்களைக் காண்பார்கள்; உங்களுடைய மூப்பர்கள் கனவுகளைக் காண்பார்கள்; என்னுடைய ஊழியக்காரர்கள்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்த நாட்களிலே என் ஆவியைப் பொழிவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்.

அப் 2:32-41 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இந்த இயேசுவை தேவன் உயிரோடு எழுப்பினார்; இதற்கு நாங்கள் எல்லோரும் சாட்சிகளாக இருக்கிறோம். அவர் தேவனுடைய வலது கரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியானவரைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறவைகளையும் கேட்கிறவைகளையும் பொழிந்தருளினார். தாவீது பரலோகத்திற்கு இன்னும் எழுந்துபோகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமது பாதத்தின் கீழே போடும்வரைக்கும், நீர் என் வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான். ஆகவே, நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் அனைவரும் நிச்சயமாக அறிந்துகொள்ளுங்கள் என்றான். இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலர்களையும் பார்த்து: சகோதரர்களே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள். பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியானவரின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்களுடைய பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள அனைவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி; இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்த வம்சத்தை விட்டுவிலகி உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான். அவனுடைய வார்த்தைகளை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையதினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விசுவாசிகளின் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.

அப்போஸ்தலர் 2:14-18 பரிசுத்த பைபிள் (TAERV)

அப்பொழுது பேதுரு மற்ற அப்போஸ்தலர் பதினொருவரோடும் எழுந்து நின்றான். எல்லா மக்களும் கேட்கும்படியாக உரக்கப் பேசினான். அவன், “எனது யூத சகோதரர்களே, எருசலேமில் வசிக்கும் மக்களே, நான் கூறுவதைக் கவனியுங்கள். நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில கருத்துக்களை உங்களுக்குக் கூறுவேன். கவனமாகக் கேளுங்கள். நீங்கள் நினைக்கிறது போல் இம்மனிதர்கள் மது பருகியிருக்கவில்லை. இப்போது காலை ஒன்பது மணிதான். இங்கு இன்றைக்கு நிகழ்ந்துகொண்டிருப்பதைக் குறித்து யோவேல் என்னும் தீர்க்கதரிசி எழுதியிருக்கிறார். யோவேல் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்: “‘தேவன் கூறுகிறார், கடைசி நாட்களில் நான் எனது ஆவியை எல்லா மக்களுக்கும் அள்ளி வழங்குவேன். ஆண் மக்களும், பெண்மக்களும் தீர்க்கதரிசனம் உரைப்பர். உங்கள் இளைஞர் தரிசனம் காண்பார்கள். உங்கள் முதியோர் விசேஷக் கனவுகள் காண்பர். அந்நேரத்தில் எனது ஆவியை எனது ஊழியர்களாகிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் கொடுப்பேன். அவர்கள் தீர்க்கதரிசனம் உரைப்பர்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:32-41 பரிசுத்த பைபிள் (TAERV)

எனவே தாவீதை அல்ல, இயேசுவையே தேவன் மரணத்தினின்று எழுப்பினார். நாங்கள் எல்லோரும் இதற்கு சாட்சிகள். நாங்கள் அவரைக் கண்டோம். இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். இப்போது இயேசு தேவனோடு, தேவனுடைய வலது பக்கத்தில் இருக்கிறார். பிதா பரிசுத்தாவியை இயேசுவுக்குக் கொடுத்துள்ளார். பிதா கொடுப்பதாக வாக்குறுதி அளித்தது பரிசுத்த ஆவியேயாகும். எனவே இயேசு அந்த ஆவியை இப்பொழுதுகொடுத்துக்கொண்டிருக்கிறார். இதையே நீங்கள் பார்க்கவும், கேட்கவும் செய்கிறீர்கள். தாவீது பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவரல்ல. பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர் இயேசுவே. தாவீது கூறினான், “‘தேவன் என் கர்த்தரிடம் சொன்னார், உம் எதிரிகள் அனைவரையும் உம் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரும்வரை என் வலதுபுறத்தில் உட்கார்ந்துகொள்ளும்.’ “எனவே எல்லா யூத மனிதர்களும் இதை உண்மையாகத் தெரிந்திருக்க வேண்டும். ஆண்டவராகவும் கிறிஸ்துவாகவும் இருக்கும்படியாக இயேசுவை தேவன் உண்டாக்கினார். அவரே நீங்கள் சிலுவையில் அறைந்த மனிதர்” என்றான். மக்கள் இதைக் கேட்டபோது அவர்கள் தங்கள் இதயத்தில் மிகவும் வருத்தம் அடைந்தார்கள். அவர்கள் பேதுருவையும் பிற அப்போஸ்தலரையும் நோக்கி, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். பேதுரு அவர்களை நோக்கி, “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இருதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றி, இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்போது தேவன் உங்கள் பாவங்களை மன்னிப்பார். நீங்களும் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். இந்த வாக்குறுதி உங்களுக்குரியது. அது உங்கள் பிள்ளைகளுக்கும் தொலைவில் வாழ்கின்ற எல்லா மக்களுக்கும் கூட உரியது. ஆண்டவராகிய நமது தேவன் தன்னிடம் அழைக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் அது உரியது” என்று கூறினான். வேறு பல வார்த்தைகளையும் கூறி பேதுரு அவர்களை எச்சரித்தான். அவன் அவர்களை, “இன்று வாழ்கின்ற மக்களின் தீமைகளிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்று வேண்டினான். பேதுரு கூறியவற்றை ஏற்றுக்கொண்ட அந்த மக்கள் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டனர். அந்த நாளில் விசுவாசிகளின் கூட்டத்தில் சுமார் 3,000 மக்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

அப்போஸ்தலர் 2:14-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்; என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்.

அப்போஸ்தலர் 2:32-41 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம். அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார். தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும், நீர் என் வலதுபாரிசத்தில் உட்காருமென்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான். ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான். இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள். பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி; இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டுவிலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான். அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.