2 சாமுவேல் 24:1-25

2 சாமுவேல் 24:1-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவின் கோபம் மறுபடியும் இஸ்ரயேலுக்கு எதிராக மூண்டது, அவர் அவர்களுக்கு விரோதமாய் தாவீதை ஏவி, “நீ போய் இஸ்ரயேலரையும், யூதாவையும் கணக்கிடு” என்றார். எனவே அரசன் யோவாபிடமும் அவனோடிருந்த தளபதிகளிடமும், “நான் சண்டையிடக்கூடிய வீரர்களின் தொகையை அறியும்படிக்குத் தாண் தொடங்கி பெயெர்செபா வரையுள்ள இஸ்ரயேலரின் எல்லாக் கோத்திரங்களிடமும் சென்று தொகையைக் கணக்கிடு” என்றான். ஆனால் யோவாப் அரசனிடம், “என் தலைவனாகிய அரசர் காணும்படி, இறைவனாகிய யெகோவா இராணுவவீரரை இப்போது இருப்பதைவிட நூறுமடங்காகப் பெருகச்செய்வாராக. ஆனால் என் தலைவனாகிய அரசர் ஏன் இப்படியான செயலைச் செய்ய விரும்புகிறீர்?” என்றான். ஆனாலும், அரசனின் வார்த்தைக்கு யோவாபும், தளபதிகளும் கட்டுப்படவேண்டியதால், இஸ்ரயேல் வீரர்களைக் கணக்கிடும்படி அரசனிடமிருந்து சென்றார்கள். அவர்கள் யோர்தானைக் கடந்தபின் பள்ளத்தாக்கிலிருந்து போய் பட்டணத்துக்குத் தெற்கிலிருந்து அரோயேருக்கு அருகில் முகாமிட்டார்கள். பின் காத் வழியாகச் சென்று யாசேருக்குப் போனார்கள். அங்கிருந்து கீலேயாத்திற்கும், தாதீம் ஒத்சி என்னும் பகுதிகளுக்கும், பின் தாண்யாணுக்கும் சென்று சுற்றி சீதோனை நோக்கி வந்தார்கள். அதன்பின் தீரு என்னும் கோட்டைப் பக்கமாகவும், ஏவியர், கானானியருடைய சகல பட்டணங்களுக்கும் சென்றார்கள். கடைசியாக யூதாவின் நெகேவிலுள்ள பெயெர்செபாவுக்குப் போனார்கள். இப்படியாக முழு நாடெங்கும் சுற்றித்திரிந்து ஒன்பது மாதம் இருபது நாட்களுக்குபின் எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள். யோவாப் வீரர்களின் எண்ணிக்கையை அரசனுக்கு தெரிவித்தான். இஸ்ரயேலில் வாள் ஏந்தும் வீரர்கள் எட்டு இலட்சம்பேரும், யூதாவில் ஐந்து இலட்சம்பேரும் இருந்தனர். ஆனாலும் வீரர்களைக் கணக்கிட்டபின் தாவீதின் மனசாட்சி அவனை வாட்டியது. அவன் யெகோவாவிடம், “நான் இப்படிச் செய்தபடியால், பெரும் பாவம் செய்தேன். யெகோவாவே, இப்பொழுது உமது அடியவன் செய்த குற்றத்தை நீக்கிவிடும். நான் மகா புத்தியீனமான செயலைச் செய்தேன்” என மன்றாடினான். மறுநாள் அதிகாலையில் தாவீது எழுந்திருப்பதற்கு முன்பு யெகோவாவின் வார்த்தை, தாவீதின் தரிசனக்காரனான காத் என்னும் இறைவாக்கு உரைப்பவனுக்கு வந்தது. அவர், “நீ தாவீதிடம்போய் சொல்லவேண்டியதாவது, ‘யெகோவா சொல்வது இதுவே: உனக்கு விரோதமாக நான் செயல்படுத்தும்படி மூன்று காரியங்களை உனக்குமுன் வைத்திருக்கிறேன்; அவற்றில் ஒன்றைத் தெரிந்துகொள்’ என்று சொல்” என்றார். எனவே காத் தாவீதிடம்போய், “உம்முடைய நாட்டில் ஏழு வருடங்கள் பஞ்சம் வருவதா? அல்லது பகைவர் உம்மைப் பின்தொடர மூன்று மாதங்கள் நீர் அவர்களுக்கு ஒளிந்து ஓடுவதா? அல்லது உமது தேசத்தில் மூன்று நாட்கள் கொள்ளைநோய் வருவதா? எது என யோசனை செய்து, நான் இறைவனிடம் என்ன சொல்லவேண்டுமென உமது தீர்மானத்தை உடனே