அப்போஸ்தலர் 11:1-18

அப்போஸ்தலர் 11:1-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யூதரல்லாதவர்கள் இறைவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டார்கள் என்பதை அப்போஸ்தலரும் யூதேயா முழுவதிலுமுள்ள சகோதரரும் கேள்விப்பட்டார்கள். எனவே பேதுரு எருசலேமுக்குப் போனபோது, விருத்தசேதனம் செய்துகொண்ட விசுவாசிகள் அவனைக் குற்றப்படுத்தி, “நீ ஏன் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களிடம் சென்று அவர்களுடன் உணவு உட்கொண்டாய்” என்றார்கள். பேதுரு ஒன்றுவிடாமல் நடந்த எல்லாவற்றையும் அவர்களுக்கு விளக்கத் தொடங்கினான்: “நான் யோப்பா பட்டணத்தில் மன்றாடிக்கொண்டிருந்தபோது, பரவசமடைந்து ஒரு தரிசனத்தைக் கண்டேன். ஒரு பெரிய விரிப்புத் துணி போன்ற ஒன்று, அதன் நான்கு மூலைகளிலும் பிடித்து, பரத்திலிருந்து இறக்கப்படுவதைக் கண்டேன். அது நான் இருந்த இடத்தை நோக்கி இறங்கி வந்தது. நான் அதற்குள் பார்த்தபோது, பூமியிலுள்ள நான்கு கால்களையுடைய மிருகங்களையும், காட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், ஆகாயத்துப் பறவைகளையும் கண்டேன். அப்பொழுது ஒரு குரல் என்னிடம், ‘பேதுரு எழுந்திரு. கொன்று சாப்பிடு’ என்று சொன்னது. “நானோ, ‘இல்லை ஆண்டவரே, நான் ஒருபோதும் தூய்மையற்றதும் அசுத்தமானதுமான எதுவும் என் வாய்க்குள்ளே ஒருபோதும் போனதில்லை’ என்றேன். “பரத்திலிருந்து அந்தக் குரல் இரண்டாவது முறையும் என்னுடன் பேசி, ‘இறைவன் சுத்தமாக்கிய எதையும் தூய்மையற்றது என்று நீ சொல்லாதே’ என்றது. இப்படி மூன்று முறைகள் நடந்தது. பின்பு, அது மீண்டும் பரத்திற்கு இழுத்தெடுக்கப்பட்டது. “அதேவேளையில் நான் தங்கியிருந்த வீட்டின் வாசலில் செசரியாவிலிருந்து என்னிடம் அனுப்பப்பட்ட மூன்றுபேர் நின்றுகொண்டிருந்தார்கள். நான் அவர்களுடன் போகத் தயங்கக்கூடாது என்று, பரிசுத்த ஆவியானவர் எனக்குச் சொன்னார். இந்த ஆறு சகோதரரும் என்னுடன் வந்தார்கள், நாங்கள் அந்த மனிதனுடைய வீட்டிற்குள் போனோம். அவனோ தனது வீட்டிலே, எப்படி ஒரு இறைத்தூதன் தனக்குக் காட்சியளித்ததைத் தான் கண்டதாகவும், அந்தத் தூதன் பேதுரு என்று அழைக்கப்படும் சீமோனைக் கூட்டிவரும்படி யோப்பா பட்டணத்திற்கு ஆட்களை அனுப்பும்படி சொன்னான் என்றும் கூறினான். அத்துடன் அவன் கொண்டுவரும் செய்தியினால் நீயும், உன் குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று இறைத்தூதன் சொன்னதாகவும் அவன் எங்களுக்கு அறிவித்தான். “நான் பேசத் தொடங்கியபோது, பரிசுத்த ஆவியானவர் தொடக்கத்தில் நம்மேல் இறங்கியது போலவே, அவர்கள்மேலும் இறங்கினார். அப்பொழுது, ‘யோவான் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுத்தான். ஆனால் நீங்களோ பரிசுத்த ஆவியானவரால் திருமுழுக்கு பெறுவீர்கள் என்று கர்த்தர் சொன்னதை, நான் நினைவுகூர்ந்தேன்.’ எனவே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைத்தவர்களாகிய நமக்குக் கொடுத்த அதே வரத்தை அவர்களுக்கும் கொடுத்தால், இறைவனை தடுத்து நிறுத்த முடியும் என்று எண்ணுவதற்கு நான் யார்?” என்றான். யூத விசுவாசிகள் இதைக் கேட்டபோது, தொடர்ந்து எவ்வித எதிர்ப்பும் அவர்களுக்கு இருக்கவில்லை, அவர்கள் இறைவனைத் துதித்து, “அப்படியானால் இறைவன் யூதரல்லாத மக்களுக்கும்கூட, வாழ்வு கொடுக்கும் மனந்திரும்புதலைக் கொடுத்திருக்கிறார்!” என்றார்கள்.

