2 சாமுவேல் 14:1-4

2 சாமுவேல் 14:1-4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

தாவீது அரசனின் இருதயம் அப்சலோமுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது என்பதை செருயாவின் மகன் யோவாப் அறிந்துகொண்டான். எனவே யோவாப் தெக்கோவாவுக்கு ஆளனுப்பி அங்கேயுள்ள ஞானமுள்ள ஒரு பெண்ணை அழைத்தான். அவள் வந்தபோது யோவாப் அவளிடம், “நீ துக்கங்கொண்டாடும் பெண்ணைப்போல் பாசாங்கு செய்து துக்கவுடை உடுத்திக்கொள். தலைக்கு எண்ணெய் ஒன்றும் பூசாதே. இறந்துபோனவர்களுக்காக நெடுநாட்களாக துக்கங்கொண்டாடுகிறவளைப் போல நடிக்கவேண்டும். பின் அரசனிடம் போய் இவ்விதமாய் நீ பேசவேண்டும்” என்றான். அவ்வாறே யோவாப் அவள் பேசவேண்டியதை அவளுக்குச் சொல்லிக் கொடுத்தான். அதன்படி தெக்கோவா ஊராளான அப்பெண் அரசனிடம் சென்று, தரையில் முகங்குப்புற விழுந்து வணங்கி, “அரசே, எனக்கு உதவும்” என்றாள்.

2 சாமுவேல் 14:1-4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ராஜாவின் இருதயம் அப்சலோமின் மேல் இன்னும் நினைவாக இருக்கிறதைச் செருயாவின் மகன் யோவாப் கண்டு, அவன் தெக்கோவா பட்டணத்தில் இருக்கிற புத்தியுள்ள ஒரு பெண்ணை அழைத்து: நீ துக்கம் கொண்டாடுகிறவளைப்போல, துக்கத்திற்குரிய ஆடைகளை அணிந்துகொண்டு, எண்ணெய் பூசாமல், இறந்து போனவனுக்காக அநேகநாட்கள் துக்கம் கொண்டாடுகிற பெண்ணைப்போலக் காண்பித்து, ராஜாவிடம் போய், அவரை நோக்கி: இவ்வாறாகச் சொல் என்று அவள் சொல்லவேண்டிய வார்த்தைகளை யோவாப் அவளிடம் சொன்னான். அப்படியே தெக்கோவா ஊரைச்சேர்ந்த அந்த பெண் ராஜாவோடு பேசப்போய், தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: ராஜாவே, இரட்சியும் என்றாள்.

2 சாமுவேல் 14:1-4 பரிசுத்த பைபிள் (TAERV)

தாவீது ராஜா அப்சலோமின் பிரிவைத் தாங்கமுடியாமல் வருந்துவதை செருயாவின் குமாரனாகிய யோவாப் அறிந்தான். எனவே, யோவாப் சிலரைத் தெக்கோவாவிற்கு அனுப்பி, அங்கிருந்து புத்திசாலியான ஒரு பெண்ணை அழைத்து வருமாறு கூறினான். யோவாப் அந்தப் பெண்ணிடம், “மிகவும் துக்கமாயிருக்கிறவளைப்போல் காண்பித்துக்கொள். துக்கத்திற்கு அறிகுறியான ஆடைகளை அணிந்துக்கொள். நல்ல ஆடைகளை அணியாதே. மரித்த ஒருவருக்காக பல நாட்கள் வருந்துகிற ஒருவளைப் போல் நடி. ராஜாவிடம் போய் நான் உனக்குச் சொல்லித்தரும் சொற்களைப் பயன்படுத்திப் பேசு” என்றான். பின்பு யோவாப் அப்பெண்ணுக்கு அவள் கூற வேண்டியவற்றைச் சொல்லிக்கொடுத்தான். பின்பு தெக்கோவாவைச் சேர்ந்த அப்பெண் ராஜாவிடம் பேசினாள். அவள் தரையில் விழுந்து முகம் நிலத்தைத் தொடும்படி வணங்கினாள். அவள் குனிந்து, “ராஜாவே, எனக்கு உதவுங்கள்!” என்றாள்.

2 சாமுவேல் 14:1-4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ராஜாவின் இருதயம் அப்சலோமின் மேல் இன்னும் தாங்கலாயிருக்கிறதைச் செருயாவின் குமாரன் யோவாப் கண்டு. அவன் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயை அழைத்து: நீ இழவு கொண்டாடுகிறவளைப்போல, துக்கவஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, எண்ணெய் பூசிக்கொள்ளாமல், இறந்து போனவனுக்காக நெடுநாள் துக்கிக்கிற ஸ்திரீயைப் போலக் காண்பித்து, ராஜாவினிடத்தில் போய், அவரை நோக்கி: இன்ன இன்ன பிரகாரமாகச் சொல் என்று அவள் சொல்லவேண்டிய வார்த்தைகளை யோவாப் அவள் வாயிலே போட்டான். அப்படியே தெக்கோவா ஊராளான அந்த ஸ்திரீ ராஜாவோடே பேசப்போய், தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: ராஜாவே, இரட்சியும் என்றாள்.