சொல்லும்” என்றான். தாவீது காத்திடம், “நான் இப்பொழுது பெரிய இக்கட்டில் அகப்பட்டிருக்கிறேன். யெகோவா மிகவும் இரக்கமுடையவராகையால் நான் அவர் கையில் சரணடைவதையே விரும்புகிறேன். நான் மனிதர் கையில் விழாமல் இருக்கவேண்டும்” என்றான். எனவே யெகோவா இஸ்ரயேலில் அன்று காலை தொடங்கி குறிக்கப்பட்ட நாட்கள் முடியும்வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார். இதனால் தாண் தொடங்கி பெயெர்செபா வரையுள்ள மக்களில் எழுபதாயிரம்பேர் இறந்தார்கள். தூதன் எருசலேமையும் அழிப்பதற்குத் தன் கையை ஓங்கியபோது அங்கே நடந்த பேரழிவைக்கண்டு யெகோவா மனதுருகினார். எனவே அவர் மக்களை அழித்த தூதனிடம், “போதும் உன் கையை எடு” என்றார். அப்பொழுது யெகோவாவின் தூதனானவர் எபூசியனான அர்வனாவின் சூடடிக்கும் களத்தில் இருந்தார். யெகோவாவினுடைய தூதனானவர் மக்களைக் கொடிய கொள்ளைநோயினால் வாதிப்பதைத் தாவீது கண்டபோது, அவன் யெகோவாவிடம், “செய்யத்தகாததைச் செய்து பாவம் செய்தவன் நான்தானே! இந்த ஆடுகள் செய்தது என்ன? உம்முடைய கை எனக்கும் என் குடும்பத்திற்கும் விரோதமாய் இருக்கட்டும்” என்றான். அன்றையதினம் காத் தாவீதிடம் சென்று, “நீ எபூசியனான அர்வனாவின் சூடடிக்கும் களத்திற்குப் போய் அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டு” என்றான். எனவே தாவீது யெகோவா தனக்கு காத் மூலமாக கட்டளையிட்டபடியே அங்கே போனான். தாவீதும் அவனுடைய மனிதரும் தன்னிடம் வருவதைக் கண்டபோது, அர்வனா அவர்களுக்கு எதிர்கொண்டுபோய் தரைமட்டும் குனிந்து அரசனை வணங்கினான். அர்வனா அரசனிடம், “என் தலைவனாகிய அரசர் உம்முடைய அடியவனிடம் வந்த காரியம் என்ன?” எனக் கேட்டான். அதற்குத் தாவீது, “கொடிய கொள்ளைநோய் மக்களைவிட்டு நீங்கும்படிக்கு, நான் யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் கட்டுவதற்காக உன்னுடைய சூடடிக்கும் களத்தை விலைக்கு வாங்க வந்தேன்” என்றான். அதற்கு அர்வனா தாவீதிடம், “என் தலைவனாகிய அரசன் விரும்பியவற்றை எடுத்து பலி செலுத்துவாராக. தகன காணிக்கைக்காக மாடுகளும், விறகுகளுக்காக சூடடிக்கும் பலகைகளும் மாடுகளின் நுகத்தடிகளும் இங்கே இருக்கின்றன. அரசே, அர்வனாவாகிய நான் இவை எல்லாவற்றையும் உமக்குக் கொடுக்கிறேன். உமது இறைவனாகிய யெகோவா உம்மை தயவாக ஏற்றுக்கொள்வாராக” என்றான். அதற்கு அரசன் அர்வனாவிடம், “வேண்டாம். நான் இதற்குரிய பணத்தைக் கொடுக்கவேண்டும் என்று உறுதியாகச் சொல்கிறேன். என் இறைவனாகிய யெகோவாவுக்கு நான் பணம் கொடுக்காமல் இலவசமாக பெற்ற தகன காணிக்கையை செலுத்தமாட்டேன்” என்றான். எனவே தாவீது சூடடிக்கும் களத்தையும், மாடுகளையும், ஐம்பது சேக்கல் வெள்ளியைக் கொடுத்து வாங்கினான். அங்கே தாவீது யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் பலியிட்டான். அப்பொழுது நாட்டிற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலுக்கு யெகோவா பதிலளித்தார், இஸ்ரயேலின்மேல் வந்த கொள்ளைநோய் நின்றுபோனது.