அப்போஸ்தலர் 11:1-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யூதரல்லாதவர்களும் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டார்களென்று யூதேயாவிலிருக்கிற அப்போஸ்தலர்களும் சகோதரர்களும் கேள்விப்பட்டார்கள். பேதுரு எருசலேமுக்குத் திரும்பிவந்தபோது, விருத்தசேதனமுள்ளவர்கள் அவனை நோக்கி: விருத்தசேதனம்பண்ணப்படாத மனிதர்களிடத்தில் நீர் போய், அவர்களோடு சாப்பிட்டீர் என்று, அவனிடம் வாக்குவாதம்பண்ணினார்கள். அதற்குப் பேதுரு காரியத்தை முதலிலிருந்து வரிசையாக அவர்களுக்கு விளக்கிச் சொல்லத்தொடங்கி: நான் யோப்பா பட்டணத்தில் ஜெபம் செய்துகொண்டிருந்தபோது ஒரு தரிசனத்தைக் கண்டேன்; அது என்னவென்றால், நான்கு முனைகளும் கட்டப்பட்ட பெரிய விரிப்பு ஒருவிதமான கூடுபோல வானத்திலிருந்து என்னிடத்தில் இறங்கிவந்தது. அதிலே நான் உற்று கவனித்தபோது, பூமியிலுள்ள நான்குகால் ஜீவன்களையும், காட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், ஆகாயத்துப் பறவைகளையும் பார்த்தேன். அப்பொழுது: பேதுருவே, எழுந்திரு, அடித்து சாப்பிடு! என்று சொல்லுகிற சத்தத்தையும் கேட்டேன். அதற்கு நான்: ஆண்டவரே, அப்படியல்ல, தீட்டும் அசுத்தமுமாக இருக்கிற எதுவும் எப்போதும் என் வாய்க்குள்ளே போனதில்லை என்றேன். இரண்டாவதுமுறையும் வானத்திலிருந்து சத்தம் உண்டாகி: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக நினைக்கவேண்டாம் என்று சொல்லியது. இப்படி மூன்றுமுறை நடந்தபின்பு, எல்லாம் வானத்திற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டது. உடனே செசரியாவிலிருந்து என்னிடத்திற்கு அனுப்பப்பட்ட மூன்று மனிதர்கள் நான் தங்கியிருந்த வீட்டிற்குமுன்னே வந்துநின்றார்கள். நான் ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களோடு போகும்படி ஆவியானவர் எனக்குக் கட்டளையிட்டார். சகோதரர்களாகிய இந்த ஆறுபேரும் என்னோடு வந்தார்கள்; அந்த மனிதனுடைய வீட்டிற்குள் நுழைந்தோம். அவனோ தன் வீட்டில் ஒரு தேவதூதன் நிற்கிறதைப் பார்த்ததாகவும், யோப்பா பட்டணத்திலிருக்கிற பேதுரு என்று மறுபெயர்கொண்ட சீமோனை அழைத்துவரும்படி மனிதர்களை அந்த இடத்திற்கு அனுப்பு; நீயும் உன் குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவதற்கான வார்த்தைகளை அவன் உனக்குச் சொல்லுவான் என்று அந்தத் தூதன் தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்கு சொன்னான். நான் பேசத்தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் ஆரம்பத்திலே நம்மேல் இறங்கினதுபோலவே, அவர்கள்மேலும் இறங்கினார். யோவான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுத்தான், நீங்களோ பரிசுத்த ஆவியானவராலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்று கர்த்தர் சொன்ன வார்த்தையை அப்பொழுது நினைத்துப்பார்த்தேன். எனவே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்திருக்கிற நமக்கு தேவன் வரத்தை கொடுத்ததுபோல அவர்களுக்கும் அந்த வரத்தையே கொடுத்திருக்கும்போது தேவனைத் தடுக்கிறதற்கு நான் யார்? என்றான். இவைகளை அவர்கள் கேட்டபொழுது உட்கார்ந்திருந்து: அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலை தேவன் யூதரல்லாதவர்களுக்கும் கொடுத்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

அப்போஸ்தலர் 11:1-18 பரிசுத்த பைபிள் (TAERV)

