2 தீமோத்தேயு 1:6-14

2 தீமோத்தேயு 1:6-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இந்தக் காரணத்தினாலேயே நான் உன்மேல் எனது கைகளை வைத்தபோது, உனக்குக் கிடைத்த இறைவனின் வரத்தைத் தூண்டி, கொழுந்துவிட்டெரியும்படி, நான் உனக்கு நினைவூட்டுகிறேன். ஏனெனில், இறைவன் நமக்குப் பயமும், கோழைத்தனமுமுள்ள ஆவியைக் கொடுக்கவில்லை. இறைவன் வல்லமை, அன்பு, தன்னடக்கம் ஆகியவற்றைக் கொடுக்கும் பரிசுத்த ஆவியானவரையே கொடுத்திருக்கிறார். எனவே நமது கர்த்தரைப்பற்றி சாட்சி சொல்லவும், அவரது கைதியாகிய என்னைக்குறித்து வெட்கப்படவும் வேண்டாம். நற்செய்திக்காக இறைவனின் வல்லமையினால் துன்பம் அனுபவிப்பதில் என்னுடன் சேர்ந்துகொள். இறைவனே நம்மை இரட்சித்து நம்மை ஒரு பரிசுத்த வாழ்க்கைக்கு அழைத்திருக்கிறார். இறைவன் இதை நாம் ஏதாவது செய்ததற்காக நமக்குக் கொடுக்கவில்லை. தனது சொந்த நோக்கத்தின் நிமித்தமும், கிருபையின் நிமித்தமுமே, அதைக் கொடுத்திருக்கிறார். யுகங்கள் உண்டாகும் முன்பே கிறிஸ்து இயேசுவில் இந்தக் கிருபை நமக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது நமது இரட்சகர் கிறிஸ்து இயேசு தோன்றியதன்மூலம், அந்த கிருபை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் மரணத்தை அழித்து, நற்செய்தியினால் வாழ்வையும் சாவாமையையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார். இந்த நற்செய்திக்காக நான் அறிவிப்பவனாகவும், அப்போஸ்தலனாகவும், ஆசிரியனாகவும் நியமிக்கப்பட்டேன். அதன் நிமித்தமே, நான் இப்படித் துன்பங்களை அனுபவிக்கிறேன். ஆனால் நான் வெட்கப்படவில்லை. ஏனெனில், நான் விசுவாசிக்கிற கிறிஸ்து இயேசுவை எனக்கு நன்றாகத் தெரியும். நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை, அவர் மீண்டும் வரும் நாள்வரைக்கும் காத்துக்கொள்ள அவரால் முடியும் என்றும் நான் நிச்சயமாக நம்புகிறேன். நீ என்னிடத்திலிருந்து கேட்ட ஆரோக்கியமான போதனைகளை விசுவாசத்துடனும் அன்புடனும் கிறிஸ்து இயேசுவில் மாதிரியாகக் வைத்துக்கொள். உன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்ட நல்ல பொக்கிஷத்தை நமக்குள் குடிகொண்டிருக்கும் பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன் காத்துக்கொள்.

2 தீமோத்தேயு 1:6-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கரங்களை வைத்ததினால் உனக்கு உண்டான தேவ வரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன். தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடுக்காமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். ஆகவே, நம்முடைய கர்த்த்தரைப்பற்றிய சாட்சியைக்குறித்தாவது, அவர்நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக்குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவ வல்லமைக்குரியபடி நற்செய்திக்காக என்னோடுகூடத் தீங்கு அனுபவி. அவர் நம்முடைய செயல்களின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆரம்பகாலமுதல் கிறிஸ்து இயேசுவிற்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார். நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் தோன்றியதன் மூலமாக அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தை அழித்து, ஜீவனையும் அழியாமையையும் நற்செய்தியினாலே வெளியரங்கமாக்கினார். அதற்கு நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், யூதரல்லாதவர்களுக்குப் போதகனாகவும் நியமிக்கப்பட்டேன். அதினாலே நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆனாலும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்தவர் யார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்தநாள்வரைக் காத்துக்கொள்ள வல்லவராக இருக்கிறார் என்று உறுதியாக நம்புகிறேன். நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வார்த்தைகளை மாதிரியாக வைத்துப் பின்பற்று. உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்காரியங்களை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியானவராலே காத்துக்கொள்.