2 சாமுவேல் 24:1-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவுடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் வந்தது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை எண்ணிக்கை பார் என்று அவர்களுக்கு எதிராகச் சொல்லுகிறதற்கு தாவீது தூண்டப்பட்டான். அப்படியே ராஜா தன்னோடு இருக்கிற தளபதியான யோவாபைப் பார்த்து: மக்களின் எண்ணிக்கையை நான் அறியும்படி நீ தாண்முதல் பெயெர்செபா வரையுள்ள இஸ்ரவேலர்களின் கோத்திரங்கள் எங்கும் சுற்றித்திரிந்து மக்களைக் கணக்கெடுங்கள் என்றான். அப்பொழுது யோவாப் ராஜாவைப் பார்த்து: ராஜாவான என் ஆண்டவனுடைய கண்கள் காணும்படி உம்முடைய தேவனான யெகோவா மக்களை இப்பொழுது இருக்கிறதைவிட, நூறுமடங்கு அதிகமாகப் பெருகச்செய்வாராக; ஆனாலும் என் ஆண்டவனான ராஜா இந்தக் காரியத்தை விரும்புகிறது என்ன என்றான். ஆனாலும் யோவாபும் இராணுவத்தலைவர்களும் சொன்ன வார்த்தை செல்லாமற்போகும்படி, ராஜாவின் வார்த்தை பலத்தது; அப்படியே இஸ்ரவேல் மக்களைக் கணக்கெடுக்க, யோவாபும் இராணுவத்தலைவர்களும் ராஜாவைவிட்டுப் புறப்பட்டுப்போய், யோர்தான் நதியைக் கடந்து, காத் என்னும் ஆறுகளின் நடுவே இருக்கிற பட்டணத்திற்கு வலதுபுறமான ஆரோவேரிலும் யாசேரிடத்திலும் முகாமிட்டு, அங்கேயிருந்து கீலேயாத்திற்கும் தாதீம்ஒத்சிக்கும் போய், அங்கேயிருந்து தாண்யானுக்கும், சீதோனின் சுற்றுப்புறங்களுக்கும் போய், பிற்பாடு தீரு என்னும் கோட்டைக்கும் ஏவியர்கள், கானானியர்களுடைய எல்லா பட்டணங்களுக்கும் போய், அங்கேயிருந்து யூதாவின் தென்புறமான பெயெர்செபாவுக்குப் போய், இப்படி தேசமெங்கும் சுற்றித்திரிந்து, ஒன்பது மாதங்களும் இருபது நாட்களும் ஆனபிறகு எருசலேமிற்கு வந்தார்கள். யோவாப் மக்களைக் கணக்கெடுத்த தொகையை ராஜாவுக்குக் கொடுத்தான்; இஸ்ரவேலிலே பட்டயம் எடுக்கத்தக்க யுத்தவீரர்கள் 8,00,000 பேர் இருந்தார்கள்; யூதா மனிதர்கள் 5,00,000 பேர் இருந்தார்கள். இவ்விதமாக மக்களை எண்ணிப்பார்த்த பின்பு, ராஜாவின் இருதயம் அவனை நோகடித்தது; அப்பொழுது தாவீது யெகோவாவை நோக்கி: நான் இப்படிச் செய்ததால் பெரிய பாவம் செய்தேன்; இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; நான் பெரிய முட்டாள்தனமான காரியம் செய்தேன் என்றான். தாவீது காலையில் எழுந்தபோது, தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனான காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது: நீ தாவீதிடம் போய், மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள், அதை நான் உனக்குச் செய்வேன் என்று யெகோவா உரைக்கிறார் என்று சொல் என்றார். அப்படியே காத் தாவீதிடம் வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்திலே ஏழு வருடங்கள் பஞ்சம் வரவேண்டுமோ? அல்லது மூன்று மாதங்கள் உம்முடைய எதிரிகள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ? அல்லது உம்முடைய தேசத்தில் மூன்று நாட்கள் கொள்ளைநோய் உண்டாக வேண்டுமோ? இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன பதில் கொண்டுபோகவேண்டும் என்பதை நீர் யோசித்துப் பாரும் என்று