யூதரல்லாத மக்களும் தேவனுடைய போதனையை ஏற்றுக்கொண்டார்கள் என்பதை அப்போஸ்தலர்களும் யூதேயாவிலுள்ள சகோதரரும் கேள்விப்பட்டனர். எனவே எருசலேமுக்குப் பேதுரு வந்தபோது சில யூத விசுவாசிகள் அவனோடு வாதிட்டனர். அவர்கள், “யூதரல்லாதவர்களும் விருத்தசேதனமில்லாதவர்களும் ஆகிய மக்களின் வீடுகளுக்கு நீங்கள் சென்றீர்கள்! அவர்களோடு சாப்பிடவும் செய்தீர்கள்!” என்று கூறினார்கள். எனவே பேதுரு நடந்தது முழுவதையும் அவர்களுக்கு விளக்கினான். பேதுரு, “நான் யோப்பா நகரில் இருந்தேன். நான் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது, எனக்கு ஒரு தரிசனம் கிடைத்தது. அக்காட்சியில் நான் ஏதோ ஒன்று வானிலிருந்து கீழே வரக் கண்டேன். அது ஒரு பெரிய விரிப்பைப் போன்று தோற்றமளித்தது. அதன் நான்கு மூலைகளாலும் பிடித்து பூமிக்கு அது இறக்கப்பட்டது. அது கீழே இறங்கி எனக்கு வெகு அருகாமையில் நின்றது. நான் அதனுள்ளே கவனமாகப் பார்த்தேன். ஊரும் பிராணிகளையும், வானில் பறக்கும் பறவைகளையும் கண்டேன். வீட்டு விலங்குகளையும், வன விலங்குகளையும் நான் பார்த்தேன். ஒரு குரல் என்னை நோக்கி, ‘பேதுரு எழுந்திரு. இந்தப் பிராணிகளில் எதையேனும் நீ புசிக்கலாம்’ என்று கூறிற்று. “ஆனால் நான், ‘கர்த்தாவே நான் ஒருபோதும் அதைச் செய்யமாட்டேன். தூய்மையற்றதும் அசுத்தமான பொருளையும் நான் ஒருபோதும் தின்றதில்லை’ என்றேன். “ஆனால் வானத்திலிருந்து மீண்டும் அந்தக் குரல் பதில் கூறிற்று. ‘தேவன் இவை சுத்தமானவை என அறிவித்துள்ளார். தூய்மையற்றவை என அவற்றை அழைக்காதே!’ “இது மூன்று தடவை நடந்தது. பின்னர் அவை முழுவதும் வானத்திற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டன. பின் நான் வசித்துக்கொண்டிருந்த வீட்டிற்கு மூன்று மனிதர்கள் வந்தார்கள். செசரியா நகரத்திலிருந்து அவர்கள் என்னிடம் அனுப்பப்பட்டவர்கள். சந்தேகப்படாது அவர்களோடு போகும்படி ஆவியானவர் கூறினார். இந்த ஆறு சகோதரர்களும் கூட என்னோடு வந்தார்கள். கொர்நேலியுவின் வீட்டிற்கு நாங்கள் சென்றோம். கொர்நேலியு தனது வீட்டில் அவன் கண்ட தேவதூதனைக் குறித்து எங்களுக்குக் கூறினான். தேவதூதன் கொர்நேலியுவை நோக்கி, ‘சில மனிதரை யோப்பாவுக்கு அனுப்பு. சீமோன் பேதுருவை இங்கு வரும்படி அழைப்பாய். அவன் உங்களிடம் பேசுவான். உங்களையும் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் அவன் கூறும் செய்திகள் இரட்சிக்கும்’ என்றான். “நான் பேச ஆரம்பித்த பிறகு, துவக்கத்தில் பரிசுத்த ஆவியானவர் நம்மீது வந்ததைப் போலவே, அவர்கள் மீதும் பரிசுத்த ஆவியானவர் வந்தார். அப்போது கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளை நான் நினைவு கூர்ந்தேன். கர்த்தர், ‘யோவான் மக்களுக்குத் தண்ணீரால் ஞானஸ்நானம் வழங்கினான். ஆனால் நீங்களோ பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்’ என்றார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் நாம் நம்பிக்கை வைத்ததால் நமக்குக் கொடுக்கப்பட்ட அதே வரத்தை இந்த மக்களுக்கும் தேவன் கொடுத்தார். ஆகையால் நான் தேவனுடைய செயலைத் தடுக்கமுடிந்ததா? முடியவில்லை!” என்றான். யூத விசுவாசிகள் இதனைக் கேட்டதும் அவர்கள் வாதிடுவதை நிறுத்தினர். அவர்கள் தேவனை வாழ்த்திக் கூறினார்கள், “ஆகையால் தேவன் யூதரல்லாத மக்கள் தங்கள் இருதயங்களை மாற்றி நம்மைப் போன்ற வாழ்க்கை உடையவர்களாக வாழ அனுமதிக்கிறார்” என்று ஒப்புக்கொண்டனர்.

