2 சாமுவேல் 7:1-7

2 சாமுவேல் 7:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

தாவீது அரசன் தனது அரண்மனையில் குடியமர்ந்தான். யெகோவா அவனைச் சுற்றிலுமிருந்த பகைவர்கள் எல்லோரிடமிருந்தும் அவனுக்கு ஆறுதல் கொடுத்தார். அதன்பின் அரசன், இறைவாக்கினனான நாத்தானிடம், “இதோ நான் கேதுருமர அரண்மனையில் குடியிருக்கையில், இறைவனின் பெட்டியோ இன்னும் கூடாரத்திலேயே இருக்கிறது” என்றான். அதற்கு நாத்தான் அரசனிடம், “உன்னுடைய மனதில் இருப்பவை எதுவோ, அதைச் செய்; யெகோவா உன்னுடன் இருக்கிறார்” என்றான். அன்று இரவே நாத்தானுக்கு, யெகோவாவின் வார்த்தை வந்தது: “நீ போய் என் அடியவன் தாவீதிடம் சொல்லவேண்டியதாவது: ‘யெகோவா சொல்வது இதுவே: நான் வசிப்பதற்கான வீட்டைக் கட்டுகிறவன் நீ தானோ? இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து அழைத்துவந்த நாளிலிருந்து, இன்றுவரை நான் ஒரு வீட்டில் வசிக்கவில்லை. கூடாரத்தையே என் உறைவிடமாக்கிக்கொண்டு நான் இடம்விட்டு இடம் வசித்துக்கொண்டிருக்கிறேன். நான் இஸ்ரயேல் மக்களுடன் பயணம் செய்த இடமெல்லாம் என் மக்களான இஸ்ரயேலரை வழிநடத்தும்படி நான் ஆளுநர்களை நியமித்தேன். அவர்களிடம், “எனக்காக கேதுரு மரங்களினால் ஒரு வீட்டை நீங்கள் ஏன் கட்டவில்லை?” என எப்போதாவது கேட்டதுண்டோ’ என்றார்.

2 சாமுவேல் 7:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவா ராஜாவைச் சுற்றிலும் இருந்த அவனுடைய எல்லா எதிரிகளுக்கும் அவனை விலக்கி, இளைப்பாறச் செய்தபோது, அவன் தன்னுடைய வீட்டிலே குடியிருக்கும்போது, ராஜா தீர்க்கதரிசியான நாத்தானை நோக்கி: பாரும், கேதுரு மரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் குடியிருக்கும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே இருக்கிறதே என்றான். அப்பொழுது நாத்தான் ராஜாவை நோக்கி: நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும்; யெகோவா உம்மோடு இருக்கிறாரே என்றான். அன்று இரவிலே யெகோவாவுடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்: நீ போய் என்னுடைய தாசனான தாவீதை நோக்கி: யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நான் வாழும்படி ஆலயத்தை நீ எனக்குக் கட்டுவாயோ? நான் இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்த நாள்முதல் இந்த நாள்வரைக்கும், நான் ஒரு ஆலயத்திலே வாழாமல், கூடாரத்திலும் வீட்டிலும் உலாவினேன். நான் இஸ்ரவேலான என்னுடைய மக்களை மேய்க்கும்படி கட்டளையிட்ட இஸ்ரவேல் கோத்திர தலைவர்களில் யாரையாவது நோக்கி: நீங்கள் எனக்குக் கேதுரு மரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டாமலிருக்கிறது என்ன என்று நான் இஸ்ரவேல் மக்களுக்குள் உலாவி வந்த எந்த இடத்திலாவது ஏதாவது ஒரு வார்த்தையைச் சொன்னதுண்டோ?

2 சாமுவேல் 7:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)

தாவீது தன் புதுவீட்டிற்குச் சென்றபின் கர்த்தர் அவனது பகைவர்களிடமிருந்து அவனுக்கு சமாதானத்தைக் கொடுத்தார். தாவீது ராஜா தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி, “பாரும், நான் தேவதாரு மரங்களால் அமைந்த அழகிய வீட்டில் வாழ்கிறேன். ஆனால் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியோ ஒரு கூடாரத்திலேயே இன்னும் வைக்கப்பட்டுள்ளது! பரிசுத்தப் பெட்டிக்கு அழகான நல்ல கட்டிடம் நாம் கட்ட வேண்டும்” என்றான். நாத்தான் தாவீது ராஜாவை நோக்கி, “நீர் செய்ய விரும்புகிறதைச் செய்யும். கர்த்தர் உம்மோடிருக்கிறார்” என்றான். ஆனால் அன்றிரவு, நாத்தானுக்கு கர்த்தருடைய செய்திக் கிடைத்தது. கர்த்தர் நாத்தானிடம், “நீ என் தாசனாகிய தாவீதிடம் போய், ‘இதுவே கர்த்தர் சொல்வதாகும், நான் வாழவேண்டிய வீட்டைக் கட்டும் ஆள் நீ அல்ல. இஸ்ரவேலரை எகிப்திலிருந்து அழைத்து வந்தபோது நான் ஒரு வீட்டிலும் தங்கி வாழவில்லை. நான் ஒரு கூடாரத்திலேயே எல்லா இடங்களுக்கும் பயணமானேன். எனது வீடாக கூடாரத்தையே பயன்படுத்தினேன். தேவதாரு மரங்களாலாகிய அழகிய வீட்டை எனக்கு கட்டுமாறு நான் எந்த ஒரு இஸ்ரவேல் கோத்திரத்திற்கும் ஒருபோதும் ஒரு வார்த்தையும் கூறவில்லை.’

2 சாமுவேல் 7:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தர் ராஜாவைச் சுற்றிலும் இருந்த அவனுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் அவனை நீங்கலாக்கி, இளைப்பாறப்பண்ணினபோது, அவன் தன் வீட்டிலே வாசமாயிருக்கையில், ராஜா தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், கேதுரு மரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்றான். அப்பொழுது நாத்தான் ராஜாவை நோக்கி: நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும்; கர்த்தர் உம்மோடு இருக்கிறாரே என்றான். அன்று இராத்திரியிலே கர்த்தருடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்: நீ போய் என் தாசனாகிய தாவீதை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் வாசமாயிருக்கத்தக்க ஆலயத்தை நீ எனக்குக் கட்டுவாயோ? நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும், நான் ஒரு ஆலயத்திலே வாசம்பண்ணாமல், கூடாரத்திலும் வாசஸ்தலத்திலும் உலாவினேன். நான் இஸ்ரவேலாகிய என் ஜனத்தை மேய்க்கும்படி கட்டளையிட்ட இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரத்தையாவது நோக்கி: நீங்கள் எனக்குக் கேதுரு மரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டாதிருக்கிறது என்ன என்று நான் இஸ்ரவேல் புத்திரருக்குள் உலாவி வந்த எவ்விடத்திலாவது யாதொரு வார்த்தையைச் சொன்னதுண்டோ?