சொன்னான். அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய பிரச்சனையில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நாம் யெகோவாவுடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மிகப்பெரியது; மனிதர்கள் கையிலே விழாமல் இருப்பேனாக என்றான். அப்பொழுது யெகோவா இஸ்ரவேலிலே அன்று காலைதுவங்கி குறித்தகாலம்வரை கொள்ளைநோயை வரச்செய்தார்; அதினால் தாண்முதல் பெயெர்செபாவரையுள்ள மக்களில் 70,000 பேர் இறந்துபோனார்கள். தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன்னுடைய கையை அதின்மேல் நீட்டினபோது, யெகோவா அந்தத் தீங்குக்கு மனவேதனையடைந்து, மக்களை அழிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன்னுடைய கையை நிறுத்து என்றார்; அந்த வேளையில் யெகோவாவுடைய தூதன் எபூசியனான அர்வனாவினுடைய போரடிக்கிற களத்திற்கு நேராக இருந்தான். மக்களை வேதனைப்படுத்துகிற தூதனை தாவீது கண்டபோது, அவன் யெகோவாவை நோக்கி: இதோ, நான்தான் பாவம் செய்தேன்; நான்தான் அக்கிரமம் செய்தேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? உம்முடைய கை எனக்கும் என்னுடைய தகப்பன் வீட்டுக்கும் விரோதமாக இருப்பதாக என்று விண்ணப்பம்செய்தான். அன்றையதினம் காத் என்பவன் தாவீதிடம் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனான அர்வனாவின் களத்திலே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான். காத்துடைய வார்த்தையின்படியே தாவீது யெகோவா கற்பித்தபடி போனான். அர்வனா பார்த்து: ராஜாவும் அவனுடைய ஊழியக்காரர்களும் தன்னிடம் வருகிறதைக்கண்டு, அர்வனா எதிர்கொண்டுபோய் தரைவரைக்கும் குனிந்து ராஜாவை வணங்கி, ராஜாவான என்னுடைய ஆண்டவன் தமது அடியானிடத்தில் வருகிற காரியம் என்ன என்று கேட்டதற்கு, தாவீது: வாதை மக்களைவிட்டு நிறுத்தக் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படி இந்தக் களத்தை உன்னுடைய கையிலே வாங்க வந்தேன் என்றான். அர்வனா தாவீதைப் பார்த்து: ராஜாவான என்னுடைய ஆண்டவன் இதை வாங்கிக்கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி பலியிடுவாராக; இதோ, தகனபலிக்கு மாடுகளும் விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும் மாடுகளின் நுகங்களும் இங்கே இருக்கிறது என்று சொல்லி, அர்வனா அவை எல்லாவற்றையும் ராஜாவுக்குக் கொடுத்தபின்பு, அர்வனா ராஜாவை நோக்கி: உம்முடைய தேவனான யெகோவா உம்மிடம் கிருபையாக இருப்பாராக என்றான். ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல; நான் இலவசமாக வாங்கி, என்னுடைய தேவனான யெகோவாவுக்கு சர்வாங்கதகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன்னுடைய கையிலே விலைக்கு வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறைவெள்ளிக்கு வாங்கிக்கொண்டான். அங்கே தாவீது யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்கதகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினான்; அப்பொழுது யெகோவா தேசத்துக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்; இஸ்ரவேலின் மேலிருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது.

