அப்போஸ்தலர் 2:1-13

அப்போஸ்தலர் 2:1-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி? பார்த்தரும், மேதரும், ஏலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும், கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். மற்றவர்களோ: இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள்.

அப்போஸ்தலர் 2:1-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பெந்தெகொஸ்தே நாள் வந்தபோது, அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். அப்பொழுது திடீரென பலத்த காற்று வீசுவதுபோன்ற ஒரு முழக்கம் பரத்திலிருந்து வந்து, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அவர்கள் நெருப்புப்போன்ற பிரிந்திருக்கும் நாவுகளைக் கண்டார்கள். அவை அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தன. அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டார்கள். ஆவியானவர் கொடுத்த ஆற்றலின்படி, ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழிகளிலே பேசத் தொடங்கினார்கள். அப்பொழுது இறைவனிடம் பயபக்தியாயிருந்த யூதர்கள் வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு நாடுகளிலிருந்தும் வந்து எருசலேமில் தங்கியிருந்தார்கள். அவர்கள் இந்த சத்தத்தைக் கேட்டபோது, பெருங்கூட்டமாய் அங்கே வந்தார்கள். தங்களுடைய சொந்த மொழிகளில் அவர்கள் ஒவ்வொருவரும் பேசுவதைக் கேட்டு வியப்படைந்தார்கள். அவர்கள் முற்றுமாய் வியப்படைந்து, “இங்கு பேசிக்கொண்டிருக்கிற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அப்படியிருக்க, இவர்கள் நமது சொந்த மொழிகளில் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்கிறோமே, அது எப்படி? பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், சிரேனே அருகேயுள்ள லீபியாவின் சில பகுதிகளிலுள்ளவர்களும், ரோமிலிருந்து வந்தவர்களும் இங்கிருக்கிறார்களே. இன்னும் யூதரும், யூத விசுவாசத்திற்கு வந்தவர்களும் இருக்கிறார்களே! அத்துடன் கிரேத்தரும், அரபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே இறைவனின் அதிசயங்களை இவர்கள் அறிவிப்பதைக் கேட்கிறோமே!” என்றார்கள். அவர்கள் வியப்பும் குழப்பமும் அடைந்தவர்களாய், ஒருவரையொருவர் பார்த்து, “இதன் அர்த்தம் என்ன?” என்றார்கள். ஆனால் சிலர், அவர்களைக்குறித்து கேலிசெய்து, “இவர்கள் மதுபானத்தை நிறைய குடித்திருக்கிறார்கள்” என்றார்கள்.

அப்போஸ்தலர் 2:1-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லோரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே கூடிவந்திருந்தார்கள். அப்பொழுது பலத்தக் காற்று அடிக்கிறதுபோல, வானத்திலிருந்து திடீரென ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் நெருப்புமயமான நாக்குகள்போல பிரிந்திருக்கும் நாக்குகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லோரும் பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு மொழிகளிலே பேசத்தொடங்கினார்கள். வானத்தின்கீழே இருக்கிற எல்லா தேசத்திலுமிருந்து வந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே தங்கியிருந்தார்கள். அந்த சத்தம் உண்டானபோது, அநேக மக்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் மொழியிலே அவர்கள் பேசுகிறதை கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். எல்லோரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லோரும் கலிலேயர்கள் அல்லவா? அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய தாய் மொழிகளிலே இவர்கள் பேசக்கேட்கிறோமே, இது எப்படி? பார்த்தரும், மேதரும், ஏலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே வருகைதரும் ரோமாபுரியாரும், யூதர்களும், யூதமார்க்கத்தை பின்பற்றுகிறவர்களும், கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய மொழிகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். எல்லோரும் பிரமித்து சந்தேகப்பட்டு, இது என்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். மற்றவர்களோ: இவர்கள் மதுபானம் அருந்தியிருக்கிறார்கள் என்று கேலிசெய்தார்கள்.

அப்போஸ்தலர் 2:1-13 பரிசுத்த பைபிள் (TAERV)

பெந்தெகோஸ்தே நாளில் அப்போஸ்தலர் அனைவரும் ஓரிடத்தில் கூடியிருந்தனர். திடீரென வானிலிருந்து ஓசை ஒன்று எழுந்தது. பெருங்காற்று அடித்தாற்போல அது ஒலித்தது. அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதையும் அவ்வொலி நிரப்பிற்று. நெருப்புக் கொழுந்து போன்றவற்றை அவர்கள் கண்டனர். அக்கொழுந்துகள் பிரிந்து சென்று அங்கிருந்த ஒவ்வொருவர் மேலும் நின்றன. அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்கள். பல்வேறு மொழிகளில் அவர்கள் பேச ஆரம்பித்தார்கள். இப்படிப்பட்ட வல்லமையை பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார். அக்காலத்தில் எருசலேமில் மிக பக்திமான்களாகிய யூதர்கள் சிலர் தங்கியிருந்தனர். உலகத்தின் எல்லா தேசத்தையும் சார்ந்தவர்களாக இந்த மனிதர்கள் இருந்தனர். ஒலியைக் கேட்டு இம்மனிதர்கள் பெருங்கூட்டமாக அங்கு வந்தனர். அப்போஸ்தலர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த மொழியில் கேட்டதால் அம்மனிதர்கள் வியப்புற்றனர். யூதர்கள் இதனால் ஆச்சரியமடைந்தனர். அப்போஸ்தலர்கள் எவ்வாறு இதைச் செய்ய முடிந்தது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள், “பாருங்கள்! பேசிக்கொண்டிருக்கும் இந்த மனிதர்கள் எல்லோரும் கலிலேயாவைச் சேர்ந்தவர்கள்! ஆனால் நமது மொழிகளில் அவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்கிறோம். எப்படி இது இயலும்? நாம் பார்த்தியா, மேதியா, ஏலாம், மெசொபொதாமியா, யூதேயா, கப்பதோகியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேனே நகரங்களிற்கு அருகேயுள்ள லிபியா நாட்டுப் பகுதிகள், கிரேத்தா, ரோமிலிருந்து வந்த மக்கள் மற்றும் அரேபியா ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். நம்மில் சிலர் யூதர்களாகப் பிறந்தவர்கள் மற்றவர்கள் யூதர்களாக மதம் மாறியவர்கள். நாம் வெவ்வேறு நாட்டினர். ஆனால் இவர்கள் நம் மொழிகளில் பேசுவதைக் கேட்கிறோமே! அவர்கள் தேவனைக் குறித்துக் கூறும் மேன்மையான காரியங்களை நம்மெல்லோராலும் புரிந்துகொள்ள முடிகிறதே” என்றார்கள். மக்கள் அனைவரும் வியப்புற்றவர்களாகவும் குழப்பமடைந்தவர்களாகவும் காணப்பட்டனர். அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “என்ன நடந்துகொண்டிருக்கிறது?” என்று வினவினர். பிற மக்கள் அப்போஸ்தலர்களைப் பார்த்துச் சிரித்தனர். அம்மக்கள் அப்போஸ்தலர் மிகுதியான மதுவைப் பருகியிருந்தனர் என நினைத்தனர்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்