2 தீமோத்தேயு 1:6-14 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆகவேதான், தேவன் உனக்குக் கொடுத்த வரத்தை நீ நினைத்துப் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறேன். நான் எனது கையை உன் மேல் வைத்தபோதுதான் தேவன் அந்த வரத்தைக் கொடுத்தார். இப்பொழுது அந்த வரத்தைப் பயன்படுத்த வேண்டும். அது சிறு தீப்பொறி எரிந்து பெருநெருப்பாவதுபோல வளரவேண்டும் என விரும்புகிறேன். அச்சத்தின் ஆவியை தேவன் நமக்குத் தராமல், சக்தியும், அன்பும், சுயக்கட்டுப்பாடும் உள்ள ஆவியையே தந்திருக்கிறார். எனவே கர்த்தராகிய இயேசுவைப் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்ல வெட்கப்பட வேண்டாம். என்னைக் குறித்தும், நான் கர்த்தருக்காகச் சிறையில் இருப்பது குறித்தும் வெட்கப்பட வேண்டாம். ஆனால் நற்செய்திக்காக என்னோடு துன்பத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அதற்கான பலத்தை தேவன் தருகிறார். தேவன் நம்மைக் காத்து தனது பரிசுத்த மக்களாக்கினார். இது நமது முயற்சியால் நிகழ்வதன்று. இது தேவனால் ஆவது. தம் கிருபையால் நம்மை அழைப்பது அவரது திட்டமாக இருந்தது. அவர் தனது கிருபையை இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே படைப்பு காலத்திற்கு முன்பிருந்தே வழங்குகிறார். அக்கிருபை நமக்குத் தெளிவானது. நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து வந்தபோதுதான் அக்கிருபை நமக்குப் புலப்படுத்தப்பட்டது. இயேசு மரணத்தை அழித்து நமக்கெல்லாம் நித்திய வாழ்வுக்குரிய வழியைக் காட்டினார். நற்செய்தியின் மூலமாகவே நமக்கு அவர் நித்திய வாழ்வைப் பெறுவதற்கான வழியைக் காட்டினார். அந்த நற்செய்தியைச் சொல்வதற்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். நான் அவரது அப்போஸ்தலனாகவும், நற்செய்திக்கான போதகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நற்செய்தியைப் பரப்பிக்கொண்டிருப்பதால் இப்போது துன் பப்படுத்தப்படுகிறேன். இதற்காக நான் வெட்கப்படவில்லை. நான் நம்புகிற இயேசுவைப்பற்றி எனக்குத் தெரியும். என்னிடத்தில் நம்பி ஒப்படைத்தவற்றை அந்த நாள்வரைக்கும் காத்துக்கொள்ளும் வல்லமை இயேசுவுக்கு உண்டு. இதனை நான் உறுதியாக நம்புகிறேன். என்னிடமிருந்து நீங்கள் கேட்ட உண்மையான போதனைகளைப் பின்பற்றுங்கள். கிறிஸ்து இயேசுவுக்குள் அன்பும் விசுவாசமும் கொண்டு அப்போதனைகளைப் பின்பற்றுங்கள். அப்போதனைகள் நீங்கள் போதிக்க வேண்டியவற்றைப் பற்றி உங்களுக்குச் சான்றாகக் காட்டும். உங்களிடம் கொடுக்கப்பட்ட உண்மைகளைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவர் நம்மில் இருக்கிறார். அவர் அவ்வுண்மைகளைப் பாதுகாக்க உதவுவார்.

2 தீமோத்தேயு 1:6-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கைகளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பி விடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன். தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். ஆகையால் நம்முடைய கர்த்தரைப் பற்றிய சாட்சியைக்குறித்தாவது, அவர் நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக் குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவவல்லமைக்கேற்றபடி சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கனுபவி. அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார். நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார். அதற்கு நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதியாருக்குப் போதகனாகவும் நியமிக்கப்பட்டேன். அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள்வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன். நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு. உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்.

2 தீமோத்தேயு 1:6-14

2 தீமோத்தேயு 1:6-14 TAOVBSI2 தீமோத்தேயு 1:6-14 TAOVBSI2 தீமோத்தேயு 1:6-14 TAOVBSI2 தீமோத்தேயு 1:6-14 TAOVBSI2 தீமோத்தேயு 1:6-14 TAOVBSI

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்