2 சாமுவேல் 24:1-25 பரிசுத்த பைபிள் (TAERV)

இஸ்ரவேல் மீது மீண்டும் கர்த்தர் கோபம் அடைந்தார். இஸ்ரவேலருக்கு எதிராகக் திரும்பும்படி கர்த்தர் தாவீதை மாற்றினார். தாவீது, “இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுங்கள்” என்றான். தாவீது ராஜா படைத் தலைவனாகிய யோவாபை நோக்கி, “தாணிலிருந்து பெயெர்செபா வரைக்கும் எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களிடமும் நீ போய் ஜனங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடு. அப்போது நான் மொத்த ஜனங்கள் தொகையைப் பற்றித் தெரிந்துக்கொள்ள முடியும்” என்றான். ஆனால் யோவாப் ராஜாவிடம், “எத்தனை ஆட்கள் இருக்கிறார்கள் என்பது முக்கிய மன்று. உன் தேவனாகிய கர்த்தர், உங்களுக்கு நூறு மடங்கு ஆட்களைத் தருவார், உங்கள் கண்கள் அவ்வாறு நடப்பதைப் பார்க்கும்! ஆனால் ஏன் இதைச் செய்ய விரும்புகிறீர்?” என்று கேட்டான். தாவீது ராஜா உறுதியாக யோவாபுக்கும் படைத் தலைவர்களுக்கும் ஜனங்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளையிட்டார். எனவே யோவாபும் படைத் தலைவர்களும் இஸ்ரவேலின் ஜனங்கள் தொகையைக் கணக்கெடுக்க ராஜாவிடமிருந்து சென்றனர். அவர்கள் யோர்தான் நதியைக் கடந்தனர். அவர்கள் ஆரோவேரில் முகாமிட்டுத் தங்கினார்கள். நகரின் வலது புறத்தில் அவர்கள் முகாம் இருந்தது. (காத் பள்ளத்தாக்கின் நடுவில் நகரம் இருந்தது. யாசேருக்குப் போகும் வழியில் அந்த நகரம் இருந்தது.) பின்பு அவர்கள் கீலேயாத்திற்கும் தாதீம் ஓத்சிக்கும் போனார்கள். அங்கேயிருந்து தாண்யானுக்கும் சீதோனைச் சூழ்ந்த பகுதிகளுக்கும் சென்றார்கள். அவர்கள் தீரு என்னும் கோட்டைக்கு போனார்கள். அவர்கள் கானானியர் மற்றும் ஏவியரின் நகரங்களுக்கெல்லாம் சென்றார்கள். அவர்கள் யூதாவின் தெற்கிலுள்ள பெயெர்செபாவிற்குப் போனார்கள். ஒன்பது மாதங்களும் 20 நாட்களும் கழிந்த பிறகு அவர்கள் தேசம் முழுவதும் சுற்றிவந்திருந்தார்கள். 9 மாதங்கள் 20 நாட்களுக்குப் பிறகு அவர்கள் எருசலேமுக்கு வந்தனர். யோவாப் ராஜாவுக்குரிய ஜனங்களின் பட்டியலைக் கொடுத்தான். இஸ்ரவேலில் 8,00,000 ஆண்கள் வாளைப் பயன்படுத்தக் கூடியவர்கள். யூதாவிலும் 5,00,000 ஆண்கள் இருந்தனர். ஜனங்கள் தொகையைக் கணக்கெடுத்த பிறகு தாவீது வெட்கமடைந்தான். தாவீது கர்த்தரை நோக்கி, “நான் செய்த இக்காரியத்தில் பெரும் பாவம் செய்தேன்! கர்த்தாவே! என் பாவத்தை மன்னிக்கும்படி நான் கெஞ்சுகிறேன். நான் மிகவும் மூடனாகிவிட்டேன்” என்றான். காலையில் தாவீது எழுந்தபோது, கர்த்தருடைய வார்த்தை தாவீதின் தீர்க்கதரிசியாகிய காத்திற்கு வந்தது. கர்த்தர் காத்தை நோக்கி, “போய் தாவீதிடம் கூறு, ‘இதுவே கர்த்தர் கூறுவது: நான் மூன்று காரியங்களை முன் வைக்கிறேன். நான் உனக்குச் செய்வதற்கு ஏதேனும் ஒன்றைத் தெரிந்துக்கொள் என்கிறார்’ என்று சொல்” என்றார். காத் தாவீதிடம், போய் அவ்வாறே கூறினான். அவன் தாவீதிடம், “இம்மூன்று காரியங்களிலும் ஒன்றைத் தெரிந்துக்கொள்ளுங்கள் உங்களுக்கும் இத்தேசத்திற்கும் ஏழு ஆண்டுகள் பஞ்சம் வரவேண்டுமா? மூன்று