2 தெசலோனிக்கேயர் 2:1-12
2 தெசலோனிக்கேயர் 2:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையைக் குறித்தும், நாம் அவரிடத்தில் சேர்க்கப்படுவதைக் குறித்தும், நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்வது இதுவே: ஏதாவது இறைவாக்கினாலோ, அறிக்கையினாலோ, எங்களிடமிருந்து வந்தது என சொல்லப்படுகிற கடிதத்தினாலோ, கர்த்தருடைய நாள் ஏற்கெனவே வந்துவிட்டதென சொல்லப்பட்டால், அதைக்குறித்து நீங்கள் நிலைகுலைந்து போகவோ, திகிலடையவோ வேண்டாம். யாராவது உங்களை எவ்வகையிலும் ஏமாற்றுவதற்கு சிறிதளவும் இடங்கொடுக்க வேண்டாம். ஏனெனில், இறைவனுக்கெதிரான பெரும் கலகம் ஏற்பட்டு, அக்கிரம மனிதன் வெளிப்படும்வரைக்கும், அந்த நாள் வராது; அந்த மனிதனே அழிவுக்கு நியமிக்கப்பட்டவன். அவன் இறைவன் என்று சொல்லப்படும் எல்லாவற்றிற்கும், வழிபாட்டுக்குரியவைகள் எல்லாவற்றிற்கும் எதிர்த்து நிற்பான். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவன் தன்னை உயர்த்துவான். இதனால், இறைவனின் ஆலயத்தில் தேவன்போல அமர்த்திக்கொண்டு, தன்னையே இறைவன் என்று பிரசித்தப்படுத்துவான். நான் உங்களுடன் இருந்தபோது, நான் இவற்றைக்குறித்து உங்களுக்குச் சொன்னது ஞாபகம் இல்லையா? அவனை இப்போது வெளிப்படாதபடி தடுத்துக்கொண்டிருப்பவர் யாரென்று, உங்களுக்குத் தெரியும். இதனால், அவன் ஏற்ற காலத்திலேதான் வெளிப்படுவான். ஏனெனில், அக்கிரமத்தின் இரகசியம், ஏற்கெனவே வல்லமை செயலாற்றிக்கொண்டு இருக்கிறது. ஆனால், அதை இப்பொழுது தடுத்துக்கொண்டிருப்பவர், தாம் எடுத்துக்கொள்ளப்படும்வரை தொடர்ந்து, அதைத் தடுத்துக்கொண்டே இருப்பார். அதற்குப் பின்பு, அந்த அக்கிரம மனிதன் வெளிப்படுவான். அவனை கர்த்தராகிய இயேசு தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தமது வருகையின் மகிமையினாலே அவனை அழித்துப்போடுவார். அந்த அக்கிரம மனிதன் வரும்போது, சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும், பலவித போலியான அற்புதங்களும், அடையாளங்களும், அதிசயங்களும் செய்து காட்டுவான். அழிந்துபோகிறவர்களை ஏமாற்றி எல்லா விதமான தீமையான செயல்களும் செய்துகாட்டப்படும். இறைவனுடைய சத்தியத்தை அன்புடன் ஏற்றுக்கொள்ளவும், அதனால் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளவும் மறுத்ததினாலேயே, அவர்கள் அழிந்துபோகிறார்கள். இந்தக் காரணத்தினாலே, இறைவன் அவர்களுக்குள்ளே ஏமாற்றத்தை நம்பும் வண்ணமாக, தவறான தன்மையை வரவிடுவார். அதனால் அவர்கள் பொய்யையே நம்புவார்கள். இவ்வாறு சத்தியத்தை விசுவாசிக்காமல், கொடுமையான செயல்களில் மகிழ்ச்சி கொண்டவர்கள் எல்லோரும் குற்றவாளிகளாய்த் தீர்க்கப்படுவார்கள்.