அப்போஸ்தலர் 11:1-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

புறஜாதியாரும் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டார்களென்று யூதேயாவிலிருக்கிற அப்போஸ்தலரும் சகோதரரும் கேள்விப்பட்டார்கள். பேதுரு எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது, விருத்தசேதனமுள்ளவர்கள் அவனை நோக்கி: விருத்தசேதனமில்லாத மனுஷரிடத்தில் நீர் போய், அவர்களோடே போஜனம்பண்ணினீர் என்று, அவனோடே வாக்குவாதம்பண்ணினார்கள். அதற்குப் பேதுரு காரியத்தை முதலிலிருந்து வரிசையாய் அவர்களுக்கு விவரிக்கத் தொடங்கி: நான் யோப்பா பட்டணத்தில் ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தபோது ஞானதிருஷ்டியடைந்து, ஒரு தரிசனத்தைக் கண்டேன்; அதென்னவென்றால், நாலு முனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒரு கூடு வானத்திலிருந்து என்னிடத்தில் இறங்கிவந்தது. அதிலே நான் உற்றுப்பார்த்துக் கவனிக்கிறபோது, பூமியிலுள்ள நாலுகால் ஜீவன்களையும், காட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், ஆகாயத்துப் பறவைகளையும் கண்டேன். அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று என்னுடனே சொல்லுகிற சத்தத்தையும் கேட்டேன். அதற்கு நான்: ஆண்டவரே, அப்படியல்ல, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றும் ஒருக்காலும் என் வாய்க்குள்ளே போனதில்லை என்றேன். இரண்டாந்தரமும் வானத்திலிருந்து சத்தம் உண்டாகி: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதேயென்று மறுமொழி சொல்லிற்று. இப்படி மூன்றுதரம் சம்பவித்தபின்பு, எல்லாம் வானத்திற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டது. உடனே செசரியாவிலிருந்து என்னிடத்திற்கு அனுப்பப்பட்ட மூன்று மனுஷர் நான் இருந்த வீட்டுக்குமுன்னே வந்துநின்றார்கள். நான் ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களோடேகூடப் போகும்படி ஆவியானவர் எனக்குக் கட்டளையிட்டார். சகோதரராகிய இந்த ஆறுபேரும் என்னோடேகூட வந்தார்கள்; அந்த மனுஷனுடைய வீட்டுக்குள் பிரவேசித்தோம். அவனோ தன் வீட்டிலே ஒரு தேவதூதன் நிற்கிறதைக் கண்டதாகவும், யோப்பா பட்டணத்திலிருக்கிற பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைக்கும்படிக்கு மனுஷரை அவ்விடத்திற்கு அனுப்பு; நீயும் உன் வீட்டாரனைவரும் இரட்சிக்கப்படுவதற்கேதுவான வார்த்தைகளை அவன் உனக்குச் சொல்லுவான் என்று அந்தத் தூதன் தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்கு அறிவித்தான். நான் பேசத்தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் ஆதியிலே நம்மேல் இறங்கினதுபோலவே, அவர்கள்மேலும் இறங்கினார். யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான், நீங்களோ பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்று கர்த்தர் சொன்ன வார்த்தையை அப்பொழுது நினைவுகூர்ந்தேன். ஆதலால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்திருக்கிற நமக்கு தேவன் வரத்தை அநுக்கிரகம்பண்ணினதுபோல அவர்களுக்கும் அந்த வரத்தையே அநுக்கிரகம்பண்ணியிருக்கும்போது தேவனைத் தடுக்கிறதற்கு நான் எம்மாத்திரம் என்றான். இவைகளை அவர்கள் கேட்டபொழுது அமர்ந்திருந்து: அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலை தேவன் புறஜாதியாருக்கும் அருளிச்செய்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.