மாதங்கள் உங்கள் பகைவர்கள் உங்களைத் துரத்தவேண்டுமா? அல்லது மூன்று நாட்கள் உங்கள் தேசத்தாரை நோய் பாதிக்கட்டுமா? இதைக் குறித்து யோசித்துப் பாருங்கள், இவற்றில் எதை முடிவு செய்கிறீர்கள் என்பதை நான் என்னை அனுப்பிய கர்த்தருக்குக் கூற வேண்டும்” என்றான். தாவீது காத்தை நோக்கி “உண்மையிலேயே நான் துன்பத்துக்குள்ளானேன்! ஆனால் கர்த்தர் இரக்கமுள்ளவர். எனவே கர்த்தர் நம்மைத் தண்டிக்கட்டும். ஜனங்களிடமிருந்து எனக்குத் தண்டனை கிடைக்க வேண்டாம்” என்றான். எனவே கர்த்தர் இஸ்ரவேலில் நோயை அனுப்பினார். அது, காலையில் ஆரம்பித்துக் குறிப்பிட்ட காலம் மட்டும் நீடித்தது. தாணிலிருந்து பெயெர் செபாவரைக்கும் 70,000 பேர் மடிந்தனர். தேவ தூதன் எருசலேமை அழிக்கும்படி அதற்கு நேராக தன் கரங்களை உயர்த்தினான். ஆனால் நடந்த தீய காரியங்களுக்காக கர்த்தர் மனம் வருந்தினார். ஜனங்களை அழித்த தூதனை கர்த்தர் நோக்கி, “போதும்! உனது கரங்களைத் தாழ்த்து” என்றார். எபூசியனாகிய அர்வனாவின் போரடிக்கிற களத்திற்கு அருகே கர்த்தருடைய தூதன் நின்றுக்கொண்டிருந்தான். ஜனங்களைக் கொன்ற தூதனை தாவீது பார்த்தான். தாவீது கர்த்தரிடம் பேசினான். தாவீது, “நான் பாவம் செய்தேன்! நான் தவறிழைத்தேன். இந்த ஜனங்கள் ஆடுகளைப் போன்று என்னைப் பின் பற்றினார்கள். அவர்கள் தவறேதும் செய்யவில்லை. என்னையும் எனது தந்தையின் குடும்பத்தையும் நீங்கள் தண்டியுங்கள்” என்றான். அன்றைய தினம் காத் தாவீதிடம் வந்தான். காத் தாவீதைப் பர்ர்த்து, “எபூசியனாகிய அர்வனாவின் களத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி எழுப்பு” என்றான். காத் கூறியபடியே தாவீது செய்தான். கர்த்தர் விரும்பியபடியே தாவீது செய்தான். அர்வனாவைப் பார்க்க தாவீது சென்றான். ராஜாவாகிய தாவீதும் அவனது அதிகாரிகளும் தன்னிடம் வருவதை அர்வனா பார்த்தார். அர்வனா நிலத்தில் தலைதாழ்த்தி வணங்கினார். பின் அர்வனா, “எனது ஆண்டவனும் ராஜருமாகிய நீங்கள் ஏன் என்னிடம் வந்தீர்கள்?” என்று கேட்டான். தாவீது அவனுக்கு, “உன்னிடமிருந்து போரடிக்கிற களத்தை வாங்குவதற்கு வந்தேன். அதில் கர்த்தருக்குப் பலிபீடம் அமைக்கமுடியும். அப்படி செய்து நோய் பரவாமல் தடுக்க முடியும்” என்றான். அர்வனா, தாவீதிடம், “எனது ராஜாவாகிய ஆண்டவன் தாங்கள் பலிகொடுக்க எதையும் என்னிடமிருந்து எடுக்கலாம். இந்தப் பசுக்களைத் தகனபலிக்காகவும், போரடிக்கிற உருளைகளையும், நுகத்தடிகளையும் விறகுக்காகவும் பயன்படுத்துங்கள். ராஜாவே! நான் எல்லாவற்றையும் உங்களுக்கு தருவேன்!” என்றான் அர்வனா மீண்டும் ராஜாவுக்கு, “உங்கள் தேவனாகிய கர்த்தர் இதைக் கண்டு மகிழட்டும்” என்றான். ஆனால் ராஜா அர்வனாவுக்கு, “நான் உனக்கு உண்மையைச் சொல்வேன், உன் நிலத்தை ஒரு விலை கொடுத்துப் பெறுவேன். ஆனால் எனது தேவனாகிய கர்த்தருக்கு இலவசமாக கிடைத்த எந்த தகன பலியையும் செலுத்தமாட்டேன்” எனக் கூறினான். ஆகையால் தாவீது போரடிக்கிற களத்தையும் பசுக்களையும் 50 சேக்கல் வெள்ளிக்கு வாங்கினான். பின்பு தாவீது ஒரு பலிபீடத்தை கர்த்தருக்காக கட்டினான். தாவீது அதில் தகனபலியையும் சமாதானபலியையும் அளித்தான். தேசத்திற்காகச் செய்யப்பட்ட தாவீதின் ஜெபத்திற்கு கர்த்தர் செவிசாய்த்தார். கர்த்தர் இஸ்ரவேலிலிருந்த நோய்களைப் பரவாமல் தடுத்தார்.