2 தெசலோனிக்கேயர் 2:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அன்றியும், சகோதரர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்தில் சேர்க்கப்படுவதையும்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால், கிறிஸ்துவினுடைய நாள் வந்துவிட்டது என்று தீர்க்கதரிசனமாகவோ எங்களுடைய வார்த்தையாகவோ எங்களிடத்திலிருந்து கடிதம் வந்ததாகவோ சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள். எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், விசுவாச துரோகம் முன்னதாக நடந்து, பின்பு அழிவின் மகனாகிய பாவமனிதன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. அவன் எதிர்த்து நிற்கிறவனாகவும், தேவனென்னப்படுவது எதுவோ, ஆராதிக்கப்படுவது எதுவோ, அவையெல்லாவற்றிற்கும்மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாகவும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாகவும் இருப்பான். நான் உங்களிடத்திலிருந்தபோது இவைகளைச் சொன்னது உங்களுக்கு ஞாபகமில்லையா? அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே. அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும், தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுவதற்குமுன்னே அது வெளிப்படாது. நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் தோற்றத்தினாலே நாசம்பண்ணுவார். அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி எல்லா பொய்யான வல்லமையோடும் அடையாளங்களோடும் அற்புதங்களோடும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் எல்லாவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாகச் சத்தியத்தை நேசிக்க அவர்கள் மறுத்ததினால் அப்படி நடக்கும். ஆகவே, சத்தியத்தை விசுவாசிக்காமல் அநீதியில் பிரியப்படுகிற எல்லோரும் தண்டனைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய மாய வஞ்சகத்தை தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
2 தெசலோனிக்கேயர் 2:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)
சகோதர, சகோதரிகளே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வருவது பற்றிச் சில காரியங்கள் சொல்ல வேண்டியது உள்ளன. நாம் எப்போது அவரோடு ஒன்று சேருவோம் என்பது பற்றிப் பேச நாங்கள் விரும்புகிறோம். கர்த்தர் வரும் நாள் ஏற்கெனவே வந்துவிட்டதென கேள்விப்பட்டால், மனக் கலக்கமோ, பயமோ அடைந்து விடாதீர்கள். சிலர் இதனைத் தீர்க்கதரிசனமாகவோ, செய்தியாகவோ சொல்லலாம், அல்லது ஒருவன் எங்களிடத்தில் இருந்து கூட ஒரு கடிதம் வந்ததாகக் கூறி உங்களை ஏமாற்றப் பார்க்கலாம். எவரும் உங்களை எவ்விதத்திலும் முட்டாள் ஆக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் விசுவாச மறுதலிப்பும், அழிவின் குமாரனாகிய பாவமனிதனும் தோன்றும் வரை அந்த நாள் வராது. பாவமனிதன் நரகத்துக்கு உரியவன். அவன் தேவனுக்கும் மனிதர்களின் வழிபாடுகளுக்கும் எதிரானவன். அவன் தேவனுடைய ஆலயத்திற்கும் சென்று அங்கே உட்காருவான். பிறகு, தன்னை தேவனைவிட உயர்ந்தவனாகக் காட்டிக்கொள்வான். இக்காரியங்கள் நிகழும் என்பது பற்றி முன்னரே நான் உங்களிடம் கூறினேன், ஞாபகம் இருக்கிறதா? அவனை இப்போது தடுத்து நிறுத்தி இருப்பது யாரென்று உங்களுக்குத் தெரியும். அவன் இப்போது தடுக்கப்பட்டிருப்பது சரியான நேரத்தில் வெளிப்படும் பொருட்டுத்தான். பாவத்தின் இரகசிய சக்தி ஏற்கெனவே உலகத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் அவனைத் தடுத்து நிறுத்தும் வல்லமை உடையவர் ஒருவரே! அவன் முழுமையாகத் தன் வழியில் இருந்து விலக்கப்படும்வரை அவனைத் தடுத்து நிறுத்துவார் அவர். பிறகு அந்தப் பாவ மனிதன் வெளிப்படுவான். கர்த்தராகிய இயேசு தன் வாயில் இருந்து வரும் சுவாசத்தினால் அவனைக் கொல்வார். அவர் தன் பெருமைமிகு வருகையின் மூலமே அந்தப் பாவமனிதனை அழிப்பார். சாத்தானின் சக்தியாலேயே பாவமனிதன் வருவான். அவனுக்குப் பெரும் சக்தி இருக்கும். அதனால் போலி அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்வான். பாவ மனிதன் எல்லாவிதமான பாவங்களையும் செய்து ஆன்மீக அளவில் தான் வஞ்சிக்கும் மக்களை ஏமாற்ற பல தந்திரங்கள் செய்வான். உண்மையை நேசிக்க மறுத்ததால் அம்மக்கள் ஆன்மீக அளவில் தொலைந்துபோனவர்கள் ஆகிறார்கள். (உண்மையை நேசித்திருந்தால் அவர்கள் இரட்சிக்கப்பட்டிருப்பார்கள்.) ஆனால் அவர்கள் உண்மையை நேசிக்க மறுத்தார்கள். எனவே, அவர்கள் பொய்யை நம்பத்தக்கதாகப் போலி நம்பிக்கை என்னும் ஆற்றலை அவர்களுக்குள் தேவன் அனுப்புகிறார். எனவே, உண்மையை நம்பாத மக்கள் எல்லாரும் தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் உண்மையை நம்பவில்லை. பாவச் செயல்கள் செய்வதிலே மகிழ்ந்தார்கள்.
2 தெசலோனிக்கேயர் 2:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால், ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள். எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். நான் உங்களிடத்திலிருந்தபோது இவைகளைச் சொன்னது உங்களுக்கு ஞாபகமில்லையா? அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே. அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும், தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது. நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார். அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும். ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.