2 சாமுவேல் 24:1-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான். அப்படியே ராஜா தன்னோடிருக்கிற சேனாபதியாகிய யோவாபைப் பார்த்து: ஜனங்களின் இலக்கத்தை நான் அறியும்படிக்கு நீ தாண்முதல் பெயெர்செபா மட்டுமுள்ள இஸ்ரவேலரின் கோத்திரமெங்கும் சுற்றித்திரிந்து ஜனங்களைத் தொகையிடுங்கள் என்றான். அப்பொழுது யோவாப் ராஜாவைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனுடைய கண்கள் காணும்படி உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஜனங்களை இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும், நூறுமடங்கு அதிகமாய் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் என் ஆண்டவனாகிய ராஜா இந்தக் காரியத்தை விரும்புகிறது என்ன என்றான். ஆகிலும் யோவாபும் இராணுவத்தலைவரும் சொன்ன வார்த்தை செல்லாதபடிக்கு, ராஜாவின் வார்த்தை பலத்தது; அப்படியே இஸ்ரவேல் ஜனங்களைத் தொகையிட, யோவாபும் இராணுவத்தலைவரும் ராஜாவைவிட்டு புறப்பட்டுப்போய், யோர்தானைக் கடந்து, காத் என்னும் ஆறுகளின் நடுவே இருக்கிற பட்டணத்திற்கு வலதுபுறமான ஆரோவேரிலும் யாசேரிடத்திலும் பாளயமிறங்கி, அங்கேயிருந்து கீலேயாத்திற்கும் தாதீம்ஒத்சிக்கும் போய், அங்கேயிருந்து தாண்யானுக்கும், சீதோனின் சுற்றுப்புறங்களுக்கும் போய், பிற்பாடு தீரு என்னும் கோட்டைக்கும் ஏவியர் கானானியருடைய சகல பட்டணங்களுக்கும் போய், அங்கேயிருந்து யூதாவின் தென்புறமான பெயெர்செபாவுக்குப் போய், இப்படி தேசமெங்கும் சுற்றித்திரிந்து, ஒன்பது மாதமும் இருபது நாளும் ஆனபிற்பாடு எருசலேமுக்கு வந்தார்கள். யோவாப் ஜனத்தை இலக்கம் பார்த்த தொகையை ராஜாவுக்குக் கொடுத்தான்; இஸ்ரவேலிலே பட்டயம் உருவத்தக்க யுத்த சேவகர் எட்டு லட்சம்பேர் இருந்தார்கள்; யூதா மனுஷர் ஐந்து லட்சம்பேர் இருந்தார்கள். இவ்விதமாய் ஜனங்களை எண்ணினபின்பு, ராஜாவின் இருதயம் அவனை வாதித்தது; அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: நான் இப்படிச் செய்ததினாலே பெரிய பாவஞ்செய்தேன்; இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; நான் மகா புத்தியீனமாய்ச் செய்தேன் என்றான். தாவீது காலமே எழுந்திருந்தபோது, தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது: நீ தாவீதினிடத்தில் போய், மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள், அதை நான் உனக்குச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார். அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்திலே ஏழு வருஷம் பஞ்சம் வரவேண்டுமோ? அல்லது மூன்று மாதம் உம்முடைய சத்துருக்கள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ? அல்லது உம்முடைய தேசத்திலே மூன்று நாள் கொள்ளை நோய் உண்டாக வேண்டுமோ? இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறுஉத்தரவு கொண்டுபோக வேண்டும் என்பதை நீர் யோசித்துப் பாரும் என்று சொன்னான். அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நாம் கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான். அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமேதொடங்கி குறித்தகாலம் வரைக்கும் கொள்ளை நோயை வரப்பண்ணினார்; அதினால் தாண்முதல் பெயெர்செபா மட்டுமுள்ள ஜனங்களில் எழுபதினாயிரம்பேர் செத்துப் போனார்கள். தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன் கையை அதின்மேல் நீட்டினபோது, கர்த்தர் அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, ஜனங்களைச் சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன் கையை நிறுத்து என்றார்; அந்த வேளையில் கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய அர்வனாவின் போரடிக்கிற களத்திற்கு நேரே இருந்தான். ஜனத்தை உபாதிக்கிற தூதனை தாவீது கண்டபோது, அவன் கர்த்தரை நோக்கி: இதோ, நான்தான் பாவஞ்செய்தேன்; நான்தான் அக்கிரமம் பண்ணினேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? உம்முடைய கை எனக்கும் என் தகப்பன் வீட்டுக்கும் விரோதமாயிருப்பதாக என்று விண்ணப்பம்பண்ணினான். அன்றையதினம் காத் என்பவன் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனாகிய அர்வனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான். காத்துடைய வார்த்தையின்படியே தாவீது கர்த்தர் கற்பித்த பிரகாரமாகப் போனான். அர்வனா ஏறிட்டுப்பார்த்து: ராஜாவும் அவனுடைய ஊழியக்காரரும் தன்னிடத்தில் வருகிறதைக்கண்டு, அர்வனா எதிர்கொண்டுபோய் தரைமட்டும் குனிந்து ராஜாவை வணங்கி, ராஜாவாகிய என் ஆண்டவன் தமது அடியானிடத்தில் வருகிற காரியம் என்ன என்று கேட்டதற்கு, தாவீது: வாதை ஜனத்தைவிட்டு நிறுத்தப்படக் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு இந்தக் களத்தை உன் கையிலே கொள்ளவந்தேன் என்றான். அர்வனா தாவீதைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவன் இதை வாங்கிக் கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி பலியிடுவாராக; இதோ, தகனபலிக்கு மாடுகளும் விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும் மாடுகளின் நுகத்தடிகளும் இங்கே இருக்கிறது என்று சொல்லி, அர்வனா ராஜயோக்கியமாய் அவை எல்லாவற்றையும் ராஜாவுக்குக் கொடுத்த பின்பு, அர்வனா ராஜாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மிடத்தில் கிருபையாயிருப்பாராக என்றான். ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல; நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்கதகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறைவெள்ளிக்குக் கொண்டான். அங்கே தாவீது கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்கதகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினான்; அப்பொழுது கர்த்தர் தேசத்துக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்; இஸ்ரவேலின் மேலிருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது.